ஐந்தும் மூன்றும் ஒன்பது



‘அப்பாவின் டைரியில் நான் கண்ட அந்த புதிய சொற்களில் ஒன்று ‘நுபுவி’ என்பதாகும். இந்த சொல்லுக்கு என்ன பொருள் என்று மண்டையை உடைத்துக்கொண்டேன். பள்ளியில் என் தமிழ் ஐயா வேலாயுதனாரிடமும் கேட்டேன். ‘புவி என்றால் உலகம்.நுபுவி என்று ஒரு சொல்லே எனக்குத் தெரிந்து இல்லை’ என்றார்.

இருந்தும் தமிழகராதியைத் தேடி எடுத்து வந்து பார்த்துவிட்டு ‘அதிலும் இப்படி ஒரு சொல்லே இல்லை. எனவே, இந்த சொல்லே யாரோ தவறாக எழுதியதாக இருக்க வேண்டும்’ என்றார். ஆர்வம் தாளாத நான் அப்பாவிடமே பொருள் கேட்டுவிட்டேன். அவர் முதலில் திகைத்தார். பின் அவர் டைரியை நான் எடுத்துப் பார்த்ததற்காக கோபப்பட்டார்.

ஒருவரது டைரி என்பது மிக அந்தரங்கமானது. அதை எதற்காகவும் எடுத்துப் படிக்கக் கூடாது என்று புத்திமதி கூறியவர், ‘நுபுவி என்பது வணிகர்கள் தங்களுக்குள் பயன்படுத்தும் எழுத்தாகும்’ என்றார். இது ஒரு எண்மதிப்பை எழுத்தில் சொல்வதாகும். தமிழ் எழுத்துக்கள் அவ்வளவுக்கும் அவர்கள் அதன் வரிசைக்கேற்ப எண்ணை வைத்திருந்தனர். உதாரணமாக, உயிர் எழுத்துக்கள் மொத்தம் பன்னிரண்டு. இதில் முதல் எழுத்து ‘அ’வன்னா. இதன் மதிப்பு ஒன்று.

அடுத்து ‘ஆ’வன்னா... இதன் மதிப்பு இரண்டு. இப்படியே தமிழின் மொத்த எழுத்துக்கள் வரிசையாக அவற்றின் எண் மதிப்பைப் பெறுகின்றன. இந்த ‘நுபுவி’க்கு என்ன எண் மதிப்பு என்று தமிழ் எழுத்துக்கள் கொண்ட அட்டவணையைப் பார்த்து நீயே சொல் பார்க்கலாம்’ என்றார். என்வரையில் மொழியை மையப்படுத்திய ஒரு முதல் தேடலாகவும், ஆச்சரியமாகவும் இந்த விஷயம் அமைந்தது...’- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...உதிரமுத்து வள்ளுவர் பளிச்சென்று கேட்கவும், கணபதி சுப்ரமணியனுக்கு ஒரு நிறைவு.

‘‘யெஸ் மிஸ்டர் வள்ளுவர்... இப்பவே நீங்க என்கூட வர முடியுமா? இந்த செகண்ட்ல இருந்தே நான் உங்க வரையில ரொம்ப ஜாக்கிரதையாவும் ஒரு கேரோடவும் இருக்கறது நல்லதுன்னு நினைக்கறேன்’’ - என்றார்.‘‘அப்ப என்னை உங்ககூட கூட்டிக்கிட்டு போகப் போறீங்களா?’’
‘‘எக்ஸாக்ட்லி...’’‘‘கொஞ்சம் தமிழ்ல சொல்லுங்க!’’

‘‘ஏன்... எக்ஸாக்ட்லின்னா அர்த்தம் தெரியாதா உங்களுக்கு?’’‘‘அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியும். ‘துல்லியமா’ங்கற அர்த்தத்துல அது வரும். இதுக்கு ‘ஆமாம்’னு தமிழ்ல சுலபமா சொல்லிட்டுப் போயிடலாமே... நீங்க தமிழர்தானே?’’‘‘அப்ப நீங்க தமிழ் மொழிப் பற்றுள்ள ஒரு ‘சமேரியன்’... சாரி, ஒரு ‘உணர்ச்சியாளர்’னு சொல்லுங்க!’’‘‘ஆங்கில வார்த்தையில்லாம உங்களால பேசவே முடியாது போல இருக்கே?’’

‘‘அதுதானே இப்ப லைஃப்ஸ்டைல்? இங்கிலீஷ் தெரியலன்னா நீங்க தமிழ்நாட்டுக்கு வெளியில ஒழுங்கா பிச்சை கூட எடுக்க முடியாது மிஸ்டர் வள்ளுவர்...’’‘‘அதையெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்.

ஜப்பான்காரங்ககூடதான் இங்கிலீஷ் தெரியாதவங்க. ஆனா, அவங்கதானே உலகத்துல எதுலயும் முதல்ல இருக்காங்க?’’‘‘இப்ப அவங்களும் இங்கிலீஷ் படிக்கறாங்க வள்ளுவர். அவங்களுக்கும் நெருக்கடி உருவாகிடிச்சு. அவங்க மட்டுமில்ல... சீனாவுலயும் ஆங்கில மோகம் உருவாகிடுச்சு. இன்னிக்கு நீங்க விரும்பினாலும் விரும்பலேன்னாலும், இங்கிலீஷ்தான் உலகத்தோட பொதுவான மொழி. சும்மா ‘தமிழ்... தமிழ்...’னு ஜல்லியடிக்கறதால புண்ணியமில்ல!’’

கணபதி சுப்ரமணி யன் பேச்சோடு கண்ணாடியைக் கழற்றித் துடைத்தார். வள்ளுவரிடம் ஒரு ஆழ்ந்த மௌனம்.‘‘என்ன மிஸ்டர் வள்ளுவர்? அமைதியாகிட்டீங்க?’’‘‘இல்ல... ஒண்ணுமில்ல..!’’‘‘இப்படி சொன்னாலே நிறைய இருக்குன்னுதானே அர்த்தம்! கமான், என்னன்னு சும்மா சொல்லுங்க. அப்படியே எதையாவது எடுத்துக்கறதுன்னா எடுத்துக்கிட்டு புறப்படுங்க...’’

‘‘இருங்க வந்துடறேன்...’’ - வள்ளுவர் புறப்படத் தயாரானார். ஒரு இருபது நிமிட நேர அளவில் இரண்டு ட்ரங்க் பெட்டிகள், ஒரு தோல் பை, அதுபோக, ஒரு படுக்கைக் கட்டு என்று அந்த நாளில் ரயில் பயணம் செய்பவர்கள் போல வந்து நின்றார்.

நின்ற நிலையில், ‘இனி எந்தக் காலத்தில் இந்த வீட்டைப் பார்க்கப் போகிறோம்’ என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.‘‘என்ன... திரும்ப வருவோமா, மாட்டோமான்னு பாக்குறீங்களா?’’‘‘ஆமாம்... அறுபது, எழுவது வருஷமா வாழ்ந்துக்கிட்டு வர்ற வீடாச்சே?’’‘‘பாத்தாலே தெரியுதே... நடுவுல கூம்பு வடிவத்துல இருந்த கூரையெல்லாம்தான் இப்ப கிடையாதே? தட்டையான கூரை... அதுக்குமேல ஒரு வீடு... அதுக்கும்மேல தட்டையான கூரை... அதுக்குமேல ஒரு வீடுன்னு மாடி மேல மாடிங்கறதுதானே இப்ப ஃபேஷன்..?’’

‘‘வாஸ்தவம்தான்! ஆனா, எப்ப இந்த தட்டைக்கு நம்ம கட்டிடங்கள் மாறுச்சோ, அப்பவே வாழ்க்கையும் தட்டையாயிடுச்சு. கூம்பு வடிவ கூரை வீடு தந்த ஒரு சந்தோஷத்தையும் வளர்ச்சியையும் இந்த தட்டையான வீடுகள் தர்றதில்லங்கறது உங்களுக்குத் தெரியுமா?’’‘‘ரொம்ப பழமையான ஆளா இருக்கீங்களே... கிளம்பலாமா?’’‘‘அதான் கிளம்பிட்டேனே...’’ ‘‘ஆமாம், உங்களுக்கு யாருமில்லையா... தனியாளா நீங்க?’’‘‘பெரிய குடும்பஸ்தன்ங்க நான். ஒரே ஒரு மகன். என் அப்பா பேர்தான் அவனுக்கு... கஜமுத்துங்கறது அவன் பேர்...’’
‘‘கஜமுத்துவா... உங்க பேர் உதிரமுத்து... பெயர்கள் எல்லாமே வித்தியாசமா இருக்கே?’’

‘‘வள்ளுவக்குடிகளோட வாழ்வே வித்தியாசமானதுதாங்க. கேட்டா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!’’‘‘பேசுவோம்... அதான் கூடவே இருக்கப் போறீங்களே... ஆமா, இப்ப உங்க மகன் எங்கே?’’
‘‘அவனை எங்க மலைக் கிராமத்துக்கு அனுப்பிட்டேன்...’’

‘‘அவருக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?’’
‘‘பேரன் இருக்கான் சாமி... அவன் பேர் என்ன தெரியுமா?’’
‘‘என்ன... உங்க பேரா?’’

‘‘சரியா சொல்லிட்டீங்க. அவன் ஏழாம் உதிரமுத்து. என் தலைமுறையோட ஏழாவது தலைமுறை அவன்...’’‘‘ஐ ஸீ... சரி, வாங்க! கார்ல போய்க்கிட்டே பேசுவோம். அப்புறம், இந்தப் படுக்கையெல்லாம் வேண்டாம். துணிமணி மட்டும் போதும். என் பங்களாவுல நீங்க படுத்துத் தூங்க எல்லா வசதிகளும் இருக்கு...’’

‘‘இருக்கலாங்க... ஆனா ஒரே தட்டு, ஒரே படுக்கைன்னு வாழற வாழ்க்கை என் வாழ்க்கை. நீங்க விடுங்க...’’ என்ற வள்ளுவர், ட்ரங்கு பெட்டி, தோல்பை, படுக்கையோடு கணபதி சுப்ரமணியனின் காரில் ஏற வந்தார். முன்னதாக வீட்டைப் பூட்டி சாவியைப் பக்கத்து வீட்டில் தருவதா... இல்லை, பாக்கெட்டில் போட்டுக்கொள்வதா என்று யோசித்துவிட்டு, பக்கத்து வீட்டுப் பெண்ணிடமே தரச்சென்றார். ‘‘பெட்டி படுக்கையோட எங்க கிளம்பிட்டீங்க? உங்க மலைக் கிராமத்துக்கா?’’

‘‘இல்ல தனபாக்கியம். நான் ஆராய்ச்சியாளர் வீட்டுக்குப் போறேன். கஜமுத்து வந்து கேட்டா சாவிய கொடு...’’
‘‘சோசியம் பாக்க வர்றவங்க கேட்டா?’’
‘‘வேற நல்ல ஜோசியரை தேடிப்போகச் சொல்லு...’’
‘‘இது என்ன? பேச்சு ஒரு மாதிரி இருக்கு...’’

‘‘ரொம்ப வாய கிண்டாத. சொன்னத செய்... நான் வர்றேன்!’’
- அந்தப் பக்கத்து தனபாக்கியம் வாயை அடைத்துவிட்டு அவர் காரில் ஏறிக் கொள்ள, கார் புறப்பட்டது.
காருக்குள்...

‘‘திரும்ப வந்து இந்த வீட்ல வாழப் போறதில்லன்னு உறுதியா நம்பற மாதிரி தெரியுதே?’’‘‘நம்பித்தானே தீரணும்... வேற வழி?’’‘‘என்ன வழி? வழியில்லாம தான் நான் வந்திருக்கேனா... என்னய்யா நீர் சுத்த பூஞ்சையான ஆளாவே இருக்கீர்?’’‘‘பூஞ்சையா... நானா?’’‘‘பின்ன... நூத்தி முப்பத்தி ஆறு வயசுல தைவான் நாட்டுல ஒருத்தர் உயிரோட இருக்காரு.

நூறு வயசுக்கு மேல ஆயிரக்கணக்கானவங்க உயிரோட இருக்காங்க!’’‘‘விதி இருந்தா செத்த பிறகும் சூட்சுமமா பல நூறு வருஷத்துக்கு இந்த பூமியை சித்தர் சாமிங்க மாதிரி சுத்திச் சுத்தி வரலாம். இல்லாட்டி எமன் முன்னால, ‘உத்தரவு எஜமான்’னு கைகட்டி நின்னு கண்ணீர் விடணும். எல்லாத்துக்கும் விதி இருக்கணும் ஆராய்ச்சி சாமி...’’

‘‘விதியா... போச்சுடா! இனி உங்ககிட்ட பேச முடியாது. புத்தியால ஜோசியம் சொல்லி பொழச்சிக்கிட்டு, அந்த மதிய நம்பாம விதிய நம்பறது ஹைலி ஹிலேரியஸ். இனி உங்ககிட்ட பேசி புண்ணியமில்ல.

ஆமா... உங்க டெத் டைம் எப்போன்னு சொன்னீங்க?’’‘‘வர்ற 27ம் தேதி மாலை நாலு மணி இரண்டு நிமிஷம்... அந்த இரண்டாவது நிமிஷ அறுபது நொடிகளுக்குள்ள!’’
‘‘ரைட்... இன்னிக்கு தேதி 25. இன்னும் இரண்டு நாள் இருக்கு. அந்த 27ம் தேதி 4.02க்குப் பிறகு உங்களை உண்டு இல்லைன்னு பண்றேன். ஓகே?’’

‘‘ஆஹா... நான் இருந்தா நீங்க என்னை உங்க அடிமையா வெச்சுக்கலாம். உங்களுக்கு மலம் கழுவிவிடக் கூட நான் தயார்...’’- உதிரமுத்து பேச்சோடு பேச்சாக வெளியே பார்த்தார். திணறலான டிராஃபிக்! அதைப் பார்க்கவும் சிரிப்பு வந்தது.‘‘என்ன சிரிப்பு?’’

‘‘ஒண்ணுமில்ல... ரெண்டு கால் நல்லா இருக்க, அதைப் பயன்படுத்தாம கார், பஸ்ஸுன்னு இந்த இரும்பு வீடுங்களை இழுத்துக்கிட்டு திரியறாங்களே... இன்னும் எத்தனை நாளைக்குன்னு நினைச்சேன்!’’‘‘ஏன்... இதெல்லாம் எதிர்காலத்துல இருக்காதா?’’‘‘சரியா இன்னும் பதினேழு வருஷம்தான்! இந்த அவ்வளவு கார், பஸ்ஸும் காயலான் கடைக்குத்தான் போகப் போகுது!’’
‘‘என்ன சொல்றீங்க... மனுஷன் ஹெலிகாப்டர், விமானம்னு வளர்ந்துடுவானா?’’

‘‘அது தெரியாது... ஆனா இதெல்லாம் இருக்காது. பெட்ரோல்னு ஒண்ணு இருந்தாதானே இதெல்லாமும் இருக்க முடியும்? அந்தக் கிணறு வத்திப் போயிட்டா என்ன செய்ய முடியும்?’’
‘‘மிஸ்டர் வள்ளுவர்... இன்னும் ஐம்பது வருஷத்துக்கு பெட்ரோல் கிடைக்கும்ங்கறதுதான் விஞ்ஞானிகள் தீர்மானம்!’’

‘‘இன்னிக்கு சொல்றத நாளைக்கு மாத்திச் சொல்றவங்கதானே விஞ்ஞானிங்க! நீங்க வேணா பாருங்க... தப்பா சொல்லிட்டதா சொல்வாங்க...’’
‘‘எதை வச்சு இவ்வளவு உறுதியா சொல்றீங்க?’’

‘‘பலகணியிலதான் குறிப்பா இருக்குதே!’’- வள்ளுவர் சொல்லவும், கணபதி சுப்ரமணியன் திகைக்கவும் சரியாக இருந்தது.‘‘என்ன திகைச்சுட்டீங்க... இன்னிக்கு டில்லில ஆட்சி மாறியிருக்கு. ‘வாலுள்ளவன் வசமாகும் தலைநகரம்’னு குறிப்பு இருக்கு... அதுவும் பொருந்திப் போகுதே..?’’‘‘வாலுள்ளவனா?’’‘‘ஆமாம்... கெஜ்ரிவால்ங்கற பேர்ல வால் இருக்குல்ல?’’
- வள்ளுவர் கேட்க, கணபதி சுப்ரமணியனுக்கு நடுநெற்றி மேல் பூரான் ஒன்று கதகளி ஆடுவதுபோல் இருந்தது.மௌனமாகி விட்டார்!

கணபதி சுப்ரமணியனின் அருந்தவப் புதல்வன் அனந்தகிருஷ்ணனின் கார், பிருந்தாவன் பங்களாவுக்குள் நுழைந்து நின்றது. சீனப் பயணம் முடிந்த களைப்போடு உள் நுழைந்தவரை, வாட்ச்மேன் தங்கவேலு வரவேற்றான். டிக்கியில் பிதுங்கிக் கிடந்த லக்கேஜ்களை நாய் போல இழுத்துக்கொண்டு அவர் பின்னே சென்றான். புதிதாக ஒரு சூட்கேஸ். அதன்மேல் டிராகன் சிம்பல்!
‘அம்ப பரமேஸ்வரி... அகிலாண்டேஸ்வரி...’ என்று சாதகம் செய்து கொண்டிருந்த பத்மாசினி ஓடி வந்தாள். வந்தவள் புது சூட்கேஸைத்தான் பார்த்தாள்.

‘‘என்னங்க... நான் சொன்ன சைனா சில்க், ஒரிஜினல் சாரி கிடைச்சுச்சா? லாவண்டர் கலர்ல பிங்க் பார்டர்ல வேணும்னு எழுதிக் கொடுத்திருந்தேனே...’’ - என்று திடமான திவ்ய மதுர இந்தியப் பெண்ணாக பேசியவளை வெறித்தார் அனந்த கிருஷ்ணன்.‘‘பத்மா! ஐ ஆம் ஸோ டயர்ட்... என்ன சாப்பிட்றீங்கன்னு கேட்காம எடுத்த எடுப்புல புடவையா? வாங்கிட்டு வந்துட்டேன்... போதுமா?’’ என்று எரிந்து விழாத குறையாக அவர் பேசவும், ப்ரியாவும் தன் அறை நீங்கியவளாக வந்து, ‘‘டாட்...’’ என்று சோபாவின் கைப்பிடிமேல் அமர்ந்து அவர் தோளை உரசிக்கொண்டு தலையை வருட ஆரம்பித்தாள்.

அந்த கார்ப்பரேட் அப்பாவின் தலையில் அப்போது அமிர்தம் சுரக்க ஆரம்பித்தது. அதே சமயம் வாசல்புறமாக ஒரு குடுகுடுப்பைக்காரன்! பேன்ட் அணிந்து கோட் போட்டுக்கொண்ட நவீனத்தோடு, ‘இந்த பங்களாவுல ஒரு துக்கம் நடக்கப் போகுது...’ என்று தன் பாணியில் தொடங்கி விட்டிருந்தான்!இன்னிக்கு டில்லில ஆட்சி மாறியிருக்கு. ‘வாலுள்ளவன் வசமாகும் தலைநகரம்’னு காலப் பலகணியில குறிப்பு இருக்கு... அதுவும் பொருந்திப் போகுதே?

‘‘இந்தப் படத்துல நீங்க
மேக்கப் இல்லாம
நடிக்கணும் மேடம்...’’
‘‘குடும்பப் படமா..?’’
‘‘ம்ஹும்... பேய்ப் படம்!’’

“அரெஸ்ட் ஆன தலைவரை, அவர் தூங்கும்
போதுதான் விசாரிக்கப் போறாங்களா... ஏன்?’’
‘‘அவருக்குத் தூக்கத்துல உண்மை பேசற வியாதி இருக்காம்!”

“அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு நர்ஸை அனுப்பி உங்களுக்கு டெம்ப்ரேச்சர் பார்க்கணுமா... ஏன், ஜுரம் அதிகமா இருக்கா?’’
‘‘ம்ஹும்... இங்கே நர்ஸ்கள் அதிகமா இருக்காங்க. எல்லோரையும் நான் பார்த்தாகணுமே!”
- எஸ்.ராமன், சென்னை-17.

கலீல் ஜிப்ரன் கவிதைகள்

இருவரும் சேர்ந்து
அருகருகே நில்லுங்கள்
எனினும்
மிகுந்த அருகாமையைத்
தவிர்த்திடுங்கள்
மாடங்களைத் தாங்கும்
தூண்கள் சிறிது விலகித்தான்
நிற்கின்றன

-தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்