ரஜினயை சுழற்றும் லிங்கா புயல்!



ரிலீஸான சமயத்தை விட இப்போதுதான் அதிகம் பேசப்படுகிறது ‘லிங்கா’. மருத்துவமனையில் இருந்த நாட்களைவிட இப்போதுதான் அதிகம் மன உளைச்சலில் தவிக்கிறார் ரஜினி. ‘லிங்கா’ படத்தால் ரூ.33 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லி, அதற்கு நிவாரணம் கேட்டு மெகா பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

தங்கள் கோரிக்கைக்கு ஆதரவாக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரிடமே இவர்கள் கடிதம் கேட்டு வாங்குவது, ரஜினியை இன்னும் காயப்படுத்தி இருக்கிறது. ‘இது படத்தின் தயாரிப்பாளரையும், ரஜினியையும் இழிவுபடுத்தும் செயல்’ எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். உண்மையில் என்னதான் நடக்கிறது?

விநியோகஸ்தர்கள் தரப்பில், ‘லிங்கா’வின் திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியா விநியோகஸ்தர் சிங்காரவேலனிடம் பேசினோம்...‘‘வாங்கும்போது, ‘எந்திரன்’ பட வசூலைத் தாண்டி, அதாவது அதை விட 15 சதவீதம் கூடுதலாக ‘லிங்கா’ விலையைச் சொன்னாங்க.

 ஆனா ‘எந்திரன்’ படத்துக்கு போதுமான பப்ளிசிட்டி பண்ணினதால நிறைய பேரை தியேட்டருக்கு வர வச்சது. ஆனா, இதுக்குப் பெரிய அளவில் விளம்பரம் பண்ணலை. அதனால முதல் நாளே கூட்டம் இல்ல. படத்தைப் பற்றி நாங்க எதுவும் சொல்ல விரும்பலை. ஆனா ‘எந்திரன்’கூட இதை ஒப்பிட முடியாதுன்னு எல்லாருக்கும் தெரியும்.

இவ்வளவு பெரிய நஷ்டத்தை எங்களால தாங்கிக்க முடியல. அதனால மீடியா பக்கம் வந்தோம். ‘இவங்கல்லாம் போலி விநியோகஸ்தர்கள்’னு ஒரு அறிக்கை விட்டுப் பார்த்தாங்க. அதுக்கப்புறம் ‘படம் நல்லா ஓடுது. கூட்டம் கூட்டமா மக்கள் வர்றாங்க.

வெற்றிப்படம்’னு விளம்பரம் பண்ணினாங்க. திருச்சி, தஞ்சாவூர் மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன்; கோவை சுக்ரா ஃபிலிம்ஸ்; நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு சேர்ந்து கேப்ரிகன் பிக்சர்ஸ்; திருநெல்வேலி, கன்னியாகுமரி சேர்ந்து சந்திரகலா மூவிஸ்; மதுரை டென்டு கொட்டாய் மூவிஸ்; செங்கல்பட்டு விஜயபார்கவி ன்டர்டெயின்மென்ட்; சென்னை- சேலம் வேந்தர் மூவிஸ் இப்படி எல்லாரும் சேர்ந்து போராடுற கட்டாயத்துக்கு வந்துட்டோம்.

ரஜினி சார் இதுல தலையிடணும்னு வேண்டுகோள் வச்சு, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தினோம். சின்னதா அதுக்குப் பலன் ஏற்பட்டது. ரஜினி சாரோட நண்பர்னு சொல்லப்படுற பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் எங்களைக் கூப்பிட்டார். சென்னை இல்லாம தமிழ்நாட்டுக்கு 33 கோடி இழப்பு வருதுன்னு கணக்கு கொடுத்தோம். 2 வாரம் கழிச்சு, ‘10 சதவீதம்... அதாவது, 33 கோடியில 3.3 கோடிதான் தருவோம்’னு சொன்னாங்க. இவ்ளோ பெரிய இழப்புக்கு அது எப்படி ஈடாகும்?

முழுமையான நஷ்ட ஈடு கேட்டு வேண்டுகோள் வச்சோம். எதுக்கும் அவங்க அசைஞ்சு கொடுக்கலை. அதனால ‘ரஜினி படங்களை இனிமேல் வாங்கி வெளியிட்டால் இதுதான் கதி’ என திரையுலகத்துக்கே எச்சரிக்கையா இருக்கட்டும்னுதான் ‘பிச்சை எடுக்கும் போராட்ட’த்தை அறிவிச்சுட்டோம். ரஜினி வீட்டு வாசலில் இருந்து ஆரம்பிக்கிறோம்!’’ என்றார் அவர். நஷ்ட ஈடு கேட்கும் இவர்களில் யாரும் ‘லிங்கா’ தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷிடம் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘பிச்சை எடுக்கும் போராட்டம் அறிவிச்ச உடனே, திரும்பவும் ரஜினி தரப்பில் எங்களைக் கூப்பிட்டு, ‘10 கோடி ரூபாய் தர்றோம். பிரச்னையை முடிச்சுக்குங்க’ன்னாங்க. ஆனா, அது எங்களுக்குப் பத்தாது. பேரம் பேச இது என்ன கத்திரிக்காய் வியாபாரமா? ‘தயாரிப்பு செலவைவிட மூணு மடங்கு விலைக்கு படத்தை வித்தீங்க.

நீங்க ஒண்ணும் நஷ்டப்படலை. உங்க லாபத்தில் எங்களுக்குக் கொஞ்சம் குடுங்கன்னுதான் நாங்க கேட்கறோம்! நஷ்டமாகிட்டோம்னு தியேட்டர்காரர்கள் யாரும் சொல்லலையே’ என்ற கேள்வியை எங்களிடம் கேட்கிறார்கள். ‘விநியோகஸ்தர்கள்தான் நஷ்டத்தை ஈடு கட்டணும்’னு அவங்க எங்களை நெருக்குறாங்க. எங்க போராட்டங்களுக்கு அவங்களும் வர்றாங்க!” என்கிறார் சிங்காரவேலன்.

‘‘ஒப்பந்தத்தில் இல்லாதபடி இப்படி பணத்தைத் திருப்பிக் கேட்பது முறையா?’’ என்றால், அதற்கும் பதில் வைத்திருக்கிறார் அவர். ‘‘எங்க விநியோகஸ்தர்ல ஒருத்தர் மதுரை ஏரியாவுக்கு ‘ஜில்லா’வை வாங்கினார். வெறும் 25 லட்ச ரூபாய் நஷ்டம். அந்த சிறு நஷ்டம் கூட தயாரிப்பாளரை பாதிக்கக் கூடாதுனு கூப்பிட்டு பணத்தைத் கொடுத்தார் விஜய். ‘தலைவா’ படத்துக்கு பெரிய நஷ்டம். அதை எல்லாருக்கும் ஈக்வல் பண்ணினாங்க.

‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘ஹே ராம்’ல கூட அக்ரிமென்ட் தாண்டி இப்படி செட்டில்மென்ட் பண்ணியிருக்காங்க. எல்லாருமே காலகாலமா பண்றது தான். எம்.ஜி.ஆரெல்லாம் வலது கை கொடுத்தது இடது கைக்குத் தெரியாது. ரஜினி ‘பாபா’வுக்கு மீடியாவை கூப்பிட்டுக் கொடுத்ததால இது பிரபலம் ஆகிப் போச்சு. இப்பவும் அவர் தந்துவிடுவார். சில சக்திகள்தான் அதைத் தடுக்கின்றன’’ என்கிறார் சிங்காரவேலன் ஆதங்கமாக.

பெங்களூருவில் இருக்கும் ‘லிங்கா’ தயாரிப்பாளர் ‘ராக்லைன்’ வெங்கடேஷை சந்தித்துப் பேசினோம்.‘‘நான்கு மொழிகளில் இந்தியா முழுக்க ‘லிங்கா’ படத்தை ரிலீஸ் செய்தோம். எந்த மொழியிலும், எந்த மாநிலத்திலும் இப்படி எந்தப் பிரச்னையும் இல்லை.

தமிழகத்தில் மட்டும் சில விநியோகஸ்தர்கள் பிரச்னை செய்கிறார்கள் என்றால், அதன் நிஜமான பின்னணி என்ன? அவர்களின் உள்நோக்கம் என்ன? அவர்களின் தேவை என்ன என்பதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். தாறுமாறாகவும் அவதூறாகவும் பேசுகிறார்கள். திட்ட மிட்டு ரஜினியின் பெயரைக் கெடுக்க நினைக்கிறார்கள்.

இப்போது சினிமா இண்டஸ்ட்ரி இருக்கும் சூழலில் யாரும் பணம் போட்டு மூன்று மடங்கு லாபமெல்லாம் எடுத்துவிட முடியாது. இவ்வளவு பெரிய ஸ்டார்களையும், டெக்னீஷியன்களையும் வைத்து எடுக்கும் படத்துக்கு என்ன செலவு ஆகியிருக்கும் என்பது, பார்க்கும் ரசிகர்களுக்கே தெரியும். சிலர் ஒன்றுகூடி சினிமா தொழிலை சூதாட்டமாக மாற்ற நினைப்பதை யாரும் நியாயப்படுத்த முடியாது’’ என்றார் அவர்.

தினம் தினம் ‘லிங்கா’ குறித்து எழும் சர்ச்சைகள் ரஜினியை மாபெரும் மன நெருக்கடிக்கு ஆளாக்கியிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். ‘‘தன்னால் யாரும் நஷ்டப்படக் கூடாது என நினைப்பவர் ரஜினி.

ஆனால் அவரை மிரட்டிப் பணிய வைக்க முடியாது. ஏற்கனவே ‘உழைப்பாளி’ படத்துக்கு முன்பாக சம்பள விவகாரத்தில் ரஜினி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் ரெட் கார்டு போட்டார்கள். அப்போது திரையுலகமே அவர் பக்கம் நின்றது.

அதன்பின் பல சூறாவளிகளை அவர் தனியாளாக சந்தித்து விட்டார். காவிரிப் பிரச்னை, அரசியல் நெருக்கடிகள் என எல்லாவற்றிலிருந்தும் மீண்டது போலவே இப்போதும் மீள்வார். தன்னைக் காயப்படுத்தியவர்களுக்கும் நன்றி காட்டியவர் அவர். இப்போதும் அப்படியே செய்வார்’’ என்கிறார்கள் அவர்கள்.‘‘தயாரிப்பு செலவைவிட மூணு மடங்கு விலைக்கு படத்தை வித்தீங்க. நீங்க ஒண்ணும் நஷ்டப்படலை. உங்க லாபத்தில் எங்களுக்குக் கொஞ்சம் குடுங்கன்னுதான் கேட்கறோம்!’’

மை.பாரதிராஜா, ஏ.வி.மதியழகன்