மீண்டும் பரணுக்குப் போனது பாகிஸ்தான் பட்டாசு!



க்ளைமேக்ஸ் காட்சியுடன் தொடங்கும் சில திரைப்படங்களைப் பார்த்திருக்கிறோம். 11வது உலகக் கோப்பையும் கிட்டத்தட்ட அதைப் போலவே ஆரம்பித்திருக்கிறது. தொடர்ந்து 6வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி, உலகக் கோப்பை வெற்றி வரலாற்றைத் தக்கவைத்துக் கொண்டதால் உற்சாகத்தில் சிறகடிக்கிறது டோனி அண்ட் கோ!

தொடக்க லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன், பிரெண்டன் மெக்கல்லம், வில்லியம்சன் இணைந்து மிரட்ட, பெட்டிப் பாம்பாய் அடங்கியது இலங்கை. அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஃபிஞ்ச், மேக்ஸ்வெல் அடித்து நொறுக்க, பொடிப் பொடியாய் உதிர்ந்தது இங்கிலாந்து.

பிப்ரவரி 15... கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் போர்! முதல்முறையாக சச்சின் துணையின்றி பரம எதிரியை சந்திப்பதால் சற்று பதற்றமாகவே இருந்தது. மூன்று மாதமாக கடும் வெற்றி வறட்சியால் வாடி வதங்கியிருந்த இந்திய அணி வீரர்களுக்கு எங்கிருந்துதான் அந்த உற்சாகமும் உத்வேகமும் வந்ததோ தெரியவில்லை.அடிலெய்டு கேலரியை நீல வண்ணத்தால் நிறைத்த ரசிகர்களுக்கே அந்தப் பெருமை உரித்தாகுக.

தவான் - கோஹ்லி ஜோடியின் பொறுப்பான ஆட்டமும், அதைத் தொடர்ந்து ரெய்னாவின் அதிரடி அமர்க்களமும் சேர்ந்து பாகிஸ்தானுக்கு 301 ரன் என்ற கடினமான இலக்கை நிர்ணயிக்க உதவின. பாக். வீரர்களின் மோசமான ஃபீல்டிங்கும் நமக்கு கை கொடுத்தது.

துரத்தலின் எந்தக் கட்டத்திலுமே அவர்களால் அச்சுறுத்த முடியவில்லை. கேப்டன் மிஸ்பாவின் பொறுப்பான ஆட்டம், கௌரவமான தோல்விக்கு உதவியது. பூம் பூம் அப்ரிடி உள்பட யாருடைய அதிரடி மிரட்டலும் எடுபடவில்லை. ஷமி, உமேஷ், மோகித் வேகமும், அஷ்வின், ஜடேஜா சுழலும் சீராக இயங்கி பாகிஸ்தான் ரசிகர்கள் வாங்கி வைத்திருந்த பட்டாசுகளை மீண்டும் பரணுக்கே அனுப்பின.

விக்கெட் கீப்பராக உமர் அக்மல், தொடக்க வீரராக யூனிஸ் கான் என பாகிஸ்தான் முயற்சித்த வித்தியாசமான வியூகங்கள், சொந்தக் காசில் வைத்துக் கொண்ட சூனியமாயின! இரண்டு லைஃப் கிடைத்ததை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கோஹ்லி, உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை வசப்படுத்திக் கொண்டார்.

இந்த ஒரே வெற்றி, ஒப்பற்ற வெற்றி... இந்திய அணியை மீண்டும் விஸ்வரூபமெடுக்க வைத்துள்ளது. ‘கோப்பையை இவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்களோ’ என்ற சந்தேகம் எல்லா அணிகளுக்குமே வந்திருக்கிறது. அடுத்ததாக தென் ஆப்ரிக்க மிரட்டலை எதிர்கொண்டாலும், பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற முதல் வெற்றியால் இந்திய அணியின் கால் இறுதி வாய்ப்பு உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம்.

உலகக் கோப்பை என்றாலே நம்முடன் மோதும்போது பாகிஸ்தான் அணிக்கு எப்படி உதறலாகி விடுகிறதோ, அதே போல தென் ஆப்ரிக்காவிடம் நம்ம பசங்க மெரசலாகி நிற்பது கலவரமான புள்ளிவிவரம். நமக்கு எதிராக வியூகம் அமைப்பதில் இந்த முறை கேரி கிறிஸ்டன், மைக்கேல் ஹசி, ஆலன் டொனால்டு கை கோர்த்திருப்பதும் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டது. இந்த ஆட்டத்தின் முடிவு எப்படி இருந்தாலும் கவலையில்லை.

எஞ்சியுள்ள லீக் ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யுஏஇ என்று ‘கைப்புள்ள’ அணிகள் அணிவகுப்பதால், இந்திய அணி ‘கட்டதொரை’கள் ரவுண்டு கட்டி அடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் பார்த்த அயர்லாந்து மற்றும் தென் ஆப்ரிக்க அணிக்கு குளிர் ஜுரம் வர வைத்த ஜிம்பாப்வேயுடன் விளையாடும்போது மட்டும் கொஞ்சம் உஷாராக இருப்பது அவசியம்.

ஸ்காட்லாந்துடன் மோதிய ஆட்டத்தில் நியூசிலாந்து கொஞ்சம் ஓவர் கான்ஃபிடன்ஸ் காட்டி அவஸ்தைப்பட்டது, எல்லா அணிகளுக்குமே நல்ல பாடம். முதல் வாரத்திலேயே அரை டஜன் சதம், விக்கெட் வேட்டையில் ஒரு ஹாட்ரிக் (இங்கிலாந்தின் ஸ்டீவன் ஃபின்), ஐந்து 300+ ஸ்கோர், ஒரே இன்னிங்சில் நான்கு தங்க முட்டை (நியூசி.க்கு எதிராக ஸ்காட்லாந்து) என்று புள்ளிவிவர பிரியர்களுக்கு நல்ல வேட்டை.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 20.2 ஓவரில் 83 ரன்னுக்கு 4 விக்கெட் என்று தடுமாறிய தென் ஆப்ரிக்கா, டேவிட் மில்லர் (138*) - டுமினி (115*) ஜோடியின் பெவிகால் பிணைப்பால் 339 ரன் குவித்ததும்; அயர்லாந்துக்கு எதிராக 23.3 ஓவரில் 87 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தவித்த வெஸ்ட் இண்டீஸ், சிம்மன்ஸ் (102) - சம்மி (89) ஜோடி தயவால் 304 ரன் எடுத்ததும் வாய் பிளக்க வைத்தது.

‘உலகக் கோப்பை என்றாலே சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பும், பல தலைகள் உருளும்’ என்பது எழுதப்படாத விதி. இந்த முறை காவு கொடுக்கும்/வாங்கும் சடங்கு கொஞ்சம் அவசரமாகவே அரங்கேறத் துடிக்கிறது. வீரர்கள் தன்னைக் கொஞ்சமும் மதிக்கவில்லை, கேவலமாய் கலாய்க்கிறார்கள் என்ற புலம்பலோடு பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் கிரான்ட் லூடன் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதை மறுத்தாலும், புகை வாசம் இன்னும் மறையவில்லை.

இந்திய அணி வீரர்களும், இயக்குனர் ரவி சாஸ்திரியும் கை கோர்த்துக் கொண்டு, பயிற்சியாளர் டங்கன் பிளெட்சரை ஓரங்கட்டுவதாக ஹாட் டாக் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. ‘வெற்றி தொடர்ந்தால் பிரச்னை இல்லை... அணி தள்ளாடினால் சர்ச்சை பூதாகரமாக வெடிக்கும்’ என்கிறார்கள். அடிலெய்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் இந்திய வீரர்களை அலைக்கழித்த சம்பவமும் ரசிகர்களை முகம் சிவக்க வைத்துள்ளது.

ஆரம்பக் கருத்துக் கணிப்புகள் எல்லாமே இந்திய அணியை மட்டம் தட்டிக் கொண்டிருந்த நிலையில் தற்போது தலைகீழ் மாற்றம். ‘‘அபாயகரமான இந்திய அணி, கோப்பையை தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம்’’ என்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஆரம்பத்திலிருந்தே டோனி அண்ட் கோவுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். கோப்பையில் சூடு ஏற ஏற, கணிப்புகளும் காட்சிகளும் மாறியபடி இருக்கும்.

இரண்டாவது வாரத்தில் இன்னும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.எஞ்சியுள்ள லீக் ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யுஏஇ என்று ‘கைப்புள்ள’ அணிகள் அணிவகுப்பதால், இந்திய அணி ‘கட்டதொரை’கள் ரவுண்டு கட்டி அடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

-ஷங்கர் பார்த்தசாரதி