பொறுப்பு



‘‘நம்ம கம்பெனியோட இருபத்தி அஞ்சாவது ஆண்டு விழாவ நாம சிறப்பாகக் கொண்டாடணும். விழா செலவுகளுக்காக அஞ்சு லட்ச ரூபா ஒதுக்கியிருக்கோம். அந்த விழாவ நடத்தற பொறுப்பை உங்கள்ல யார் எடுத்துக்கப் போறது?’’ - அனைத்து ஊழியர்கள் முன்னிலையில் மேனேஜர் கேட்டார்.சற்று நேர கசமுச பேச்சிற்குப் பிறகு, ‘‘நீங்களே ஒருத்தரை செலக்ட் பண்ணுங்க சார்’’ என்றார்கள் அவர்கள்.ஒரு மாதம் கழிந்தது... மீண்டும் மேனேஜர் அவர்கள் அனைவரையும் அழைத்தார்.

‘‘ஹலோ எவ்ரிபடி... நம்ம கம்பெனியோட  விழாவ நடத்தற பொறுப்பை நம்ம அட்டெண்டர் சேகர்கிட்ட ஒப்படைக்கப் போறேன்!’’ என்றார். அனைவர் முகத்திலும் அதிர்ச்சி, ஆச்சரியம், குழப்பம்.அனைத்தையும் கவனித்த மேனேஜர் காரணத்தைச் சொன்னார்...‘‘போன மாசம் மட்டும் உங்க எல்லாரோட சம்பளத்தையும் கேஷா கவர்ல போட்டுத்தான் கொடுக்கச் சொன்னேன்.

அப்ப எல்லா கவர்லயும் எழுதியிருந்த தொகைக்கு மேல ஐந்நூறு ரூபா எக்ஸ்ட்ரா வச்சேன். அந்த அதிகப் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்த ஒரே நபர் நம்ப சேகர்தான். இப்ப சொல்லுங்க... அவர்கிட்ட இந்தப் பொறுப்பைக் கொடுத்தது சரிதானே?’’ஏதும் சொல்ல முடியாமல் ஊழியர்கள் தலையாட்டினார்கள்.

கீதா சீனிவாசன்