நான் அஜித் ரசிகன்!



சூரி சுறுசுறு

சிம்பு, சிவகார்த்திகேயன், விஷால், ஜெயம் ரவி, விமல் என ஹீரோக்களின் சாய்ஸ் ஆகிவிட்டார் சூரி. ‘ரஜினி முருகன்’ ஷூட்டிங்கில் இருந்த சூரியிடம் ‘‘விஜய்யோட நடிச்சிட்டீங்க... அஜித்தோட எப்போ?’’ என ஆரம்பித்தோம்...

‘‘எனக்கு அஜித் அண்ணனை ரொம்ப பிடிக்கும்ணே. நான் அவரோட ரசிகன். என் தம்பி இன்னும் ஒருபடி மேல. அஜித் அண்ணனுக்கு ஊர்ல ரசிகர் மன்றமே வச்சவன். அவரோட சேர்ந்து நடிக்கற சான்ஸ் ‘வீரம்’ படம் அப்போ வந்துச்சு. அஜித் அண்ணனை கலாய்க்க வேண்டியிருக்கும்னு ‘வேண்டாம்’னு சொல்லிட்டேன்ணே... அஜித் அண்ணனை கலாய்ச்சு அதுல நான் நடிச்சிருந்தேன்னா, எங்க வீட்டுக்குள்ளேயே வெட்டு குத்து ஆகிப்போயிருக்குமுண்ணே!’’ - மீசையை முறுக்கி கண்களில் பயத்தைக் காட்டுகிறார் சூரி.

‘‘ஐம்பது படம் தொட்டுட்டீங்க... ஹீரோவா எப்போ?’’

‘‘பொழப்பு நல்லாத்தானே போய்க் கிட்டிருக்கு. படத்துலதான்ணே நான் காமெடி பண்றேன். வாழ்க்கையை சீரியஸா புரிஞ்சு வச்சிருக்கேன். ‘நீங்கதான் ஹீரோ’ன்னு என்கிட்ட கதை சொன்ன ஆட்கள் கொள்ளை பேரு. என்னை ஹீரோவா அவங்க நினைச்சதுக்கே பெரிய தேங்க்ஸ். ஆனா, அதுக்காக ஹீரோவாகிட முடியுமா? காமெடியிலேயே பண்றதுக்கு இன்னும் ஏகப்பட்ட ஏரியா இருக்குண்ணே.

அதை எல்லாம் ஒரு கை பார்த்துடணும். ‘இது நம்ம ஆளு’,  ‘கத்துக்குட்டி’, சுசீந்திரன் அண்ணன் படம், ‘அப்பாடக்கர்’, ‘மாப்ள சிங்கம்’னு வெரைட்டி வெரைட்டியா இப்போ படங்கள் பண்றேன். 2015 என்னோட ஆண்டா இருக்கணும்னு கடவுள்ட்ட வேண்டி, உழைச்சிட்டிருக்கேன்ணே!’’

‘‘காமெடி நடிகர்னா ஹீரோக்கள் காதலுக்கு ஐடியா சொல்லணும்... உங்களுக்கு காதல் அனுபவம் உண்டா?’’

‘‘அட, நீங்க வேற... என் மொகரக்கட்டைக்கு என் மகா என்னை இரக்கப்பட்டு கல்யாணம் கட்டிக்கிட்டதே பெரிய விஷயம். இதுல லவ்வு வேறயா? நான் ஸ்கூல்ல படிக்கிறப்ப எங்க ஊர்ல இருந்து பஸ் ஏற மாட்டேன். கொஞ்ச தூரம் நடந்து வந்து மதுரை போற பஸ்ல ஏறுவேன். ஏன்னா அந்த பஸ்ஸுதான் கூட்டமா போவும். பசங்க எல்லாம் படிக்கட்டுல தொங்கிட்டே பந்தா காட்டிட்டுப் போவோம். அதே மாதிரி பஸ் வந்ததும் ஏற மாட்டோம். அது மூவ் ஆகி போறப்ப ஓடிப்போயி ஏறுனாத்தான் நம்மள மனுஷனாவே மதிப்பாய்ங்க.

ஒருநாள் எங்க ஊர்ப்புள்ள ஒண்ணு, பஸ்ல ஜன்னலோர சீட்ல இருந்துச்சு. ஊர்ல எங்களுக்கு அதான் லட்சுமி மேனன். அம்பூட்டு லட்சணமா ஒரு ஃபேஸ்கட்டு. அந்தப் புள்ளயப் பாத்ததும், அந்த பஸ்ல ஏறிட்டேன்ணே. படிக்கட்டுல நின்னுக்கிட்டு ஜன்னல் வழியா அந்தப் பொண்ணுகிட்ட என் டிபன் பாக்ஸை வச்சிக்கிடச் சொல்லிக் கொடுத்தேன். அந்தப் பொண்ணு லைட்டா ஒரு ஸ்மைலோட வாங்கினப்ப, ஆகா ஃபர்ஸ்ட் பாலே சிக்ஸர்க்கு தூக்கிட்டோம்டானு காலரத் தூக்கி விட்டுக்கிட்டேன்.

நான் அத லுக் விட, அது ஜெர்க்கு ஆகி சின்னதா சிரிக்க.. லவ் மூட்ல ட்ராவல்ணே!அந்தப் பொண்ணு பஸ்ஸ விட்டு இறங்கினப்ப, ‘உங்க டிபன் பாக்ஸ் எது?’ன்னு கேட்டுச்சு. அதோட கையில பத்து டிபன் பாக்ஸ்ண்ணே.

பதறிட்டான் இந்த சூரி. அந்தப் புள்ள இறங்குச்சுன்னு நானும் பஸ்ஸ விட்டு இறங்கினா, ‘ஆண்டிப்பட்டி அன்புடன் வரவேற்கிறது’ன்னு போர்டுண்ணே. நம்ம ஊர்ப் பொண்ணு மதுரைக்குத்தான் போவுதுன்னு நெனச்சு, பஸ்ஸ பாக்காம கொள்ளாம அது போற ஆண்டிப்பட்டிக்கு போயி, அப்புறம் திரும்பி ஊர் வந்தது திருப்பரங்குன்றம் முருகன் செயல்ணே!’’

‘‘அப்ப சினிமாவில் தெரிஞ்சிக்கிட்டதுதான் காதலா?’’

‘‘நான் அதிக தடவ பார்த்த காதல் படம்னா ‘பம்பாய்’. அந்தப் படம் எனக்கு புடிச்ச படம்ங்கறத விட, அப்ப நான் சைட் அடிச்சுக்கிட்டு இருந்த ஒரு பொண்ணுக்கு ரொம்பப் பிடிக்கும். அதுல வர்ற ‘உயிரே... உயிரே...’

 பாட்டு மேல அவ உயிரே வச்சிருந்தானு தெரிஞ்சுக்கிட்டேன். அப்போல்லாம் ஆடியோ கேசட் வாங்குறது, என் சக்திக்கு கார் வாங்குற மாதிரியான விஷயம். மதுரைக்குப் போயி ஒரு பிளாங் கேசட் வாங்கி, அந்த கேசட் ஃபுல்லா ‘உயிரே’ பாட்ட மட்டும் ரெண்டு சைடும் ரெக்கார்ட் பண்ணி வாங்கிட்டு அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போனா...

அங்க ‘பம்பாய்’ படம் திருட்டு வீடியோ கேசட்டுல ஓடிட்டு இருக்கு. என்னைய விட ஃபாஸ்ட்டா ஒருத்தன் இருந்திருக்கான். திரும்பும்போது, வீடியோ வாங்கிக் கொடுத்த அந்த வில்லன் திண்ணையில உட்கார்ந்திருந்தான். ‘இம்பூட்டு ஃபாஸ்ட் உடம்புக்கு ஆகாதுடா தம்பி’னு மைண்ட் வாய்ஸ்ல சொல்லிட்டு, இடத்தைக் காலி பண்ணேன். எனக்கு மட்டுமில்ல... நாட்டுல கொள்ளை பேத்துக்கு காதல் சொல்லிக் கொடுத்தது சினிமாதானேண்ணே!’’

‘‘காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா... இந்த மூணு பேரும் ஒரே நேரத்துல

உங்களுக்கு ‘ஐ லவ் யூ’ சொன்னா யாருடைய லவ்வ ஏத்துக்குவீங்க?’’

‘‘மூணு பேரோட லவ்வையும் ஏத்துக்குவேன். ஏன்னா ரெண்டு பேர விட்டுட்டு ஒருத்தர மட்டும் லவ் பண்ணினா, மத்தவங்க சூரி கெடைக்கலன்னு பாலிடால் அடிச்சிரக் கூடாது பாருங்க!’’

- மை.பாரதிராஜா