மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீ அரவிந்த அன்னை

கடந்துபோன எந்த ஒரு விஷயத்துக்காகவும் நீ வருத்தமடைய வேண்டாம் என்பதற்காகவும், நம் அனைவருக்கும் முன்னே உள்ள ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருப்பதற்காகவும் இந்த மேற்கோளை உனக்கு அனுப்புகிறேன். பேரன்பே உலகத்தின் ஆதார ஊற்று. பேரன்பே உலகத்தின் இறுதி லட்சியம்.
- ஸ்ரீஅன்னை

சாமானியர்கள் நிறைந்த உலகம் சாதனையாளர்களை ஆரம்பத்தில் பைத்தியமாகவே பார்க்கும் என்பதை உருக்கமாகப் பதிவு செய்திருக்கும் அரவிந்தர், தன் லட்சியப் பயணத்தில், ‘என்னோடு கைகோர்த்து நடப்பாயா’ என மனைவி மிருணாளினியைக் கேட்டுக்கொள்ளும் கடிதத்தின் தொடர்ச்சி நம்மை நெகிழ வைக்கிறது. அரவிந்தரின் மன வேகத்தையும் தெய்வீகத் திட்டமிடலையும் யோக தாகத்தையும் தேசபக்தியையும் கண்முன்னே நிறுத்துகிறது. அந்தக் கடிதத்தின் தொடர்ச்சி...என்னுடன் சேர்ந்து என் லட்சியத்தில் பங்கேற்பாயா?

நாம் எளிய மக்களைப் போலவே உண்டு, உடுத்தி, அத்தியாவசியத் தேவைகளுக்குப் போக மீதியைக் கடவுளுக்குக் கொடுத்து விடுவோம். இதற்கு நீ சம்மதித்து, அந்தத் தியாகத்தைச் செய்ய முன்வந்தால் எனது நோக்கம் நிறைவேறும். எனது இரண்டாவது பைத்தியம் அண்மையில்தான் ஏற்பட்டது. கடவுளை நேருக்கு நேர் காணவேண்டும் என்பதே அது. எப்போதாவது கடவுள் பெயரைச் சொல்வது,

தான் பெரிய பக்தி மான் என்று காட்டிக்கொள்வது - இதுதான் இப்பொழுது மதமாகி விட்டது. இதில் எனக்கு நாட்டமில்லை.  கடவுள் இருப்பது உண்மையானால், அவரை நேருக்கு நேர் சந்திப்பதற்கு நிச்சயம் ஒரு வழி இருக்கும். இந்த வழி எவ்வளவு கடினமானாலும் அதில் செல்ல முடிவு செய்துவிட்டேன்.

அந்த வழி நமது உடலிலேயே, நமது மனத்திலேயே இருக்கிறது என்கிறது இந்து தர்மம். அதற்கான விதிமுறைகளையும் வகுத்துள்ளது. நான் அதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டேன். இந்து மதம் கூறுவது உண்மை என்பதை ஒரு மாதத்திற்குள்ளாகவே அறிந்துகொண்டேன். இப்பொழுது உன்னையும் அதே வழியில் அழைத்துச் செல்ல விரும்புகின்றேன். உன்னால் எனக்குச் சமமாக நடக்க முடியாது. ஏனெனில், அதற்கு வேண்டிய ஞானம் உன்னிடம் இல்லை. ஆனால், என்னைப் பின்பற்றி வரத் தடையேதும் இல்லை. இதற்கு நீ உடன்படுவதாயிருந்தால், அதைப் பற்றி விவரமாக எழுதுகின்றேன்.

எனது மூன்றாவது பைத்தியம்... மற்றவர்கள் இந்நாட்டைச் சில சமவெளிகளும் வயல்களும் காடுகளும் மலைகளும் கொண்ட உயிரற்ற ஜடப்பொருளாகக் கருதுகிறார்கள். ஆனால், நானோ இந்நாட்டைத் தாயாகக் காண்கிறேன்; தொழுகிறேன். தனது தாயின் மார்பு மீது ஒரு அரக்கி உட்கார்ந்து கொண்டு அவளுடைய ரத்தத்தை உறிஞ்சத் தொடங்கினால் ஒரு மகன் என்ன செய்வான்? நிம்மதியாக உட்கார்ந்து அறுசுவை உணவு உண்டு கொண்டிருப்பானா? மனைவி, மக்களுடன் கொஞ்சுவானா? இல்லை, தனது தாயைக் காப்பாற்ற விரைவானா?

வீழ்ந்து கிடக்கும் இந்த இனத்தைத் தூக்கிவிடுவதற்கான பலம் என்னிடம் இருக்கிறது. என்னிடம் உடல் பலமில்லை - நான் வாளோ, துப்பாக்கியோ கொண்டு போரிடப் போகவில்லை. ஆனால், ஞானசக்தி கொண்டு போரிடப் போகிறேன். சத்திரிய பலம் ஒன்று தான் பலமென்பதில்லை; ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட பிரம்ம தேஜஸ் இருக்கிறது. இந்த மகத்தான காரியத்தைச் சாதிக்கவே இறைவன் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளான். இந்த எண்ணம் எனது 14வது வயதிலேயே முளைவிடத் தொடங்கியது. 18 வயதானபோது அசைக்க முடியாதபடி உறுதிப்பட்டுவிட்டது.

எனது அத்தையின் பேச்சைக் கேட்டுவிட்டு, யாரோ சில பொல்லாத மனிதர்கள் உன் சாதுக் கணவனை இந்த தப்பான பாதையில் இழுத்துவிட்டதாக நினைத்துவிட்டாய். ஆனால், உனது சாதுக் கணவனே, அவர்களையும் இன்னும் நூற்றுக்கணக்கான மற்றவர்களையும் இந்தப் பாதைக்குக் கொண்டு வந்திருக்கிறான். இன்னும் ஆயிரக்கணக்கான பேரைக் கொண்டுவரப் போகிறான். இந்த வேலை எனது ஆயுட்காலத்தில் நடந்து விடும் என்று சொல்லவில்லை. ஆனால், அது நடக்கும்.

இப்பொழுது, இது விஷயமாய் நீ என்ன செய்யப்போகிறாய்?

மனைவியே கணவனின் சக்தி. அவனுடைய பலம். நீ உஷாவின் நல்ல சிஷ்யையாக இருந்து வெள்ளைத் துரைகளுக்குத் துதி பாடிக்கொண்டிருக்கப் போகிறாயா? உனது அலட்சியத்தினால் உனது கணவனின் பலத்தைக் குறைக்கப் போகிறாயா? அல்லது உனது அன்பாலும் ஊக்கத்தாலும் அவனுடைய பலத்தை அதிகப்படுத்தப் போகிறாயா?

‘என்னைப் போன்ற சாதாரணப் பெண்ணால் இப்பெரிய காரியங்களில் எல்லாம் என்ன செய்ய முடியும்? எனக்கு மனோபலமோ புத்திக்கூர்மையோ கிடையாது; இவ்விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கவே பயமாயிருக்கிறது’ என நீ சொல்லக்கூடும்.

ஆனால் இதைத் தீர்ப்பதற்கு எளிமையான வழி ஒன்று இருக்கிறது. கடவுளைச் சரணடைந்து விடு. கடவுளை அறிவதற்கான பாதையில் இறங்கிவிட்டால் விரைவிலேயே அவன் இக்
குறைகளை எல்லாம் நீக்கிவிடுவான். நீ என் மீது நம்பிக்கை வைத்து, கண்டவர்கள் பேச்சையெல்லாம் கேட்காமல் என் பேச்சை மட்டுமே கேட்பாயானால், எனது பலத்தையே நான் உனக்குத் தருவேன்; அதனால் என்னுடைய பலம் குறைந்து போகாது. கூடவே செய்யும். ஏனென்றால் மனைவியே கணவனின் சக்தி, பலம்.

நேர்த்தியான ஆடைகளை அணிய வேண்டும், சுவையாக சாப்பிட வேண்டும், உலக இன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் நிலையிலேயே இருந்துவிடப் போகிறாயா?

அது போன்ற மனப்பான்மையை முன்னேற்றம் எனச் சொல்ல முடியுமா? தற்சமயம் இந்நாட்டுப் பெண்களின் வாழ்க்கை இந்தக் குறுகிய இகழ்ச்சிக்குரிய போக்கிலேயே போய்க்கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் விட்டு விட்டு என்னைப் பின்பற்றி வா. கடவுளின் வேலையைச் செய்வோம்.

உன்னுடைய சுபாவத்தில் ஒரு குறை இருக்கிறது. நீ மிகவும் அப்பாவியாய் இருக்கிறாய். யார் எதைச் சொன்னாலும் அதை நம்புகிறாய். அதனால் உன்னுடைய மனம் அமைதியற்றிருக்கிறது; உன்னால் உனது வேலையில் ஒருமுனைப்பட முடியவில்லை. இதை சரிசெய்ய வேண்டும். ஒருவர் பேச்சை மட்டுமே நீ கேட்க வேண்டும். ஒரே குறிக்கோளோடு, உறுதி கொண்ட மனத்தோடு அதை நிறைவேற்ற வேண்டும்.

உன்னிடம் இன்னொரு குறையும் இருக்கிறது. அது உன் சுபாவம் அல்ல. அது இந்தக் காலத்தின் குறை. இன்று வங்காளிகள் மதம், பரோபகாரம், உயர்வான ஆர்வங்கள் மேலான முயற்சிகள், நாட்டின் விடுதலை -இவை போன்ற உயர்ந்த பெருமைக்குரிய விஷயங்களையெல்லாம் கேலிக்குரியவையாக்கி விட்டனர். உன்னுடைய பிரம்ம சமாஜப் பள்ளிக்கூடத்திலிருந்து இந்தக் குறைபாடு உன்னிடம் சிறிது இடம் பெற்றுள்ளது. உறுதியான மனத்துடன் இந்த மனப்பாங்கினை உதறித் தள்ள வேண்டும். நீயாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் உன்னுடைய உண்மையான சுபாவம் மலர்ச்சியடையும்.

நான் கூறிய விஷயங்களைப் பற்றி சிந்தித்துப் பார். தினமும் அரை மணி நேரம் இறைவனை தியானித்து, உனது ஆர்வத்தை ஒரு பிரார்த்தனையாக அவனிடம் முறையிடு. அப்படிச் செய்து வந்தால் படிப்படியாக மனம் பக்குவமடையும். நீ செய்ய வேண்டிய பிரார்த்தனை இதுதான்.

‘என் கணவரின் வாழ்க்கையில், அவருடைய லட்சியப் பாதையில், கடவுளை அடைய வேண்டுமென்ற அவருடைய முயற்சியில் நான் ஒரு தடையாக இல்லாதிருக்க அருள் செய். நான் என்றும் அவருக்குத் துணையாகவும் அவருடைய கருவியாகவும் இருப்பேனாக.’
நீ இதைச் செய்வாயா?

உனது...

அன்னையின் அற்புதம்! வறுமையை விரட்டிய அன்னை!

கலைமாமணி விக்கிரமன் மூத்த இலக்கியவாதி. 88 வயதைத் தொட்ட இவர் சென்னை - மேற்கு மாம்பலத்தில் வசிக்கிறார். ‘‘அன்னை பற்றிய தொடர் குங்குமத்துல வருதுன்னு விளம்பரம் பார்த்த வுடனே ரொம்ப சந்தோஷப்பட்டேன். எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்துவிட்டது!’’ என்கிறவரைச் சுற்றிலும் புத்தகங்கள். அமைதியாய் நம் உரையாடலுக்கு வழிவிடுகின்றன. தான் அன்னையின் பக்தரான தருணத்தை அவர் பகிர்ந்தார்.

‘‘தாங்க முடியாத அளவுக்கு கடன். எனது பத்திரிகையை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை. ஒரு நிதி நிறுவனத்திடம் பத்திரிகையை விற்றுவிட்டு அதிலேயே பணியைத் தொடர்ந்தேன்.

அப்போது நந்தனத்தில் வசிக்கும் எழுத்தாளர் வாசவன் என்னிடம் வந்து, ‘பாண்டிச்சேரி அன்னையைப் பற்றி எழுதலாமா?’ என்று கேட்டார். சரி, புதிய விஷயமாய் இருக்கிறதே என்று சம்மதித்து, நானும் அவரும் பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமம் சென்றோம். சமாதியை வணங்கினோம். அங்கே அறிந்துகொண்ட விஷயங்கள் பத்திரிகையில் வெளிவர, அன்னை நம் மக்கள் மனதில் அமர்ந்தார். நானும் அன்னையின் அற்புதங்களை உணர்ந்து அன்னை யின் பக்தனானேன்.

வறுமையில் இருந்த நான் அன்னையிடம் என் கஷ்டத்தை நீக்கி அருளவேண்டும் என நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்துகொண்டேன். அதன் பிறகு வாழ்வில் நல்ல மாற்றம் உண்டானது. எனது புதிய முயற்சிகள் எல்லாம் வெற்றி பெற்று கடன் நீங்கியது. இது அன்னை யின் கருணைதான். என் மகள் அப்போது பீகாரில் வசித்தாள்.

 ஒரு ஸ்கூட்டர் வாங்கி ரயிலில் அனுப்பினோம். அது எப்படியோ இடம் மாறிவிட்டது. ஒரு மாதம் ஆயிற்று. ஸ்கூட்டர் கிடைத்தபாடில்லை. ரயில்வே போலீஸில் புகார் செய்தும், அங்கும் இங்கும் அலைந்தும் அலுத்துவிட்டாள் என் மகள். என்னிடம், ‘என்னப்பா செய்யறது?’ எனக் கேட்டாள். ‘மதர்கிட்ட சொல்லும்மா’ என்றேன். உடனே அவள் அன்னையிடம் காணிக்கை செலுத்தி பிரார்த்தனை செய்துகொண்டாள். அன்றைய தினமே, தவறிய ஸ்கூட்டர் கிடைத்தது.

அன்னையை நோக்கி நம்பிக்கையோடு நாம் ஒரு அடி எடுத்து வைத்தால், அன்னை நம்மை நோக்கி ஆயிரம் அடி எடுத்து வைத்து ஓடோடி வருவார். எனக்கு வயதாகிவிட்டதே... இனி ரொம்ப தூரத்தில் இருக்கிற அரவிந்தர் ஆசிரமத்துக்கு எப்படிப் போவது என கவலைப்பட்ட நேரத்தில்தான் எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே தம்பையா சாலையில் அன்னை ஆசிரமம் ஆரம்பித்தார்கள். அடிக்கடி அங்கு போய் சொற்பொழிவு செய்வேன். இப்போது முதுமை. அங்கேயும் போக முடியவில்லை. ஆனா, பாருங்க... குங்குமம் மூலம் அன்னை வாராவாரம் என்னைத் தேடி வந்துடறாங்க’’ எனச் சிரிக்கிறார் அவர்.

வரம் தரும் மலர்!

நல்ல பெயர் வாங்கித்தரும் நந்தியாவட்டை!

நல்ல நட்பு, நல்ல சூழல், நல்ல பெயர், நல்ல உறவுகள் எல்லாம் அமைய அடிப்படையாக தூய்மையான மனம் வேண்டும். அரவிந்த அன்னைக்கு நந்தியாவட்டை பூவை சமர்ப்பித்து வேண்டிக்கொள்ள, நம் குறைகள் நீங்கி, தூய்மையான மனம் மலரும். சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்!

(பூ மலரும்...)

எஸ்.ஆர்.செந்தில்குமார்

ஓவியம்: மணியம் செல்வன்