வேகம்



ரிஷி பைக் ஓட்டும்போது சாலையோரம் நிற்பவர் வயிற்றில் கூட புளி கரையும்.‘‘டேய், கொஞ்சம் மெதுவா போடா. நம்ம ரோட்டுக்கு நீ ஓட்டுற வேகம் ரொம்ப ஜாஸ்தி. சேஃப்டி முக்கியம்டா மாப்ள!’’ - நண்பன் லோகேஷ் இப்படிச் சொன்னது ரிஷிக்குப் புதிதாக இருந்தது.

பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு நண்பன் ராம்ஜிக்கு இது கனவா நனவா என்றே புரியவில்லை. காரணம், நேற்றுவரை ரிஷிக்கு பைக் ஓட்டுவதில் அட்வைஸ் செய்தவன் ராம்ஜிதான். இதே லோகேஷ் அப்போதெல்லாம் ராம்ஜியைக் கலாய்ப்பான்.

‘‘டேய், ஒவ்வொரு வண்டிக்கும் ஒவ்வொரு ஸ்பீடு இருக்குடா. அதை அந்த ஸ்பீடுல ஓட்டறதுதான் சரி. இந்த 180 சி.சி. பைக்கை என்ன மொபெட் வேகத்துலயா ஓட்டச் சொல்றே! பாக்கறவங்க கிண்டல் பண்ண மாட்டாங்களா?’’ என்பான் நக்கலாக.அப்படிப்பட்டவன் திடீரென்று ஏன் ‘சேஃப்டி முக்கியம்’ என்கிறான். ரிஷி ஒன்றும் சொல்லாமல் குழப்பத்துடனே கிளம்பிப் போக, அவன் போன பிறகு லோகேஷை மடக்கினான் ராம்ஜி.

‘‘என்னடா ஆச்சு உனக்கு. திடீர்னு வண்டியை மெதுவா ஓட்டச் சொல்றே..?’’‘‘ரிஷி அஞ்சு வட்டிக்கு ஒரு லட்ச ரூபாயை எந்த ஆவணமும் இல்லாம நேத்துதான்டா என்கிட்ட கடன் வாங்கினான்..!’’ - நிதானமாகச் சொன்னான் லோ கேஷ்!        

சுபாகர்