இப்படி இருப்பது போதும் எனக்கு!



மனம் திறக்கிறார் சிவகார்த்திகேயன்

காத்திருக்கிறது ‘காக்கி சட்டை!’. இன்றைய தமிழ் சினிமாவின் வியாபாரம் சிவகார்த்திகேயன். தயாரிப்பாளர்களுக்கு சந்தோஷம் கொடுக்கிற தனிக்குரல்! எங்கேயோ இருக்கிற சராசரி சினிமா ரசிகன் வரைக்கும் சிவகார்த்தி போய்ச் சேர்ந்தது பெரும் சாதனை! இந்த எதையும் மனசில் போட்டுக்கொள்ளாத பக்குவத்தில் இருப்பது இன்னும் அழகு! கூச்சமும் பதற்றமும் குறைந்து, அழகும் தெளிவும் அக்கறையும் கூடியிருக்கும் அவரிடம் நீண்டது உரையாடல்...

‘‘ ‘காக்கி சட்டை’க்கு எதிர்பார்ப்பு எகிறுதே?’’

‘‘எதிர்பார்ப்பு எப்பவும் பயத்தை ஏற்படுத்தும். கொஞ்சம் பயமாக இருப்பது உண்மை. ‘எதிர்நீச்ச’லின் வெற்றி எல்லோருக்கும் ஞாபகம் இருக்கு. அதே அனிருத், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்’தில் எல்லோருக்கும் பிடித்த ஸ்ரீதிவ்யா, போலீஸ் யூனிஃபார்ம், எல்லாத்துக்கும் மேலே ‘காக்கி சட்டை’ன்னு தலைப்பு வேறயா...

 நிச்சயமா எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். காமெடியில் கொஞ்சம்... அப்புறம் ஃபுல் லெங்க்த் ஆக்ஷன்னு செய்திருக்கேன். ‘சாமி’ மாதிரி இருக்குமோ, ‘சிங்கம்’ மாதிரி வந்திருக்குமோன்னு எதிர்பார்க்கையில், ‘காக்கி சட்டை’ இரண்டுக்கும் இடைப்பட்ட படம்.

நிச்சயம் அடுத்தடுத்த படங்களில் என்னை மெருகேத்தி, அடுத்த இடத்திற்கு வரக்கூடிய தினுசில்தான் வந்திருக்கேன். வேற யாரும் சொல்றதுக்கு முன்னாடியே என்னுடைய குறைகளை சரிபண்ணிக்கிற அக்கறையில்தான் எப்பவும் நான் இருந்திருக்கேன். விமர்சனங்களை எப்பவும் எதிர்கொள்கிற மனது என்னுடையது. எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து செய்திருக்கோம்.

அந்த அக்கறைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்னு நம்புறேன். சில சமயம் சில விஷயங்கள் நாம ஆசைப்பட்டது மாதிரி ‘பளிச்’னு வந்து நிக்கும்ல; அப்படி வந்திருக்கு ‘காக்கி சட்டை’. மத்த படி எல்லாம் வல்ல மக்களின் தீர்ப்புக்குக் காத்திருக்கோம்!’’

‘‘முந்தைய படங்களிலிருந்து எப்படி மாறியிருக்கும் ‘காக்கி சட்டை’?’’

‘‘போலீஸில் புதுசா வேலைக்குச் சேர்கிற பையன், அவன் எதிர்கொள்கிற பிரச்னைகள்னு போகும். ‘எதிர்நீச்ச’லில் எதற்கும் தயங்குவான். இந்த ‘மதிமாறன்’ தைரியமானவன். எப்படி இருக்கு நிலைமை, அதற்கு எந்த மாதிரி தயாராகணும்னு அனுமானம் வச்சிருப்பான். பிரபு சார் சீனியர் ஆபீஸராக வந்த பின்னாடி அவனோட எல்லைகள் சிலது மாறும். முதல் பாதி காமெடி, காதல்னு போகும்போது, அதிரடியா அடுத்த பாதி வேற ரூட் பிடிக்கும். இந்த இடம்தான் எனக்கு சவாலானது...

புதுசானதும் கூட. அதை அப்படி தெரியாத மாதிரி லாவகமா செய்ய முயற்சி பண்ணியிருக்கேன். என்னோட பாடி லாங்குவேஜ் மாறியிருக்கு, டிரெய்லரில் ‘லுக் நல்லாயிருக்கு’ன்னு சொல்லும்போது கொஞ்சம் நிம்மதி வருது!’’‘‘ஆனா, நீங்களே நிஜமாகவே போட வேண்டியது இந்த யூனிஃபார்ம்தானே..?’’‘‘வேடிக்கை இல்லை.

முதல் தடவை யூனிஃபார்ம் போட்டு சரி பார்த்தது இன்னும் மனசில் இருக்கு. என் அப்பாவின் மறைவுக்குப் பிறகு நான் போட நினைச்சது இந்த யூனிஃபார்ம்தான். என்னவோ மாறிப்போச்சு. ஏதோ, இத ‘சிரிப்பு போலீஸ்’னு யாரும் நினைச்சிட முடியாது. எங்க அம்மா என் படங்களை எப்பவும் திருச்சியில் வச்சுத்தான் பார்ப்பாங்க. முதன்முதலா அப்படி பார்த்ததில் இருந்து அவங்களோட ஃபேவரிட் ஸ்பாட் அதுதான்.

‘நீ வந்திட்டா சிரிக்கிறாங்க; கைதட்டுறாங்க’ன்னு வெள்ளையா சொல்லுவாங்க. ‘இந்த டயலாக் சொல்லும்போது கை தட்டினாங்களா?’ன்னு விசாரிச்சா, சரியா விமர்சனம் வரும். நம்ம மனசு குளிருமேன்னு சொல்ற வார்த்தையில்லை. அப்படி அப்படியே ஆடியன்ஸ் ரியாக்ஷனை என் பக்கம் திருப்பி விடுவாங்க. அப்படி அவங்க சொல்றதே ஒரு அழியாத சித்திரம் மாதிரி இருக்கும். நானும் அவங்க சேலைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு சினிமா பார்த்த அனுபவத்தை உணர முடியும்.

அப்போ படத்தை ரசிக்கிறதைத் தாண்டி, நான் கத்துவதை அம்மா பார்த்து ரசிப்பது லேசாக நினைவுக்கு வரும். எனக்கு இப்ப அம்மா தியேட்டரிலிருந்து ரிலே பண்ணும்போது ஒவ்வொரு காட்சியும் கனவு மாதிரியே விரியும். அம்மா எனக்காக படம் பார்த்து கதை சொல்லி, கைதட்டல் வாங்கின இடங்களைக் கேட்க காத்திருக்கேன்!’’

‘‘சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா ஜோடி லைக்ஸ் அள்ளுதே...’’‘‘ ‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்’தில் போஸ் பாண்டியன் - லதா பாண்டியனாக பார்த்தது. அருமையான பொண்ணு. ‘சார், இந்தத் தடவை உங்களுக்கு ஜோடி ஸ்ரீதிவ்யாதான்’னு சொல்லும்போது ‘ஓகே சார்’னு சொன்னதோட சரி. மகிழ்ச்சியில் கரை புரளலை. ஆனா, மக்களுக்கு இந்த இரண்டு பேரும் எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்குறோம்னு நினைக்கும்போது அந்த உணர்வை மதிக்க வேண்டியிருக்கு.

 நானெல்லாம் ஒண்ணுமில்லங்க... ஊர்ப் பக்கம் போனா தையல் கடை, ஜவுளிக்கடை, பியூட்டி பார்லர்னு எங்க பார்த்தாலும் அவங்க உருவம்தான். அவங்க முகம்தான். எதோ ஒரு பிடித்தம் ஜனங்களுக்கு வந்துபோச்சு. அது பைத்தியக்காரத்தனமெல்லாம் இல்லை. அது ஒரு வகையான ரசிப்பு. ஆண்டாண்டு காலமா இந்த ரசிப்பில்தானே சினிமா ஓடிக்கிட்டு இருக்கு. இப்ப இந்தத் தடவை எங்க நடிப்பு இன்னும் இயல்பா வந்திருக்கு!’’‘‘உங்களுக்குனு அனிருத் எப்பவும் பாடல்களில் ஸ்பெஷல்தான்...’’

‘‘நண்பனில்லையா... என் படங்களில் பாடல்கள் பெரிய ‘பூஸ்ட்’னு அவருக்குத் தெரியும். இந்த நண்பனுக்கு இன்னும் கூடுதலாக செய்யணும்னு நினைக்கிற மனசு அவருடையது. ‘காக்கி சட்டை பொறி பறக்குது’ன்னு அவர் போட்ட பாட்டு, இன்னும் அனல் பறக்குதுன்னு சொல்றாங்க. ‘கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகையை பார்க்கணும்’ பாடலில் துள்ளல் புதுசு. நன்றி நண்பா நன்றி!’’‘‘பெரிய புகழ் அடைந்ததில் பெற்ற அனுபவங்கள் என்ன?’’

‘‘எப்பவும் போலவே இருக்கப் பார்க்கிறேன். நடிப்பு, டான்ஸ்னு வீக் ஏரியாவில் இன்னும் சரி பண்ணிக்கிட்டே இருக்கேன். ஆனால், எல்லாத்தையும் அற்புதமா பார்க்கிற இந்த மக்கள் மனசுக்கு எப்படி நன்றி சொல்ல..? வயசு வித்தியாசம் இல்லாமல் பக்கம் நெருங்கி விசாரிக்கிற அன்புக்கு என்ன பரிசளிக்க..? என்ன கிடைத்தாலும், என்னை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கேன். நல்லவேளையா எந்தக் கெட்ட பழக்கங்களும் என்னைத் தீண்ட அனுமதிக்கலை. இப்படி இருப்பது போதும் எனக்கு!’’

- நா.கதிர்வேலன்