ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?



தென் மாவட்டங்களை கொண்டாட்டக் களமாக்கிச் செல்லும் பொங்கல் பண்டிகை, இந்த ஆண்டு கசப்பாகக் கரைந்துவிட்டது. கன்னிப்பூவும், கரும்பும் குவிந்திருக்கும் முற்றத்தில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பைக் காட்டி, வேதனையும் விரக்தியுமாக பொங்கலைக் கடந்திருக்கிறார்கள் மக்கள். எந்த ஊரிலும் ஜல்லிக்கட்டு இல்லை. காளைகள் மந்தைகளில் சோர்ந்து கிடக்கின்றன. வாடிவாசல் வெறிச்சோடி விட்டது. கிராமங்களில் சுரத்தே இல்லை. இந்தப் புண்ணில் வேல் பாய்ச்சி இருக்கிறது, ஜல்லிக்கட்டு பற்றிய மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் கருத்துகள்.

2011ம் ஆண்டில் சிங்கம், புலி போன்றவை வரிசையில், காட்சிப்படுத்தும் வனவிலங்குகள் பட்டியலில் காளையையும் மத்திய அரசு சேர்த்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்தத் தடை விதித்தது. அப்பட்டியலில் இருந்து காளையை நீக்கி, மீண்டும் ஜல்லிக்கட்டை அனுமதிக்கக் கோரி தென் மாவட்ட மக்களும், அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மாநில அரசும் தீவிரமாகக் களமிறங்கவில்லை.

இந்தச் சூழலில், ஜல்லிக்கட்டை தடை செய்யக் காரணமாக இருந்த விலங்குகள் நல ஆர்வலரும் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி, ‘‘ஜல்லிக்கட்டு மேலை நாட்டுக் கலாச்சாரம். ஜல்லிக்கட்டு விளையாட்டால் காளைகள் மற்றும் பசுக்கள் கொல்லப்படுகின்றன. அது தவறானது...’’ என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே வருத்தத்தில் இருக்கும் தென் மாவட்ட மக்களை மேனகாவின் பேச்சு மேலும் கொதிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

‘‘மேற்கத்திய மக்கள் உடை போடப் பழகாத காலத்திலேயே மாடுகளைப் பழக்கி வேளாண்மை செய்து நாகரிகத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள். தமிழர்களின் வரலாற்றையும் தெரிந்து கொள்ளாமல், ஜல்லிக்கட்டையும் புரிந்துகொள்ளாமல் மனம் போன போக்கில் பேசுகிறார் மேனகா’’ என்று குமுறுகிறார்கள் உணர்வாளர்கள்.

‘‘பெரும் பொறுப்பிலிருக்கிற ஒரு மத்திய அமைச்சர், சிறிதும் பொறுப்பில்லாமல் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஸ்பெயின், மெக்சிகோ போன்ற நாடுகளில் நடக்கும் மாட்டுச் சண்டைக்கும் நம் தமிழர்களின் ஜல்லிக்கட்டுக்கும் தொடர்பே இல்லை. அங்கு மாடுகளோடு சண்டையிட்டுக் கொல்பவன்தான் வெற்றியாளன். தமிழகத்தில் நடப்பது ‘ஏறு தழுவுதல்’. ‘ஏறு’ என்றால் காளை. காளையைத் தழுவுவது. காளையை அடக்குவது கூட அல்ல.

 ஒரு வீரன், காளையின் திமிலில் கைகோர்த் து மூன்று ‘தாவல்’ களை தாக்குப் பிடித்து நின்றுவிட்டால், அவன் வெற்றியாளன். இதுதான் ஜல்லிக்கட்டு. மாட்டுக்கும் மனிதனுக்குமான தோழமை உணர்வை வெளிக்காட்டுவது. வீரத்தின் அடையாளமாக சித்தரிக்கப்படுவதெல்லாம் இடைக்காலத்திய மிகைப் பார்வை...’’ என்கிறார், தமிழ்தேசப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன்.

‘‘இது தமிழர்களின் மரபுவழி விளையாட்டு. ஜல்லிக்கட்டுக் காளைகளோடு இணையும் பசுக்கள் பிரசவிக்கும் கன்றுகள் மிகவும் ஆரோக்கியமானவை. அப்படித் தான் நாட்டு மாடுகள் பெருகின. இந்தக் காளைகள் அழிந்தால் மிஞ்சியிருக்கும் நாட்டு மாட்டு இனங்களும் அழிந்து போகும்.

இன்று பெரும்பாலான பகுதிகளை இறக்குமதி மாடுகளே ஆக்கிரமித்திருக்கின்றன. நம் தட்பவெப்பத்துக்குப் பொருந்தாத, நம் வாழ்வியலுக்குச் சம்பந்தமில்லாத அந்த மாடுகள் ஊசி மூலமாக விந்து செலுத்தி உருவாக்கப்படும் செயற்கை மாடுகள். அம்மாடுகளுக்கு திமில் கூட இருக்காது. வண்டி இழுக்கவோ, உழவு செய்யவோ பயன்படாது. சுருங்கச் சொன்னால் பால் தரும் எந்திரங்கள். மரபுவழி அரிசி, பருத்தி, தானியங்களைப் பாதுகாக்க முனைகிற அரசு, விவசாயத்துக்கு அடிப்படையான கால்நடைகளைப் பாதுகாக்காமல் அழிக்க முனைவது வேடிக்கை.

ஜல்லிக்கட்டை தடை செய்யத் துடித்த விலங்குகள் நல ஆர்வலர்கள், குதிரைப்பந்தயத்தில் கை வைக்கத் தயங்குவது ஏன்? பணக்காரர்களின் விளையாட்டு என்பதாலா? கொடூரமாக அடித்து, சாராயம் புகட்டி, வெறியூட்டித்தான் குதிரைகள் ஓட வைக்கப்படுகின்றன.

வெளிப்படையாக பணம் கட்டி சூதாடவும் செய்கிறார்கள். தோல்வியடையும் குதிரைகளை சுட்டுக்கொல்வதும் நடக்கிறது. எங்கே போனது உங்கள் அறச்சீற்றம்? கேரளாவில் யானைகளை திருமண வீடுகளில் கூட பயன்படுத்துகிறார்கள். அங்குசத்தால் குத்தி, மிரட்டி பணிக்கிறார்கள் பாகன்கள். அதைப் பற்றி மேனகா போன்றோர் ஏன் பேச மறுக்கிறார்கள்? காளை என்பது தமிழ் இனத்தின் சின்னம். அதை அழிப்பதன் மூலம் நம் அடையாளங்களை அழித்துவிடலாம்.   

கிரிக்கெட்டில் கூட உயிர்ப்பலி நிகழ்கிறது. அண்மையில் களத்திலேயே ஒரு வீரன் இறந்தான். கை, கால், முகத்திற்கெல்லாம் கவசம் போட்டு இவ்வளவு அபாயங்களுக்கிடையில் ஏன் இப்படியொரு விளையாட்டு? கிரிக்கெட் மேலைநாட்டுக் கலாச்சாரம் வேறு... அதைத் தடை செய்ய என்ன தயக்கம்? வாள்சண்டை, வில்சண்டை, மல்யுத்தம் எல்லாவற்றையும் பொதுவெளியில் நடத்தி பரிசு கொடுத்து, விருது கொடுத்து, கோடிக்கணக்கில் பணமும் கொடுத்து ஊக்குவிக்கிற அரசு, ஜல்லிக்கட்டை ஒழிக்க நினைப்பதற்குப் பின்னால் பாரதிய ஜனதா கட்சியின் தமிழின ஒவ்வாமை உணர்வே இருக்கிறது’’ என குற்றம் சாட்டுகிறார் பெ.மணியரசன்.

ஆய்வாளரும், தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் மு.இளங்கோவனும் அமைச்சரின் கூற்றை முற்றிலுமாக மறுக்கிறார்.  ‘‘ஸ்பெயினைச் சேர்ந்த ஹீராஸ் பாதிரியார், கிறிஸ்தவத்தை பரப்புவதற்காக இந்தியா வந்தவர். 1888 முதல் 1955 வரை வாழ்ந்த அவர் இந்தியாவைப் பற்றி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு Studies in Protoindomediterranean Culture என்ற நூலை எழுதியிருக்கிறார்.

அதில், ‘ஆரியர்கள் வருவதற்கு முன்பே சிந்து சமவெளி நாகரிகம் இருந்தது... அங்கு காளை மாடுகளைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் குறிப்புகளாகவும், சின்னங்களாகவும் இருக்கின்றன’ என்று எழுதியிருக்கிறார். ஸ்பெயின் நாட்டில் அக்காலத்தில் காளைச்சண்டை இருந்திருக்குமானால் அதை நிச்சயம் இந்த இடத்தில் ஒப்புமைப்படுத்தி அவர் எழுதியிருப்பார். அங்கு நடக்கும் ‘புல் ஃபைட்’ எனப்படும் எருதுச்சண்டைக்கு பழமையான வரலாறுகள் இல்லை. மிகப்பழமையான இலக்கியமான தொல்காப்பியமும் முல்லை நிலத்தைப் பற்றியும் காளைகள் பற்றியும் பேசுகிறது’’ என்கிறார் மு.இளங்கோவன்.

‘‘மேனகா காந்தியின் கருத்து உள்நோக்கம் கொண்டது’’ என்றே சொல்கிறார் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.ஆர்.ராஜசேகரன். ‘‘பாகவத புராணம், கிருஷ்ண புராணம், நாரத புராணம் என 18 புராணங்களிலும் ஜல்லிக்கட்டு வருகிறது. இலக்கியங்கள் ஜல்லிக்கட்டைப் பேசுகின்றன. மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிக அகழ்வுகளில் ஜல்லிக்கட்டு காளைகளின் சிற்பங்கள் கிடைத்தன. அவை டெல்லி மியூசியத்தில்தான் இருக்கின்றன.

அமைச்சருக்கு நேரமிருந்தால் போய் பார்க்கலாம். 1000 வருடங்களுக்கு முன்பு மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடந்ததற்கான வரலாற்று ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. எல்லாவற்றையும் நாங்கள் நீதிமன்றத்திலும் சமர்ப்பித்திருக்கிறோம்.

எந்த அடிப்படையும் தெரியாமல், ஒருமுறை கூட ஜல்லிக்கட்டை நேரில் பார்க்காமல் மேனகா போன்றோர் பேசுகிறார்கள். மேனகா அங்கம் வகிக்கிற விலங்குகள் நல வாரியம்தான் மேலைநாட்டு கலாச்சாரம்; ஜல்லிக்கட்டு அல்ல. மாடுகளோடு மோதிக் கொலை செய்து சமைத்துத் தின்னும் மேலைநாட்டு வக்கிர விளையாட்டோடு ஜல்லிக்கட்டை இணைத்துப் பேசுவதிலிருந்தே இவர்களின் புரிதல் விளங்குகிறது.

 காளையை பிள்ளைக்குச் சமமாக வெயில், மழை படாமல் காத்து, உயிரினும் மேலாக நேசித்து, அதன் இறுதிநாள் வரைக்கும் ராஜ உபசாரம் செய்து, இறந்தால் அழுது சமாதி கட்டி வழிபடுகிற மரபு எங்களுடையது. ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்ததன் பின்னணியில் பெரு நிறுவனங்களின் கரங்கள் இருக்கின்றன.

அந்த சதியை வெளிப்படுத்தும் வகையில் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம்’’ என்கிறார் ராஜசேகரன். சர்ச்சைகள் எல்லாம் சேர்ந்து பாரம்பரிய சாகசத்தை சாகடித்து விட்டன. காளையை பிள்ளைக்குச் சமமாக வெயில், மழை படாமல் காத்து, உயிரினும் மேலாக நேசித்து, அதன் இறுதிநாள் வரைக்கும் ராஜ உபசாரம் செய்து, இறந்தால் அழுது சமாதி கட்டி வழிபடுகிற மரபு எங்களுடையது.

-வெ.நீலகண்டன்