தனுஷுக்காக காத்திருக்கு பாலிவுட்!



அமேஸிங் அமைரா

நாடெங்கும் பறவைக் காய்ச்சல் என்கிறார்கள். அமைராவுக்கு பரீட்சைக் காய்ச்சல்! +2 ரிசல்ட்டைக் கையில் வைத்துக் கொண்டு மும்பையில் அத்தனை பேரும் காலேஜ் அட்மிஷனுக்கு அலைந்தபோது, அமைராவுக்கு மட்டும் சினிமா அட்மிஷன்! ‘இஷ்க்’ ஹிந்திப் படத்தில் பிரதீக் பாபரோடு ஆட்டம் போட்ட பிறகு, கே.வி.ஆனந்தின் ‘அனேக’னுக்காக தனுஷ் உடன் நடிக்கிறார். இவ்வளவு வெள்ளை நிறத்துக்கு ஒண்ணு பஞ்சாபியாக இருக்கணும், இல்லை பார்ஸியாக இருக்கணும்... அதில் இரண்டாவதை ‘டிக்’ செய்கிற அழகியோடு பேசினோம்...‘‘காலேஜுக்கு போகலையா?’’

‘‘+2 படிக்கும்போதே ‘ஸ்லிம்மா இருக்கே... மாடலிங் செய்யலாமே’ன்னு தோழிகள் சொன்னாங்க. மாடலிங்கில் மளமளவென வாய்ப்புகள் வர, வோடபோன், மைக்ரோமேக்ஸ் போன்ற விளம்பரங்களுக்கு நடிக்க ஆரம்பிச்சேன். கடைசியில் என்ன நடக்கும்..? சினிமாதான். அதற்கும் வந்துட்டேன்! அதோடு இப்போ, பி.சி கல்லூரியில் பி.காம் படிக்கிறேன். ஸ்மிதா பாட்டீல் மகன் பிரதீக்கோடு முதல் அறிமுகம். முதல் வெற்றி. அப்புறம்தான் இதோ ‘ராஞ்சனா’ ஸ்டார் தனுஷோடு இந்த ‘அனேகன்’. எல்லாம் இயக்குநர் கே.வி.ஆனந்தால் வந்த வாய்ப்பு. ஒரு நல்ல படம் நம்மை அழகா மாத்தி சினிமாவில் பொருத்தமாக வச்சிடும். சினிமா எனக்கு டைம் பாஸ் இல்லை. தியானம்!’’

‘‘தனுஷ் உடன் நடிச்சது எப்படியிருந்தது?’’‘‘என்னால் தனுஷ், கார்த்திக் இரண்டு பேரையும் மறக்க முடியாது. அருமையான நடிகர்கள் மட்டுமில்லாமல் அருமையான மனிதர்கள். அவர்கள் பெரிய இடத்தில் இருக்கிறவங்க. ஆனாலும் அவங்க என்னை சமமா நடத்தினாங்க. நடிப்புன்னு வந்திட்டா ரொம்ப சீரியஸா இருக்கிற தனுஷ், மத்த நேரங்களில் மிக எளிமையானவர். இரண்டு பேரும் செட்டில் எனக்கு சுதந்திரமாக இருக்கிற மாதிரியும், சந்தோஷமாக இருக்கிற மாதிரியும் இடம் கொடுத்தாங்க. ஹிந்தியில் தனுஷ் மாதிரி ஒரு நடிகருக்கான இடம் இன்னும் அப்படியே இருக்கு. பாலிவுட்டைப் பொறுத்தவரை அவர் யார் மாதிரியும் நடிக்காத வேறு மாதிரி நடிகர். இப்ப அமிதாப் கூட வர்றார் பாருங்க... அதுக்காக மும்பையே காத்திருக்குது.

ஹீரோயின்ஸ் எப்பவும் சவுத்தில் நடிச்சுட்டுதான் ஹிந்திக்கு வருவாங்க. நான் அங்கிருந்து இங்கே வந்திருக்கேன். கே.வி.ஆனந்த் சார் எனக்கு கொடுத்திருக்குற நீட் ரோல்தான் அதுக்குக் காரணம். ஒரு தடவை ஃபைட் சீன் ஒண்ணுல தனுஷுக்கு பின்னாடி நின்னேன். அவர் எதிரியைத் தாக்க கையை இழுக்கும்போது, என் முகத்துல, கண்ணு கிட்ட பட்டுடுச்சு. அதற்கு தனுஷ் அப்படி வருத்தப்பட்டார். நான் ‘ஒண்ணுமே இல்லை’ன்னு சொல்லியும் அவருக்கு மனசு கஷ்டமாகிடுச்சு. இப்பவும் ஷூட்டிங் முடிச்ச பிறகும் என்னைப் பார்த்தா என் கண்ணைப் பார்த்திட்டு, ‘ஓகே ஓகே’ன்னு சொல்லிட்டுதான் பேச ஆரம்பிப்பார். நைஸ் தனுஷ்!’’

‘‘மாஸ் டைரக்டர் கே.வி.ஆனந்த் எப்படி?’’

‘‘கே.வி சார் மர்மம் நிரம்பியவர். செட்டில் எங்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் கொடுப்பார். எங்களுக்கு ஷூட்டிங் வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் அன்றைக்கு என்ன காட்சின்னு தெரியாது. அவரோட எனர்ஜி எல்லாத்தையும் கண நேரத்தில் புரிய வைப்பார். எனக்கு ‘அனேக’னில் கிடைக்கப் போகிற பாராட்டுதலுக்கு காரணம் அவர்தான். டிரெய்லர் பார்த்துட்டு எல்லாரும் ‘வெரிகுட்’ சொன்னபோதும் நான் அவருக்குத்தான் தேங்க்ஸ் சொன்னேன்!’’

‘‘சினிமாவில் கிளாமர்... முத்தம் சம்மதமா?’’

‘‘ஹா... ஹா... ஹா... நமக்கே இது ரொம்ப அதிகம்னு தோன்றாத அளவுக்கு கிளாமர் பண்ணலாம்... பண்ணுவேன். அந்த ரோலுக்கு நிஜமாகவே தேவைப்பட்டால் முத்தம் கொடுப்பேன்!’’
‘‘என்னென்ன பிடிக்கும் அமைராவுக்கு?’’‘‘பிடிச்ச படங்கள் ‘சேது’, ‘ஓம்காரா’, ‘குயின்’, ‘The Phantom of the Opera’, ‘Gangs of New York’. ஜப்பானிய உணவு சுஷி இஷ்டம். இந்தியாவில் ஜெய்ப்பூர், ஃபாரின்ல பாரீஸ், லண்டன், பார்ஸிலோனா ஃபேவரிட். எழுதுவேன், ஓடுவேன். அப்புறம் யோகாவில் நான் கொஞ்சம் எக்ஸ்பர்ட். எனக்கு ஒரு பிரதர், இரண்டு சிஸ்டர்ஸ். அவங்க இல்லாம என்னால் வாழவே முடியாது!’’

‘‘சரி... டான்ஸ் பிடிக்காதா?’’
‘‘ரொம்பப் பிடிக்கும். பாருங்க என்னோட படங்களை...’’
‘‘குத்து டான்ஸ்...’’

‘‘குத்துதான் விழும்’’ என செல்லமாக மிரட்டினார் அமைரா.
மிரட்டலும் அலட்டலும் இல்லாவிட்டால் அவர்கள் என்ன அழகிகள்?

- நா.கதிர்வேலன்