முரண்



ஐந்து வயது தீபக் தன் சித்தப்பா ரகுவைப் பார்த்துக் கத்தினான்... ‘‘ரகு! அப்பா உன்னைக் கூப்பிடுறார்!’’தன் நண்பர் களோடு பேசிக்கொண்டிருந்த ரகுவுக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது.

இதை கவனித்துக்கொண்டிருந்த அம்மா மல்லிகா ஓடோடி வந்தாள்.‘‘தீபக்! பெரியவங்களை அப்படி மரியாதையில்லாம பேசக் கூடாது. தப்பு! ‘சித்தப்பா’ன்னுதான் கூப்பிடணும். ஓகேவா?’’ - கனிவாக அவள் சொல்லிக் கொடுத்த பிறகு, ‘‘சித்தப்பா’’ என்றே ரகுவை அழைத்தான் தீபக்.

போன வாரம் வரை தீபக் தன் அம்மாவையே ‘மல்லிகா’ என்று தான் அழைத்து வந்தான். பாட்டி கூப்பிட்டு அட்வைஸ் செய்த பின்புதான் மாறினான். இனி தன்னை விட பெரியவர்கள் யாரையும் பெயர் சொல்லி ஒருமையில் அழைப்பதில்லை என இன்றோடு முடிவெடுத்துக்கொண்டான்.அன்று மாலை... அந்த நட்சத்திர ஓட்டலில் சாப்பிடப் போனார்கள் தீபக் குடும்பத்தினர்.

‘‘கேட்டலாக் கொண்டுவா... சீக்கிரம் எல்லாத்தையும் ரெடி பண்ணி எடுத்து வா...’’ என்றெல்லாம் மல்லிகா அதட்டி வேலை வாங்கிய அந்த சர்வருக்கு அறுபதைத் தாண்டி வயதிருக்கும்.
‘‘ஏம்மா நீ அந்தப் பெரியவருக்கு மரியாதை கொடுக்கல?’’ - துடுக்கென்று தீபக் கேட்ட கேள்விக்கு அங்கே யாரிடமும் பதில் இல்லை!      

ஸ்ரீரமா