அழியாத கோலங்கள்



இயக்குனர் பாக்யராஜ் அவர்களுக்கு நினைவு இருக்கிறதோ என்னவோ... நான் அவரை தூரப் பார்வையிலேயே பார்த்து வியந்தவன். படித்த, இறுமாப்பு நிறைந்த மனிதர்கள் என்று ஒரு கூட்டம் அன்று இருந்தது என்றால்...

அப்படிப் படிக்காமலேயே, எங்கோ ஒளிந்திருக்கும்... நம்மில் சிலர் அறியாததும் புரிந்துகொள்ளாததுமான திறமையைக் காட்டி வியக்க வைக்கும் சிலரும் இருந்தார்கள். இவர்கள் அன்றும் இருந்தார்கள்; இன்றும் இருக்கிறார்கள்; பின்னாலும் தோன்றுவார்கள் என்பது என் கணிப்பு. பாக்யராஜ் அவர்கள் திரைக் காட்சி அமைப்பதில் ஒரு உலகத் தரத்தை தனக்குள் படைத்துக்கொண்டவர். இங்கே யாரிடமும் கூறாமல், சத்த மில்லாமல் பல பம்பாய் பிரபலங்களின் இந்திப் படங்களை இயக்கிவிட்டு வந்தவர்.

This was Sridevi's second film with the mighty Bachchan. However, their romantic track did not go too well with the script, as the script was too serious to cater to romance. The highlights of the movie have been Amitabh's both characters’ confrontation scenes. ‘Aakhri Raasta’ is still considered as Bachchan's finest works to date.

 ‘விக்கிபீடியா’ என்ற உலக கணினிக் கலைக்களஞ்சியமே சொல்கிறது... உலகப் புகழ்பெற்ற அமிதாப் பச்சனின் சிறந்த படம் பாக்யராஜ் இயக்கிய ‘ஆக்ரி ராஸ்தா’ என்று! ஒரு சிறிய முயற்சியில் இறங்கியிருந்தால், இவர் ஹாலிவுட்டின் சிறந்த இயக்குனராகி இருக்கலாம். இது போதும் என்று விட்டுவிட்டாரோ?

அல்லது, ஆங்கிலம் தடையாகிவிட்டதோ? அடிக்கடி இவர் நேர்காணல்களில் சொல்லுவார் ‘‘டப்பு டுப்புன்னு இங்கிலீஷ்ல பேசுவாங்க... நமக்கு எதுக்குங்க வம்பு?’’ என்று. நான் மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்... ‘உன்னுடைய படைப்பு சிந்தனையில் ஒரு பாதியைக் கொடுக்க முடிந்தால் நான் படித்த 70 வருட ஆங்கிலத்தையும் மொத்தமாகத் தந்து விடுவேனே?’ என்று!

தமிழ் சினிமா சிந்தனையை ஒரு கலக்கு கலக்கிய ‘பதினாறு வயதினிலே’ படத்தில் பாரதிராஜாவின் உதவியாளராகச் செயல்பட்டவர். பின்னாளில், ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்திலும் பணியாற்றினார். அந்தச் சமயத்தில் நான் ஒரு சினிமாவுக்கு சில வக்கீல்களுடன் போனேன். அந்தத் தியேட்டரின் கழிப்பறையில், ஹோட்டல் சர்வர் வேஷத்தில் தலைப்பாகையுடன் இருந்த பாக்யராஜை கமல் கொலை செய்வது போல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

எங்கள் வீட்டில் குடியிருந்த கர்னல் சலம் என்பவருடைய பேரப் பிள்ளை ஒரு கெட்டிக்கார இளைஞன்... அவரும் கமலின் நண்பர்தான்... பெயர் ‘வைத்தா’ என்று அழைப்போம். எங்களோடு வந்திருந்த அவர், பாக்யராஜிடம் ‘‘சினிமா ஒரு நிரந்தரமான தொழில் இல்லை’’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். அது நடந்தது நாங்கள் தியேட்டருக்கு வெளியே எங்கள் வாகனத்துக்காகக் காத்திருந்தபொழுது! அன்று பாக்யராஜ் சொன்ன பதிலை நான் இன்றும் மறக்கவில்லை.

அந்த நாட்களில் சினிமா போஸ்டர்கள், மின்சாரக் கம்பங்களில் பொருத்தப்பட்ட பலகைகளில் ஒன்றில் கமல் அடுத்ததில் ரஜினி என்று மாற்றி மாற்றி ஒட்டப்பட்டிருக்கும். பாக்யராஜ் அதைக் காண்பித்து, ‘‘ஒரு நாள் என் படமும் அதில் வரச்செய்வேன். அதுதான் என் நம்பிக்கையும் உழைப்பும்!’’ என்று சொல்லிவிட்டு நடந்து போய் விட்டார். நானும் ‘யாரோ இரண்டு இளைஞர்கள் என்னவோ பேசிக் கொள்கிறார்கள். அதில் அந்த உதவி இயக்குநர் பையன்தான் என்னவொரு எதிர்பார்ப்போடு வாழ்கிறார்’ என்று நினைத்துக்கொண்டு எனக்கு வந்த காரில் ஏறிப் போனேன்.

அந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் இன்று ஒரு பெரிய பத்திரிகையின் ஆசிரியர். மற்றொருவர்தான் தமிழக மக்களின் கை நாடியைப் பிடித்துப் பார்த்து அந்த அடிப்படையில் படம் தயாரித்து நம்மை மயக்கிய இயக்குனர், வசனகர்த்தா, கதாநாய கன், தயாரிப்பாளர் கே.பாக்யராஜ். அவருக்கு நினைவிருக்காது...

‘உதிரிப்பூக்கள்’ தயாரிப்பாளர் என்னிடம் வந்து, அந்தப் படத்தின் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த அஸ்வினியின் கணவரான இயக்குனரிடம் பேசச் சொன்னார். பாக்யராஜ் எடுக்க இருந்த ‘ஒரு கை ஓசை’ படத்தில் அஸ்வினி ஹீரோயினாக நடிக்க அனுமதி கேட்கச் சொன்னார். எங்கோ ஒரு மூலையில் என் மனதில் இயக்குனர் பாக்யராஜுக்கு உதவியாளனாகச் செயல்பட்டிருக்கிறேன் என்று ஒரு பெருமை.

ஏனோ எனக்கு இயக்குனர் பாக்யராஜ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததே இல்லை. ‘உதிரிப்பூக்கள்’ படத்துக்குப் பின் நான் நடித்த பாரதிராஜா, சங்கராபரணம் கே.விஸ்வநாத் போன்ற ஓரிரு பிரபல இயக்குனர்கள் படங்களும், ஹாஸன் பிரதர்ஸ் தயாரிப்பான சொந்தப் படமும் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை.

அதன்பின் பாக்யராஜை ஒரு பூஜையில் சந்தித்தவன், நான் நடித்த தோல்விப் படங்களை வரிசைப்படுத்தி, ‘‘உங்கள் படத்தில் என்னைப் போட்டுப் பாருங்கள்! தொடர்ச்சியாக வெற்றி கொடுத்த உங்களையே ஒரு ஆட்டு ஆட்டினாலும் ஆட்டலாம்’’ என்றேன். ஒருவேளை பயந்துவிட்டாரோ என்னவோ... இதுவரை என்னை அழைத்ததில்லை.

சமீபத்தில் நான் படங்களை ஒப்புக்கொள்ளும் தகுதியை உடல்நலமில்லாத காரணத்தால் இழந்த பிறகு, இவரோடு நடிக்கும் ஆசையில் ஒரு மணி நேர ஷூட்டிங்கில் சமீபத்தில் பங்கு கொண்டேன். இவருடைய மனைவி பூர்ணிமா அவர்கள் திருமணத்துக்கு முன் நடித்த கடைசி படத்தில்... கடைசி நாள் படப்பிடிப்பில் நடித்த ஞாபகம் இருக்கிறது. இன்றும் பூர்ணிமா என்னை அவர் தந்தையாகத்தான் பாவிக்கிறார்.

இவருடைய குரு பாரதிராஜா, கமலை நாயகனாக வைத்து எடுத்த ‘ஒரு கைதியின் டைரி’ படத்தில் என்னையும் வி.கே.ராமசாமி அவர்களையும் வைத்து சில காட்சிகள் எடுத்தார். பாதி படம் எடுத்த பிறகு அவரே ‘திரைக்கதை சரியில்லை’ என்று நினைத்து பாக்யராஜை அழைத்து திரைக்கதையை மாற்றிக் கொடுக்கச் சொன்னார்.

அந்தப் படம் பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது. காரணம், பாக்யராஜ் திரைக்கதை மட்டுமல்ல... நான் தோன்றிய காட்சிகளை படத்தை விட்டு நீக்கியது கூடத்தான்!சினிமா போஸ்டர்களில் ஒன்றில் கமல் அடுத்ததில் ரஜினி என்று மாற்றி மாற்றி ஒட்டப்பட்டிருக்கும். பாக்யராஜ் அதைக் காண்பித்து, ‘‘ஒரு நாள் என் படமும் அதில் வரச்செய்வேன்’’என்றார்.

அர்த்த சாஸ்திர அறிவுரைகள்

நம்ப முடியாததைச் சொல்ல வேண்டாம், அது உண்மையானாலும் கூட!

உயிரைவிட நம்பிக்கையை நன்றாகப் பாதுகாக்க வேண்டும்!

(நீளும்...)

சாருஹாசன்

ஓவியங்கள்: மனோகர்