அழியாத கோலங்கள்



நடிகர் சிவகுமார், அவர் நடிக்க வரும் முன், 17 வயது சிறுவனாக இருந்த படத்தைப் பார்த்திருக்கிறேன். அவர் கமலின் ஆரம்ப கால நண்பர். கமலே என்னிடம் சொல்லியிருக்கிறார்... ‘அரங்கேற்றம்’ படத்தில் இருவரும் நண்பர்கள் ஆனவர்களாம். பின்னால், ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் நடிக்கும்போது தினம் சிவா தன் காரில் கமல் வீட்டுக்கு வந்து அவரை படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்வாராம்.

என் தந்தைக்கு என்னை நீதிபதி ஆக்க வேண்டும் என்று ஒரு பேராசை. அதனால் நான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சென்னை வந்து உயர் நீதிமன்றத்தில் ஏதாவது ஒரு அப்பீல் வழக்கு நடத்தி, உளறிக் கொட்டியாக வேண்டும். அப்படி வரும்போதெல்லாம் சிவகுமாரையும் நடிகர் விஜயகுமாரையும் அடிக்கடி சந்திப்பேன். 1974 என்று ஞாபகம்...

தமிழில் பல படங்களில் நடித்தாலும், கமல் மலையாளப் படங்களில் அதிக வெற்றி கண்ட நேரம். மலையாளத்தில்   யிகிவிணிஷி பிகிஞிலிணிசீ சிபிகிஷிணி கதையைத் தேர்ந்தெடுத்து மும்முரமாக 14 நாட்களில் முடித்து வெளியிடப் போயிருந்தார் கமல். கேரளத்திலிருந்து பரமக்குடிக்கு போன் செய்து... ‘‘என் நண்பர் இளையராஜா முதல் படத்துக்கு இசை அமைக்கிறார்.

 என்னால் போக முடியவில்லை. நீ சென்னைக்கு சென்று வாழ்த்தி விட்டு வா’’ என்று என்னிடம் சொன்னார். மறுநாள் காலையில் ஏவி.எம்மில் பூஜை. முதல் நாள் எனக்குக் காலையில் முதுகுளத்தூர் கோர்ட்டிலும் மதியம் சிவகங்கையில் அசிஸ்டென்ட் செஷன்ஸ் கோர்ட்டிலும் வேலை. 5 மணிக்குத்தான் முடியும். ரயிலில் செல்ல முடியாமல் ஒரு ஓசி பியட் காரை ஓட்டிக்கொண்டு வந்து, சற்றே அழுக்கான வெள்ளை பேன்ட்டும் காலரில்லாத வெள்ளை சட்டையுமாக ஏவி.எம் ஸ்டுடியோவுக்குள் இறங்கினேன்.

கமலின் நண்பர் இளையராஜா எங்கு இசை அமைக்கிறார்? யாரிடம் விசாரிப்பது? எனக்குத்தான் இந்தப் பழமை என்றும் மறக்காதே?
1959ல் ஒரு நாள்... ‘களத்தூர் கண்ணம்மா’ ஷூட்டிங்குக்காக இதே இடத்தில் நான் குட்டி கமலை இறக்கி விடும்போது, பின்னாளில் பிரபல இயக்குனராக உயர்ந்த எஸ்.பி.முத்துராமன்...
‘‘ஹய்யா..! கமல் கார் வாங்கிட்டியா?’’ கமல் பதில்...

‘‘இல்ல சார்... இது பஸ் முதலாளி தங்கச்சாமி பிள்ளை கார்! சாருண்ணா ஓசி வாங்கிட்டு வந்திருக்கார்...’’
இதற்கு முன் நடந்த கதை எஸ்.பி.முத்துராமன் அவர்கள் சொல்லித்தான் தெரியும்... திரு ஏ.வி.மெய்யப்ப செட்டியாரே கமலிடம் கேட்டாராம்...
‘‘ஏம்பா... உனக்கு நடிக்க எவ்வளவு சம்பளம் வேணும்?’’

கமல், ‘‘ம்ஹும்... சம்பளம் வேண்டாம்... ஒரு இம்பாலா காரும் அல்சேஷன் நாயும் கொடுங்க, போதும்’’ என்றாராம்.
அது பழைய கதை. இசைஞானி இளையராஜா பூஜைக்குப் போனவன் கண்ணில் அன்று சிவகுமார்தான் அகப்பட்டார். நான் அவரிடம் பாவலர் பிரதர்ஸ் இளையராஜா பற்றிக் கேட்டேன்.
‘‘இங்கு நான் நடிக்கும் பட பூஜை நடக்கப் போகுது... வாங்க, பாவலர் பிரதர்ஸ் பற்றி விசாரிப்போம்!’’ என்று சொல்லி அழைத்துப் போனார். மேக்கப் அறையில் யாரிடமோ விசாரித்துவிட்டு என்னிடம் சொன்னார்...

‘‘சாரண்ணே... இந்த பூஜைதான்! புது மியூசிக் டைரக்டராம்... எதிரே ஏ.சி. தியேட்டர்ல போய்ப் பாருங்க! தம்பி... அண்ணனைக் கூட்டிப் போய் ஏ.சி. தியேட்டர்ல விடப்பா’’ என்று தன் உதவியாளரை அனுப்பினார். நான் அதற்கு முன் ரெக்கார்டிங் தியேட்டரைப் பார்த்ததே இல்லை. பல இசைக் கருவியாளர்களுக்கு நடுவில் நின்று எல்லோரையும் உத்தரவிட்டுக் கொண்டிருந்த ஒருவரையும், அவர் பக்கத்தில் தரையில் உட்கார்ந்து ஹார்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தவரையும் பார்த்து... கொஞ்ச நேரம் எடை போட்டு... ‘யார் முதலாளி’ என்று முடிவு செய்து... நின்றபடி அதிகாரத்தை தூள் பரத்திக் கொண்டிருந்தவரிடம் போய் கையைப் பிடித்துக் குலுக்கினேன்.

‘‘மிஸ்டர் இளையராஜா... மை நேம் இஸ் சாருஹாசன்... பிரதர் ஆஃப் கமல்’’ என்று கமல் கேரளத்தில் இருக்கும் விவரத்தையும், நான் பரமக்குடி கோர்ட் வேலைகளில் இருந்து நேரே காரில் வந்ததையும் சொல்லி, சற்றே கசங்கிய, வெள்ளை பேன்ட் - வெள்ளை சட்டையின் காரணத்தை விளக்கினேன். வெகுநாட்கள் வரை நான் கை குலுக்கிய அந்த சங்கீத ஐ.ஏ.எஸ். அதிகாரி பெயர் இளையராஜா இல்லை என்பது தெரியாது. அவர், இளையவர் கங்கை அமரன். இதில் கொடுமை என்னவென்றால், தரையில் உட்கார்ந்திருந்த அந்த ‘ஆர்மோனியக்காரர்’ எனக்கு ஒரு மரியாதையான வணக்கம் வேறு சொல்லி அனுப்பினார்.

அதன்பிறகு நான் சென்னை வந்தபோதெல்லாம் பாவலர் பிரதர்ஸ் மூவரையும் கமல் வீட்டில் பார்ப்பேன். நான் கங்கை அமரனை ‘‘ஹல்லோ மிஸ்டர் ராஜா!’’ என்று சொல்லும்போதெல்லாம் ராஜாவும் அமரும் மர்மமாக சிரித்துக்கொள்வார்கள்.  பின்னால் நானும் இந்த சினிமாக் கூட்டத்தில் சேர்ந்த பிறகு ஒரு இளையராஜா இசையமைக்கும் பட பூஜையில் சிவகுமாரைச் சந்தித்து பழைய ஞாபகங்களைப் பகிர்ந்தோம்.

சிவா சொன் னார்... ‘‘சாரண்ணா! அன்றைக்கு இளையராஜா யார் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. இன்றைக்கு இளையராஜாவுக்கு சிவகுமார் யார் என்று தெரியாத அளவுக்கு வளர்ந்திருக்கிறார்...’’சிவகுமாரைப் பற்றி சிவகுமாருக்கே தெரியாத ஒரு ரகசியம்... 1960ம் ஆண்டு என்று நினைக்கிறேன். எங்கள் வீட்டு மாடியில் மிசஸ் ஜான்சன் என்று ஒரு அம்மையார் குடியிருந்தார். அவருக்கு அழகாக இரண்டு, மூன்று பெண்கள். ஒருநாள் அவர் தன் 14 வயது மகளை அடித்துக் கொண்டிருந்தார்.

தலையிட்டு விலக்கினேன். அடிக்குக் காரணம், அவள் புத்தகத்தில் ஒரு 16 அல்லது 17 வயது அழகிய வாலிபனின் படம் இருந்ததுதான். கடைசி வரை அந்தப் பெண்ணுக்கு அந்தப் பையனின் பெயர் தெரியவில்லை. அன்று கமலுக்கு வயது 5. ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நடிக்க ஆரம்பித்த நேரம். அவராக இருக்க வாய்ப்பில்லை.

நானும் பார்த்தேன்... அது சிவகுமார்தான். இன்று நான் அதைச் சொன்னாலும் சிவா, ‘‘ஏய் மாயக்கண்ணா! பொய் சொல்லுகிறாய்...” என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.
‘‘ஏம்பா... உனக்கு நடிக்க எவ்வளவு சம்பளம் வேணும்?’’ எனக் கேட்டபோது, ‘‘சம்பளம் வேணடாம்... ஒரு இம்பாலா காரும் அல்சேஷன் நாயும் கொடுங்க, போதும்’’ என்றாராம் கமல்.

கலீல் ஜிப்ரன் கவிதைகள்

கொடுங்கோலரசனை
அடித்துத் துரத்த
நினைத்தாலும்
அவனமர்ந்த அரியணை
என்பது உங்களுள்
வளர்ந்தது. அதனை
முதலில் அழியுங்கள்.
ஏனென்றால்
சுதந்திரம் என்பது
நம்முள் இயல்பாக
இருப்பது

இனிமை இனிமை
ஏகாந்தம் இனிமை
அதனினும் இனிமை
தனிமையில் மௌனம்!

(‘கலீல் ஜிப்ரன் கவிதைகள் பாகம் 1 மற்றும் 2’, தமிழில்: கி.ரா.கிருஷ்ணபிரசாத், விலை: ரூ. 1400/- மற்றும் ரூ.1300/-, காவ்யா பதிப்பகம், 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. போன்: 9840480232)

(நீளும்...)

சாருஹாசன்