பைத்தியக்காரி



‘‘குகன்! நம்ம கல்யாணம் நடந்தாலோ, நான் ஓடிப் போயிட்டாலோ, என் ரெண்டு தங்கைகளோட வாழ்க்கை பாதிக்குமாம். எங்க வீட்ல ஒரே பிரச்னை!’’ - கைப்பேசியில் கலங்கினாள் கவிதா.
‘‘பெத்தவங்க பயப்படுறதிலும் அர்த்தமிருக்கு. என்னை மறந்துடு கவிதா!’’‘‘முடியாது! நீ இல்லாட்டி நான் விஷம் குடிச்சி செத்துடுவேன்டா!’’ - கவிதாவின் குரலில் உறுதி! ‘‘நீ போனப்புறம் நான் மட்டும் உயிரோட இருப்பேனா என்ன?’’ தழுதழுத்தான் குகன்.

‘‘ஓகேடா... நாளைக்கு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு நான் விஷம் குடிச்சிடுவேன். நீயும் அதே நேரத்தில் தற்கொலை பண்ணி...’’
அவள் பேசி முடிப்பதற்குள் அவசரமாகக் குறுக்கிட்டான் குகன். ‘‘ஆனா, கவிதா... அதுக்கு முன்னாடி பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்துல இருக்கிற கங்கா லாட்ஜில் ரூம் போட்டு வைக்கிறேன்... நாளை மாலை வந்துடு!’’‘‘எதுக்குடா?’’

‘‘சாகறதுக்கு முந்தி உன்னை ஒரு தடவை அனுபவிக்கணும்!’’சின்ன இடைவெளிக்குப் பின் கவிதா பேசினாள்... ‘‘இவ்ளோ சீப்பான ஆளாடா நீ? உனக்காக உயிரை விட நினைச்ச நான் பைத்தியக்காரி. வைடா போனை!’’‘என்னை மன்னிச்சுடு கவிதா... உன் முடிவை மாத்த எனக்கு வேற வழியே தெரியல’ - மனதுக்குள் சொல்லிக் கொண்டான் குகன்.            

*நாமக்கல் பரமசிவம்