ஓவியம் வரைவதிலும் உதவி செய்வதிலும் தான் ஆத்ம திருப்தி!



ஜே.பியின் மொபைல் எந்நேரமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ‘அவசரமாக 2 யூனிட் ரத்தம் தேவை’, ‘கைவிடப்பட்ட ஒரு முதியவருக்கு இல்லம் தேவை’, ‘பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு வாழ்வாதார உதவி தேவை’, ‘ஒரு மாணவனுக்கு கல்விக்கட்டணம் தேவை’... 90 சதவீத அழைப்புகள் இப்படியான உதவிகள் கேட்டே வருகின்றன. சில அழைப்புகள் செய்த உதவிக்கு நன்றி அறிவிக்கின்றன.

சலிப்பின்றி பேசுகிறார்; நம்பிக்கை ஊட்டுகிறார். உதவியென அழைப்போருக்கு அடுத்த சில நிமிடங்களில் தகுந்த தொடர்பை உருவாக்கித் தருகிறார். தமிழகமெங்கும் பல்லாயிரம் பேர் அடங்கிய 1000 தன்னார்வ சேவை அமைப்பு களை ஒருங்கிணைத்து ‘எண்ணங்களின் சங்கமம்’ என்ற அமைப்பை நடத்துகிறார் ஜே.பிரபாகர். சுருக்கமாக ஜே.பி.

பத்திரிகை பரிச்சயமுள்ளவர்களும் நூல்கள் வாசிப்பவர்களும் ஜே.பியை அறிவார்கள். கவனம் ஈர்த்த ஓவியர். அவரின் கோடுகளும் புள்ளிகளும், இறைவனின் இதயத்தோடு விழிகளை இணைக்கும். தமிழகமெங்கும் இருக்கிற 300 பிரதான கோயில்களையும், அங்கே உறைந்திருக்கிற இறைவனையும் காட்சித் தொகுப்பாக்கியவர். தனித்துவமான இவரது ஓவிய பாணி கலை வட்டாரத்தில் பெரிதும் கொண்டாடப்படுகிறது. கூடவே, சத்தமில்லாமல் சமூகப்பணி.

‘‘இந்த உலகமே தப்பா இயங்குற மாதிரி ஒரு மாயை நம்மைச் சூழ்ந்திருக்கு. கெட்ட விஷயங்கள்தான் முக்கியத்துவம் பெறுது. இளம் தலைமுறையை ஒருவித அவநம்பிக்கை சூழ்ந்திருக்கு. ஆனா, இங்கே எவ்வளவோ நல்ல விஷயங்களும் நடக்குது. நிறைய மனிதர்கள், தங்களைப் பத்தியோ, தங்கள் குடும்பத்தைப் பத்தியோ யோசிக்காம மத்தவங்களுக்காக வேலை செஞ்சுக்கிட்டிருக்காங்க. ஆனா அவங்களை யாரும் முன் நிறுத்துறதில்லை. அவங்களை உற்சாகப்படுத்துற சூழலும் இங்கே இல்லை.

 இந்த மாதிரி மனிதர்களை உதாரணமாக் காட்ட வேண்டிய தேவை நிறைய இருக்கு. சமூகத்து மேல அக்கறையுள்ள மனிதர்கள் எல்லாரும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறாங்க. குரலும், கரமும் ஒருங்கிணைஞ்சு நிக்கிறப்போ அதோட பலம் பெருகும். இந்த சிந்தனை என்னை ரொம்ப காலமா துரத்திக்கிட்டே இருந்துச்சு.

ஒரு கட்டத்துல மன உந்துதல் அதிகமாக, வேலையை விட்டுட்டு முழு நேரமா இந்த ஒருங்கிணைப்புப் பணியில இறங்கிட்டேன். எனக்குக் கிடைச்ச வரம், என் மனைவி நிர்மலா. இன்னைக்கு வரைக்கும், நான் எது செய்தாலும் அதுல தன்னை முழு மனதோட அர்ப்பணிச்சுக்கிற முதல் ஜீவன். அவ கொடுத்த உற்சாகத்துல தான் ஊர் ஊரா சுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளையும், மனிதர்களையும் ஒருங்கிணைக்க முடிஞ்சது...’’ - உற்சாகமாகப் பேசுகிறார் ஜே.பி.

ஜே.பியின் ‘எண்ணங்களின் சங்கமத்தில்’ ரத்த தானம், விழி தானம், காப்பகங்கள், மருத்துவ, கல்வி உதவி பெற்றுத் தருவோர் என சகல சேவகர்களும் அடங்கியிருக்கிறார்கள். உதவி கேட்போரை, உதவுவோருடன் இணைக்கிறார். ஏற்கனவே தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது, சிவராம் என்ற நண்பரோடு இணைந்து சக ஊழியர்களை ஒருங்கிணைத்து ‘நல்லோர் வட்டம்’ என்ற அமைப்பை நடத்தியுள்ளார் ஜே.பி. அத்தருணத்தில் கள்ளச்சாராயம் புரண்டோடிய தீயம்பாக்கம் கிராமத்திற்கு அன்னா ஹசாரேவை அழைத்துவந்து அம்மக்களிடம் பேசச் செய்ததோடு, பல்வேறு வாழ்வாதாரங்களையும், ஒரு பள்ளியையும் உருவாக்கி சாராயத்தை முற்றிலுமாக ஒழித்திருக்கிறார்.

‘‘1995லதான் எண்ணங்களின் சங்கமத்துக்கான திட்டம் உதிச்சுச்சு. நானும் என் மனைவியும் தமிழ்நாடு முழுவதும் சுத்தினோம். எங்கெல்லாம் நல்ல மனிதர்கள் இருக்காங்களோ அவங்களை நேரா சந்திச்சோம். அவங்களோட பணியை மேம்படுத்த, விரிவுபடுத்த என்ன உதவியெல்லாம் தேவைன்னு ஆய்வு செஞ்சோம். உதவி செய்ய ஆர்வமா இருந்து, வழி தெரியாம இருக்கிறவங்களைக் கண்டு பிடிச்சு, ரெண்டு பேரையும் இணைச்சோம். ஒரே நோக்கத்துல செயல்படுறவங்களை ஒருங்கிணைஞ்சு பலமா செயல்பட வச்சோம்.

உண்மையான சமூக அக்கறையோட செயல்படக்கூடிய எளிய மனிதர்கள் மேல எப்பவுமே ஊடக வெளிச்சம் படுறதே இல்லை. கமலஹாசன் கண்தானம் செஞ்சா அதை பெரிசா வெளிப்படுத்துற ஊடகங்கள், இதுவரைக்கும் 1000 கண்களுக்கு மேல தானமா வாங்கிக் கொடுத்திருக்கிற கோவை ஜெகதீஸ்வரனைப் பத்தி எழுதுறதில்லை. எதிர்பார்ப்பு இல்லாம வேலை செய்யிற இந்த மாதிரி மனிதர்களைப் பத்தி ஊடகங்கள் எழுதினா அதன் மூலம் இன்னும் நாலு பேரு அக்கறையோட வருவாங்க.

அதுக்கான வேலைகளையும் செய்யிறோம். ஒவ்வொரு வருடமும் முதல் ஞாயிற்றுக்கிழமை எல்லோரையும் ஒரே இடத்துல திரட்டுறோம். சிறந்த சேவகர்களுக்கு விருதுகள் கொடுத்து உற்சாகப்படுத்துறோம். நாலைஞ்சு பேரோட தொடங்கின எண்ணங்களின் சங்கமத்துல, இப்ப ஆயிரத்துக் கும் மேற்பட்ட அமைப்புகள் இணைஞ்சிருக்காங்க. இப்போ இந்த தகவல் தொகுப்பை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கிற வேலையில இறங்கியிருக்கேன். உதவிக்குத் தவிக்கிறவங்களுக்கு முன்னாடி நின்னு உதவுறோம்.

எனக்கு 2 பசங்க. ரெண்டு பேரும் சொந்தக்கால்ல நிக்கத் தொடங்கிட்டாங்க. வாழ்க்கையில பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமில்லை. ஓவியம் வரைவதிலும், உதவி செய்வதிலும் கிடைக்கிற ஆத்ம திருப்தி வேற எதிலுமே கிடைக்கலே. இருக்கிற காலம் வரைக்கும் அர்த்தமுள்ள வேலையை செஞ்சுட்டுப் போகலாம்னு பாக்குறேன்!’’ மனைவியைப் பார்த்தபடி சொல்லி புன்னகைக்கிறார் ஜே.பி. பதில் புன்னகையால் அதை ஆமோதிக்கிறார் நிர்மலா.

கமலஹாசன் கண்தானம் செஞ்சா அதை பெரிசா வெளிப்படுத்துற ஊடகங்கள், இதுவரைக்கும் 1000 கண்களுக்கு மேல  தானமா வாங்கிக் கொடுத்திருக்கிற கோவை ஜெகதீஸ்வரனைப்
பத்தி எழுதுறதில்லை.

அர்த்த சாஸ்திர அறிவுரைகள்

பொறுப்புகளிலிருந்து ஓடுபவனால் தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கு உணவளிக்க முடியாது!

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்