குட்டிச்சுவர் சிந்தனைகள்



சென்ற வாரத்தில் தமிழக மக்களை இரண்டு விஷயங்கள் முகம் சுளிக்கவும் அகம் சுளிக்கவும் வைத்திருக்கின்றன. ஒண்ணு, போலீஸ் உதவி கமிஷனர் அய்யா ஒருவர் பண்ணின கிளுகிளுப்பு மேட்டர். இன்னொண்ணு, டிராபிக் ராமசாமி கைதுல இன்ஸ்பெக்டர் அய்யா ஒருவர் பண்ணின சலசலப்பு மேட்டர். முதல் பிரச்னைய டிபார்ட்மென்ட் பார்த்துக்கும்; ரெண்டாவது பிரச்னைய நாமதானே பார்க்கணும்!

என்னய்யா பண்ணினார் நம்ம கட்சிக்காரர்? நடைபாதை மேல நட்டு வச்சிருந்த ஃப்ளெக்ஸ் பேனர புட்டு வச்சார்... அவ்வளவுதானேய்யா! நடு ரோட்டுல நின்னு பேட்டி கொடுத்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் பண்ணினாருன்னு கம்ப்ளைன்ட் கொடுத்த அண்ணனைக் கேட்கிறேன்... நடைபாதைல ஃப்ளெக்ஸ் இல்லாம இருந்திருந்தா அவரு ஏன்ணே நடு ரோட்டுல நின்னு பேட்டி தர்றாரு? போதாக்குறைக்கு கார் கண்ணாடிய உடைச்சாரு, கொலை மிரட்டல் விட்டாருன்னு ஒரு கேஸு வேற.

கொலை மிரட்டல் விட அவரு என்ன சிக்ஸ் பேக் வச்சிருக்கிற சஞ்சய் ராமசாமியா? டிராபிக் ராமசாமிதானேய்யா. அவரு போட்டிருக்கிற கண்ணாடியவே தாங்கிப் பிடிக்க தெம்பில்லாம மேகம் மாதிரி ஒரு தேகம் வச்சிருக்கிற சீனியர் சிட்டிசன். அவரைப் போயி மட்டை உரிச்ச தேங்கா மாதிரி, சட்டையில்லாம கைது பண்ணி காமெடி பண்ணியிருக்காங்க. இது யாரை சிரிக்க வைக்க செஞ்சாங்கனு தெரியல; ஆனா ஒரு காவல்துறை அதிகாரியால ஒட்டுமொத்த டிபார்ட்மென்டும் மக்கள் வெறுக்கும்படி ஆகியிருக்கு!

கட்சிப் பிணிகளில் இருந்து... மன்னிக்கவும், கட்சிப் பணிகளில் இருந்து ரெண்டு வாரம் விடுமுறை கேட்ட ராகுல் காந்திஜி, இன்னும் ரெண்டு வாரம் சேர்த்து லீவு எடுத்துக்கிட்டாரு. அதுக்காக அவரைக் காணவில்லைன்னு எதிர்க்கட்சிக்காரங்க பண்ற ரப்சர் இருக்கே... ஐயோ சாமி! இந்த லீவுல ராகுல்ஜி எங்க போனாரு, என்ன பண்ணினாருன்னு உங்களுக்குத் தெரியணும். அவ்வளவுதானேய்யா? இந்தா புடிங்க...

*அமித் ஷா சுனாமின்னு சொல்றாங்க, மோடி அலைன்னு சொல்றாங்க... இப்படி அரசியலே கடல், அருவின்னு ஒரே வெள்ளக்காடா இருக்கறதால, எங்க தல ராகுல்ஜி லீவுல மொத வாரம் முழுக்க ஸ்விம்மிங் கிளாஸ் போனாரு. இனி பாருங்க கடப்பாரை நீச்சல் முதல் கடல் பாறை நீச்சல் வரை அடிச்சு எதிர்நீச்சல் போட்டு அடுத்த தேர்தல்ல ஆட்சிய புடிப்பாரு.

*ஸ்கூல் லீவு விட்டா பசங்க யோகா கிளாஸ், டிராயிங் கிளாஸ்னு போறதில்லையா? அது போல ராகுல் காந்தியும் லீவோட ரெண்டாவது வாரம் முழுக்க ‘ஆக்டிங் கிளாஸ்’ போனாரு. ஏன், இன்றைய பிரதமர் மட்டும்தான் சென்டிமென்ட்டா சீன் போடணுமா? இப்ப ராகுல் காந்தி இருக்கிற ஃபார்முக்கு, ‘பாச மகன்’ மெகா சீரியலுக்கே நாயகனா நடிக்கலாம்.

அந்தளவு சென்டிமென்ட் நடிப்ப கரைச்சுக் குடிச்சு புளிச்ச ஏப்பம் விட்டுட்டு வந்திருக்காரு. இதுவரை குடிசை வீட்டுல கூழ் குடிச்ச சீன்தான் பார்த்திருப்பீங்க. இனி நல்லவங்கள கட்டிப் பிடிக்கிறது, கெட்டவங்க நெஞ்சுல மிதிக்கிறதுன்னு பலப்பல சீன்களைப் பார்க்கப் போறீங்க!

*மூணாவது வாரம் தல கத்துக்கிட்டது கூகுள் மேப்ஸ். இன்னிக்கு ஜனாதிபதியோ பிரதமரோ ஆகணும்னா, மக்கள் காதுல பூவோட நார் சுத்துறதுக்கு முன்னாடி ஊர் சுத்தக் கத்துக்கணும். மொத்தத்துல எத்தனை நாடு இருக்கோ, அத்தனையையும் மனப்பாடம் பண்ணிட்டாரு தல. அடுத்து பிரதமரானா போதும், ஃபாரீன் டூர் ப்ரோக்ராம் ரெடியா இருக்கும்.

இந்த வாரம் கூட, ‘குட்டிச் சுட்டீஸ்’ல கலந்துக்கிட்டு எல்லா நாட்டோட பெயரையும் மனப்பாடமா ஒப்பிச்சு இமான் அண்ணாச்சிகிட்ட பிரைஸ் வாங்க இருந்தாரு. சலூன் லீவுன்னு ஷேவிங் செய்யாததால அடுத்த வாரம் கலந்துக்கிட்டு கலக்குவாரு.

*சரி, இப்ப நாலாவது வாரம் என்ன பண்ணாருன்னுதானே கேட்கறீங்க? சனி, ஞாயிறு ஆட்டம் போட்டுட்டு, ஞாயிற்றுக்கிழமை நைட்டு ‘ஐயோ லீவு முடியப் போகுதே’ன்னு வருத்தப்படுற ஸ்கூல் பையன் கணக்கா அடுத்த லீவு எப்போனு விட்டத்தப் பார்த்து யோசிச்சுக்கிட்டு இருந்தாரு.

அவனவன் அட்டென்ஷன் வாங்க உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஆணியடிச்சுக்கிறான்... இன்னமும் அம்மா கட்சிக்காரங்க மண் சோறு, பால் குடம், பூ மிதித்தல், தீ மிதித்தல்னு இருந்தா எப்படி போணி செய்வது? அதான் நம்மளால ஆன சின்னச் சின்ன யோசனைகள்:

*கோயில் தரைகளில் அங்கப்பிரதட்சணம் செய்யறத விட்டுட்டு, நல்ல நைட் ஹோட்டலா பார்த்து, பெரிய தோசைக் கல்லு மேல உருண்டு புரளலாம்.
* ‘கடலோரக் கவிதைகளி’ல் ஜெனிஃபர் டீச்சரின் அட்டென்ஷனை வாங்க குட்டிச்சுவர்ல சத்யராஜ் நிற்பது போல, அவரவர் வசதிக்கேற்ப லாரி, ரயில், விமானம் என தேர்ந்தெடுத்து அதன்மேல் ஒரு வாரத்திற்கு ஒத்தக்காலில் நிற்கலாம். அது நகரும் வாகனமாக இருந்தால் இன்னமும் பெட்டர்.
* அந்தாளு உடம்புலதானே ஆணி
யடிச்சாரு. ரத்த சொந்தங்கள், உடம்பையே எடுத்து ஆணில அடிக்கலாம். வழக்கமா செவுத்து ஆணில காலண்டர்தான் தொங்கும்; கொஞ்சம் வித்தியாசமா தோலண்டராய் தொங்கலாம்.
* நம்மூரு கோயில்களை தினம் மூணு தடவை கழுவி வச்சிருப்பாங்க. அதனால அங்க தின்கிற மண்சோறு எஃபெக்ட் தராது. ஸோ, நேரா தார் பாலைவனம் போயி, மண் சோறுக்கு பதிலா மண்ணையே சோறா உண்ணலாம்.
* வாரா வாரம் தீ மிதிச்சா, பிட் நியூஸ்தான் வரும். வாரம் முழுக்க தீ மிதிச்சா ஃப்ளாஷ் நியூஸாவே வரும். அதனால, அட்டென்ஷன் வேணும்னு நினைக்கிறவங்க 24/7 தீக்குழிக்குள்ளயே வாக்கிங், ஜாக்கிங் போலாம்.
*பால் குடம், பன்னீர் குடம் எடுக்கிறது சாதா மேட்டர். அதுக்குப் பதிலா, பால் டேங்கர், பன்னீர் டேங்கர், தேன் டேங்கர்னு தூக்கிட்டு கோயிலை சுத்துனா, அட்டென்ஷன் மட்டுமில்லை... கின்னஸ், நோபல், ஆஸ்கர்னு அவார்டும் நிச்சயம்.
* யாகம் செய்யறப்போ, நெய், விளக்கெண்ணெய்னு யாக குண்டத்தில் விடுறதுக்கு பதிலா கொஞ்சம் பெருசா யோசிச்சு, பெட்ரோல், டீசல், குரூட் ஆயில்னு விட்டு பெயர் வாங்கலாம்.

ஆல்தோட்ட பூபதி