ஐந்தும் மூன்றும் ஒன்பது



‘‘நம் சான்றோர்களின் கணித அறிவுக்கு சாட்சியாக ஒரு டெசிமல் காலண்டரே உள்ளது. காஞ்சி எனப்படும் காஞ்சிபுரத்தில் பல்லவன் காலத்தில் பல்கலைக்கழகமே இருந்து, அது செயல்பட்ட தன் தடயங்களை நான் பணிபுரிந்த காலத்தில் கண்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் எனக்குப் பல காரணங்களுக்காக மிகப் பிடித்த ஒரு ஊராகும்.

இங்கே பாலாற்றங்கரை ஓரம் ஒரு செவ்வகப் பாறையில் நமது எண் கணித டெசிமல் காலண்டரைக் கண்டேன். அனேகமாக கணித ஆசிரியர் பாடம் சொல்லித் தருவதற்காக மணலில் எழுதும்போது அழிந்துவிடுவதால், ஒரு நிரந்தர ஏற்பாடாக கல்லில் பொறித்து அந்த செவ்வகக் கல்லை விட்டிருக்க வேண்டும். அந்தக் கல் கிடந்த இடத்திற்கு அருகில்தான் பல்கலைக்கழகம் இருந்ததற்கான தடயங்களும் கிடைத்தன.

எனவே அந்தக் கல்வெட்டுக் கணக்கு மாணவர்கள் அறிந்துகொள்ளத்தான் என்று அனுமானித்தேன். அதில் ஒன்று முதல் காணி வரையிலான அளவீடுகள் இருந்தன.‘1 - ஒன்று, 3/4 - முக்கால், 1/2 - அரை, 1/4 - கால், 1/5 - நாலுமா, 3/16 - மூன்று வீசம், 3/20 - மூன்றுமா, 1/8 - அரைக்கால், 1/10 - இருமா, 1/16 - மாகாணி (வீசம்), 1/20 - ஒருமா, 3/64 - முக்கால் வீசம், 3/80 - முக்காணி, 1/32 - அரைவீசம்,  1/40 - அரைமா, 1/64 - கால் வீசம், 1/80 - காணி, 3/320 அரைக்காணி முந்திரி, 1/160 - அரைக்காணி, 1/320 - முந்திரி, 1/102400 - கீழ்முந்திரி, 1/2150400 - ஒரு இம்மி, 1/23654400 - மும்மி, 1/165580800 - ஒரு அணு...’ -என்று ஒன்றில் தொடங்கி அணுத்துகள் வரை கணித்து அதைப் பொறித்தும் வைத்திருந்தது எனக்கு வியப்பளித்தது. இன்று கால்குலேட்டர் உள்ளது. எவ்வளவு பெரிய கணக்கையும் அது பிழையின்றிப் போட்டுவிடும்.

ஆனால், அன்று அப்படி ஒன்று இல்லாத நிலையில் இந்தக் கணித அளவுகளை மிக நுட்பமாக, துல்லியமாக நம் சான்றோர்கள் எட்டியிருந்தது எனக்கு வியப்பளித்தது. நான் ஓர் உண்மை நோக்கி நகர ஆரம்பித்தேன். அது என்ன தெரியுமா? நம் சான்றோர்கள் இன்றைய விஞ்ஞானத்துக்கும் மேலான ஞானத்தோடு அன்றே வாழ்ந்திருக்க வேண்டும்!’’- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...

அந்தத் தகரப்பெட்டி ‘நான் 1950களின் தயாரிப்பு’ என்பது போல அவனைப் பார்த்தது. பச்சை பெயின்ட் அடிக்கப்பட்டு உதிர்ந்தும் வெளிறியும் போயிருந்தது. பெட்டிக்கு வெளியே இன்றைய நவீன பூட்டு! வர்ஷன் அதைப் பார்த்து முகம் மாறுவதை கணபதி சுப்ரமணியன் பார்த்துவிட நேர்ந்தது.

‘‘என்ன வர்ஷா... அந்தப் பொட்டிய அப்படிப் பாக்கறே... அதுதான் இவர் என்கிட்ட ஒப்படைச்சிருக்கிற சரக்கு...’’‘‘சரக்கு இல்லை அங்கிள்... பொக்கிஷம்!’’ - என்றான் வர்ஷன் வேகமாய்.‘‘பொக்கிஷமா?’’ - மிக வேகமாக திருப்பிக் கேட்டார் கணபதி சுப்ரமணியன்.‘‘அ... ஆமா அங்கிள்... அப்படித்தான் சொன்னாங்க...’’‘‘யாரு?’’ - கணபதி சுப்ரமணியன் நெற்றி சுருங்க வேகமானார்.‘‘ஓ... சாரி, அப்படித்தான் சொல்வாங்கன்னு சொல்ல வந்தேன்...’’ - வர்ஷன் சமாளித்தான்.அவன் வந்ததிலிருந்தே தடுமாறுவதை கவனித்து வந்த ப்ரியா, இம்முறையும் கவனித்தாள்.

‘‘பூட்டியிருக்கே?’’ - இதுவும் அவன்தான்.‘‘நான்தான் பூட்டு போட்டேன். உள்ள இருக்கற விஷயம், நம்ம வள்ளுவர் மதிப்புப்படி பார்த்தா ஐம்பது கோடி ரூபாய்க்கும் மேல ஆச்சே?’’
‘‘அப்படியா... அப்ப வைரம், மாணிக்கம்னு அந்தக் கால சங்கதிகள் எல்லாம் உள்ள இருக்கா?’’‘‘அப்படியெல்லாம் எதுவும் இல்லை. காலப்பலகணி எங்க இருக்கு, அதை எப்படி அடையணும்ங்கற ஏட்டுக் குறிப்புகள்... அப்புறம் அங்க பயன்படுத்தத் தேவையான காம்பஸ், சோழின்னு சில சமாச்சாரங்கள்...’’

‘‘ஓ! இதுக்கா இவ்வளவு மதிப்பு?’’ - வர்ஷன் வியப்பை வழிய விட்டான்.‘‘தம்பி... இன்னும் ஐந்நூறு வருஷம் இந்த உலகம் எப்படி இருக்கும்ங்கிற தகவல் ரொம்பத் துல்லியமா பலகணியில இருக்குப்பா! அதுல நம்ம தமிழ்நாட்டு சமாசாரமோ... இல்ல, இந்திய நாட்டு சமாசாரமோ மட்டுமில்ல... உலகம் முழுக்க நடக்கப் போற தகவல்கள் எல்லாம் இருக்கு. குறிப்பா சுனாமி பற்றின தகவல்கள், பூகம்பம் பற்றின தகவல்கள், எரிமலை வெடிக்கப் போற தகவல்கள், பிரதான உலகத்தலைவர் யாருங்கற தகவல்கள்... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்!’’‘‘இதெல்லாம் எப்படி சாத்தியம்... எவ்வளவு யோசிச்சாலும் லாஜிக் இடிக்குதே?’’

‘‘நல்லா இடிக்கட்டும்... இதெல்லாம் டுபாக்கூர், பொய்னு சொல்றவங்கதான் உண்மைல இந்தப் பலகணியை காலாகாலத்துக்கும் காப்பாத்தப் போறவங்க. ஏன்னா, ‘இது உண்மை’ன்னு தெரிஞ்சு இதை அடைய ஆளுக்கு ஆள் முயற்சி செய்தா இதோட கதி என்னாகும்னு யோசிச்சுப் பார்!நமக்குச் சொந்தமான கோஹினூர் வைரம் இப்ப நம்ம நாட்டுலயே இல்லை. அது இப்ப வெள்ளக்காரன்கிட்ட இருக்கு. அங்க அதைப் பாதுகாக்க அதுக்கான மதிப்பை விடவே அதிகம் செலவழிச்சுட்டாங்க; செலவழிச்சுக்கிட்டும் இருக்காங்க. ஒரு உண்மை தெரியுமா?’’ - வள்ளுவர் கேட்கவும் எல்லோருமே அவரிடம் ஊன்றினர்.

‘‘அந்த வைரம் இங்க இருந்தவரை இந்த நாடு பிரிஞ்சு பல கூறுகளாக இருந்தது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா இருந்தான். அந்த வைரம் இங்க இருந்து போச்சு. இந்திய நாடு ஒண்ணாகிடுச்சு! மிட்டா மிராசு, ஜமீன்தார், ராஜா, மந்திரின்னு எல்லாரும் ஒழிஞ்சுட்டாங்க. அதே சமயம் இது இப்ப எங்க இருக்கோ, அங்க இப்ப பெருசா ஒத்துமையில்லை. அங்க எல்லாம் பிரிஞ்சு எலிசபெத் ராணியே கௌரவ ராணியாதான் இருக்காங்க’’ - வள்ளுவர் சொன்னது யோசிக்கக் கூடியதாக இருந்தது. ஆனாலும் வர்ஷன் அதை ஏற்கவில்லை.

‘‘ஐயா! காலம் மாறிக்கிட்டேதான் இருக்கும். நாமளே சின்னக் குழந்தையா இருந்து வளர்ந்து மாறலையா? இது இயற்கை! அப்படி ஒரு மாற்றம்தான் எப்பவும் நம்மைச் சுத்தியும் நடந்துக்கிட்டிருக்கு. ஆனா, நீங்க சொல்றத பார்த்தா ‘வைரம்தான் காரணம் - அதுக்குப் பிரிக்கற சக்தி இருக்கு’ங்கற மாதிரியில்ல இருக்கு?

’’‘‘ஆமாம்பா! வைரம்னா சுக்கிரன்ங்கற கிரகத்தோட அம்சம்... இது பௌராணிகப் பார்வை! வைரம்னா அழிவற்றது. இது புத்திபூர்வமான பார்வை! ஒரு வைரம் நம்ம கைல இருக்குன்னா, லட்சக்கணக்கான கால அளவு கடந்து அப்ப உள்ள ஏதோ ஒரு நாளில் அழிந்து போய் பூமிக்குள்ள புதைஞ்சு போன ஒரு மரத்துண்டைத்தான் நாம இப்ப தொட்டுக்கிட்டு இருக்கோம்னு அர்த்தம்.

பூமிக்குள்ள புதைஞ்சும், மக்கி மண்ணாகிடாம, இறுகிக் கல்லாகி, அப்புறம் கரியாகி, அப்புறம்தான் வைரமாகியிருக்கு. பல ஆயிரம் வருடங்கள் பல சோதனைகளைக் கடந்தும் அழியாம இப்ப ஒளி பொருந்தியதா அது இருக்குன்னா, ஒவ்வொரு நொடியும் அழிவை சந்திச்சு முதுமையை நோக்கிப் போய்க்கிட்டிருக்கற நம்ம முன்னால இந்த வைரம் எவ்வளவு பெருசு?’’ - சரியாகத்தான் கேட்டார் வள்ளுவர். சட்டென்று ஒரு பதிலைக் கூற வர்ஷனால் முடியவில்லை.

‘‘என்ன தம்பி மௌனமாயிட்டே..? அதனாலதான் ஒரு முற்றுப்புள்ளி அளவு வைரத்துண்டு கூட பல ஆயிரம் ரூபா விக்குதுன்னு பொருளாதாரப் பார்வை பாத்துடாதே! அதை தாண்டிப் பார்! ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு விஷயமும் மாறிக்கிட்டிருக்கிற இந்த உலகத்துல தன்னை ஜிகுஜிகுன்னு மாத்திக்கிட்டு, வலிமையிலயும் தனக்கு இணை இல்லைன்னு வச்சுக்கிட்டிருக்கற வைரம் நம்மைவிட மேலானதும், சக்தி உடையதுமா இருக்க வாய்ப்பு இருக்கா இல்லையா..?’’

‘‘ஒரு கோணத்துல நீங்க சொல்றது வாஸ்தவம்தான். ஆனா, இதோட மதிப்பு தெரிஞ்சு நாம வாங்கி பாதுகாப்பா வச்சிருக்கறதாலதானே இது இருக்கு. அப்ப, இதை வாங்கி பாதுகாக்க முடிஞ்ச நாம பெருசா... இல்லை, இது பெருசா?’’‘‘இதையே நான் கொஞ்சம் மாத்திச் சொல்றேன். இதை எல்லோராலயும் வாங்க முடியாது. உலகத்துல எவ்வளவோ விஷயங்கள் வாங்கறதுக்கு இருக்கும்போது, இதை வாங்கற ஆசையும், இதை பாதுகாப்பா, வச்சுக்கணும்ங்கற எண்ணமும் ஏன் சிலர்கிட்ட மட்டும் இருக்கு?’’‘‘ஏன்?’’

‘‘அங்கதான் இதோட சக்தி இருக்கு. வைரத்தை எல்லோரும் வாங்கிட முடியாது. அதுக்கு ஒரு விதி இருக்கு. அதுக்குப் பின்னால சுக்கிரன்ங்கற கோள் இருக்கு. அந்தக் கோள் நம்ம உடம்புல சுக்கிலம்ங்கற ஜீவசக்தியா இருக்கு. அந்த ஜீவ சக்தி நம்ம மன அமைப்பை மாற்றக் கூடியது. ஒரு பொருள் மேல ஆசைப்பட இந்த சக்திதான் காரணம். வெறுக்கவும் இதுதான் காரணம்!’’
‘‘என்ன சொல்றீங்க நீங்க... நாம சுயமா எதையும் செய்யறது கிடையாதா?’’

‘‘மனசை ஆடாம அசையாம நிறுத்த முடிஞ்ச யோகி மட்டும்தான் சுயமா செயல்படுறவன். மனசுங்கற ஒண்ணு தலையில இருக்கா, மார்புக்குள்ள இருக்கான்னு கூட தெரியாம, ஒரு சமயம் நெஞ்சைத் தொட்டும் ஒரு சமயம் தலையைத் தொட்டும் பேசற உன்னைப் போல யாருமே சுயமா எதையும் செய்யறவங்க கிடையாது தம்பி!’’‘‘இதை நான் ஒத்துக்க முடியாது. ரொம்ப முட்டாள்தனமா இருக்கு உங்க பேச்சு...’’ - சற்று கோபப்பட்டான் வர்ஷன்.

‘‘கோபிக்கறதால என் கருத்து மாறிடாது. நானும் சுயம் இல்லாதவன்தான். அதனாலதான் என் உயிர் என் கைல இல்லன்னு நம்பறேன். அவ்வளவு ஏன்..? உறுதியா செத்துடுவோம்னு நம்பற ஒருத்தன், தன் இறுதிக்கால மணி நேரங்களை இப்படியா தன் வாழ்க்கைல இதுவரை சந்திச்சிராத புது நபர்களோட கழிப்பான்?’’‘‘வாட் டூ யூ மீன்?’’

‘‘என் வள்ளுவப் பிறப்பு முடியப் போகுதுய்யா. அடுத்து நான் என்னாவேன், ஏதாவேன்ங்கறது ஆன பிறகுதான் தெரியும். ஒரு கொடுமை என்னன்னா, என் இறப்புக்குப் பிறகு நான் மனிதனா இல்லாம, ஒரு ஆடா, மாடா பிறந்தா அது கூட தெரியாது. ஏன்னா ஆடு, மாடுங்கறது நாம வச்ச பேர்.

ஒரு ஆட்டுக்கோ மாட்டுக்கோ தான் ஒரு உயிரினம் - தான் ஒரு ஆடு - தான் வாழ்ந்துக்கிட்டிருக்கறது பூமியிலங்கற எதுவுமே தெரியாது. உணர்வால மட்டுமே வாழ்ந்து மடிஞ்சு போற உயிரினங்கள் அவை. மனிதன் மட்டும்தான் அறிவால தன்னை அறிஞ்சவனா இருக்கான். அந்த மனிதப் பிறப்பா நான் திரும்பப் பிறந்தாலும், நான் ஒரு மனிதன்னு தெரிஞ்சுக்க குழந்தைப் பிராயத்தைக் கடக்கணும்.

கூட்டிக் கழிச்சுப் பார்த்தா, எதுவும் நம்ம கைல இல்ல. சுழிச்சுக்கிட்டு ஓடுற ஆத்துல ஒரு தக்கை விழுது... ஆறு போன போக்கெல்லாம்தான் அதுவும் போகும். அதுக்கு தனியா ஒரு போக்கு எப்படி கிடையாதோ அப்படித்தான் நாமும்.’’‘‘வள்ளுவரே... இவ்வளவு பேசற நீங்க எதனால எங்க கூட வந்தீங்க.

எங்ககிட்ட இந்தப் பெட்டியை ஒப்படைக்க எது காரணம்? நடக்கறதுதான் நடக்கும்னா இந்தத் தொல்பொருள் ஆய்வாளரைத் தேடி எதுக்காக வரணும்?’’ - வர்ஷன் சரியாகத்தான் கேட்டான். ஆனால் அசரவில்லை வள்ளுவர்.‘‘தட்டுல சாப்பாடு இருக்கு... நீ என்ன செய்வே?’’ - சம்பந்தமில்லாதபடி ஒரு கேள்வி கேட்டார்.

‘‘நான் ஒண்ணு கேட்டா நீங்க ஒண்ணு சொன்னா எப்படிங்க?’’‘‘உன் கேள்விக்குத்தாம்ப்பா பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன். பதிலைத்தான் கேள்வியா கேட்டிருக்கேன். நீ பதில் சொல்!’’ - அப்போது எலெக்ட்ரீஷியன் உள்ளே வந்து வேலை பார்த்து விட்டது புரிந்தது. பளிச்சென்று அறை விளக்குகள் எரிய, ஏ.சியும் ஓடத் தொடங்கியது.‘‘ஒன் செகண்ட்’’ - என்று ப்ரியா வெளியேறி சமையற்கட்டு நோக்கிச் சென்றாள். அங்கே எலெக்ட்ரீஷியன் ஏழுமலை இருக்க, அருகில் இருந்தார் அனந்தகிருஷ்ணன்.
‘‘அப்பா! பிராப்ளம் சால்வ்டா?’’

‘‘இல்லம்மா... தற்காலிகமா சரி பண்ணியிருக்கான். டோட்டலா வீடு பூரா வயரிங்கையே மாத்தணும்ங்கறான். வீடு கட்டும்போது போட்ட வயரெல்லாம் வயசாகி அந்து போச்சாம்!’’ - சிரித்தார் அனந்த கிருஷ்ணன்.‘‘ஆமாம்மா... இப்போதைக்கு டெம்ப்ரவரியா கனெக்ஷன் கொடுத்துருக்கேன். இந்த அடுப்பு பழைய இரும்புக்கு கூட போகாது. தூக்கி குப்பைல போட்ருங்க. சூப்பர் அடுப்பெல்லாம் வந்திருக்கு. நானே ஒண்ணு வாங்கிட்டு வந்து ஃபிக்ஸ் பண்ணி கொடுத்துடட்டுமா சார்!’’‘‘அதை அப்புறம் பார்த்துக்கலாம். நீ வேகமா புது வயரிங் பண்ணு... இப்பவே கூட ஆரம்பிச்சிடு, எங்களுக்கு ஆட்சேபணை இல்லை!’’

‘‘அய்யோ சார்... அண்ணா நகர்ல ஒரு ஃப்ளாட்ல வேலை நடந்துக்கிட்டிருக்கு. உங்களுக்காக அப்படியே போட்டுட்டு வந்துருக்கேன். அந்த வேலை நாளைக்கு முடிஞ்சிடும். நான் நாள மறுநாள் வந்துட்றேன். வரும்போது வயரையும் வாங்கிட்டு வந்துட்றேன். சாமானுக்காக நீங்க சிரமப்பட வேண்டாம். எல்லாம் என் பொறுப்பு. கடைசியா நீங்க பணம் கொடுத்தா போதும்!’’
‘‘அது சரி... நீ பாட்டுக்கு போட்டு தாளிச்சிடாதே. எல்லாம் ரீசனபிளா இருக்கணும்!’’

‘‘என்ன சார் நீங்க.. வருமான வரியா கவர்மென்ட்டுக்கு கொடுப்பீங்க. எங்களுக்கு கொடுக்க யோசிச்சா எப்படி சார்..?’’ - ‘தாளிக்காமல் விட மாட்டேன்’ என்பது போலப் பேசிவிட்டு தன் டூல் பாக்ஸைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டான் ஏழுமலை.சில அடிகள் சென்றவன் நின்று திரும்பி, ‘‘சார்.. பாத்ரூம்ல பாத்துப் புழங்குங்க. ஈரக்கையோட ஸ்விட்ச்சைப் போடாதீங்க...’’ என்றான். ஆனால் அது சரியாகக் காதில் விழவில்லை.

ப்ரியா வேகமாய் கணபதி சுப்ரமணியன் அறைக்குத் திரும்பினாள். கணபதி சுப்ரமணியன் பெட்டியைத் திறந்து உள்ளிருக்கும் ஏட்டுக் கட்டு, காம்பஸ், சோழி என்று சகலத்தையும் காண்பித்தபடி இருந்தார். வள்ளுவர் திரும்பவும் பாத்ரூம் போய் விட்டிருந்தார்.வர்ஷன் ஏட்டுக்கட்டைப் படிக்க முனைந்தான். செவ்வெறும்புகள் வரிசையாக ஒட்டிக் கொண்டு செல்வது போல் எழுத்துக்கள்! ‘எடுத்தோம்... படித்தோம்...’ என்றெல்லாம் படித்து விட முடியாது. கணபதி சுப்ரமணியன் சிரித்தார்.

‘‘இதைப் படிக்க பயிற்சி எடுக்கணும்பா... அதுக்குன்னு ஆட்கள் இருக்காங்க...’’ என்றார்.‘‘ஆமாம்.. எதுக்காக காலப்பலகணியை எங்கேயோ வச்சுட்டு, அது இருக்கற இடம்னு இப்படி எழுதி வைக்கணும்?’’ - கேட்டான் வர்ஷன்.‘‘மலை மேல் கோயில் கட்டற மாதிரிதான் இதுவும். நீ ஒரு கேள்வி தான் கேட்டிருக்கே. எனக்குள்ள இதைவிட நிறைய கேள்விகள் இருக்கு வர்ஷன்!’’‘‘அங்கிள்... நீங்க இதை நம்பறீங்களா?’’
‘‘நிச்சயமா...’’

‘‘அப்ப வள்ளுவர் இறந்துடுவாரா?’’
‘‘டெலிகேட்டா கேள்வி கேட்கறியே...’’
‘‘பதில் சொல்லுங்க...’’

‘‘ஒரு ஆராய்ச்சியாளனா நிச்சயம் சொல்றேன், ‘வள்ளுவர் இறந்துடுவார்’. ஆனா ஒரு மனுஷனா, அவரைக் காப்பாத்த விரும்பறேன்!’’‘‘சாமர்த்தியமான பதில்... போகட்டும்! வள்ளுவர் இறந்தா காலப்பலகணி நூறு சதவீதம் நிஜம்... அப்படித்தானே?’’‘‘இப்பவே சொல்றேன்... இது ஒரு நூறு சதவீத நிஜம். இப்படி ஒண்ணு இருக்கற விஷயம் இங்க இருக்கற நமக்கு மட்டுமில்ல, வெளில பலருக்கும் கூட தெரியும்!’’
‘‘வெளிலயா?’’

‘‘ஆமாம்.. அவ்வளவு ஏன்? அவங்க பார்வை எல்லாமும் இப்ப இங்க... இந்த வீட்டு மேல இருக்கலாம். ஒருபடி மேல போய் சொல்லட்டுமா?’’ - கணபதி சுப்ர
மணியன் மிரட்டலாகப் பேச
ஆரம்பித்தார்.
‘‘என்ன அங்கிள்?’’

‘‘இந்த விஷயத்துல உன்னைக்கூட அவங்கள்ல சிலர் விலைக்கு வாங்க முயற்சி செய்யலாம்...’’- கணபதி சுப்ரமணியன் தற்செயலாக - அதே சமயம் அந்த உண்மையை - கூறவும், வர்ஷன் விக்கித்துப் போனான். அப்போது அந்த அறையின் இருண்ட மூலையில் கறுப்பாக ஏதோ நெளிவது போலத் தெரிய, யதார்த்தமாக அதைப் பார்த்த ப்ரியா கண்கள் அகலமானாள்.

‘‘வர்ஷா... அங்க பார்...’’ - என்று கை காட்ட, வர்ஷனும் பார்த்தான். மெல்ல நெருங்கினான். அந்த கருந்தேள் பாவம் அவன் கண்களில் படவும், அடுத்த பத்தாம் நொடி அறையில் இருந்த ஒரு கட்டையால் நசுங்கி உயிரை விட்டது.

வள்ளுவர் பாத்ரூமில் இருந்து பார்த்தபடியே வந்தார்.‘‘என்ன... எமன் ஆளை அனுப்பிட்டான் போல இருக்கே?’’ என்று கேட்டுச் சிரித்தார்.‘‘அவனை எமன்கிட்டயே அனுப்பிட்டோம். நீங்க பயப்படாதீங்க! உங்களுக்காக எமன் வந்தா அவனுக்கும் இந்த தேள் கதிதான்’’ என்றபடியே செத்த தேளைவெளியே போடச் சென்ற வர்ஷனின் போன் சிணுங்கியது. தேளை தோட்டத்தில் வீசிவிட்டு காதை போனுக்குக் கொடுத்தான்.‘‘எல்லாம் நல்லா போய்க்கிட்டு இருக்குதானே?’’
‘‘ம்...’’
‘‘பெட்டியைப் பாத்துட்டியா?’’
‘‘ம்...’’

ஏப்ரீல்
கலர் டி.வி ஆக்கும் கவர்
‘பழைய ப்ளாக் அண்ட் ஒயிட் டி.வியின் மேல் ஒரு சின்ன கவரைப் போர்த்தினால் அது கலர் டி.வி ஆகிவிடும்’ - இந்த உலக மகா புரூடாவை விட்டது ஸ்வீடன் நாட்டு டெலிவிஷன் நிறுவனமான ஸ்வரிஜஸ். 1962ம் ஆண்டு என்பதால் அந்நாட்டு மக்கள் நம்பி, கவர் எங்கே கிடைக்கும் என வாங்கக் கிளம்பினார்கள். அப்போல்லாம் நாம டி.வி
யையே நம்ப லையே!

எலி சார்ஜர்
‘மின்சாரம் தேவையில்லை... யு.பி.எஸ் தேவையில்லை... ஒரே ஒரு உயிருள்ள எலியை கூண்டுக்குள் ஓட விடுவதன் மூலம் உங்கள் போனை சார்ஜ் செய்துகொள்ளலாம்’ - வெறும் அறிவிப்பாக இல்லாமல் இதை வீடியோவாகவே போட்டு நம்ப வைத்தது அமெரிக்காவின் மொஷி எனும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். போன வருடம் நடந்தேறிய பொல்லாப்பு இது!

சாம்சங் ஃபிங்கர்
நம் விரல் அசைவுகளைப் புரிந்து செல்போனுக்கு சிக்னல் அனுப்பும் புதுவித கை கிளவுஸ் ஒன்றை ‘தொழில்நுட்ப சாதனை’ எனச் சொல்லி அறிமுகப்படுத்தியது சாம்சங். இதில் ‘பாபா’ டைப் முத்திரை காண்பித்தால் போன் கால்களை எடுக்கலாம், கட் செய்யலாம் என கப்சாவில் கலர் பேப்பரும் சுற்றினார்கள். ‘எப்ப லான்ச்?’ என ஆர்வமானவர்கள், அடுத்த நாள் செம மொக்கை வாங்கினார்கள்.

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: ஸ்யாம்