அன்பும் ஆதரவும்தான் மருந்து!



பெண்கள் தின ஸ்பெஷல்

புற்றுநோயை வென்ற தன்னம்பிக்கை மனுஷி

“வாழ்க்கையே முடிஞ்சு போச்சுனுதான் நினைச்சேன். இப்படி இடையில அழைச்சுக்கத்தான் இந்தளவுக்கு திருப்தியும், மகிழ்ச்சியுமான வாழ்க்கையை ஆண்டவன் நமக்குக் கொடுத்தானோனு விரக்தி, அதிர்ச்சி. ஆனா, ஒரு கட்டத்துல என்னையே நான் திடப்படுத்திக்கிட்டேன்.

நிச்சயம் இதிலிருந்து மீளுவேன். அதுக்கான தகுதி எனக்கிருக்கு’னு அடிக்கடி சொல்லிக்குவேன். அந்த நம்பிக்கைதான் இந்த இடத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு...’’ - குழந்தைப் புன்னகையோடு தாய்மை ததும்பப் பேசுகிறார் ராதிகா சந்தானகிருஷ்ணன். பரபரப்பான தொழிலதிபராக அறியப்பட்டவர். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அந்நோயை வென்றவர்.

‘‘18 வயசுலயே எனக்கு திருமணமாயிடுச்சு. முதல் பத்து வருஷம் என் மாமனார் நடத்தின ப்ரிக்ஸ் அண்ட் டைல்ஸ் நிறுவனத்துல டைரக்டரா இருந்தேன். அதுக்குப் பிறகு, நானே ஒரு நிறுவனத்தைத் தொடங்கினேன். பரபரப்பான வாழ்க்கை. ஆனாலும் காலையில நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, சத்தான உணவுகள்னு உடல் ஆரோக்கியத்துக்கு நான் நிறையவே மெனக்கெடுவேன்.

வருஷாவருஷம் எல்லா ஸ்கிரீனிங் டெஸ்ட்டும் பண்ணிக்குவேன். நமக்கு ஒண்ணும் வராதுங்கிற நம்பிக்கையில ஒரே ஒரு வருஷம் மட்டும் அதைப் பண்ணாம விட்டுட்டேன். அப்போ, சின்னதா உடம்புல வித்தியாசம்... சோர்வு... ஒரு கட்டி இருக்கிற மாதிரி உணர்வு... உடனே போய் டெஸ்ட் பண்ணிக்கிட்டேன். ரிசல்ட்... புற்றுநோய்!

எத்தனை சினிமாக்கள் பாத்திருக்கோம்..! ‘அவ்வளவுதான்... மூட்டை கட்டியாச்சு’னு முடிவுக்கு வந்துட்டேன். அந்த மனநிலையை சொல்ல வார்த்தைகள் இல்லை. டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணன்... சின்னப் பெண்ணா இருந்தாலும் அவங்க கொடுத்த தைரியமும் தன்னம்பிக்கையும் என் சிந்தனைகளையே புரட்டிப்போட்டுருச்சு.

புற்றுநோயில ஆபரேஷன், கீமோதெரபி, ரேடியேஷன்னு வியாதியை விட சிகிச்சை துயரமானது. வாய் புண்ணாகிடும், முடி கொட்டிடும்... நாலு பேருக்கு மத்தியில நடக்க முடியாது. அந்தக் காலகட்டத்தைக் கடக்கிறது சாதாரணமில்லை.

அப்போ நான் நிறைய பெண்களைப் பார்த்தேன். தனக்கு என்ன பிரச்னைன்னே புரியாம வந்தாங்க. பல குடும்பங்கள்ல மார்பகப் புற்றுநோய் வந்த பெண்களைக் கைவிட்டுடுறாங்க. புற்றுநோய்க்கு உண்மையான மருந்து அன்பும், ஆதரவும்தான். ஆனா, பெரும்பாலான பெண்களுக்கு அது கிடைக்கிறதில்லை. போதிய விழிப்புணர்வும் இல்ல. இதுக்கு ஏதாவது செய்யணும்னு தோணும்!’’ என்கிற ராதிகா, அந்த சிந்தனையின் விளைவாகத்தான் தற்போது ''பெண்நலம்'' என்ற அமைப்பைத் துவங்கியிருக்கிறார்.

கிராமம் கிராமமாகப் போய் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது இந்த அமைப்பு. நடமாடும் சோதனைக்கூடத்தின் மூலம் மிகக்குறைந்த செலவில் சோதனைகள் செய்கிறது. சென்னை, மந்தைவெளியில் இவர் தொடங்கியுள்ள ''பெண்நலம்'' புற்றுநோய் சிகிச்சை மையம், மிகக்குறைந்த செலவில் சிகிச்சையும் அளிக்கிறது.

‘‘இதுவரை, தமிழகம் முழுக்க 1 லட்சத்து 25 ஆயிரம் பெண்களை சந்திச்சிருக்கோம். 4000 முகாம்கள் நடத்தியிருக்கோம். ஆனா, இன்னும் கூட இங்க விழிப்புணர்வு நிறைய வரவேண்டியிருக்கு. பெண்கள் இதுபத்தி பேசவே பயப்படுறாங்க. எந்தப் புற்றுநோயா இருந்தாலும் தொடக்க நிலையில கண்டறிஞ்சா 100 சதவீதம் குணப்படுத்த முடியும். கர்ப்ப வாய் புற்றுநோயைப் பொறுத்தவரை பெரும்பாலும் ''ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்''(HPV)ங்கிற ஒரு வைரஸ் மூலமாதான் வருது.

மாதவிடாய் காலங்கள்ல பிறப்புறுப்பை சுத்தமா பராமரிக்காதது, சுத்தமில்லாத பாத்ரூமை பயன்படுத்துறது, பலபேருடன் பாலுறவு கொள்றதன் மூலமா இந்த வைரஸ் பெண்களுடைய கருப்பைக்குள்ள போகுது. வைரஸ் உள்ளே போய் 10 முதல் 12 வருடங்கள் கழித்துதான் அதோட தாக்கம் தொடங்கும்.

பிறப்புறுப்புல அரிப்பு, அதிக துர்நாற்றத்தோட நிறம் மாறி வெள்ளைப்படுதல்... இதெல்லாம் அதுக்கான அறிகுறிகள். நிறைய பெண்கள் ''செல்ஃப் மெடிசின்'' எடுத்துக்கறாங்க. அது விபரீதம். இந்தியாவில 10 நிமிடத்துக்கு ஒரு பெண் இந்தப் புற்றுநோயால இறக்குறா. இதை வராமல் தடுக்கவும் முடியும். 100 சதவீதம் குணப்படுத்தவும் முடியும். தேவை விழிப்புணர்வுதான்.

மார்பகப் புற்றுநோயைப் பொறுத்தவரை வராமல் தடுக்க முடியாது. தொடக்கத்துல கண்டறிஞ்சா குணப்படுத்த முடியும். வாழ்க்கைமுறை மாற்றம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தின உணவுகள், உடல் பருமன்னு இதுக்குப் பல காரணங்கள் சொல்லப்படுது. வாய்ப்புற்றுநோயைப் பொறுத்தவரை பான்பராக், புகையிலை போடுறதால அதிகம் வருது. பற்களை சுத்தமா பராமரிக்காட்டியும் வரலாம்!’’ என்கிறார் அவர் அக்கறையாக.

‘பெண்நலம்’ அமைப்பு மூலம் முதலில் ஒரு கிராமத்தைத் தேர்வு செய்து குறும்படம், பொம்மலாட்டம், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் மூலம் பெண்களைத் திரட்டி புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள். பிறகு நடமாடும் சோதனைக்கூடத்தை அங்கு கொண்டு சென்று கர்ப்பப்பை புற்றுநோயைக் கண்டறியும் பாப்சிமியர், மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் மேமோகிராம் சோதனைகளைச் செய்கிறார்கள். இந்த சோதனைகளுக்கு மிகமிகக் குறைந்த கட்டணம்.

40 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு ''ப்ரஸ்ட் செல்ஃப் எக்ஸாம்'' என்ற சோதனைப் பயிற்சியை கற்றுத்தருகிறார்கள். நோய் அறிகுறி கண்டறியப்பட்டால், அவர்களை அழைத்து வந்து பெண்நலம் மருத்துவமனையில் சிகிச்சை தருகிறார்கள். அதற்கும் மிகக்குறைவான கட்டணமே பெறப்படுகிறது. ‘‘அமெரிக்கா மாதிரி நாடுகள்ல புற்றுநோய் சோதனைகள் செஞ்சுக்கறது கட்டாயம்... இந்தியாவுல 80 சதவீதம் பேருக்கு விழிப்புணர்வே இல்லை.

புற்றுநோய் ஆட்கொல்லி நோய்ங்கிற மூடநம்பிக்கையில இருந்து முதல்ல நாம வெளிவரணும். அதை வென்று வெளியில வந்த என்னை மாதிரி நிறைய முன்னுதாரணங்கள் இங்கே இருக்கோம். தன்னம்பிக்கை, இறை நம்பிக்கை, எதிர்த்து நிற்கிற தைரியம், உறவுகளோட அரவணைப்பு, தொடர்ச்சியான சிகிச்சை இருந்தா புற்றுநோய் அழிக்க முடியாத நோயில்லை. எல்லோரும் கைகோர்த்து நின்னா நிச்சயம் அதை ஜெயிக்கலாம்!’’ - உறுதியான வார்த்தைகளால் நம்பிக்கையை விதைக்கிறார் ராதிகா.

வசந்தபாலன்

பெண் கல்வி கடந்த 50 வருடங்களாகத்தான் நடைமுறைக்கு வந்திருக்கிறது. கடந்த 15 வருடங்களாகத்தான் பெண்கள் பலத்த குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கே ஆண் சமூகம் பயந்து நடுங்குகிறது. ப்ளஸ் டூ தேர்வில் பெண்களே அதிகம் தேர்வு பெறுவது, அதிகம் பேர் டைவர்ஸ் கேட்க ஆரம்பித்திருப்பது... இப்படி பெண்கள் தங்களை மீறிப் போய்விடுவார்களோ என நினைக்கிறது ஆண் சமூகம். அதனால்தான் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்திருக்கிறது. இனி வரும் நூற்றாண்டுகளில் பெண்களின் கையே ஓங்கியிருக்கும்.

நிர்மலா கொற்றவை


பெண் எனும் பிறப்பிற்கென வகுக்கப்பட்டிருக்கும் தனிப்பட்ட சமூக விதிகளை, நடத்தை விதிகளை ஒழிப்பது... விதிகள் உருவாகக் காரணமாக இருக்கும் ஆணாதிக்க சமூக அமைப்பை சமத்துவ சமூகமாக மாற்றியமைப்பது... பெண்ணுடலை அனைத்து விதமான ஆதிக்க கருத்தியலில் இருந்தும் மீட்பது... அதன் மூலம் ஆண்மயமாக்கப்பட்ட ஆபத்து நிறைந்ததாக மாறிப்போன பொது வெளியை பெண்களுக்கு உரியதாக ஆக்குவது.

வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்