குட்டிச்சுவர் சிந்தனைகள்



குடியரசு தினத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வரேன்னு சொன்னாலும் சொன்னாரு... பாடி ஸ்ப்ரே அடிக்கிற பியூட்டில இருந்து பாக்கு கொட்டுற பாட்டி வரை, பொண்டாட்டிக்கு பூ வாங்குற பூக்கடையில இருந்து போண்டா டீ சாப்பிடுற டீக்கடை வரை இதே பேச்சாதான் இருக்கு. இந்தியா வர்ற ஒபாமா, கொஞ்சம் அசந்தா நம்ம ஆளுங்களால என்ன பாடு படுவாரு... பார்ப்போமே!

அஜித் பட ஓப்பனிங் நாள் மாதிரி அட்டகாசமா கிளம்புது அமெரிக்காவில் ஒபாமாவின் ஏரோப்ளேன். ‘‘கோட்டு போட்ட கொய்யாப்பழம் ஜி, உங்க ஃப்ளைட் இந்தியா வர்றப்ப இங்க ஒரு ஃப்ளைட் பறக்காது; ஒரு பட்டம் பறக்காது; ஏன், ஒரு பறவை கூட பறக்காது. ஆனா, எங்க ‘ஆம்பள’ பட விஷால் மட்டும் ஃபைட் சீன்லே ஜீப் பேனட்ல குந்திக்குனு பறப்பாரு. அதைப் பார்த்து மெர்சலாயிடாதீங்க. அவரு நம்மாளுதான்!’’ என பைலட்டுக்கு போன் அடிக்கிறார் அருண் ஜெட்லி. ஒபாமாவின் பாதுகாப்பு அதிகாரிக்கு போன் அடிக்கிறார் ராஜ்நாத்சிங்.

‘‘ஹலோ டை கட்டுன டைனோசரா? ஓவர்..! எப்ப வேணாலும் நீங்க வண்டிய இறக்கலாம் ஓவர்... ஒபாமா ஃப்ளைட் விட்டு வெளிய வர்றப்ப ‘ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள’னு 9 தடவ கத்த வாடகைக்கு நாலு வாயப் போட்டாச்சு ஓவர்!’’ பதிலுக்கு பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு நிலையை விசாரிக்கின்றனர்.
‘‘எங்ககிட்ட எஃப்.பி.ஐ. இருக்கு, உங்ககிட்ட என்ன இருக்கு?’’ ‘‘அதுக்கும் மேல!’’

‘‘எங்ககிட்ட சி.ஐ.ஏ. இருக்கு, உங்ககிட்ட என்ன இருக்கு?’’ ‘‘அதுக்கும் மேல!’’ ‘‘அட அதுக்கும் மேல என்னதான்யா இருக்கு?’’ எனக் குழம்பும் அதிகாரிகளிடம், ‘‘கேப்டன்டா’’ என கடுப்படிக்கிறார்கள் இந்திய அதிகாரி கள். இதற்கிடையில், டி.வியில் ‘‘டில்லியில் ஒபாமா, டில்லியில் ஒபாமா’’ என டி.விகள் அலறுவதைக் கண்டு, ‘‘ஓ... பாமா’’ எனப் பதறி, முட்டிக்கால் ஓவர்கோட்டுடன் டில்லி விரைகிறார் கேப்டன்.

டயர்டாகி வரும் ஒபாமாவை ‘‘வாங்க ஒபாமாஜி வாங்க, தாஜ்மகால் பார்க்கறீங்களா? இல்ல, தஞ்சாவூர் கோயில் பார்க்கறீங்களா? குதுப்மினார் பார்க்கறீங்களா? இல்ல கொடைக்கானல்ல குணா குகை பார்க்கறீங்களா? அஜந்தா எல்லோரா பார்க்கறீங்களா? இல்ல ‘ஐ’ படம் பார்க்கறீங்களா?’’ என தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்.

‘‘நோ நோ... நான் முதல்ல, வருங்கால அமெரிக்க ஜனாதிபதின்னு சொல்லிட்டு திரியறானே, அந்த முருகேசன பார்க்கணும்’’ என அந்தர் பல்டி அடிக்கும் ஒபாமாவிடம், ‘‘ராத்திரிக்கு புளிச்சோறு சமைச்சிருக்கோம், தொட்டுக்க கொள்ளு சட்னி அரைச்சிருக்கோம்’’ என லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் லட்டு உருட்டுகிறார்கள் தமிழிசை தலைமையிலான தமிழக பாஜகவினர். பயந்து போன ஒபாமாவிற்கு பார்சல் கொண்டு வருகிறார் போர்ட்டர் ஒருவர், ‘‘சார், இந்தாங்க! அதானி - அம்பானி கொடுத்துட்டு வரச் சொன்னாங்க... எல்லாம் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய சங்கு மார்க் லுங்கிங்க... கட்டிக்கிட்டு படுத்தா, காத்து கும்முன்னு வரும்!’’

காலையில் கண்விழிக்கும் ஒபாமாவிற்கு காபி எடுத்து வருகிறார் அத்வானி. ‘‘ஹே, ஹூ ஆர் யூ மேன்?’’ என வினவும் ஒபாமாவிற்கு, மூன்றாம் பிறை கமலஹாசன் போல, ‘‘விஜி, நான் சீனு வந்திருக்கேன் விஜி’’ என குட்டிக்கரணம் போட்டு படம் வரைந்து பாகம் குறிக்கிறார் அத்வானி. அடையாளம் கண்டு அரவணைத்த ஒபாமாவிடம், தான் ‘மக்கள் பிரதமர்’(!) ஆன கதையை அழுகையை அடக்கிக்கொண்டு சொல்கிறார் அத்வானி. குளித்து கதவைத் திறந்து வெளியே வரும் ஒபாமாவை ‘‘ஆயியே ஆயியே’’ என பிரஸ்மீட்டுக்கு அழைத்துப் போகிறார் சிகப்பு சந்தானபாரதி அமித் ஷா.

ஐந்நூறு பத்திரிகையாளர்களிடம் அமித் ஷா ‘‘ஹவா ஹவா’’ பாட்டு பாட, ஒட்டுமொத்தமாக கை தட்டுகிறார்கள் டூப்பு குரூப்பு. ‘‘அமித்ஷாஜி... என்ன சொல்லுது??’’ என ஒபாமா, மோடியிடம் நிலவரத்தைக் கேட்க, ‘‘நீங்க உங்க ரெண்டு மகள்களோட எங்க கட்சில சேர்ந்துட்டீங்கன்னு நம்பாள் சொல்லுது’’ என கலவரமாக்குகிறார் மோடி. அரைபாடி வண்டியேத்தி, கொடி ஏத்த கூட்டிப் போகிறார்கள் ஒபாமாவை. வண்டியோட்டும் பொன்.ராதாவிடம், ‘‘ரஜினிய பாஜகவுல இணைக்கப் பார்த்தது ரொம்ப தப்பு... நியாயமா பா.ஜ.கதான் ரஜினில இணைஞ்சிருக்கணும்’’ எனப் புகையப் போட்டு பத்த வைக்கிறார் ஒபாமா.
கொடியேத்திவிட்டு கொடுக்கும் ஸ்பீச்சில் வழக்கம் போல மோடி, ‘‘இந்த நாட்டுக்கு வந்ததில் பெருமையடைகிறேன். இந்த  தூர தேசத்திலே உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்’’ என வெளிநாட்டு டூர் ஞாபகத்தில் கோலம் போட, ‘‘மோடி ஜி, நாம இப்ப இந்தியாவுலதானே இருக்கோம்!’’ என தண்ணி தெளிக்கிறார் ஒபாமா. ‘‘அப்படியே, கிளீன் இந்தியா திட்டத்துக்காக வௌக்கமாத்த எடுத்து போஸ் கொடுங்க... செல்ஃபி எடுப்போம்’’ என பாய்ந்து வருகிறார் ராம்விலாஸ் பாஸ்வான்.

மோடி - ஒபாமா பர்சனல் மீட்டிங். ‘‘மோடி ஜி... உங்க டைரக்டர் ஹரிய கரெக்டா படம் எடுக்க சொல்லுங்க. அவர் பட ஹீரோக்கள் அடிக்கிற அடியில அடியாளுங்க அமெரிக்காவுல வந்து விழுறாங்க. பேரரசு பட ஹீரோக்களாக, நாங்க ராத்திரி நிம்மதியா தூங்க முடியல...’’ என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளைப் படுக்க வைக்கிறார் ஒபாமா. தன் கிளீன் இந்தியா திட்டத்தைப் பற்றி மோடி பெருமை பேச, ‘‘இதைவிட நல்ல திட்டங்களை நான் இந்தியாவுல கத்துக்கிட்டேன்...’’ என குண்டு வீசுகிறார் அமெரிக்க அதிபர்.

‘‘அமெரிக்கா போன உடனே, அம்மா மெஸ் மாதிரி, ஊருக்கு ஊரு அதிபர் மெஸ், அதிபர் பீட்சா பர்கர், அதிபர் தண்ணி பாட்டில்கள், அதிபர் பெப்பர், அதிபர் சிமென்ட்னு வரிசையா பல திட்டங்களை செயல்படுத்தப் போறேன்’’ என ஒபாமா சொல்ல, ஒட்டுமொத்த மீடியாவும் குப்புற அடித்து விழுகிறது.

இதற்கிடையே தமிழகத்தில், ‘‘அமெரிக்காவில் ‘லத்திகா’ வசூல் செய்த 30000 கோடி ரூபாயை, 2 சாக்கு மூட்டையில போட்டு என்னிடம் ஒப்படைக்கவே இந்தியா வந்திருக்கிறார் ஒபாமா!’’ என இல்லாத மைக் முன்னால் அள்ள முடியாத ஆனந்தத்தோடு பவர் ஸ்டார் பேட்டி தட்ட, ‘‘ரெண்டு மாசத்துக்கு முன்னால வந்திருந்தா, நம்ம ‘ஐ’ பட ஆடியோ ரிலீஸ்ல, அர்னால்டுக்கு பதிலா அண்ணனை உட்கார வச்சிருக்கலாம்’’ என ‘வடை போச்சே’ கதையாக வருந்துகிறார் ஷங்கர். ‘‘ ‘தசாவதாரம் 2’க்கு, க்ளைமேக்ஸ்ல ‘உலக நாயகனே’ பாட்டுக்கு ரெண்டு சீன் வந்துட்டு போங்க’’ என ஒபாமா போனுக்கு எஸ்.எம்.எஸ் தட்டுகிறார்கள் கமலும் கே.எஸ்.ரவிகுமாரும்!

டாஸ்மாக்தான் தமிழ்நாட்டையே வாழ வைக்குது இந்த தடவ நியூ இயருக்கு எதிர்பார்த்த சேல்ஸ் இல்லஅடுத்த பதினாலாவது நாள், அவன் தம்பி பொங்கல் வந்துட்டாண்டா வாழவைக்க

ஆல்தோட்ட பூபதி