உயரமானவர்களுக்காக ஒரு விநோத சங்கம்
காய்கறிக் கடையில் கொசுறு வாங்குவது போலத்தான் நமக்கெல்லாம் உயரமும். ‘இன்னும் கொஞ்சம் உயரமா இருந்திருந்தா, ஹ்ரித்திக் ரோஷன் மாதிரி வந்திருப்பேன்’ என்ற ஏக்கம் எல்லா மனிதர்களுக்கும் உண்டு. அவர்கள் நிச்சயம் விசிட் செய்ய வேண்டிய இடம், கேரளாவில் உள்ள உயரமானவர்கள் சங்கம். உயரம் எத்தனை துயரம் என்பது இவர்களின் வாழ்வில் கண்கூடு!
‘‘இந்தியாவிலேயே உயரமானவர்களுக்கு சங்கம் இங்கேதாங்க இருக்கு. இந்திய விமானப்படையில இருந்த சக்கரியா ஜோசப் என்பவர் 1999ல ஆரம்பிச்ச சங்கம் இது.
அவர் 6 அடி 4 அங்குலம்... ஆறடிக்கு மேல இருக்குற எல்லாரும் இதில் இணையலாம். ஆரம்பத்தில் குறைவான உறுப்பினர்கள்தான் சேர்ந்தாங்க. இப்ப எங்களுக்கு 4500 மெம்பர்ஸ்!’’ - பெருமை பொங்கச் சொல்கிறார் சங்கத் தலைவர் டைகிரீஸ் ஆண்டனி. உயரம் 6 அடி 4 அங்குலம். ஆஜானுபாகுவான தோற்றம். அவர் கூடவே இருந்த அபுதாகீர் இன்னும் மிரட்டினார். அவர் ஜஸ்ட், 6 அடி 8 அங்குலம்தான்.
‘‘ஏறக்குறைய எங்க எல்லாருக்கும் ஒரே மாதிரியான அனுபவம் தான். எங்க போனாலும் எங்களை அதிசயமா அண்ணாந்து பாப்பாங்க. ‘ஒரு நாலு அங்குலம் எங்களுக்குக் கடன் கொடுக்கக் கூடாதா’ன்னு கிசுகிசுப்பாங்க.
ஒட்டடைக் குச்சி, ஒட்டகச் சிவிங்கின்னு காதுபட கமென்ட் அடிப்பாங்க. கால்ல கட்டை கட்டி நடக்கிறோமான்னு சந்தேகப்பட்டு பார்வையாலயே ஸ்கேன் பண்ணுவாங்க. ஆனா எங்க பிரச்னைகளை மத்தவங்க உணர்றதில்லை. பொருத்தமான ரெடிமேட் உடைகள் கிடைக்காது. துணி வாங்கித்தான் தைக்கணும்.
செருப்பு சைஸும் 11ல இருந்து 18 வரை இருக்கும். அதுவும் ஆர்டர் பண்ணித்தான் வாங்கணும். ரயில்ல கால் நீட்டிப் படுத்தா வழி தடைபடும். சுருண்டேதான் கிடக்கணும். ஸ்கூல், காலேஜ்லயும் சரி, சினிமா, டிராமா நிகழ்ச்சிகள்லயும் சரி... முன் வரிசையில உக்காரவே முடியாது. ‘குனிஞ்சு உக்காருங்க’, ‘இடது பக்கம் திரும்புங்க’, ‘வலது பக்கம் சாயுங்க’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. இப்படி மத்தவங்களுக்காக நாங்க எவ்வளவோ விட்டுக் கொடுக்கணும்! பாவம், அவங்களுக்கும் கஷ்டம்... எங்களுக்கும் கஷ்டம்.
பஸ் பயணம் இன்னும் நரக வேதனை. சீட் கிடைக்கலைன்னா, குனிஞ்சு குறுகித்தான் நிக்கணும். கொஞ்ச நேரத்துலயே இடுப்பெல்லாம் வலிக்கும். ஒருவேளை உட்கார இடம் கிடைச்சாலும், முன் சீட்ல முட்டிக்கால் இடிக்கும்.
முன் சீட்ல பெண்கள் இருந்தா அதை சில்மிஷமா எடுத்துக்கிட்டு பிரச்னை பண்ணுவாங்க. தர்மசங்கடமா போகும். பலசமயம் இப்படி போலீஸ் கம்ப்ளைன்ட் எல்லாம் ஆகியிருக்கு. ‘நாம மட்டும் என்னடா பாவம் பண்ணினோம்’னு தனிமையில கலங்கித் தவிச்சவங்கதான் நாங்க எல்லாரும்.
இந்த சங்கத்துல நம்மளை மாதிரியே பல பேரைப் பார்க்கும்போது ஒரு தன்னம்பிக்கை வருது. உலகத்துல எவ்வளவோ பேர் குள்ளமா பிறந்து கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு கொடுக்க வேண்டிய உயரத்தை கடவுள் நமக்குக் கொடுத்துட்டார்னு நினைச்சி நிம்மதியா இருக்கறோம்!’’
- ஆண்டனியின் ஒவ்வொரு வார்த்தையிலும் அனுபவங்களின் வலி வழிகிறது. ஆண்களுக்கென்றே துவங்கப்பட்டதால் இன்னும் இவர்களின் சங்கம் ‘டால் மென் அசோசியேஷன்’ எனும் பெயரில்தான் இருக்கிறது. அதிலேயே இப்போது பெண்களும் இணைகிறார்கள். மொத்தமே 14 பெண் உறுப்பினர்தான் என்றாலும் அது தனிப்பிரிவாகச் செயல்படுகிறது.
‘‘எங்களுக்கு ப்ளஸ் பாயின்ட்டும் இருக்கு சார்!’’ எனத் துவங்குகிறார் அபுதாகீர்.‘‘திருவிழா கூட்டத்தில் கூட எங்களைச் ‘சட்டு’ன்னு அடையாளம் கண்டுக்க முடியும். விளையாட்டுத் திறமை உள்ளவர்களுக்கு உயரம் ப்ளஸ். அரசாங்க வேலை கிடைக்குது. ஆண்டனி சாரையே எடுத்துக்குங்களேன்... வாலிபால் ப்ளேயர்...
அதனாலயே விமானப்படையில் வேலை கிடைச்சிருச்சு. எங்க அமைப்புல நிறைய பேர் போட்டோகிராபர்களா இருக்காங்க. எவ்வளவு கூட்டத்துலயும் முட்டி மோதாம சும்மா கம்பீரமா நின்னு போட்டோ எடுக்க எங்களால முடியும். எங்கள் உறுப்பினர்கள்ல யார் எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் அவங்கதான் சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்’’ என்கிறவரைத் தொடர்கிறார் ஆண்டனி.
‘‘பொருத்தமான ஜோடி கிடைச்சு கல்யாணம் பண்றது மட்டும் எப்படியும் சிரமம்தான். நான் தப்பிச்சேன். எனக்குக் காதல் கல்யாணம். மனைவி 5.5 உயரம்தான். அபுதாகீருக்கு ரொம்ப முயற்சியெடுத்து தேடின பிறகுதான் 6 அடி 2 அங்குலத்துல பெண் கிடைச்சாங்க. பொதுவா உயரமானவங்க, அதிகம் சாப்பிடுவாங்க.
முதுகு வலி, மூட்டு வலியெல்லாம் சீக்கிரமே வந்துடும். கேரளாவுலயே உயரமானவர் 7 அடி 2 அங்குலம் இருக்குற மிஸ்டர் கமருதீன்தான். அவரை சென்னையில ஒருதரம் கமல் பார்த்துட்டு படத்தில் நடிக்க வச்சார். அதுக்கப்புறம் நிறைய படங்கள்ல வந்தார். நிகழ்ச்சிகளுக்கு ஷோ மேனாவும் போறார். ஆனா பாருங்க மூட்டு வலியில அவதிப்படுறார். இதைத் தவிர்க்கவே முடியாது’’ என்கிறார் அவர்.
இந்த அமைப்பின் மூலம் உயர மனிதர்களுக்கு வேலைவாய்ப்பும் சாத்தியமாகியிருக்கிறது. அதாவது, இவர்களில் 80 கிலோவுக்கு மேற்பட்ட திடகாத்திரமானவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து ‘காவலர் குழு’ ஒன்றை இவர்களே உருவாக்கியிருக்கிறார்கள். வி.ஐ.பிக்களுக்கு பாதுகாப்பையும் கம்பீரத்தையும் ஒருசேர வழங்குகிறார்கள் இந்த எஸ்கார்ட்ஸ். ‘‘மைனஸை ப்ளஸ் ஆக்கிக்கணும் சார். அதானே வாழ்க்கை!’’ இந்தச் சங்கத்தினரின் கோரஸ் வார்த்தை மனதில் விழுந்து நீள்கிறது.
பொருத்தமான ரெடிமேட் உடைகள் கிடைக்காது. துணி வாங்கித்தான் தைக்கணும். செருப்பு ஆர்டர் பண்ணித்தான் வாங்கணும்.
பொண்ணுங்க பாடு இன்னும் கஷ்டம்!கேரளத்தின் மிக உயரமான பெண்மணி, வழக்கறிஞர் கவிதா. உயரம் 6 அடி 3 அங்குலம். வைக்கம் நகரில் வசிக்கும் இவர், ‘டால் மென் அசோசியேஷன்’ பெண்கள் பிரிவுத் தலைவர்.
‘‘ஆம்பளைங்களுக்குக் கூட உயரம் ஒரு வகையில கம்பீரம்னு எடுத்துக்கலாம். ஆனா, பொண்ணுங்களுக்கு கம்பீரம்ங்கிறதே மைனஸ்தான். பொண்ணுங்களும் பசங்களும் என்னைக் கிண்டல் பண்ணும்போது கவலையா இருக்கும். அம்மாகிட்ட அழுதிருக்கேன். அப்புறம் பழகிடுச்சு. பிளவ்ஸ் அட்டாச்டா வர்ற ஆறரை மீட்டர் சேலையை ஜாக்கெட் வெட்டாம தான் என்னால கட்ட முடியும். சுடிதார்னா ஒரே கலர் ஒரே டிசைன்ல ரெண்டு பிட் எடுத்து ஒரு சுடிதார் தச்சிக்குவேன்.
ஆனா இந்த உயரத்தால, சில வசதிகளும் இருக்கு! கோயில்ல எவ்வளவு கூட்டம் இருந்தாலும் எனக்கு தரிசனம் க்ளியரா இருக்கும். கோர்ட்ல ஜட்ஜு முகம் என் முகத்துக்கு சரி சமமா இருக்கும். அதனாலயே வலுவான வாதங்களை வச்சி வாதாட உளவியல் பலம் கிடைக்குது. என்ன சொன்னாலும் சரி, உயரமா வளர்ந்துட்ட பொண்ணுங்களுக்கு மாப்பிள்ளை கிடைக்கிறது கஷ்டம்தான். 34 வயசில்தான் எனக்கு என் கணவர் கிடைச்சார். அவரும் நானும் ஒரே உயரம். மொத்தத்தில் நிறைவா இருக்கேன்!’’ என நம் மனதையும் நிறைய வைக்கிறார் கவிதா.
கலீல் ஜிப்ரன் கவிதைகள்கூடியிருந்தாலும்
குந்த ஒரு வீடிருந்தாலும்
உயரப் பறக்கும் பருந்து
தனிமையில்தானே
திரிதல் வேண்டும்?
பிஸ்மி பரிணாமன்