தமிழகத்தை தவிக்க விடுகிறது ரயில்வே



இந்தியாவின் முதல் ரயில் பம்பாய்க்கும் தானேவுக்கும் இடையே 1853ம் ஆண்டு ஓடியது என வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறோம். அதற்கு 18 ஆண்டுகளுக்கு முன்பாகவே சென்னையில் ஒரு திட்டம் போட்டு, சிந்தாதிரிப்பேட்டையில் பரிசோதனை முயற்சியாக ரயில் விட்டார்கள்.

‘ரெட்ஹில் ரயில் ரோடு’ என்ற பெயரில் மூன்றரை மைல் தூரத்துக்குப் போடப்பட்ட தண்டவாளத்தில் இயங்கிய அதுதான் இந்தியாவின் முதல் ரயில். அந்த வரலாறு புறக்கணிக்கப்பட்டது போலவே, தமிழகத்துக்கான அத்தனை ரயில்வே திட்டங்களையும் புறக்கணிக்கிறது மத்திய அரசு. உச்சகட்டமாக, ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களையும் இப்போது கைவிடுகிறது இந்திய ரயில்வே!

2015-16ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை இப்போது தாக்கல் செய்கிறார் ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு. வழக்கமாக ரயில்வே பட்ஜெட் வருகிறதென்றால், மாநிலங்களில் எதிர்பார்ப்பும் பரபரப்பும் மிகுந்திருக்கும். இப்போது, அது வெறும் சம்பிரதாயமாகி விட்டது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பகட்டாக திட்டங்களை அறிவிப்பதும், பிறகு போதிய நிதி ஒதுக்காமல் அதை முடக்குவதும் ரயில்வே துறைக்கு வாடிக்கையாகி விட்டது.

குறிப்பாக ரயில்வே திட்டங்களில் தமிழகம் பெருமளவு வஞ்சிக்கப்படுகிறது என்ற குமுறல் இங்குண்டு. 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான திட்டங்கள் தொடங்கப்பட்டும், ஆய்வு நிலையிலும் இங்கே முடங்கிக் கிடக்கின்றன. தற்போதைய பட்ஜெட்டில் அவற்றை விரைவுபடுத்த நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், ரயில்வே அமைச்சகம் சத்தமில்லாமல் தமிழகத்தைப் புறக்கணித்துள்ளது. 

அமைச்சராகப் பொறுப்பேற்றதும், ரயில்வே துறையில் மறுமலர்ச்சியை உருவாக்குவதற்காக 7 குழுக்களை அமைத்தார் சுரேஷ்பிரபு. இந்தியா முழுவதும் அனுமதி அளிக்கப்பட்ட சுமார் 160 திட்டங்களை கிடப்பில் போடுமாறு பரிந்துரைத்துள்ளன அந்தக்குழுக்கள். அதில் தமிழகத்திற்கான 24 திட்டங்களும் (பட்டியல் பெட்டிச் செய்தியாக!) அடக்கம். ‘‘ஏற்கனவே தமிழக ரயில்வே திட்டங்கள் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.

தமிழகத்தின் மிகப்பெரும் எதிர்பார்ப்புத் திட்டமான சென்னை-கன்னியாகுமரி இரட்டைப்பாதை பணி பத்தாண்டுகளைக் கடந்தும் நீள்கிறது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒதுக்கப்படும் சொற்பத்தொகை சில கிலோமீட்டர்களுக்கே போதவில்லை. இன்னும் பல்வேறு பகுதிகள் ரயில் சத்தத்தையே கேட்டிராத அவலம் இங்கு நிலவுகிறது. இச்சூழலில், அறிவித்த சொற்பத் திட்டங்களையும் ஊற்றி மூடிவிட்டு ‘வளர்ச்சியில் கவனம் செலுத்தப் போகிறோம்’ என்று ரயில்வே அமைச்சர் சொல்வது கேலிக்கூத்து’’ என்று குமுறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

‘‘சென்னை எழும்பூரிலிருந்து ஒரு நாளைக்கு 23 ரயில்கள் தென்மாவட்டங்களுக்குச் செல்கின்றன. 1 ரயிலில் 2000 பேர் என்றால்கூட தினமும் 66 ஆயிரம் பேர் பயணிக்கிறார்கள். இதுவே இரட்டைப்பாதையாக இருந்தால் தினமும் 75 ரயில்கள் செல்லமுடியும். ஒன்றரை லட்சம் பேர் தினமும் பயணிக்கலாம். ஆனால், சென்னை-குமரி இரட்டைப்பாதைப் பணி 10 வருடங்களுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது.

சென்னை-செங்கல்பட்டு, திண்டுக்கல்-மதுரை இடையில் இரட்டை ரயில்பாதை உண்டு. செங்கல்பட்டு- விழுப்புரம், விழுப்புரம்-திண்டுக்கல் இடையிலான பணி முடிந்தபாடில்லை. மதுரை-குமரிக்கு இடையில் 245 கி.மீ தூரத்துக்கான திட்ட ஆய்வு முடிந்து கருத்துரு தயாராகிவிட்டது. ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தென்னக ரயில்வேக்கு 1200 கோடி ஒதுக்குகிறார்கள். அதில் 600 கோடி பிற பகுதிகளுக்குப் போய்விடுகிறது. மீதமுள்ள 600 கோடியில் எல்லா திட்டங்களுக்கும் பகிர்ந்தது போக சில கோடிகளே இந்தப்பணிக்கு திருப்பப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் இப்பணி முடிய இன்னும் 15 வருடங்களாகலாம்.

மதுரை-போடி அகலப்பாதை ரூ.282 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை ரூ.7 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது அத்திட்டத்தை கைவிடுவதாக சொல்கிறார்கள். ராயபுரத்தை முனையமாக்கும்படி இதுவரை 8 ரயில்வே அமைச்சர்களிடம் மனு கொடுத்து ஓய்ந்துவிட்டோம். தற்போது ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வரும் அதுபற்றி கோடிட்டுக்கூட காட்டவில்லை. ரயில்வேயில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதற்குக் காரணம், நம் மக்கள் பிரதிநிதிகளிடம் ஒற்றுமை இல்லாததுதான்.

பட்ஜெட்டுக்கு முன்பு ரயில்வே அமைச்சகம் நடத்தும் ‘ப்ரீ பட்ஜெட்’ கூட்டத்தில் பிற மாநில எம்.பி.க்கள் கட்சி பேதம் மறந்து மாநில நலனுக்குக் குரல் கொடுக்கிறார்கள். தமிழக எம்.பி.க்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பது கூட இல்லை. பங்கேற்கும் சிலரும் மாநிலத்தின் நலனுக்கு முக்கியத்துவம் தராமல், தங்கள் தொகுதியை திருப்திப்படுத்தும் நோக்கில்தான் கோரிக்கை வைக்கிறார்கள். இதுதான் நம் பின்னடைவுக்குக் காரணம்’’ என்று வருந்துகிறார்கள், தமிழ்நாடு ரயில் பயணிகள் உரிமைகள் தீர்வகத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் ஏ.டி.பி.போஸும், குமரி மாவட்ட ரயில் பயணிகள் அசோசியேஷன் செயலாளர் எட்வர்ட் ஜெனியும்.

2006-07 பட்ஜெட்டில் திண்டிவனம்-திருவண்ணாமலை புதிய ரயில்பாதைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. மதிப்பீடு 227 கோடி. ஆனால், ஒதுக்கிய தொகை, நிலம் கையகப்படுத்தக்கூட போதவில்லை. இப்போது கைவிடப்படும் பட்டியலில் இத்திட்டமும் இடம்பெறுகிறது. இதே ஆண்டு ரூ.582 கோடி மதிப்பீட்டில் வாலாஜா வழியாக திண்டிவனம்-நகரி ரயில்பாதை திட்டத்தை அறிவித்தார்கள். இதுவரை ரூ.189 கோடி செலவிடப்பட்டுள்ளது. தற்போது திண்டிவனம்-வாலாஜா வரையிலான திட்டத்தை கைவிடுகிறார்கள். ரேணிகுண்டா-கேரளா இணைப்புக்குப் பயன்படும் என்பதால் வாலாஜா-நகரி பாதையை மட்டும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.

2008-09 பட்ஜெட்டில் ரூ.1,161 கோடி மதிப்பீட்டில் மகாபலிபுரம் வழியாக சென்னை-கடலூர் வரையிலான புதிய பாதைத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதுவரை ரூ.39 கோடி செலவிடப்பட்டுள்ளது. இப்போது அத்திட்டமும் கைவிடப்பட லாம் என்கிறார்கள். அதே ஆண்டு ரூ.603 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட ஈரோடு-பழநி ரயில்பாதைத் திட்டத்திற்கு வெறும் 3 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கினார்கள். தற்போது அதுவும் கைவிடப்படுகிறது.

2012-13 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.590 கோடி மதிப்பிலான மதுரை-தூத்துக்குடி பாதைக்கு இதுவரை ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 2 கோடி ரூபாய். 2013-14 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி ரயில்பாதைத் திட்டத்துக்கான மதிப்பீடு ரூ.838 கோடி. இதுவரை வெறும் 10 லட்சம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களையும் ஊற்றி மூடும் பட்டியலில் வைத்திருக்கிறார்கள்.

‘‘சென்னை-கன்னியாகுமரி இரட்டை ரயில்பாதைத் திட்டத்தில், மதுரையிலிருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம் வரை மின்மயப்படுத்தப்பட்ட இரட்டைப் பாதை அமைக்கவும் திட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கான சர்வே முடிந்து, ரூ.1916 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. அண்மையில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட இதுதொடர்பான கேள்விக்கு ‘அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை’ என்று பதில் அளித்திருக்கிறார் ரயில்வே அமைச்சர். அந்தவகையில் அதையும் மூடிவிட்டார்கள்.

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எந்த ரயில் வந்தாலும் பேசின்பிரிட்ஜ் நிலையத்தில் 20 நிமிஷமாவது காத்திருக்க வேண்டும். காரணம், சென்ட்ரலில் போதிய பிளாட்பாரம், பாதை இல்லை. பேசின்பிரிட்ஜ்-சென்ட்ரல் இடையே 5வது, 6வது பாதைத்திட்டம் ரூ.25 கோடியில் அறிவிக்கப்பட்டது. இதுவரை 1 கோடி ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறார்கள்.

தற்போது ரயில்வே அமைச்சகம் புதியதொரு யுக்தியைக் கையில் எடுத்திருக்கிறது. ‘அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் மாநில அரசு பாதி செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்கிறார் ரயில்வே அமைச்சர். ரயில்வே போன்ற பெரிய திட்டங்களுக்கு மாநில அரசிடம் நிதியை எதிர்பார்ப்பது நியாயமில்லை. திட்டமிடல் குறைபாடு, காலதாமதம் போன்ற காரணங்களால் திட்டங்களின் மதிப்பீடு கணிசமாக உயர்ந்து விடுகிறது.

சென்னை- கடலூர் திட்டத்துக்கு தொடக்க கால மதிப்பீடு ரூ.600 கோடி. இப்போது ரூ.1500 கோடி ஆகிவிட்டது. இதற்கெல்லாம் பொறுப்பு ஏற்கவேண்டிய ரயில்வே அமைச்சகம் எல்லா திட்டங்களையும் கைவிட்டு தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது’’ என்கிறார் டி.ஆர்.இ.யூ ரயில்வே தொழிற்சங்கத்தின் செயல் தலைவர் ஆர்.இளங்கோவன்.பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாது என்கிறார் ரயில்வே அமைச்சர். அதே சமயம் பழைய திட்டங்களையும் கிடப்பில் போடுவோம் என்கிறார். என்ன ரயில்வேயோ... என்ன பட்ஜெட்டோ?

ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு சர்வே முடிந்த நிலையில் கைவிடப்படவுள்ள புதிய ரயில் பாதைத் திட்டங்கள்:

* சென்னை- ஸ்ரீபெரும்புதூர் (வழி-பூந்தமல்லி)
* ஆவடி- ஸ்ரீபெரும்புதூர்   
* ராமேஸ்வரம்-தனுஷ்கோடி
* தஞ்சாவூர்-அரியலூர்-சென்னை எழும்பூர்
* திண்டிவனம்-கடலூர் (வழி-புதுச்சேரி)
* மயிலாடுதுறை - திருக்கடையூர்-திருநள்ளார்-காரைக்கால்
* ஜோலார்பேட்டை- ஓசூர் (வழி-கிருஷ்ணகிரி)
* சத்தியமங்கலம்- மேட்டூர்
* ஈரோடு- சத்தியமங்கலம்
* சத்தியமங்கலம்-பெங்களூர்
* மொரப்பூர்-தர்மபுரி (வழி-முக்கனூர்)
* மதுரை-காரைக்குடி (வழி-திருப்பத்தூர்)
* வில்லிவாக்கம்-காட்பாடி
* திருவண்ணாமலை-ஜோலார்பேட்டை
* மதுரை- கோட்டயம்
* அரக்கோணம்-திண்டிவனம் (வழி-வாலாஜாபேட்டை)
* சிதம்பரம்- ஆத்தூர் (வழி-அரியலூர்)
* திண்டுக்கல்- கூடலூர்   
* திண்டுக்கல்- குமுளி
* காட்பாடி-சென்னை (வழி-பூந்தமல்லி)   
* கும்பகோணம்- நாமக்கல்
* மானாமதுரை-தூத்துக்குடி   
* நீடாமங்கலம்-பட்டுக்கோட்டை (வழி-மன்னார்குடி)
* தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு பணி நடந்துவரும் நிலையில் கைவிடப்படவுள்ள திட்டங்கள்
புதிய பாதைகள் அமைக்கும் பணி

*சென்னை-கடலூர்
*பழநி-ஈரோடு
*திண்டிவனம்-செஞ்சி- திருவண்ணாமலை
*திண்டிவனம்-வாலாஜா-நகரி (திண்டிவனம்-வாலாஜா வரை கைவிடப்படுகிறது)
*ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரிஅகலப்பாதை பணி
*மதுரை-போடி
*திண்டுக்கல்-கோவை
இரட்டை ரயில்பாதைப் பணி
*திருச்சி-தஞ்சாவூர்
*இருகூர்-போத்தனூர்

இதுதான் நிலை!தமிழகத்தில் தற்போது நடந்து வரும் 7 புதிய ரயில் பாதைத் திட்டங்களுக்குத் தேவையான தொகை ரூ.4440 கோடி. ஆனால் இதுவரை வெறும் ரூ.46 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. 11 அகலப்பாதைத் திட்டங்களுக்குத் தேவையான தொகை ரூ.2726 கோடி. இதுவரை ஒதுக்கப்பட்டது ரூ.220 கோடி. 11 இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கான தொகை ரூ.2800 கோடி. ஒதுக்கப்பட்டது ரூ.413 கோடி.

வேண்டும் ரயில்வே தொழிற்சாலை!

2006ல் நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க 2600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பிறகு அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டது. அந்த இடத்தில் ரயில்வேக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி நம்மிடம் பேசிய ‘தென்தமிழக வளர்ச்சிக்குழு’வின் ஒருங்கிணைப்பாளர் குருகால்பேரி தா.கண்ணன், ‘‘ரயில்வே துறையில் அதிக வேலைவாய்ப்பு தரும் தொழிற்சாலைகள் அனைத்தும் வட இந்தியாவிலேயே உள்ளன.

திருச்சி, பொன்மலை தொழிற்சாலையை விரிவுபடுத்தி ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்ற வேண்டும் என்று 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் பயனில்லை. இதைப்போல் தென்னக ரயில்வேக்கு உட்பட்ட பாலக்காட்டில் புதிய ரயில் பெட்டித் தொழிற்சாலை அமைக்கப்படும் என 2008 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்த முடியாத காரணத்தால் அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நாங்குனேரியில் ஏற்கனவே 2600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் ரயில் எஞ்சின் தொழிற்சாலை அமைக்க வேண்டும். இந்திய ரயில்வேக்கு 2020ம் ஆண்டுக்குள் சுமார் 5334 டீசல் எஞ்சின்களும், 4281 மின்சார எஞ்சின்களும், 50,880 ரயில் பெட்டிகளும் தேவைபடுகிறது. இதற்கென 1,20,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பு இங்கு வர அரசியல் கட்சியினர் குரல் கொடுக்க வேண்டும்’’ என்கிறார்.

-வெ.நீலகண்டன்