கற்றுக்கொள்
சீனியர் டாக்டர் ஸ்ரீனிவாசனின் அறை... ‘‘மே ஐ கம் இன் சார்?’’ - கதவைத் தட்டினான் ஜூனியர் டாக்டர் ப்ரவீன்! வார்டு ரவுண்ட்ஸ் முடித்துக்கொண்டு வந்திருக்கிறான். தலையை அசைத்து அவனுக்கு அனுமதியளித்தார்.
உடனே பேஷன்ட்களைப் பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தான். ‘‘சார், ரூம் நம்பர் 8க்கு ஃபீவர் குறைஞ்சிருக்கு. இன்னும் ரெண்டு, மூன்று நாள்ல ‘டிஸ்சார்ஜ்’ பண்ணிடலாம். பெட் நம்பர் 10க்கு தையல்கள் நிதானமா ‘ஹீல்’ ஆகிட்டிருக்கு. பெட் நம்பர் 13தான் கொஞ்சம் கவலைக்கிடமா இருக்கு!’’
‘‘நீங்க சொல்றது ரூம் நம்பர் 8ல இருக்கும் கமலம்மா குணமாகிட்டிருக்காங்க; 10ம் நம்பர் பெட்காரர் முனிசாமி இன்னும் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டி வரும்; பெட் நம்பர் 13ல் இருக்கும் ராமராவுக்கு உடல்நிலை திருப்திகரமில்லை... இதுதானே?”‘‘ஆமாம் சார்!’’‘‘இதோ பாருங்க ப்ரவீன்... நாம சிகிச்சை தர்றது பெட்களுக்கோ, ரூம்களுக்கோ அல்லது கேஸ் ஷீட்களுக்கோ இல்ல! அவங்க எல்லாம் நம்மைப் போலவே மனுஷங்க.
அவர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுங்க. அப்புறம் பாருங்க, அந்த வாடிய முகங்கள் எப்படி மலருதுன்னு!’’ - கனிவாகச் சொன்ன ஸ்ரீனிவாசனிடமிருந்து கற்றுக்கொண்ட நன்றியுடன் தலையசைத்தான் ப்ரவீன்.
*கே.நிருபமா
|