அடுத்த கஜராஜன் யார்?



யானைகளுக்கு ஒரு ரியாலிட்டி ஷோ

அடுத்த மைக்கேல் ஜாக்சன் யார்? அடுத்த மைக் டைசன் யார்? என்ற ரேஞ்சில் வரிசை கட்டி நிற்கும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்தியில் இதையும் வரவு வைத்துக்கொள்ளுங்கள். உலகிலேயே யானைகளுக்காக நடத்தப்பட்டிருக்கும் முதல் ரியாலிட்டி ஷோ இது! இதில் பட்டம் வென்றிருக்கும் இந்த யானை இனி ‘கஜராஜன்’ என அன்போடு அழைக்கப்படுமாம்!

மலையாள மக்களுக்கு எப்போதுமே யானைகள் மீது கொள்ளைப் பிரியம். யானை இல்லாத திருவிழா அங்கு அரிது. குருவாயூர் கோயிலில் மட்டும் 60க்கும் மேற்பட்ட யானைகள் வளர்க்கப்படுவதும் வருடம்தோறும் யானைகளுக்கு அங்கே ஓட்டப்பந்தயம் நடப்பதும் உலகம் கண்டு வியக்கும் அதிசயம். வீட்டில் ஒரு யானை வளர்ப்பதை கௌரவமாக நினைப்பவர்கள் இப்போதும் கேரளாவில் இருக்கிறார்கள்.

மலையாள நடிகர் ஜெயராம் தனது சென்னை வீட்டிலேயே யானை வளர்த்திருக்கிறார். யானைகளுக்கு ஸ்டார் அந்தஸ்து இருக்கும் ஓரிடத்தில் ஏதேனும் ஒரு யானை சூப்பர்ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றே தீருமே... ஆம், போன வருடம் வரை கேரள யானைகளின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தது ஒரு அல்டிமேட் யானை. அதன் பெயர்தான் கஜராஜன். அந்த யானையின் நினைவாகத்தான் இப்படியொரு ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டிருக்கிறது!

‘‘திருச்சூர் அருகே உள்ள குட்டன்குளங்கரை கோயிலுக்குச் சொந்தமான யானைதான் இந்த கஜராஜன். கேரள மக்களின் செல்ல யானை என்றே இதைச் சொல்லலாம்!’’ என தங்கள் நினைவுகளைப் பகிர்கிறார்கள் இந்த ரியாலிட்டி ஷோவை நடத்தி முடித்திருக்கும் பூங்குன்னம் விவேகானந்தா சமிதி மற்றும் குட்டன்குளங்கரை சங்கமித்ரா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.‘‘ராமதாஸ் என்பதுதான் அந்த யானையின் உண்மையான பெயர்.

அது மறந்து போகும் அளவுக்கு அதை கஜராஜன் - அதாவது, யானைகளின் ராஜா - ஆக்கி வைத்து விட்டார்கள் பொதுமக்கள். கரிய பெரிய உருவம் என்றாலும், மக்களிடம் அந்த யானை சாந்தமாகப் பழகும். நெற்றி முதல் தும்பிக்கையின் முன்புறம் வரை நீண்டிருக்கும் பளீர் வெள்ளை நிறம், கஜராஜ னின் தனித்துவம். அந்த யானையை போட்டி போட்டுக்கொண்டு கோயில் திருவிழாக்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.

உலகிலேயே முதல்முறையாக ஒரு யானைக்கு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட பெருமையைப் பெற்றதும் இந்த கஜராஜன்தான். கோயில் திருவிழாக்களில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் கஜராஜன் அதைக் கண்டு மிரளாமல் மிகவும் அனுசரணையுடன் நடந்துகொள்ளும். இதுவரை யாருக்கும் எந்த இடையூறும் செய்ததில்லை.

இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்ட அந்த யானை, கடந்த வருடம் தனது 55வது வயதில் திடீரென இறந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கஜராஜனுக்காகக் கண்ணீர் வடித்தனர். அதன் உடல் அடக்கம் நடந்தபோது திருச்சூர் நகரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு கூட்டம் கூடியது.

கஜராஜனாக வலம் வந்த அந்த ராமதாஸ் யானையைப் போல எல்லா விதத்திலும் சிறந்த யானை எது என இந்த ரியாலிட்டி ஷோ வழியே கண்டுபிடித்திருக்கிறோம். இதில் கேரளா முழுவதும் உள்ள 50 யானைகள் கலந்து கொண்டன. சுபாவம், கஜலட்சணம், உடல்வாகு என பல அம்சங்களைப் பரிசோதித்து சிறந்த யானை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக கஜராஜன் என்ற பெயரில் இணையதளம் ஒன்றையும் தொடங்கினோம். ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த யானைகளுக்கு ஆன்லைனிலேயே வாக்களிக்கலாம் என்ற வசதி தரப்பட்டிருந்தது. சிறந்த யானையைத் தேர்ந்தெடுக்க 4 பேரைக் கொண்ட ஒரு குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது!’’ என்கிறார்கள் விழாக் குழுவினர்.

யானைகளுக்கான இந்த நடுவர் குழு, நேரடியாக யானைகள் இருக்கும் இடத்திற்குச் சென்று பரிசோதித்து மார்க் தந்திருக்கிறது. யானைகளின் குணநலன்களுக்கு ஒரு குறிப்பிட்ட சத
வீதமும், ரசிகர்கள் அளிக்கும் வாக்குகளுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதமும் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன. முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 16 யானைகள் இறுதிச்சுற்றுக்கு வந்தன. ‘இதில் வெல்லப் போவது யார்?’ என கடந்த மார்ச் 14ம் தேதி பூங்குன்னம் கோயில் மைதானத்தில் ஃபைனல்ஸ் நடைபெற்றது. இறுதி யாக ஈராற்றுப்பேட்டை அய்யப்பன் என்ற யானை வின்னராக அறிவிக்கப்பட்டு அதற்கு ‘கஜராஜன்’ என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.

‘‘ராமதாஸ் யானையைப் போலவே இதற்கும் நல்ல திறமையும் மனிதர்களிடம் பழகும் பாங்கும் இருக்கிறது. ஆனால், இதுவும் மக்களிடம் கஜராஜன் போலவே செல்வாக்கு பெறுமா என்பது தெரியாது. அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!’’ என்கிறார்கள் நடுவர்கள்.சூப்பர் ஸ்டார்களை உருவாக்குவது போட்டிகள் அல்ல, மக்கள்தானே!உலகிலேயே முதல்முறையாக ஒரு யானைக்கு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட பெருமையைப் பெற்றதும் இந்த கஜராஜன்தான்.

ஏ.கே.அஜித்குமார்