காமெடி பண்றவன் வாழ்க்கை காமெடியா இருக்காது!



எங்கேயோ பார்த்த முகம்

சிவநாராயண மூர்த்தி திங்கிங்

சரியான ஹைட் அண்ட் வெயிட். முறுக்கு மீசை... முரட்டு தொப்பை... உருட்டும் விழி..! ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா’ டயலாக், சிவநாராயண மூர்த்திக்குத்தான் செமையாய் பொருந்தும். பட்டுக்கோட்டையில் வசிக்கும் சி.நா.மூர்த்திக்கு பயந்து பயந்து போன் போட்டால், ‘‘வணக்கம்... சொல்லுங்க தம்பி!’’ என சாமரம் வீசுகிறது ஸாஃப்ட் குரல்!‘‘ஷூட்டிங் இருந்தா சென்னை வந்துருவேன் தம்பி. வேலை ஏதும் இல்லேனா சொந்த ஊருதான்’’ எனப் பணிவாக ஆரம்பிக்கிறார்.

‘‘சொந்த ஊரு பட்டுக்கோட்டை பக்கம் பொன்னவராயன் கோட்டைங்க. நம்மளைப் பார்த்தாலே தெரிஞ்சிருக்குமே... ஊர்ல நாங்க மிராசுதார் குடும்பம். அப்பா-அம்மாவுக்கு ஒரே புள்ள. சின்ன வயசுலயே சினிமா ஆர்வம் வந்துடுச்சு. சினிமா வசனம்தான் மனசுல ஏறிச்சு. படிப்பு ஏறலை. அந்தக் கால முருக பக்திப் படம் ‘துணைவன்’ பார்த்ததிலிருந்து கிருபானந்த வாரியாரின் சிஷ்யனா மாறிட்டேன். ஆன்மிகம், பொதுத்தொண்டுன்னு இறங்கிட்டேன்.

லயன்ஸ் கிளப் நடத்தின ஒரு ஃபங்ஷனுக்கு விசு சார் வந்திருந்தார். என் வித்தியாசமான தோற்றத்தைப் பார்த்து அவரோட ‘வீடுதோறும் வசந்தா’ சீரியல்ல நடிக்க வச்சார். அடுத்து மு.களஞ்சியம் இயக்கின ‘பூந்தோட்டம்’ படத்துல நானும் ரகுவரனும் வில்லன்கள். அப்படியே தொடங்கி கன்னடம், மலையாளம், தெலுங்கு எல்லாம் சேர்த்து 259 படங்கள் பண்ணியிருக்கேன்.

இப்ப கூட நடிச்சு முடிச்ச படங்கள்ல பத்து ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. டைரக்டர்கள் ஹரி, பி.வாசு சாரெல்லாம் அவங்க படங்கள்ல தொடர்ந்து எனக்கு நல்ல கேரக்டர்கள் கொடுக்கறாங்க. ரஜினி சார் கூட ‘படையப்பா’ நடிக்கும்போது 40 நாள் அவரோட தங்கியிருந்தேன். நிறைய மனிதர்களோட பழகினாலும் சிலரோட பழகின நாட்கள்தான் பசுமையா இனிக்கும். ரஜினி சார் அப்படி ஒருத்தர். அவர் தன்னோட சுயசிந்தனையாலதான் ஆன்மிகவாதியா இருக்கார்.

அந்தப் படத்துல நான் கும்பல் சீன்ல வரும்போது கூட, ‘இவர் உருவத்துக்கு சும்மா வந்து போனா நல்லா இருக்காது. ஏதாவது டயலாக் கொடுங்க’னு ரஜினி சாரே சொல்வார். ‘என்னய்யா.. உமக்கு ஹீரோவே ரெகமண்ட் பண்றார்’னு ரவிக்குமார் சாரும் ஜாலியா கலாய்ப்பார். ‘சந்திரமுகி’யும் அவரோட பண்ணினேன். அரசியல்வாதி, ஹீரோயின் அப்பா, போலீஸ் ஆபீஸர், அதிகாரின்னு நமக்காக சினிமாவில் சில கேரக்டர்ஸ் இருக்கு.

வடிவேலுவோட 20 படங்கள், விவேக்கோட 20 படங்கள்னு சமமா பண்ணியிருக்கேன். சீரியஸான கேரக்டர் ரோல் பண்ணிட்டிருந்த என்னை இவங்க ரெண்டு பேரும்தான் காமெடி ரூட்டுக்குக் கூட்டி வந்தாங்க. ஆனாலும் தம்பி... காமெடி சாதாரணமில்ல. வில்லனா நடிக்கறதை விட அதிகமா அடி விழும்.

ரிஸ்க் அதிகம். ‘ஐயா’ படத்துல அப்படி அடிபட்டு என் சொந்த செலவுல உடம்பைத் தேத்தினேன். ‘கவுண்டமணி காலத்துல இல்லாத அடி உதையா? இதெல்லாம் சாதாரணம்’னு சொல்லிட்டாங்க. எனக்கு பாடி வெயிட் 150 கிலோ. விவேக் சாரோட மாமனார் கிட்டத்தட்ட என்னைய மாதிரி இருப்பாராம். அதனாலேயே அவர் என்னை ரொம்பவும் கஷ்டப்படுத்தாம பக்குவா வேலை வாங்குவார். ஆனாலும், மெஜஸ்டிக்கா ஜம்முன்னு கொண்டு வந்திடு வார்!’’ - இடையிடையே கொஞ்சம் கேப் விட்டு மூச்சு வாங்கிக் கொள்கிறார்.

‘‘இப்ப இண்டஸ்ட்ரி ரொம்ப மாறியிருக்கு தம்பி. ஃபிலிம் காலத்துல சினிமா ஆரோக்கியமா இருந்தது. நடிகர்னா திறமை இருக்கணும், அழகு இருக்கணும், குரல் வளம் வேணும்னு தகுதிகள் இருந்துச்சு. டிஜிட்டல் வந்தபிறகு யார் வேணாலும் படம் எடுக்கலாம், யார் வேணாலும் நடிக்கலாம்னு ஆகிப் போச்சு. ஒருவகையில அது நல்ல விஷயம்தான். இல்லைன்னு சொல்லலை. ஆனா, எந்த அடிப்படைத் தகுதியும் இல்லாம எல்லாருமே நடிக்க வந்துட்டா, அப்புறம் யார்தான் படம் பார்க்குறது?

இப்ப ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பத்து பத்து படங்கள் ரிலீஸ் ஆகுற மாதிரி ஆகிப் போச்சு நிலைமை. எதுவுமே மனசுலயும் தங்க மாட்டேங்குது... தியேட்டர்லேயும் நிக்க மாட்டேங்குது. ஒரு சினிமா டிக்கெட்டோட விலை 120 ரூபாய். ஒருத்தர் ஒரு வாரத்துக்குள்ள 10 படங்கள் பார்க்கணும்னா 1200 ரூபாய் வேணும். ஏழைங்கதான் இன்னும் சினிமாவை நேசிக்கிறாங்க. அவனால பத்துப்படம் பார்க்க எப்படி முடியும்?’’ - ராயல் ஃபேமிலி என்பதற்கு சான்றாய் நினைத்ததைப் பேசுகிறார் மனிதர்.

‘‘மனைவி பேரு புஷ்பவல்லி. ரெண்டு பசங்க. பில்டிங் தொழில் பண்றாங்க. அப்புறம் ஒரு பொண்ணு. மிராசு வாழ்க்கையெல்லாம் பாஸ்ட் டென்ஸ் தம்பி. இனியும் அதையே பேசிட்டிருக்க முடியாது. என் பொண்ணை பி.இ வரை படிக்க வச்சு, 20 லட்ச ரூபாய் கடனை வாங்கி கல்யாணம் பண்ணி வச்சேன். சிங்கப்பூர்ல இருக்கா.

இங்க கடன் கொடுத்தவங்க நெரிக்க, சொத்தை வித்து திருப்பிக் கொடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா, ‘சொத்துல எனக்கும் உரிமை இருக்கு’னு கேஸ் போட்டு, விக்க விடாம பண்ணிடுச்சு என் பொண்ணு. கல்யாணம் பண்ணிக் கொடுத்த காசெல்லாம் கணக்குல வரலை. இதையெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, காமெடி பண்றவன் வாழ்க்கையும் காமெடியாதான் இருக்கும்னு நெனச்சிடக் கூடாது பாருங்க.

எனக்குக் கடவுள் பக்தி அதிகம் தம்பி. ஷூட்டிங் இல்லன்னா எங்க ஊரு சிவன் கோயில்ல தான் கிடப்பேன். இங்கிருந்து ஒரு மணிநேரத்துல வேளாங்கண்ணி. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அங்கே போயி மாதாவைக் கும்பிடுவது வழக்கம். என்னைத் தேடி வர்ற படங்களை பண்றேன். கூப்பிடுறவங்களுக்கு தொந்தரவு இல்லாம நடிச்சுக் கொடுக்கறேன். உழைப்பு இல்லைன்னா எதுவும் இல்லைன்னு புரிஞ்சு வச்சிருக்கேன் தம்பி. உழைக்கும்போதுதான் வாழ்க்கை பிரகாசிக்கும்!’’எந்த அடிப்படைத் தகுதியும் இல்லாம எல்லாருமே நடிக்க வந்துட்டா, அப்புறம் யார்தான் படம் பார்க்குறது?

மை.பாரதிராஜா
படங்கள்: பரணிகுமார்