தமிழ்நாடு டூ ஐ.நா. சபை!



ஓர் ஆசிரியையின் பயணம்

ஆர்.ரமாதேவி, ஃப்ரம் இந்தியா’’... இப்படி மைக்கில் தன்னை அழைத்தபோது மெய்சிலிர்த்துப் போனார் இவர். சும்மாவா? அவரை அழைத்தது ஐக்கிய நாடுகள் சபை. பாலின சமத்துவம் பற்றி ஐ.நா. நடத்திய கருத்தரங்கில் ஆசியாவிலிருந்து பேச அழைக்கப்பட்ட ஒரே ஆசிரியை ரமாதேவி. சாத்தூர் அருகே அ.ராமலிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியையான இவர், இப்போது வாழ்த்து மழையில்!

‘‘20 வருஷமா நான் ஆசிரியை. ஆங்கிலத்துல எம்.ஏ., எம்.எட்., எம்.பில் முடிச்சிருக்கேன். இப்போ பிஹெச்.டி பண்றேன். அதோட, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர் அணி மாநிலத் தலைவராவும், அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அமைப்புச் செயலராவும் இருக்கேன். இந்தப் பொறுப்புகளால உலகக் கல்வி அமைப்பு, சார்க் மகளிர் நெட்வொர்க்னு பல அமைப்புகளோட தொடர்பு இருக்கு.

பல கருத்தரங்குகள், மாநாடுகளுக்காக சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, நேபாளம்னு போய் வந்திருக்கேன். அதோட தொடர்ச்சியா வந்த வாய்ப்புதான் இது!’’ என்கிறார் ரமாதேவி உற்சாகம் பொங்க. இவர் ஐ.நா. வரை போவது இது இரண்டாவது முறையாம். கடந்த செப்டம்பர் மாதம் கிட்டத்தட்ட பார்வையாளராகவே போய் வந்தவர் இந்த முறைதான் மேடையேறி உரையாற்றியிருக்கிறார். விவாதங்களிலும் பங்கேற்று தமிழகத்தைப் பெருமைப் படுத்தி இருக்கிறார்.

‘‘உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்ததுதான் இந்தக் கருத்தரங்கம். பாலின சமத்துவம் பத்தி உலகம் முழுக்க இருந்து பலர் வந்து பேசினாங்க. நம்ம இந்தியாவுலதான் ஆணாதிக்கம் அதிகம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, உலகம் முழுக்க அது நிறைஞ்சிருக்குறது அங்க போனப்புறம்தான் தெரிஞ்சுது. குரூப் டிஸ்கஷன்லயும் அவங்க நிறைய விஷயங்கள பகிர்ந்துக்கிட்டாங்க. 

இன்னமும் பல நாடுகள்ல பெண்கள் தங்களுக்குன்னு சங்கம் வைக்கிறதையும், அதில் இணையறதையுமே குற்றமாதான் பார்க்குறாங்க. பாகிஸ்தான்ல பெண் கல்வியே கூடாதுன்னு சொல்ற கூட்டமும் இருக்கு.

ஆசிரியைகள் மிரட்டப்படுறதும் அடிக்கடி நடக்குது. இலங்கையில மட்டும்தான் 100 சதவீத பெண்கள் படிச்சவங்களா இருக்காங்க. இந்தியாவும் நல்ல நிலையில இருக்குன்னு இந்தக் கருத்தரங்குல பேசினேன். அப்புறம், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், இடம்பெயர்தல்னு ஒவ்வொரு தலைப்புலயும் கருத்தரங்கு நடந்துச்சு. எல்லாவற்றிலும் கலந்துக்கிட்டேன். அதுல குறிப்பா டெல்லி பாலியல் பலாத்காரப் பிரச்னை பத்தி சிலர் கேள்வி எழுப்பினாங்க.

‘இந்தியாவுல வாழ முடியாத சூழல் இருக்கா?’ன்னு கேட்டாங்க. நான் ‘இல்லவே இல்லை’ன்னு அதை மறுத்துப் பேசினேன். ‘டெல்லி பலதரப்பட்ட மக்கள் வாழும் இடம். ஒரு சில சம்பவங்கள வச்சு ஒட்டுமொத்த இந்தியாவையும் தவறா புரிஞ்சுக்கக் கூடாது’ன்னு சொன்னேன். அப்புறம், யுனிசெஃப் நடத்தின, ‘வகுப்பறை சூழலில் பாலியல் வன்முறை’ பத்தின கருத்தரங்கிலும் பேசினேன். நிறைய அப்ளாஸ்!’’ என்கிறவர், ‘‘நான் போயிட்டு வந்ததுக்கான பலன் இப்போ கிடைச்சிருக்கு!’’ என்கிறார்.

‘‘இப்போ, உலகக் கல்வி அமைப்பு, சார்க் மகளிர் அமைப்புக்கு நிதி ஒதுக்கியிருக்கு. இதன் மூலமா, சார்க் நாடுகள்ல இருக்குற பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களைத் தொகுத்து புத்தகமா வெளியிடப் போறாங்க. அதன் வழியா மாணவிகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கப் போறோம். என்னோட ஆசையெல்லாம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள்ல ஒரு கவுன்சிலிங் க்ளப்பை ஏற்படுத்தி மாணவிகளோட பிரச்னைகளைக் களையணும்ங்கிறதுதான்.

அதுக்கான முயற்சி களையும் பண்ணிட்டு இருக்கேன். முதல் கட்டமா வெவ்வேறு ஸ்கூல்ல வேலை பார்க்கிற எங்க சங்க ஆசிரியைகள் வழியா கவுன்சிலிங் கொடுக்க ஆரம்பிச்சிருக்கோம். இங்க பள்ளி மாணவிகளுக்கு வெளிய சொல்ல முடியாத பல பிரச்னைகள் இருக்கு... அதெல்லாம் சரியானாதான் அவங்களால நல்லா படிக்க முடியும். வாழ்க்கையில நல்ல நிலைக்கும் வரமுடியும்!’’ - என உறுதியாகச் சொல்கிறார் ரமாதேவி.

- பேராச்சி கண்ணன்
படங்கள்: திருவேட்ட போத்தி