மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீஅரவிந்த அன்னை

மலரைப் போல் இருங்கள். அது எப்போதும் சமநிலையோடு இருக்கிறது. அதற்கு விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை. வேற்றுமை இன்றி எல்லோருமே அதனுடைய அழகையும் நறுமணத்தையும் நுகர முடியும்.

இயற்கை அன்னைக்குரிய இனிய நறுமணத்தையும் மர்மமான எழிலையும் மலர், சிறிதளவும் தயக்கமின்றி வாரி வழங்குகிறது. நமது இன்பத்திற்காக அது தன்னைத் தியாகம் செய்கிறது. மலர்கள் குறிப்பிட்டுக் காட்டும் தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்காகத்தான் நான் உங்களுக்கு மலர்களைத் தருகிறேன்.

அன்று மிராவுக்கான விடியல் அதி அற்புதமானதாக இருந்திருக்க வேண்டும். மிராவை சந்திக்க ஒரு அன்பர் வந்திருந்தார். அவர் கைகளில் சில புத்தகங்கள் இருந்தன. மிராவுடனான உரையாடலுக்குப் பிறகு அந்தப் புத்தகங்களை மிராவிடம் கொடுத்தார்.புத்தகங்களை வாங்கிய மிராவின் கண்கள் ஒளிகொண்டன.ஒன்று, ‘பகவத் கீதை’யின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நூல். மற்றொன்று, சுவாமி விவேகானந்தரின் ‘ராஜ யோகம்’.

முதலில் பகவத் கீதையை எடுத்தார். ‘குதிரைகள் பூட்டிய தேரின் மீது அமர்ந்து அதன் கடிவாளத்தைக் கையில் இழுத்த வண்ணம் இருக்கும் கிருஷ்ணனும், ‘எனக்கு எல்லாம் நீயே! நான் என்ன செய்வது என்று வழிகாட்டு’ என்றபடி சரணாகதியாகி பணிந்து நிற்கும் அர்ஜுனனும் இந்தக் குதிரைகளும் என்ன சொல்கிறார்கள்’ என அந்த நூலின் அட்டையில் விரல்களால் பயணித்தபடி யோசித்தார். புத்தகத்தைத் திறந்தார். கண்களை மூடி அதன் வாசனையை நுகர்ந்தார். அச்சு மை மணம்... தாளின் வாசனை... அவற்றோடு சேர்ந்து பழமை வாய்ந்த பாரத நாட்டின் ஞான மரபில் பூத்த கீதையும் அவருள் ஆழ நுழைந்தது.

கீதை சொல்வதென்ன?

புரட்டிய பக்கம் உன்னதமானது. கீதையின் மொத்தமும் சாரமாய் அதில் இருந்தது.‘ஓ... அர்ஜுனா, சிக்கலான இந்த நிலையில், மேன்மக்களுக்குப் பொருந்தாததும் இழிவானதும் விண்ணக வழியை அடைப்பதுமாகிய மனத்தளர்ச்சி உன்னை எங்கிருந்து வந்து அடைந்தது?எதிரிகளை எரிப்பவனே! குந்தி மைந்தனே! பேடித்தனத்திற்கு இடம் கொடுக்காதே. இது உனக்குச் சிறிதும் பொருந்தாது. அற்பமான மனத்தளர்ச்சியை ஒழித்து எழுந்திரு!’ - வரிகளின் வீரியம் உணர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தார் மிரா.

‘தம் ததா க்ருபயாவிஷ்டம்’ எனத் தொடங்கும் சுலோகங்களில், அர்ஜுனனின் உண்மையான நிலை கவிதை நயத்துடன் அழகாக சித்தரிக்கப்படுவதைப் பார்த்து வியந்து தொடர்ந்தார்.
அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் அறிவுரை வழங்குகிறார்: ‘க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த’ போன்ற சொற்களில் கிருஷ்ணன் ஏன் அர்ஜுனனைப் போரில் ஏவுகிறார்? - மிரா தீவிரமாக சிந்தித்தார்.
அர்ஜுனன் போர் செய்ய விரும்பாதது சத்வ குணத்தின் மேலீட்டால் அல்ல, தமோ குணம்தான் அவனைத் தடுத்தது.

சத்வ குணம் படைத்த மனிதன் வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் - அது சாதகமானதானாலும் சரி, பாதகமானதானாலும் சரி - ஒரே மாதிரி அமைதியாக இருப்பான். அர்ஜுனன் பயப்பட்டான்; இரக்கத்தால் தன்னிலை மறந்தான். போர் புரியும் இயல்பும் விருப்பமும் அவனுக்கு இருந்தன என்பது தெளிவு. ஏனெனில் அவன் போர்க்களத்திற்கு அந்த ஒரே நோக்கத்துடன்தான் வந்தான்.

நமது வாழ்க்கையிலும் இத்தகைய நேரங்கள் அவ்வப்போது வருவதுண்டு. பலர் தங்களை சத்வ குணம் படைத்தவர்கள் என எண்ணிக்கொள்கின்றனர். உண்மையில் அவர்கள் தமோ குணம் மிக்கவர்களாக இருப்பார்கள். தூய்மையற்ற வாழ்க்கை வாழும் பலர், தங்களை யோகிகளாக எண்ணிக்கொள்கின்றனர். ஏன்? யோகிகள் ஜடத்தைப் போல், பித்தனைப் போல், பேயைப் போல் இருப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவே!

யோகிகளை ஒரு குழந்தைக்கு ஒப்பிடுவார்கள். இப்படி ஒப்பிடுவதில் ஒரு பக்கம்தான் சரி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யோகிகளும் குழந்தையும் சிறிதும் மாறுபாடில்லாமல் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. இருவரும் இரண்டு எல்லைகளில் இருப்பதால், பார்வைக்கு ஒரே மாதிரி தோன்றுகிறார்கள். ஒருவர் ஞானத்தைக் கடந்த நிலைக்குச் சென்றுவிட்டார்; மற்றவருக்கோ ஞானம் என்பது அரும்பவேயில்லை. அதிவேகமான அதிர்வுகொண்ட ஒளியை நாம் காண முடியாது;

அதுபோலவே மிகக் குறைந்த அதிர்வு கொண்ட ஒளியும் நம் கண்களுக்குப் புலனாகாது. ஒன்றில் அதி உச்சநிலையிலுள்ள அதிர்வு; மற்றதிலோ அதிர்வே இல்லை என்று சொல்லிவிட லாம். அப்படிப்பட்டவைதான் சத்வ மற்றும் தமோ குணங்கள். சில விஷயங்களில் அவை ஒன்றுபோல் தோன்றுகின்றன. ஆனால் அவற்றின் இடையே மலையளவு வேற்றுமை உள்ளது. சத்வ குணத்தைப்போல் வேடம் புனைய தமோ குணத்திற்கு விருப்பம் அதிகம். இங்கே, சிறந்த போர் வீரனான அர்ஜுனனிடம் அது இரக்கம் என்னும் வேடத்தில் வந்துள்ளது.

அர்ஜுனனிடம் எழுந்த இந்த மனமயக்கத்தை அகற்ற கிருஷ்ணன் என்ன அறிவுரை வழங்கினார்? ஒருவனைப் பாவி என்று சொல்லி இழிவுபடுத்தாமல், அவனிடமுள்ள எல்லாம் வல்லதான ஆற்றலை அவனுக்கு நினைவூட்டுகிறார். ‘நைதத் த்வய்யுபபத்யதே - இது உனக்குத் தகாது’, ‘அழிவற்ற ஆன்மா நீ’, ‘நீ தீமைகளைக் கடந்தவன். உண்மை இயல்பை மறந்து, உன்னைப் பாவியென எண்ணி, உடல் நோயாலும் மனநோயாலும் உன்னை இப்படிச் செய்து கொண்டுள்ளாய். இது உனக்குத் தகாது’ என்கிறார், கிருஷ்ணன்.

‘க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த - பிருதையின் மகனே, பேடித்தனத்திற்கு இடம் தராதே’... உலகில் பாவமும் இல்லை, துன்பமும் இல்லை; நோயும் இல்லை, துயரமும் இல்லை. பாவம் என்று சொல்லக்கூடிய ஏதாவதொன்று இருக்குமானால், அது இந்த ‘பயம்’தான். உன்னிடம் மறைந்திருக்கும் சக்தியை வெளிப்படுத்தும் எந்தச் செயலும் புண்ணியம். எது உடலையும் மனத்தையும் பலவீனப்படுத்துவதோ, அதுதான் உண்மையில் பாவம் என்பதை உணர்ந்துகொள். இந்தப் பலவீனத்தை, மனத்தளர்ச்சியை உதறித் தள்ளு.

க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த! நீ ஒரு வீரன், இந்த மனத்தளர்ச்சி உனக்குச் சிறிதும் பொருந்தாது. படிக்கப் படிக்க மிராவின் மெய் சிலிர்த்தது. ‘‘அடடே! இது வெறும் மதநூல் இல்லை. மனிதர்களுக்கான நூல். உளவியல் நூல். செயல்படுவதன் அவசியத்தை, மன விழிப்பைப் பற்றிப் பேசுகிறது’’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.மிக இழிந்த பாவியையும் வெறுக்காதே, அவனது வெளிப்புறத்தைப் பார்க்காதே! பார்வையை உள்ளே செலுத்து. அங்கே பரமாத்மா உறைகிறார்.

‘உன்னிடம் பாவமில்லை; துன்பமில்லை. நீ ஆற்றலுக்கெல்லாம் உறைவிடம். எழுந்திரு, விழித்துக் கொள். உன்னிடமுள்ள தெய்வீகத்தன்மையை வெளியே கொண்டு வா’ என்று கம்பீரமான பேரிடிக் குரலில் உலகெங்கும் முழங்கு!

க்லைப்யம் மா ஸ்ம கம:
பார்த்த நைதத் த்வய்யுப பத்யதே
க்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம்

த்யக்த் வோத்திஷ்ட பரந்தபகீதையின் மொத்த கருத்தையும் சொல்லும் இந்த சுலோகம் மிராவின் மனத்தை மலர்த்தியது. இந்திய தத்துவ மரபின் உயிர்ப்பான வேதத்தின் விதை பகவத் கீதை என்னும் வடிவில் அவருள் விதையாய் விழுந்தது. கிருஷ்ணன் மிராவின் மனவெளியில் வியாபித்தான். மிரா கிருஷ்ண சாகரத்தில் மூழ்கிக் கொண்டிருந்தார். ராஜயோகம் காற்றில் படபடத்தது!

அன்னையின் அற்புதம் மனதை மாற்றிய அன்னை!

‘‘வழக்கமா எல்லாருமே சொல்றதுதான். கன்னியாகுமரிக்குப் போய் கடலைப் பார்த்து நின்னுக்கிட்டு ‘இந்தியா இங்க முடியுது’ன்னு சொல்றது நெகட்டிவ் சிந்தனைன்னா, அப்படியே திரும்பி நின்னு ‘இந்தியா இங்க ஆரம்பிக்குது’ன்னு சொல்றது பாஸிட்டிவ் சிந்தனை. ‘இதுக்குப் பிறகு வாழ்க்கையே இல்லை. பேசாம செத்துப் போக வேண்டியதுதான்’னு ஒரு நிலைமை இருக்கும்போது சின்னதா நம்பிக்கை தரும் விஷயம் ஒண்ணு கிடைச்சா கூட அது பெரிய ஆசுவாசம் வரும்.

அந்த நம்பிக்கையை யார் நமக்குத் தருகிறார்களோ அவங்கதான் நமக்குக் கடவுளா தெரிவாங்க. அப்படி ‘இனி எனக்கு வாழ்க்கையே இல்லை’ன்னு எல்லாம் முடிஞ்சு நின்ன சமயத்துல புதிய வாழ்க்கை வாசலைத் திறந்து வச்சவங்கதான் ஸ்ரீஅன்னை. அவங்க எனக்கு கொடுத்த புது வாழ்க்கைக்கான நன்றியாதான் ‘பார்த்திபன்’ என்கிற என் சொந்தப் பெயரை ‘ஸ்ரீஅன்னை அடிகள்’னு மாத்திக்கிட்டேன்’’ என தழுதழுக்கிறார் அவர்.

‘‘எனக்கு சொந்த ஊர் திண்டிவனம் பக்கத்துல கீழ் எடையாளம் கிராமம். பள்ளிப் படிப்பெல்லாம் முடிச்சு சென்னைல பச்சையப்பா கல்லூரியில பி.எஸ்சி. முடிச்சுட்டு, மெட்ராஸ் யுனிவர்சிட்டில எம்.ஏ. படிச்சேன். படிக்காத பெத்தவங்க, ‘நம்ம புள்ள நிறைய படிச்சிருக்கே’ன்னு படிச்ச பொண்ணா தேடினாங்க. ஆனால் என் திருமண வாழ்க்கை சூறாவளியா இருந்தது. என் மனைவி வழி தரப்பில் வந்த பிரச்னைகளை என்னால தாங்கிக்க முடியல. விலகி வந்துட்டேன்.

வாழ்க்கையே சூனியமாய் இருந்தது. ஜாதகம், பரிகாரம், வழிபாடு... அது இதுன்னு எல்லாம் செஞ்சேன். நிம்மதிதான் கிடைக்கல. செத்துப் போறதுதான் சந்தோஷம்ங்கற மனநிலையில இருந்த நான், ஒருநாள் ஸ்ரீஅரவிந்த அன்னை தியான மையத்துக்குப் போனேன். மலர் அலங்காரத்தோட அமைதியா இருந்த தியான மைய சூழ்நிலை எனக்குப் பிடிச்சது.

அமைதியா உட்கார்ந்து தினமும் தியானம் செய்யச் செய்ய, இரண்டு வருடத்தில் அன்னை என் மனசுல வந்து உட்கார்ந்துட்டாங்க. 10 வருஷம் சென்னை தியான மையத்தில் சேவை செய்தேன். நம்மகிட்ட என்ன தப்புன்னு புரிஞ்சது. நமக்கு இது ஏன் நடந்ததுன்னு யோசிக்கும்போது அதுக்கான விடையும் கிடைச்சது.

பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்துக்குப் போய் அன்னையோட புத்தகங்களை எல்லாம் படிச்சி முடிச்சபோது எனக்கானது ஆன்மிக வாழ்க்கைன்னு புரிஞ்சது. என்னை அவமதிச்சவங்க மேல கோபம் மறைந்து நன்றி உணர்வு வந்தது. அன்னையோட சேவையில என்னை முழுசா இணைச்சிக்கிட்டேன்.

என்னைப் போலவே பதில் கிடைக்காத கேள்விகளோட வேதனைப்படும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தீர்வு கிடைக்க, சென்னை - கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் ஸ்ரீஅரவிந்த அன்னை தியான மையங்களை ஆரம்பிச்சிருக்கோம். 9 வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்னைகளோட வரும் நபர்கள், அன்னையின் அருளால நிம்மதி அடையறாங்க. அன்னையின் சேவைதான் என் முழு வாழ்க்கையும்’’ என்கிறார் ஸ்ரீஅன்னை அடிகள். ஸ்ரீஅன்னை ஆஸ்ரமம் தொடர்புக்கு: 044-24746000. இணையதள முகவரி: www.mothergrace.org
வரம் தரும் மலர்

குழந்தை வரம் தரும் டிசம்பர் பூ

ஒரு வீடு நிறைவாக இருக்க அந்த வீட்டில் குழந்தைகள் இருக்க வேண்டும். எல்லா செல்வங்களையும் விட குழந்தைச் செல்வம் மனதுக்கு இதமானது. குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதிகள் டிசம்பர் பூ, தென்னம்பூ மற்றும் சாமந்திப் பூக்களை அன்னைக்கு சமர்ப்பித்து வேண்டிக் கொள்ள, வீட்டில் விரைவில் மழலைச் சத்தம் கேட்கும்! நல்ல நட்பும் மலரும்!

(பூ மலரும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்