நான் குரு...ரஜினி சிஷ்யர்!



எங்கேயோ பார்த்த முகம்

கிங்காங் ஹேப்பி

‘‘யார் நீங்க... உங்களுக்கு என்ன வேணும்?’’ - கிங்காங் வீட்டு கேட்டில் தலையை நீட்டி எட்டிப் பார்த்து கேட்டது ஒரு சுட்டி.‘‘என் பையன்தான் சார்... பேரு தனுஷ்’’ - அறிமுகப்படுத்தி கேட் திறந்த கிங்காங் கையில் ஒரு எக்ஸ்ரே. ‘‘முந்தா நாளு திருவாரூர்ல கச்சேரி சார். ஸ்டேஜ்ல டான்ஸ் ஆடுறப்ப கீழே விழுந்துட்டேன். கால் ஃப்ராக்சர் ஆகிடுச்சோன்னு பயந்துட்டேன். ஒண்ணுமில்ல... தசைப்பிடிப்புதான்!’’ என்கிறார் இடது தொடையைப் பிடித்தபடி.

‘‘வீட்ல அப்பா-அம்மா வச்ச பேரு சங்கர். வந்தவாசி பக்கம் வரதராஜபுரம்னு ஒரு குக்கிராமம். அப்பா விவசாயி. ஒரு அக்கா, 3 தங்கச்சிங்கன்னு கொஞ்சம் பெரிய குடும்பம். 2 கி.மீ நடந்து பக்கத்து ஊர்ல அஞ்சாங் கிளாஸ் வரை படிச்சேன். அதுக்கப்புறம் படிப்பு ஏறலைன்னு சொல்லிட முடியாது. என் ஒசரத்தை வச்சி பசங்க பண்ற கேலி, கிண்டல் தாங்கல. பல நாள் அழுதிருக்கேன். வாத்தியார்கிட்ட சொல்லுவேன். அவர் என்ன என் கூடவேவா வர முடியும்? வரதன்னு ஒரு வாத்தியார், ‘உன் உசரத்துக்கு நடிக்க முயற்சி பண்ணு...

 பெரிய ஆளா வருவே’ன்னு தீர்க்கதரிசியா சொன்னார். எங்க தூரத்து சொந்தக்காரர் சுப்பிரமணி வாத்தியார்னு ஒருத்தர் ‘சங்கரதாஸ் நாடகக் கம்பெனி’ நடத்திட்டிருந்தார். அவர்கிட்ட போய்ச் சேர்ந்தேன். 3 வருஷம் பபூனா வாழ்க்கை ஓடிப் போச்சு. விடிய விடிய முழிச்சிருந்து நடிக்கணும்; சிரிக்கணும். என்னால முடியல. ‘இனிமே நாடகம் வேணாம். சினிமா ட்ரை பண்ணலாம்’னு சென்னை வந்தேன்.

நிறைய கம்பெனி ஏறி இறங்கினேன். பி.ஆர்.ஓ விஜயமுரளி தான் கலைப்புலி ஜி.சேகரன் சார்கிட்ட அனுப்பி வச்சார். ‘ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்’ படத்துல அவர் சான்ஸ் தந்தார். எலெக்ஷன் பத்தின ஸாங் அது. ‘என்னா சின்னம்.. பானை சின்னம்’னு கோரஸ் கத்துவாங்க. அப்போ பானையில இருந்து என்ட்ரி ஆவேன்.

முட்டையில இருந்து கோழி வர்ற மாதிரி... செம என்ட்ரி. அப்போ பாக்ஸிங்ல தாராசிங், கிங்காங்னு ரெண்டு பேர் ஃபேமஸ். அதுல கிங்காங் பிரமாண்டமா இருப்பார். ‘உன் பெயர்லேயாவது பிரமாண்டம் இருக்கட்டுமே’ன்னு ஆசீர்வதிச்சு, என்னை கிங்காங் ஆக்கினார் கலைப்புலி ஜி.சேகரன் சார்.

அப்புறம் சிரஞ்சீவி, ராஜேந்திரபிரசாத்னு தெலுங்கு ஹீரோக்களோட படங்கள் கிடைச்சது. சிரஞ்சீவியோட ‘யமடுக்கு மொகடு’ ஷூட்டிங் ஏவி.எம்ல நடக்கும்போதுதான் ரஜினி சாரோட ‘அதிசயப்பிறவி’ பட ஷூட்டிங் போச்சு. எனக்கு அதுல நடிக்க சான்ஸ் கிடைச்சது. ரஜினி சாரை ‘சிஷ்யா’னு கூப்பிட்டுக் கலாய்ப்பேன். ஆக்சுவலா அவர் குரு... நான் சிஷ்யன்னுதான் எஸ்.பி.முத்துராமன் சார் சொன்னார். ஆனா ரஜினி சார்தான், ‘கிங்காங் குருவா இருக்கட்டும். நான் சிஷ்யனா இருக்கேன்.

அதான் காமெடியா இருக்கும்’னார். ‘சுறா’வில் இன்ஸ்பெக்டரா... ‘போக்கிரி’யில தண்ணி லாரி டிரைவரா வருவேன். ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ல வடிவேலு மீசையைப் பார்த்து இது வண்டுன்னு சொல்லி அவரைச் சாத்துவேன். ‘தெனாலிராமன்’ல கலைத்துறை அமைச்சரா வருவேன். இதெல்லாம் எனக்குப் பேர் வாங்கித் தந்த கேரக்டர்கள்.

5 மொழிகள்ல 219 படங்கள்... கிட்டத்தட்ட 6 ஆயிரம் ஸ்டேஜ் ஷோ பண்ணிட்டேன். அதனால 2009ம் வருஷம் ‘உலக மாற்றுத்திறனாளிகள் தினம்’ அன்னிக்கு கலைத்துறையில சாதனையாளர் விருது ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கையால கிடைச்சது. கமல் சாரோட ‘மகராசன்’ல கறிக்கடையில வேலை பாக்குறவங்களா நானும் வடிவேலு சாரும் நடிச்சிருப்போம்.

அன்னிக்கு அவரோட சேர்ந்த காம்பினேஷன், இப்போ ‘எலி’ வரை தொடருது. 19 படங்கள் அவரோட பண்ணியிருக்கேன். ரஜினி சார், ஷாருக் கான், சிவராஜ்குமார், சிரஞ்சீவி சார்னு 4 சூப்பர் ஸ்டார்களோட நடிச்சிருக்கேன். கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், விவேக், சூரி சார் வரை எல்லாரோடவும் சேர்ந்து நடிச்சிட்டேன். சந்தானம் சாரோடதான் இன்னும் நடிக்கலை.

ஷாருக் கானோட ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ல ஒரு சின்ன கேரக்டர் பண்ணியிருப்பேன். என் நடிப்பு பிடிச்சுப் போய், ஷாருக் கான் ஸ்பாட்ல எனக்கு முத்தம் கொடுத்தார். மும்பையில நடந்த பட விழாவுல அவருக்கே அந்த முத்தத்தைத் திருப்பிக் கொடுத்தது மறக்க முடியாத அனுபவம். ரொம்ப நாளா கல்யாணம் பண்ணிக்காம இருந்தேன். எங்க அப்பா அம்மாதான், ‘கடைசி காலத்துல உன்னைப் பார்த்துக்க ஒருத்தர் வேணும்’னு சொல்லி, பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாங்க.

அத்தை பொண்ணு கலா என்னை கட்டிக்கறேன்னு சொன்னாங்க. எங்களுக்கு 3 குழந்தைங்க. பெரியவ கீர்த்தனா 8வது படிக்கிறா. சின்னவ சக்திப்ரியா 3ம் கிளாஸ். மகன் தனுஷ். மூன்றரை வயசு. இதுதான் என் ஃபேமிலி. ஷூட்டிங் இல்லாதப்பவும் வருமானம் வேணும்னு ‘பெஸ்ட் டான்ஸ் கலைக்குழு’வும் ‘கீர்த்தனா ரிதம்ஸ் இன்னிசை கச்சேரி’னு ஆர்க்கெஸ்ட்ராவும் நடத்திட்டு வர்றேன். இதுல 30 பேரோட பங்களிப்பு இருக்கு.

கரகம், மேஜிக், பல குரல்னு வெரைட்டி ஷோ பண்ணுவோம். இப்போ கை நிறைய படங்கள் இருக்கு. பொறுப்பான அண்ணனா என் தங்கச்சிங்க எல்லாருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டேன். வாழ்க்கை சந்தோஷமா போகுது. ஃபிளைட் பறக்குதுன்னு வச்சிக்கங்க. அது ரொம்பவும் மேல போயிட்டாலும் சிக்னல் கட் ஆகிடும். ரொம்ப கீழ இறங்கிட்டா தரைக்கு வந்துடும். மிடில்ல பறக்கும்போதுதான் அது டிராவல் ஆகுதுனு அர்த்தம். எனக்கு இந்த மிடில் டிராவலே சந்தோஷம்!’’ - குழந்தைகளையும் வணக்கம் சொல்ல வைத்து வழியனுப்புகிறார் கிங்காங்!

- மை.பாரதிராஜா
படங்கள்: ஆர்.சந்திரசேகர்