அழியாத கோலங்கள்



தனுஷ்...

இன்றைய பிரபல நடிகரைச் சொல்லவில்லை. அந்தக் கால என் ஆந்திர நண்பரும் கட்சிக்காரருமான தனுஷ் இவர். எனக்குக் கிடைக்காத பொறியியல் கல்லூரி சீட் கிடைத்து இணைப் பொறியாளராக இருந்தவர், வேலையை ராஜினாமா செய்துவிட்டார். நான் கேட்டதற்கு, ‘‘இதில் வருமானம் போதாது... அதனால் ‘அரசியலில்’ சேர்ந்து பொருள் ஈட்டப் போகிறேன்’’ என்று சொன்னார்.

‘மோடஸ் ஆபரண்டி’ என்று போலீஸ் அதிகாரிகளால் விவரிக்கப்படுவதை, நாம் தமிழில் ‘குற்ற வழிமுறை’ என்று சொல்லலாம். தனுஷ் அவர்களுடைய மோடஸ் ஆபரண்டி என்பது ஒருவித உளவாளி வியாபார முறை. Honour among thieves என்ற வழிவந்தது. அதாவது, ‘கிடைப்பதில் பத்து சதவீதத்தை தகவல் கொடுத்த உளவாளிக்குக் கொடுத்துவிடுவது’ நேர்மையாம்!

ஆப்கானிஸ்தானிலும் மேற்கு பாகிஸ்தானிலும் விளைந்த ‘கனாபீஸ்’ எனும் கஞ்சா போன்ற ஒரு மூலப் பொருளிலிருந்து இந்திய மருந்தாலைகளில் ஹெராயின் வகை போதை மருந்துகள் தயாரிக்கப்பட்டதாம். எல்லா நாடுகளிலும் செல்லுபடி ஆகக்கூடிய ஒரே காசு, தங்கக் கட்டிகள். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு எந்தப் பொருளை கடத்தினாலும் பதிலுக்கு விலையாகக் கிடைப்பது தங்கம்தான். அன்று அடிமைகள் கடத்தல் நடந்தது போல்... இன்று வெறும் மணல் கடத்தல் நடப்பது போல்...

பொருள் கடத்தலில் பயன்படுவதுதான் தங்கக் கடத்தல் என்பது! தங்கத்தை மட்டும் கடத்துவதில் லாபமே இல்லை. ஸ்காட்லாந்து தேசத்திலிருந்து ஒரு பாட்டில் நிறைய மதுபானம் கடத்தினால் கிடைப்பது, இன்றைய விலையில் ஒரு கிராம் தங்கம் என்று கொள்ளலாம். நல்ல சம்பாத்தியத்தை ‘எடைக்கு எடை தங்கம்’ என்று சொல்வார்கள். இந்த ஹெராயின் போன்ற போதை மருந்துகள் ஒரு கிராம் எடைக்கு நூறு மடங்குக்கும் மேல் விலை கிடைக்கலாம்.

கீழக்கரையில் அன்றைய பெரும்புள்ளிகள் வருமான வரி கணக்கில் காட்டாத வரவு - செலவை தங்கத்தைக் கொண்டு தான் செய்வார்களாம். அது அனுப்பப்படுவது ஒருசில நம்பகமான ஆட்கள் மூலம்தான் என்றாலும் ஒருசிலருக்குத் தெரியாமல் இருக்காது. அதில், யாராவது ஒருவர் வேலையை விட்டு விலகிய நம்ம தனுஷுக்கு ரகசிய தகவல் கொடுப்பானாம். இதைத்தான் ஆங்கிலத்தில் INSIDE ACCOMPLICE  என்று சொல்வார்கள்.

தனுஷுக்கு மிக வேண்டிய ஒரு சினிமா உதவி டைரக்டர் அவருக்கு இரண்டு எக்ஸ்ட்ரா நடிகர்களும் போலீஸ் உடையும் கொடுத்து உதவுவாராம். போலி போலீஸ் ஜீப்பில் செல்லும் இந்த போலி போலீஸார், தங்கம் எடுத்துச் செல்லும் அந்த பார்ட்டியை பஸ்ஸிலோ, ரயிலிலோ கைது செய்து, தங்கள் ஜீப்பில் ஏற்றுவார்கள். ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு சமீபமாக வண்டியை நிறுத்தி இரண்டு பேர் தங்கப் பெட்டியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போவது போல் போய் ஒளிந்துகொள்வார்கள்.

மிஞ்சிய போலீஸ் உடை நடிகர், சிக்கிய கைதியிடம் தான் லஞ்சம் வாங்கிக்கொண்டு தப்ப விடுவதாகப் பேசி, அவரை ‘தப்ப விட்டு’ இவரும் தப்பித்து விடுவார். தப்பி வருபவர் முதலாளியிடம் நடந்ததைச் சொன்னதும், ‘திருடனுக்கு தேள் கொட்டியது போல்’ அவர்கள் செய்வதறியாமல் விழிப்பார்களாம்! தனுஷ் செயல்பட்ட காலத்தில் ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட குற்றச் சம்பவம், கள்ள நோட்டு இரட்டிப்பு.

ஒரு நாட்டின் பிற்போக்கு என்பதே ‘பணத்தை உழைக்காமல் சம்பாதிப்பது எப்படி’ என்ற சிந்தனைக்கு பெரும்பான்மையினர் இடம் கொடுப்பதுதான். தமிழ்நாட்டில் நாம் எவ்வளவு தவறுகள் செய்தாலும் இன்னும் லாட்டரிச் சீட்டு வியாபாரம் நடத்துவதில்லை. ஏதோ, சாராயக்கடைகள்தான் நாட்டின் குற்றம் போலும், லாட்டரிச் சீட்டு வாங்கி திடீர் பணக்காரனாவது ஒரு நல்ல விஷயம் போலவும் பேசுபவர்களுக்கு நான்தான் முதல் எதிரி.

1952ல் ராஜாஜி சென்னை ராஜதானி முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் சட்டசபையில் இருந்த ஒரே பெரிய எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களை நோக்கி, ‘‘நான்தான் உங்களுக்கு முதல் எதிரி’’ என்று தன் முதல் சொற்பொழிவைச் செய்தார். அன்று நான் கம்யூனிஸ்ட் கட்சி யில் உறுப்பினராக இருந்தேன்.

அன்று எங்கள் கட்சி உறுப்பினர் ஒருவர் பெயரை, சிவகங்கையைச் சேர்ந்த கள்ள நோட்டு இரட்டிப்பு சுப்பையா என்பவருடன் தொடர்பு இருந்ததாக குற்றப்பத்திரிகையில் சேர்த்துவிட்டார்கள். அவருக்காக ஆஜரானதால்தான் அந்தக் கள்ள நோட்டு சுப்பையா வின் ஏமாற்று வேலை பற்றித் தெரிந்துகொண்டேன். பின்னால், என் கட்சிக்காரர் தனுஷ் எனக்கு அதுபற்றி நீண்ட விளக்கம் தந்தார்.

இந்த சுப்பையாவும் தொழிலில் கிட்டத்தட்ட நம்ம தனுஷ் மாதிரிதானாம்! பிரபல கொடுக்கல் வாங்கல் சேட்டுகளிடம் முதலில் ஒரு சின்ன தொகை - பத்தாயிரம் கொண்டு வரச் சொல்லி இருபதாயிரம் கொடுத்து விடுவார்களாம். ‘‘செலவு செய்து பார்த்துவிட்டு பின்னால் சொல்லுங்கள்... நான் ஏற்பாடு செய்கிறேன்’’ என்பார்களாம். பின்னால், பேராசையில் பல லட்சங்களை அவர்கள் தாங்களாகவே கொண்டு வருவார்கள். அந்தத் தொகையை வாங்கிக் கொள்ள ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொது இடத்துக்குத்தான் சுப்பையா வரச் சொல்வார்.

இருவரும் ஒன்றாகப் பயணம் செய்யும்போது, சுப்பையாவின் ஆட்கள் போலீஸ் உடையில் வந்து ஒவ்வொரு பயணியாக பெட்டியைத் திறந்து சோதனை செய்துகொண்டு வருவார்களாம். நமது ஏமாளியின் அருகில் வந்ததும் பணம் வைத்திருக்கும் பெட்டியைக் காட்டி, ‘‘அதில் என்ன?’’ என்று கேட்பார்களாம். உடனே சுப்பையா அந்தப் பெட்டியைத் தான் எடுத்துக்கொண்டு, ‘‘இது என் பெட்டி... பணம் வைத்திருக்கிறேன்!’’ என்று சொல்வாராம்.

வாய் திறந்தால் தானும் அரெஸ்ட் ஆக வேண்டி வரும் என்பதால், அனேகமாக நம் ஏமாளி சத்தம் போடாமல் இருந்து விடுவார். செட்டப் போலீஸ் உடனே சுப்பையா சகிதம் பெட்டியையும் அரெஸ்ட் செய்துகொண்டு போய்விடுவார்களாம். ஒருவேளை அந்த ஏமாளி துணிந்து, ‘‘இது என் பணம்தான்’’ என்று சுப்பையாவை மீறிச் சொன்னால்... இருவரையும் கைது செய்து கூட்டிப் போய், பிறகு ஏமாளியை வெட்டி விட இன்னொரு யோசனை வைத்திருப்பார்களாம்!

இவ்வளவு குற்றச் செயல்களை எனக்கு விளக்கிச் சொன்ன அந்த தனுஷை கமலுக்கும் தெரியும். இவரின் குற்ற வழிமுறை கமலை பாதித்ததாலோ என்னவோ... ‘குருதிப்புனல்’ உளவாளி மேட்டருக்கு ‘ஆபரேஷன் தனுஷ்’ எனப் பெயர் வைத்திருக்கிறார், பிற்காலத்தில் அது ஒரு நடிகரின் பெயராகும் என அறியாமலேயே!போலி போலீஸ் ஜீப்பில் செல்லும் இந்த போலி போலீஸார், தங்கம் எடுத்துச் செல்லும் அந்த பார்ட்டியை பஸ்ஸிலோ, ரயிலிலோ கைது செய்து, தங்கள் ஜீப்பில் ஏற்றுவார்கள்.

(நீளும்...)

சாருஹாசன்