அறிவு



‘‘மைதிலி... எதிர் வீட்டுக்காரர் மணி ரெண்டாயிரம் ரூபாய் கடன் கேட்டார். நீ ஏற்கனவே சொல்லியிருந்த மாதிரி அவர் கேட்டதுல பாதிதான் கொடுத்தேன்...’’‘‘அதாங்க நல்லது. கேக்குற தொகையை உடனே கொடுத்துட்டா பணத்தோட மதிப்பு அவங்களுக்கும் தெரியாது.

நம்மகிட்டயும் ஏதோ எக்கச்சக்க பணம் கொட்டிக் கிடக்குற மாதிரி வெளியே பரவும். அதாங்க சொல்றேன். பொறுப்பான ஆளா இருந்தா மட்டும் கேக்கற தொகையில பாதியைக் கொடுங்க. பொறுப்பில்லாத ஆளா இருந்தா பணம் இல்லைனு சொல்லிடுங்க.’’ தலையசைத்தான் ரவி.

மாலை...

பூ வாங்கக் கிளம்பினாள் மைதிலி. எதிர்வீட்டை ஒட்டியிருக்கும் சந்தில்தான் பூக்கடை. அந்த வீட்டைக் கடந்தபோது உள்ளே மணியும், அவன் மனைவி ரம்யாவும் பேசிக்கொண்டிருப்பது தெளிவாகக் கேட்டது.‘‘ரம்யா... இப்பல்லாம் நீ சொல்ற மாதிரியே கடன் கேக்கறேன். எனக்கு ஆயிரம் ரூபாய் வேணும்னா ரெண்டாயிரம் ரூபாய் கேக்கறேன். ரெண்டாயிரம் வேணும்னா நாலாயிரம் கேக்கறேன்.

தேவையான பணம் கரெக்டா கிடைச்சிடுது! பணம் தர்றவங்க எப்படியும் பாதிதான் தருவாங்கங்கற சைக்காலஜியை நீ சரியா புரிஞ்சு வச்சிருக்கே! உன் அறிவே அறிவு!’’ - மணி சொன்னார். அதிர்ந்துபோய் நின்றாள் மைதிலி.                             

இரா.வசந்தராசன்