ஐந்தும் மூன்றும் ஒன்பது



மர்மத் தொடர் 11

‘இளங்கலையில் சரித்திரப் பாடம் எடுத்த நான், என் கல்லூரியில் மிகப் பிடித்த இடமாக நூலகத்தைத்தான் கருதினேன். என் கல்லூரி நூலகத்தில் நிறையவே புத்தகங்கள் இருந்து என் சரித்திர, பூகோள அறிவை வளப்படுத்திக்கொள்ள பெரிதும் துணை செய்தன.

முன்னதாக, என் ஆய்வுகள் குறித்த இந்தக் கட்டுரை நூலில் நான் என் அனுபவம் சார்ந்த தனிப்பட்ட கருத்துக்களையும் பதிவு செய்ய விரும்புகிறேன். இதை வாசிப்பவர்கள், ‘என்ன இது... ஆய்வுக்கட்டுரை என்று கூறிவிட்டு பொதுவான தகவல்களோடு ஒரு டைரிக்குறிப்பு போல இது இருக்கிறதே’ என்று எண்ணிவிட வேண்டாம்.

ஒருவேளை மற்ற ஆய்வுக் கட்டுரையிலிருந்து எனது இந்தக் கட்டுரை நூல் அதுபோல் மாறுபட்டிருந்தால் அதில் குற்றம் காண வேண்டாம். ‘இது என் பாணி’ என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.
இந்த ஆய்வு நூலில் எனது நோக்கமே, நம் புராதனங்களின் சிறப்பை உணர்ந்தும் புரிந்தும் உங்களோடு பகிர்ந்துகொள்வதுதான்... இன்று விஞ்ஞானம் மிகவே வளர்ந்து விட்டது. அது இன்னமும் கூட வளரும். ஆனபோதிலும் இன்றைய பிரமிப்பூட்டும் விஞ்ஞானத்திற்கே அடித்தளம் போட்டவர்கள் நம் தமிழ்ப் பெரியோர் என்பது என் கருத்து.

குறிப்பாக ஏறத்தாழ 20ல் இருந்து 21 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இன்றுள்ள கன்னியாகுமரியை ஒட்டிய நிலப்பரப்பு கடலில் மூழ்கிப்போனது. ‘குமரிக்கண்டம்’ என்று குறிப்பிடப்படும் இந்தக் கண்டம் இன்றைய உலக நாடுகளான ஆஸ்திரேலியா, இலங்கை முதலான நாடுகளோடு நிலப்பரப்பிலும் தொடர்புடையதாக இருந்தது. இதில் ‘பஃறுளி’ எனும் ஆறும், ‘குமரி’ எனும் பெயரில் ஒரு ஆறும் கூட ஓடியதாகத் தெரிகிறது. தென்மதுரை, கபாடபுரம், மூதூர் என்கிற நகரங்கள் இருந்துள்ளன. சங்ககாலத்தில் புகழ்பெற்றிருந்த நச்சினார் எனும் பழம்பெரும் புலவர் ‘இறையனார் அகப்பொருள்’ என்று தான் எழுதிய நூலில் ‘தமிழ்ச் சங்கம்’ இங்கே பத்தாயிரம் ஆண்டுகள் வரை தொடர்ந்து நடைபெற்றதைக் குறிப்பிட்டுள்ளார்.

இக்காலத்தில்தான் ‘அகத்தியம்’, ‘தொல்காப்பியம்’, ‘பூதபுராணம்’, ‘மாபுராணம்’, ‘சங்கப்பாடல் திரட்டு’ போன்ற நூல்கள் உருவாயின...நாம் நமது வரலாற்றைப் பற்றி பேசும்போது 2000 வருட அளவிற்கான காலகதிக்குள்ளான காலத்தை மட்டுமே பெரிதும் சிந்திக்கிறோம். உண்மையில் நம் வரலாறு 20 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது.

உலகின் மற்ற மொழிகள் 2000 ஆண்டுகளில் தோன்றியிருக்கலாம். நம் தமிழ்மொழி 20 ஆயிரம் ஆண்டுக்கும் முந்தையது மட்டுமல்ல... அப்போதே அது வெறும் பேச்சு மொழியாக மட்டுமின்றி இலக்கண வரையறைகளையும் கொண்டிருந்தது. 20 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே இலக்கணம் இருந்திருக்கிறது என்றால், அதற்கும் முன் ஒரு 50 ஆயிரம் ஆண்டுகளாவது அது பேச்சு மொழியாக மனித நாவின் எல்லாவித உச்சரிப்பு அசைபாடுகளுக்கும் உள்ளாகியிருக்க வேண்டும் என்பது என் கருத்து. அடுத்து, அந்த நாளில் மொழியோடு கூடி நமது கணித அறிவும் பிரமிக்க வைக்கக் கூடியதாய் உள்ளது...’

- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...அந்தக் கருந்தேளை யாரும் பார்க்கவில்லை. பார்க்கும்படியாக அது போகவுமில்லை! வர்ஷனும் சற்று கிசுகிசு குரலில் போனில் பேசி முடித்தவனாக திரும்பி வந்து ப்ரியாவைப் பார்த்தான். அவன் முகத்தில் வந்திருக்கும்போது தெரிந்ததை விடவே கூடுதலாய் ஒரு பிரகாசம்.‘‘என்ன வர்ஷா... ரொம்ப ஹேப்பியா இருக்கே? நீ புலம்பப் போறேன்னு நினைச்சேன்!’’

‘‘நோ... நோ... ஒரு வித்தியாசமான அசைன்மென்ட் நமக்குக் கிடைச்சிருக்கு. இதை விடக்கூடாது - இது எவ்வளவு தூரம் உண்மையானதுன்னு ஒரு கை பார்த்துடணும்...’’ என்று அவளோடு ஒத்துழைப்பது போல் பேச ஆரம்பித்தான்.‘‘அஃப்கோர்ஸ்... இப்பதான் நீ சரியா யோசிக்க ஆரம்பிச்சிருக்கே. ரியலா சொல்றேன்டா... அந்த வள்ளுவர் ஒரு லெஜண்ட்! எந்த டாபிக்கை தொட்டாலும் மெயில் பாக்ஸை திறந்த மாதிரி விஷயம் கொட்டுது...’’

‘‘அது குப்பையா இல்லாம இருந்தா சரி...’’‘‘குப்பையா இருந்தா நான் இவ்வளவு எக்ஸைட் ஆவேனா?’’‘‘லுக் பேபி... உன்னை எல்லாம் ஏமாத்தணும்னு பிளான் பண்ணா எவ்வளவு வேணும்னாலும் ஏமாத்தலாம். ஆகையால் நீ உன்னை ரொம்ப அலர்ட்னு நினைச்சுக்காதே...’’- வர்ஷன் ஒரு ஆணுக்குண்டான திமிரோடு சொன்னதை ப்ரியாவும் ஒரு முறைப்போடு தான் எதிர்கொண்டாள்.
‘‘என்ன முறைக்கறே?’’

‘‘முறைக்காம... உங்க ‘மேல் ஷாவெனிச’த்தை காட்டாம உங்களால் இருக்கவே முடியாதாடா... பொம்பளன்னாலே அவ எல்லா வகைலயும் உங்கள விட வீக்கானவங்கனு ஒரு தீர்மானத்தோடதான் எப்பவும் பேசுவீங்களாடா நீங்க...’’‘‘ப்ரியா... நீ தேவையில்லாம டென்ஷன் ஆகாதே. நான் உன் நல்லதுக்குத்தான் சொன்னேன். நீ உடனே ‘என்னை ஏமாத்திக் காட்டுடா பாக்கலாம்’னு சவால்விட, நான் அதை ஏத்துக்கறேன்னு நாம ட்ராக் மாறவேண்டாம். நீ இப்ப எதுக்கு கூப்பிட்டே? விஷயத்துக்கு வா..!’’

‘‘வர்ஷா... நீ எமன்டா! எல்லாரும் காலை மிதிச்சிட்டாதான் சாரி கேப்பாங்க. நீ கத்தியால குத்திட்டு அதுக்கும் சாரி கேக்கறவன்டா...’’‘‘சரி... அப்படியே இருக்கட்டும். மேட்டருக்கு வா!’’‘‘என்ன மேட்டருக்கு வா... நீ முதல்ல வள்ளுவரை மீட் பண்ணு. நான் சொன்னது எவ்வளவு சரின்னு அப்ப தெரியும். அப்புறம், அவரை சாகவிடக் கூடாது. அதுதான் இப்ப நம்ப முன்னால உள்ள சேலஞ்ச்...’’‘‘என்ன பெரிய சேலஞ்ச்... அவர் என்ன ஐ.சி.யு.வில உயிருக்குப் போராடிக்கிட்டா இருக்கார், நாம எதையாவது பண்ணி அவர் உயிரை இழுத்துப் பிடிச்சு நிறுத்த..?’’
‘‘எல்லாத்துக்கும் பதில் சொல்லாதே... இங்க சில அமானுஷ்யமான சிக்னல்களும் கிடைச்சிருக்கு...’’

‘‘அமானுஷ்ய சிக்னலா... தமிழும் இங்கிலீஷும் கலந்த புது கலைச்சொல்லா இருக்கே?’’‘‘கிண்டல் பண்ணாதே... ஒரு குடுகுடுப்பைக்காரன் வந்து ‘இந்த வீட்ல ஒரு உயிர் போகப் போகுது’ன்னு சொல்லிட்டுப் போயிருக்கான். இப்படி வீட்டு வாசலுக்கே வந்து பயமுறுத்தறதெல்லாம் எனக்குப் புதுசு. கேட்டா ‘சிட்டி லைஃப்ல இது அபூர்வம்... மற்ற ஊர்கள்ல ரொம்ப சகஜம்’னு சொல்றாங்க. நீ என்ன சொல்றே?’’

‘‘நான் என்னத்த சொல்ல... இவங்கள்லாம் ஏன் கும்பகோணம் தீ விபத்துல அவ்வளவு குழந்தைகள் செத்துப் போனதை முன்னாலயே சொல்லலை..?’’‘‘இதோ பார்... இப்ப பிரச்னை ‘காலப்பலகணி உண்மையா, பொய்யா’ங்கறதுதான்! அது உண்மைன்னா வள்ளுவர் உயிர் அவர் நம்பற மாதிரி போயிடும்... பொய்னா போகாது... நாம இப்ப அது பொய்யிங்கற பக்கத்துல நின்னு செயல்படப் போறோம். ஆம் ஐ கரெக்ட்?’’‘‘கரெக்ட்.... ஆனா ஒரு சின்ன கரெக்ஷன்...’’

‘‘என்ன?’’
‘‘ஏன் நாம அதை உண்மைன்னு நம்பக் கூடாது?’’
வர்ஷன் அப்படி ஒரு கேள்வி கேட்பான் என்று ப்ரியா துளிகூட எதிர்பார்க்கவில்லை.
‘‘என்னடா சொல்றே?’’ என்று காற்றுக்குரலில் கேட்டாள்.

‘‘உண்மையா இருந்துட்டா..?’’
‘‘நீயா இப்படி கேக்கறே?’’
‘‘நானேதான்... நீ சொல்ற அறிகுறிகளை வச்சுப் பாக்கும்போது, அது உண்மையா இருக்கறதுக்கு வாய்ப்பு இருக்கற
மாதிரிதானே தோணுது?’’

‘‘அப்ப வள்ளுவர் செத்துப் போயிடுவார்னு நீ நம்பறியா?’’‘‘அவரே நம்பும்போது நாம ஏன் அதை நம்பக் கூடாது?’’‘‘மண்ணாங்கட்டி... நாமளும் நம்பினா அவரை எப்படிக் காப்பாத்த முடியும்?’’
‘‘அப்ப நீ நம்பாதே... காப்பாத்த முயற்சி செய். என்ன நடக்குதுன்னு பார்ப்போம்...’’ - வர்ஷனிடம் ஒரு எதிர்பாராத மாற்றத்தை அந்த நொடியே உணர்ந்த ப்ரியா முகத்தில் ஏராளமான சலனங்கள்.
‘‘என்ன ப்ரியா... நான் பல்டி அடிச்சிட்டதா நினைக்கறியா?’’

‘‘ஆமாம்... பல்டிலயும் அந்தர் பல்டி, ஆகாச பல்டிம்பாங்களே, அப்படி ஒரு பல்டியை நீ இப்ப அடிச்சிருக்கே. வந்ததுல இருந்தே உன்கிட்டே தடுமாற்றங்கள் வேற... ஆமாம் உனக்கு என்னாச்சு?’’
‘‘ப்ரியா... இப்ப என்ன செய்யணும்ங்கறே? காலப்பலகணியை நாம நம்பக் கூடாதுங்கிறியா?’’‘‘பொடலங்கா... நாம நியூட்ரலா இருந்து செயல்படணும்னு சொல்ல வந்தேன்!’’

‘‘நியூட்ரலா... நியூட்ரலா... ஓ, அதுவும் சரிதான். அப்படியே செய்துடுவோம். சரி, வா... முதல்ல வள்ளுவரை சந்திப்போம்...’’ - வர்ஷனிடம் ஒரு வேகமும் தொனித்தது. அதே சமயம் முதல் தடவையாக அவன் முரண்பட்டவனாகவும் சந்தேகத்துக்குரியவனாகவும் ப்ரியாவுக்குள் அர்த்தமாக ஆரம்பித்தான்.அதற்கு மேல் அவனிடம் விவாதம் செய்யாமல் அவனை அழைத்துக்கொண்டு கணபதி சுப்ரமணியனின் அறை நோக்கி நடந்தாள் ப்ரியா.

உள்ளே மின்சாரம் இல்லாததால் இருள் கூடுதலாகத் தெரிந்தது.
‘‘என்ன... கரன்ட் இல்லையா?’’
‘‘ஆமாம்...’’
‘‘இன்வெர்ட்டர்..?’’

‘‘அதுவும் ரிப்பேர்...’’
‘‘பக்கத்து வீட்ல மோட்டார் ஓடற சத்தம் கேட்குதே..?’’
‘‘எங்க வீட்ல பவர் ஷார்ட் சர்க்யூட் ஆகி கிச்சன்ல மைக்ரோவேவ் அடுப்பு குண்டு வெடிச்ச மாதிரி வெடிச்சிடிச்சு...’’

‘‘மை குட்நெஸ்...’’ - பேசிய படி மாடிப்படியில் இருவரும் ஏறுவதை விசிறியால் விசிறிக் கொண்டே வந்த பத்மாசினி பார்த்தாள். அவளை ப்ரியாவும் பார்த்தாள்.
‘‘யாரும்மா... எலெக்ட்ரீஷியனா?’’
‘‘வர்ஷன்மா...’’
‘‘ஓ... சாரி!’’
‘‘ஹாய் ஆன்ட்டி...’’

‘‘எப்படிப்பா இருக்கே..?’’
‘‘ஃபைன் ஆன்ட்டி...’’
- நடந்தபடியே சம்பிரதாயமான பேச்சுக்கள் முடிய, இருவரும் அறைக்குள் நுழைந்தனர். கணபதி சுப்ரமணியன் நாற்காலி யில் அமர்ந்திருக்க, அவர் எதிரில் வள்ளுவரும் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
‘‘தாத்தா...’’

‘‘வாடா... யார் உன் பாய் ஃப்ரண்டா?’’
‘‘ஆமாம் தாத்தா... வர்ஷன்!’’
‘‘ஹலோ தாத்தா...’’

‘‘உக்காருங்க... இவர்தான் நம்ம கெஸ்ட் வள்ளுவர்!’’
- தாத்தா கை காட்ட, வர்ஷன் வள்ளுவரைப் பார்த்து சிரிக்க, பதிலுக்கு வள்ளுவர் சலனமின்றிப் பார்த்தார்.

‘‘உங்களப் பத்தி ப்ரியா ரொம்பவே சொன்னா... நீங்க வேணா பாருங்க, உங்கள சாக விடமாட்டோம் நாங்க...’’ - அந்த பதிலுக்காகக் கொஞ்சம் சிரித்தார். அந்த சிரிப்பின் பொருள் வர்ஷனுக்குப் புரிந்தது.‘‘நீ எவ்வளவு சொன்னாலும் வள்ளுவர் அதை ஏத்துக்கத் தயாரில்லை. தான் சாகப் போறது உறுதிங்கற மாதிரியே பேசறார்!’’ - என்று எடுத்துத் தந்தார் கணபதி சுப்ரமணியன்.
அப்போது வள்ளுவர் நாற்காலியில் இருந்து எழுந்தவராக பாத்ரூம் நோக்கி செல்லத் தொடங்கினார்.

 அவர் விலகின நொடி, ப்ரியாவிடம் வேகமாய் ஒரு செயல்பாடு. அந்த அறையின் சுவர்க் கடிகாரத்தில் மணி மூன்றைக் காட்டிக் கொண்டிருந்தது. அதை வேகமாக நான்குக்குக் கொண்டு போனாள். அடுத்து தன் கைக் கடிகாரத்தில் மணியை நான்குக்குக் கொண்டு போனவள், கணபதி சுப்ரமணியனின் கடிகாரம், வர்ஷனின் கடிகாரம் என்று சகலத்திலும் ஒரு மணி முன்னோக்கிப் போய் நின்றாள்.
கணபதி சுப்ரமணியன் புரிந்துகொண்டு வாய் திறந்தார்.

‘‘என்னடா... டயத்தை மாத்தி வச்சு வள்ளுவரை ஏமாத்த முடியும்னு நம்பறியா?’’‘‘நிச்சயமா... அவர் சொன்னபடி 4 மணிக்கு மேலதான் அவருக்கான உயிர் பிரியற டைம். இந்த கடிகாரப்படி மூணு மணிக்கே நாலு மணி வந்துடும். அவர் சொன்னபடியே பார்த்தாலும், நாலு மணிக்கு மேலதான் மரணம் வரணும். அதன்படி பார்த்தா இந்த கடிகாரப்படி ஐந்து ஆகும்போதுதான் நாலு மணி. ஆனா, மூணு மணிக்கே வள்ளுவர் வரையில நாலு மணி கடந்துடறதால, சைக்கலாஜிகலா அவருக்கும் ஒரு தைரியம் வரும் இல்லையா?’’

‘‘நீ சொல்றது கொஞ்சம் குழப்பமாதான் இருக்கு. இருந்தாலும் சைக்கலாஜிகலா இது வள்ளுவருக்கு தைரியம் தர ஒரு சின்ன சான்ஸ் இருக்கு. அந்த மரண விநாடிகளைக் கடந்த பிறகு நாமகூட அவர்கிட்ட உண்மையைச் சொல்லி அவருக்குப் புரிய வைக்கலாம்...’’ என்றார் கணபதி சுப்ரமணியன். பாத்ரூமிலிருந்து வள்ளுவரும் திரும்பி வந்தார். கால் முழுக்க நல்ல ஈரம். கணபதி சுப்ரமணியனுக்கு ஈரக் கால்களோடு இருக்கவும் பிடிக்காது; நடக்கவும் பிடிக்காது. எனவே, இந்தக் கால் கழுவும் பழக்கமெல்லாம் அவருக்குக் கிடையாது. கணபதி சுப்ரமணியன் அவர் கால்களை இதனால் ஊடுருவிப் பார்க்கவும், வள்ளுவருக்குப் புரிந்தது.

‘‘என்ன, ஈரக்கால்களை அப்படி பாக்கறீங்க?’’‘‘நான் பாத்ரூம் போனா காலெல்லாம் கழுவமாட்டேன். எனக்கு ஈரம் பிடிக்காது!’’‘‘விதி தப்பா இருந்தா புத்தி இப்படித்தான் உணர வைக்கும்!’’‘‘என்ன சொல்றீங்க... புரியல!’’‘‘கால்களைக் கட்டாயம் கழுவணும்மா... வெளிய போய்ட்டு வந்தாலே கழுவிக்கணும். கலி புருஷன் கால் வழியாதான் நம்பள பிடிச்சு ஆட்டி வைப்பான். நளச் சக்கரவர்த்தியையே அவன் அப்படிப் பிடிச்சு படுத்தின பாடுதான் ‘நளதமயந்தி சரிதம்’!’’

‘‘விட்டா உடனே புராணம், சாஸ்திரம்னு போயிடுவீங்களே... நீங்க என்ன செய்வீங்க? உங்க வளர்ப்பு அப்படி... நான் தெரியாமதான் கேக்கறேன்... எல்லாம் தெரிஞ்சு தெளிவா நடந்துக்கறதா சொல்ற நீங்க செத்துடுவேன்ங்கறீங்க. இது எதுவும் தெரியாம வாழற நான் என்ன கெட்டுப் போயிட்டேன். நல்லாதானே இருக்கேன்!’’ - கணபதி சுப்ரமணியன் கேட்ட கேள்வி ப்ரியாவுக்கு சரியான கேள்வியாகத்தான் தோன்றியது.

‘‘அய்யா... இந்த உலகத்துல வாழற நாளைவிட சாகற நாள்தான்யா நல்ல நாள். அது உங்களுக்குப் புரியாது. நான் பொறக்கும்போதே என் மரண விநாடியும் முடிவாயிடுது. அதை மாற்ற அந்த சர்வேஸ்வரனுக்கே அதிகாரமில்லீங்க... உங்க வரையில நீங்க நல்லா இருக்கிறதா சொன்னீங்க. கேட்க சந்தோஷமா இருக்கு. ஆனா, நளனைவிடவே நீங்க அதிகம் கஷ்டப்படப் போறீங்க. இதை ஒரு தகவலா சொல்லிக்கறேன். நீங்க கஷ்டப்படணும்ங்கறது என் விருப்பம் இல்லீங்க... என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க!’’ - என்று வள்ளுவர் சொன்ன செய்தி ப்ரியா வைக் கலக்கியது.
வர்ஷனோ அந்த அறையில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்த வள்ளுவர் தந்த பெட்டியைப் பார்த்தவனாக, மெல்ல அதை நோக்கிச் சென்று அதனருகில் நின்றான்.

அர்த்த சாஸ்திர அறிவுரைகள்

புலன்களைக்
கட்டுப்படுத்தும்
அரசன்,
நாட்டையும்
கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்!

கடவுள்
விக்ரகங்களில்
இல்லை.
உன் உள்ளே
இருக்கிறார்.
ஆன்மாதான்
கடவுள்!

சாதாரண
மனிதனின்
கோபம்
மற்றவர்களின்
கோபத்தை
விடக்
கடுமையானது!

நிறைவேற்ற
முடியாத
பணியைத் தொடங்கக்
கூடாது!

தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: ஸ்யாம்