இட்லியில் ஆயிரம் வகைகள்!



விதவிதமா வியப்பு மெனு

‘இட்லியா... எனக்கு வேணாம்’னு ஓடுறாங்களா குழந்தைங்க? நம்ம சாக்லெட் இட்லி, ஆப்பிள் இட்லியைக் கொடுத்துப் பாருங்க... அப்புறம் அவங்க இட்லிக்கு ஃபேன் ஆகிடுவாங்க’’ - இதமாகப் பேசுகிறார் இட்லி நிபுணர் மு.இனியவன். குட்டி இட்லி முதல் குஷ்பு இட்லி வரை நாம் அறிந்த வற்றுக்கு மேலேயும் எக்கச்சக்க இட்லிகள் இருக்கின்றன இவரின் கேட்லாக்கில்.

இளநீர் இட்லி, முட்டைக்கோஸ் இட்லி, மூலிகை இட்லி, நவதானிய இட்லி, சிறுதானிய இட்லி என ஆயிரம் இட்லி வகைகளோடு சமீபத்தில் ஒரு கண்காட்சியே நடத்தி ஆச்சரியப்
படுத்தியிருக்கிறார் இந்த மனிதர்!

‘‘20 வருஷமா இட்லி பிசினஸ்ல இருக்கேன். உலகத்தில் எவ்வளவு உணவுகள் இருந்தாலும் ஈஸியா ஜீரணமாகிற நம்ம இட்லிக்கு முன்னால வேறெதுவும் நிக்க முடியுமா? அதனாலதான், இட்லியை எல்லாரும் விரும்புற உணவா மாத்தணும்னு தோணுச்சு. இட்லி பத்தி மக்கள்கிட்ட ஒரு விழிப்புணர்வு கொண்டு வரணும்னு 124 கிலோவுல ஒரே இட்லி செய்து கின்னஸ் முயற்சி செஞ்சேன். இப்போ, அதுக்கும் மேல ஒரு விழிப்புணர்வு முயற்சியாதான் இந்தக் கண்காட்சி நடத்தியிருக்கேன்.

இட்லியை ஒரே மாதிரி அவிக்கிறத விட அதுல ஏதாவது வித்தியாசம் காட்டினா எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவாங்க. குறிப்பா, குழந்தைகளுக்காகவே சாக்லெட் இட்லி, பைனாப்பிள் இட்லின்னு இனிப்புகளை சேர்த்து செஞ்சேன். அது மட்டுமில்லாம குழந்தைகளுக்குப் பிடிச்ச மாதிரி மிக்கி மவுஸ், உலகக் கோப்பை, ஸ்பைடர்மேன், டெடி பியர், சேவல், மீன், வண்ணத்துப்பூச்சி, விநாயகர்னு பல வடிவங்கள்ல மோல்டிங்கை உருவாக்கி அதில் விதவிதமா இட்லிகளை உருவாக்கினேன்.

இது மட்டுமில்லாம பீட்ரூட், கேரட், சிறுதானியங்கள்னு ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் இட்லியில கலந்து அவிச்சேன். இந்த மாதிரி வீட்டுகள்லயும் செஞ்சு கொடுத்தா நிச்சயம் குழந்தைங்க கேட்டு வாங்கிச் சாப்பிடுவாங்க’’ என்கிற இனியவனோடு 35 உதவியாளர்கள் சேர்ந்து ஒரு மாதமாக வேலை பார்த்திருக்கிறார்கள் இந்த ஆயிரம் இட்லிக்காக!

‘‘முதல்ல, ஆயிரம் வகை இட்லினு சொன்னதும் எல்லாருக்கும் மலைப்பா இருந்துச்சு. ஆனா, நேர்ல பார்த்ததும் அசந்துட்டாங்க. இட்லியில இவ்வளவு வகையானு ஆச்சரியப்பட்டாங்க. எந்த வயசுலயும் சாப்பிடலாம்... எந்த நோய் இருந்தாலும் சாப்பிடலாம்னா அது இட்லி தான். அதனாலயே அதை ஜுரம் வந்தா சாப்பிடுற அயிட்டம்னு எல்லாரும் நினைச்சுக்கறாங்க. ஜாலியா செம வெரைட்டியா இப்படி இட்லிகள் செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க. ஆரோக்கியமும் டேஸ்ட்டும் பகையாளிங்க இல்லைனு தெரிஞ்சுக்குவீங்க!’’

இளநீர் இட்லி

வழக்கம் போல் இட்லி மாவு அரைக்க புழுங்கல் அரிசியும், உளுந்தும் வெந்தயமும் தனித்
தனியாக தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு, அரிசியை கிரைண்டரில் அரைக்கும்போது தண்ணீருக்குப் பதிலாக தேவையான அளவு இளநீர் சேர்க்கவும். உளுந்தை அரைக்கும்போதும் இதேபோல் நீருக்குப் பதில் இளநீர். மாவைக் கரைத்து புளிக்க வைத்து வார்த்தால் ‘இளநீர் இட்லி’ ரெடி! உண்பதற்கு இனிப்பாக இருக்கும் இந்த இட்லி, வெயிலின் சூட்டைத் தணிக்கும் அருமருந்து.

சாக்லெட் இட்லி

வழக்கம் போல் இட்லிக்கு மாவு அரைக்கவும். பிறகு, மாவுடன் சாக்லெட் சாஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சாக்லெட் சாஸ் கலருக்கு மாவு மாறியவுடன் தட்டில் ஊற்றி, இட்லி குக்கரில் வேக வைக்க வேண்டியதுதான். இந்த சாக்லெட் இட்லி, கேக் போன்று மிருதுவாக இருக்கும்.

முட்டைக்கோஸ் இட்லி

முட்டைக்கோஸில் சிறிது வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக எண்ணெயில் பொரியல் போல வதக்கிக் கொள்ளவும். இட்லி தட்டில் வழக்கம் போல மாவு ஊற்றி, அதில் ஒவ்வொரு இட்லியிலும் இந்த வதக்கி வைத்த முட்டைக்கோஸையும் சேர்த்து இட்லியாக வேக வைக்கவும். இந்த முட்டைக்கோஸ் இட்லி, பீட்ஸா சாப்பிடுகிற ஃபீலிங் கொடுக்கும்!

பேரீச்சை இட்லி

வழக்கமாக அரைப்பது போல இட்லிக்கு மாவு அரைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு குழியிலும் இட்லி மாவு ஊற்றி, பேரீச்சை பழத்துண்டுகளை அதில் ஆங்காங்கே தூவி, இட்லி வேக வைத்து எடுக்கவும். பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றைத் தூவியும் இட்லி சுடலாம்.

பீட்ரூட் இட்லி

வழக்கமாக அரைப்பது போல இட்லிக்கு மாவு அரைத்துக் கொள்ளவும். பிறகு, தேவையான அளவு பீட்ரூட்டைப் பொடியாக வெட்டி மிக்சியில் போட்டு அரைத்து இட்லி மாவுடன் கலக்கவும். செக்கச் செவேலென வரும் இந்த மாவை இட்லியாக வார்த்து வேக வைத்து எடுக்கவும். வித்தியாசமான மோல்டுகளில் வேக வைத்து எடுத்தால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்