தூய்மை



கதவைத் திறந்து உள்ளே வந்த புனிதா, பளிச்சென வீடு சுத்தமாக மாறியிருந்ததைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள்.யார் இப்படி வீட்டை சுத்தப்படுத்தியது?பள்ளி விட்டு வந்த மகனும் மகளும் அதற்கு மேல் வாயைப் பிளந்தார்கள்.‘‘இந்த அப்பா இருக்காரே... எப்பவும் எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்க மாட்டார்.

கண்ட இடத்திலும் குப்பை போடுவார். அவரைக் கண்டிச்சு நீங்கதான் இப்படி க்ளீன் பண்ணியிருப்பீங்களோன்னு பார்த்தேன். நீங்களும் இல்லையா? பின்ன, அப்பாவா இந்த அதிசயத்தைப் பண்ணினது?’’ - புருவம் உயரக் கேட்டாள் புனிதா.

‘‘சான்ஸே இல்லம்மா. அப்பா குப்பையைப் போட்டுட்டு நம்மளைத்தான் க்ளீன் பண்ணச் சொல்வாரே தவிர தான் பண்ணியிருக்கவே மாட்டார்!’’ நக்கலடித்தான் மகன்.அப்போது சரியாக உள்ளே நுழைந்தார் அப்பா. ‘‘என்ன எல்லாரும் அப்படி பாக்குறீங்க..? நான்தான் நம்ம வீட்ட சுத்தப்படுத்தினேன்.

உயர் அதிகாரிங்கற முறையில ‘தூய்மை இந்தியா’ திட்டத்துல எனக்கும் அழைப்பு வந்திருக்கு. ரோட்டை க்ளீன் பண்றதுக்கு முன்னாடி நம்ம வீட்டைச் சுத்தம் செய்து ப்ராக்டீஸ் பண்ணலாம்னு இறங்கினேன். அப்பப்பா, இவ்வளவு வேலை செய்யிறதுக்கு குப்பை போடாமலே இருந்துடலாம்!’’ என்றார் அவர்.கொல்லெனச் சிரித்து வைத்தார்கள் குடும்பத்தினர்.       

பவித்ரா நந்தகுமார்