கோப்பை யார் கையில்?



நெருங்கும் க்ளைமாக்ஸ்

உலகக் கோப்பை நாக் அவுட் சுற்று என்றாலே கால்கள் உதறலெடுத்து பதற்றத்தில் அப்படியே சரண்டராவதை வழக்கமாகக் கொண்டிருந்த தென் ஆப்ரிக்க அணி, இந்த முறை வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறது.

லீக் ஆட்டங்கள் முடிந்து பி பிரிவில் இந்தியா தொடர்ச்சியாக 6 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்ததுமே ரசிகர்கள் உற்சாகமாகிவிட்டார்கள். அந்தப் பக்கம் 4வது இடத்தைப் பிடித்த வங்கதேசத்துடன் கால் இறுதி மோதல் என்பதால் வீரர்களும் ரிலாக்ஸாகவே இருந்தார்கள். ‘அரை இறுதியில் ஆஸ்திரேலியாவா? இல்லை, பாகிஸ்தானா?’ என்பதுதான் சீரியஸ் டிஸ்கஷனாக இருந்தது.

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கும் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. முதல் குவார்ட்டரில் இலங்கை - தென் ஆப்ரிக்கா மோதிய ஆட்டம்தான் எல்லோரையும் உசுப்பேற்றியது. எவ்வளவு பலமான அணியாக இருந்தாலும், உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் ஒரு முறை கூட வெற்றி பெறாதது தென் ஆப்ரிக்காவுக்கு ‘சோக்கர்ஸ்’ பட்டத்தை கொடுத்து ஜோக்கர்களாகவே மாற்றி இருந்தது.

இந்த முறை அந்த சோக வரலாற்றை மாற்றி எழுதுவோம் என்று கேப்டன் டி வில்லியர்ஸ் அடித்துச் சொன்னாலும், அவர்கள் ரசிகர்களுக்கே நம்பிக்கை வர மறுத்தது. கால் இறுதியில் இலங்கையுடன் மோதுவது உறுதியானதால் உதறல் இன்னும் அதிகமானதே தவிர குறையவில்லை. போதாக்குறைக்கு சங்கக்கரா வேறு தொடர்ச்சியாக நான்கு சதம் விளாசி மிரட்டிக் கொண்டிருந்தார்.

அனுபவ வீரர்கள் சங்கக்கராவுக்கும் ஜெயவர்தனேவுக்கும் இதுதான் கடைசி உலகக் கோப்பை என்பதால், சக வீரர்களும் வெற்றியுடன் விடை கொடுக்க வேண்டும் என்ற வெறியோடு இருந்தார்கள். டாசில் வென்றதும், பெரிய ஸ்கோர் அடித்து தென் ஆப்ரிக்காவை சேசிங்கில் பயமுறுத்தி பணிய வைத்து விடலாம் என்று கணக்கு போட்டார் கேப்டன் மேத்யூஸ்.ஆனால், தாஹிர் - டுமினி சுழலில் மூழ்குவோம் என்று அவர் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்.

உலகக் கோப்பையில் முதல் ஹாட்ரிக் எடுத்த தென் ஆப்ரிக்க பவுலராக டுமினி முத்திரை பதிக்க, தாஹிர் 4 விக்கெட்டை விழுங்கி ஏப்பம் விட்டார். சூப்பர் ஃபார்மில் இருந்த சங்கக்கராவே எதுவும் செய்ய முடியாமல் அப்படியே திகைத்து நின்றார். உண்மையில் அன்று ‘சோக்’ ஆனது இலங்கை அணிதான். 50 ஓவரில் 134 ரன் என்ற இலக்கை எந்த உதறலும் இல்லாமல் ஸ்டெடியாகக் கடந்தது தென் ஆப்ரிக்கா.

அதுவரை பெரிதாக ஸ்கோர் செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த டி காக் அமர்க்களமாக விளையாடி 78 ரன் விளாசியதும் ஆச்சரியமே. டி வில்லியர்சின் அதிரடிக்குத் தேவையே ஏற்படவில்லை. இலங்கையின் டோட்டல் சரண்டர் அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்தியாவுக்கு சச்சின், டிராவிட் மாதிரி இலங்கை அணிக்காக கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த மகிளா, சங்கா ரன் மெஷின்கள் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது கிரிக்கெட்டுக்கு பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்களையும் தில்ஷனையும் மட்டுமே நம்பியிருந்ததுதான் அந்த அணியின் பலவீனம்.

வங்க தேசத்துடனான கால் இறுதியில் தவான், கோஹ்லி, ரகானே ஏமாற்றினாலும், ரோகித்-ரெய்னா ஜோடி சவாலான இலக்கை நிர்ணயிக்க உதவியது. உறுமீனுக்காக காத்திருந்த கொக்கு போல, நாக் அவுட் சுற்றில் சதம் விளாசி தனது வேல்யூவை நிரூபித்தார் ரோகித் (126 பந்தில் 137 ரன்). ஒருநாள் போட்டிகளில் அவரது 7வது சதம். ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் மோதல் ஓரளவு பரபரப்பை ஏற்படுத்தியது. ஏழு அடி ஒரு அங்குல இர்பான் காயத்தால் விலகிக் கொண்டது பாகிஸ்தான் வேகத்துக்கு தடை போட்டது.

நியூசிலாந்து அணியின் அசுர பலம்தான் கோப்பை வெல்லும் கனவுடன் உள்ள மற்ற அணிகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். சேசிங்கில் சில முறை சொதப்பி இருந்தாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் கடைசி வரை அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்து வெற்றியை வசப்படுத்துவதை ஒரு வழக்கமாகவே மாற்றிக் கொண்டிருக்கிறது மெக்கல்லம் அண்ட் கோ!லீக் சுற்றுடன் வெளியேறியதற்காக இங்கிலாந்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

கிரிக்கெட்டை மற்ற நாடுகளுக்கு அறிமுகம் செய்து, கற்றுக் கொடுத்து வளர்த்தவர்கள் என்றாலும், ஆஸ்திரேலியாவுடன் நடக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற போட்டிகளுக்கு கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அடுத்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை பத்தாகக் குறைப்பது என்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனையும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஓரளவு சிறப்பாகவே விளையாடிய அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் இந்த நடவடிக்கையைக் குறை கூறியுள்ளன. ‘இப்படி அலட்சியப்படுத்தினால் நாங்கள் எப்படி வளர முடியும்?’ என்ற அவர்களின் அங்கலாய்ப்பு நியாயமானதே.

ஜிம்பாப்வே அணியின் பிரெண்டன் டெய்லர், கவுன்ட்டி கிளப் போட்டிகளில் விளையாடுவதற்காக சர்வதேச கிரிக்கெட்டை தியாகம் செய்திருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 138 ரன் விளாசியது சரியான ஃபினிஷிங் டச். டோனி-ரெய்னா சமாளிக்காமல் இருந்திருந்தால், அன்று கதை கந்தலாகி இருக்கும். எந்த உலகக் கோப்பையிலும் இல்லாத அளவுக்கு ‘சத மழை’ வெளுத்து வாங்கியிருப்பதும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ஃபீல்டிங் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் ஒரேயடியாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

தொடர்ச்சியாக 4 சாதனை சதங்களுடன் 541 ரன் குவித்த சங்கக்கரா குவார்ட்டரோடு மட்டையாகிப் போனதால், முதலிடம் பிடிக்க தென் ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ், இந்தியாவின் தவானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. விக்கெட் வேட்டையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், இந்தியாவின் ஷமி, நியூசிலாந்து வேகங்கள் போல்ட், சவுத்தீ, சுழல் நட்சத்திரங்கள் தாஹிர், வெட்டோரி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

நாக் அவுட் சுற்று மரணப் போராட்டத்தில் பல தலைகள் உருளத் தொடங்கிவிட்டதால் கோப்பை ரணகளமாகக் காட்சியளிக்கிறது. இந்த வாரத்திலேயே இரண்டு அரை இறுதி ஆட்டங்களும், 29ம் தேதி இறுதிப் போட்டியும் நடப்பதால் 11வது உலகக் கோப்பையில் சாம்பியன் யார் என்பது தெரிந்துவிடும்.இந்த முறை புதிய சாம்பியனா... இல்லை, ஏற்கனவே கோப்பையைக் கைப்பற்றிய அணிக்கே மீண்டும் வெற்றியா என்பது மட்டுமே எஞ்சியிருக்கும் சுவாரசியம். அதற்குத் தேவை தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகள் மட்டுமே. நம்பிக்கையோடு காத்திருப்போம்!

- ஷங்கர்
பார்த்தசாரதி