நியூஸ் வே



ஒரு இசையமைப்பாளரின் சுறுசுறுப்பு எங்கே பார்த்தாலும் வியக்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான ‘ஒல்லி நடிகரின்’ படச்சுருளை ரீ-ரெக்கார்டிங்குக்கு அக்டோபர் மாதம் கொடுத்து, பிப்ரவரி மாதம் மியூசிக் டைரக்டர் ரெடி பண்ணிக் கொடுத்தாராம். அவரது இசை பற்றி நல்ல அபிப்பிராயம் இருந்தாலும், இந்தத் தாமதத்திற்கு பயந்து நடுங்குகிறார்கள்.

மைசூர் மகாராஜாவாக இருந்த ஸ்ரீகண்ட தத்த உடையார் இறந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த மகாராஜா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவர், வாரிசு இல்லாமல் மறைந்த மன்னரின் மூத்த சகோதரி மகன் யதுவீர் கோபால்ராஜ் அர்ஸ். 22 வயதாகும் அர்ஸ், அமெரிக்காவில் பாஸ்டனில் சட்டம் படிக்கிறார். வெளிநாட்டில் படித்த முதல் மைசூர் மன்னர் இவர்தான். மகாராஜா இல்லாமல் கடந்த தசரா கொண்டாட்டங்கள் களை கட்டவில்லை. இனி பிரச்னை இல்லை!

‘நூறாவது நாள்’ மணிவண்ணன் இயக்கி பரபரப்பான படம். அதை ரீமேக் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் ரகு மணிவண்ணன். அவருக்கு சத்யராஜ் போன் செய்து, ‘‘வேறு யாரும் தகுதியாகக் கிடைக்கவில்லை என்றால், நானே நடிக்கிறேன்’’ என்றாராம். விஜயகாந்த் கேரக்டரில் ‘சதுரங்க வேட்டை’ நட்டி நடிக்கிறார்.

‘புலி’ முழுக்க முழுக்க ஃபேன்டஸி படம் என எங்கும் வர்ணிக்கப்படுகிறது. ஆனால், அதன் ஒரு பகுதி மட்டும்தான் ஃபேன்டஸி சார்ந்தது. மீதி எல்லாமே வழக்கமான விஜய் படம்தான்.

சிம்பு ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் டிரெய்லரில் சொந்தக்குரலில் பேசியிருந்தார் நயன்தாரா. படத்திலும் நயனே டப்பிங் பேசுவார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் ரொம்பவே பிஸியாக இருப்பதால், நயனுக்கு தீபா வெங்கட் டப்பிங் பேசியிருக்கிறார்.

ராம் கோபால் வர்மாவின் கண்டுபிடிப்பான அனைகா சோதி, தமிழில் நடித்த ‘காவியத்தலைவன்’ கை கொடுக்காததால் மீண்டும் தெலுங்கு பக்கம் போனார். மீண்டும் அங்கே தன் ‘365 டேஸ்’ படத்துக்காக அவரை கமிட் செய்திருக்கிறார் வர்மா.

ஹரி வெளிநாடு போய் ‘சிங்கம் 3’ படத்தின் ஸ்கிரிப்ட் வேலையில் இறங்கி விட்டார். மூன்று பாகமாக தமிழில் படங்கள் வந்ததில்லை என்பதால், நிறைவாக இருக்கும் பொருட்டு கவனத்தில் இருக்கிறார் இயக்குநர் ஹரி. முதல், இரண்டாவது பாகங்களின் சேர்த்துக் கட்டிய கதைதான் ‘சிங்கம் 3’யாம். இதை தானே தயாரிக்க இருக்கிறார் சூர்யா.

இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறீசேன முதல் வெளிநாட்டுப் பயணம் வந்தது இந்தியாவுக்குத்தான். மனைவியோடு நான்கு நாட்கள் இந்தியா வந்திருந்த அவரோடு ஏகப்பட்ட ஒப்பந்தங்கள் போட்டு, சலுகைகளை அள்ளி வழங்கியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. சீனாவின் பக்கம் சாய்ந்த ராஜபக்ஷே தோற்றதால், ஒரு புதிய நண்பனைக் கண்டெடுத்துவிட்டதாக பெருமிதப்படுகிறது இந்தியா. சிறீசேன அடுத்த மாதமே சீனா செல்கிறார். அப்போது என்ன ஆகுமோ?

முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேனை தூக்கில் தொங்கவிட்டு சாகடித்த கயிறு ஏலத்துக்கு வந்திருக்கிறது. சதாமை தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்ற, ஈராக் பாதுகாப்பு ஆலோசகர் அல் ருபே என்பவரிடம் இந்தக் கயிறு இப்போது இருக்கிறது. 43 கோடி ரூபாய்க்கு இதை ஏலம் கேட்டிருக்கிறார் ஒருவர்.

சிக்ஸ் பேக் வைத்து நடித்த ‘இரும்புக்குதிரை’ சரியாகப் போகாத வருத்தத்தை ஓரம் கட்டி வைத்துவிட்டு, வரிசையாக 3 படங்கள் பண்ணிக்கொண்டிருக்கிறார் அதர்வா. இதில் பாலா தயாரிப்பில் சற்குணம் இயக்கும் ‘சண்டி வீரன்’ படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்து விட்டது. படத்தை இந்தக் கோடையில் எதிர்பார்க்கலாம்!

ஈரானிய இயக்குநர் ஜாபர் பனாஹியின் ‘டாக்ஸி’ திரைப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான ‘கோல்டன் பியர்’ விருது பெற்றிருக்கிறது. அரசை விமர்சிக்கும் படங்கள் எடுப்பதாகக் கூறி அவருக்கு ஆறு வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது ஈரான் அரசு. இருபது வருடங்கள் திரைப்படங்கள் இயக்குவதற்கும் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கும் பனாஹி, தொடர்ந்து படம் இயக்கி வந்தாலும், வெளிநாடு செல்ல முடியாது. அவரது அண்ணன் மகள் ஹனா சையதி, கண்ணீரோடு மேடைக்கு வந்து பரிசைப் பெற்றுக் கொண்டார்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை சியர் செய்ய ப்ரியாமணி எடுத்திருக்கும் ‘மென் இன் ப்ளூ’ போட்டோஷூட் செம அப்ளாஸ் அள்ளியிருக்கிறது. ‘‘முன்னாடியெல்லாம் கிரிக்கெட் பார்க்க மாட்டேன். ஆனா, இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் அன்னிக்கு பெங்களூருவில் எங்க வீட்டு டி.வி. முன்னாடிதான் இருந்தேன். ரியலி ஃபன்’’ என மெர்சலாகிறார் முத்தழகி!

நடிகராக இருந்து அரசியலில் குதித்து அமெரிக்க அதிபர் ஆன ரொனால்டு ரீகனின் வாழ்க்கை வரலாறு சுடச்சுட ரெடி. ஒளிவுமறைவில்லாமல் எழுதப்பட்ட இந்த நூலில், ‘ரீகன் தன் வாழ்நாளில் சுமார் 50 பெண்களுடன் நெருக்கமாக இருந்தார்’ என்ற உண்மை அம்பலமாகியுள்ளது. அவர்களில் பலரும் ஹாலிவுட் நடிகைகள்!

மலையாளக் கரையோரம் படங்கள் தேடும் குருவியாகிவிட்ட வேதிகா, திருவனந்தபுரம் சென்ற ஃபிளைட்டில் மோகன்லாலை சந்தித்திருக்கிறார். ‘‘இட்ஸ் எ வெரி ஸ்வீட் அண்ட் மெமரபிள் இன்ஸிடென்ட்’’ என புன்னகைக்கிறார் வேதிகா.

மும்பையில் செட்டில் ஆனாலும், தமிழில் தொடர்ந்து படங்கள் பண்ணவே விரும்புகிறார் ஸ்ருதி. நாகார்ஜுனா - கார்த்தி இணைந்து நடிக்கும் படத்தில் கார்த்தியின் ஜோடியாக கமிட் ஆகியிருக்கும் ஸ்ருதிஹாசன், அடுத்து ‘சிறுத்தை’ சிவா இயக்கும் அஜித் படத்தில் நடிக்க இருக்கிறார் என கிசுகிசுக்கிறது தல வட்டாரம்.