மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீ அரவிந்த அன்னை

உன் குறிக்கோளை அடைவதற்கு ஒரு அறிவுரை சொல்லி உதவும்படி ஸ்ரீஅரவிந்தரைக் கேட்டுக் கொண்டேன். அவர் உனக்காக இந்த வாக்கியத்தைக் கையில் எடுத்துக் கொடுத்தார்.
‘ஏற்படும் இன்னல்கள் கடும் சோதனைகளும் பரீட்சைகளும் ஆகும்.

அவற்றை ஒருவர் சரியான மனப்பாங்கோடு சந்தித்தால் அவர் அவற்றைக் கடந்து, முன்னைவிட வலிமையானவராகவும் ஆன்மிக ரீதியில் அதிக தூய்மையானவராகவும் சிறந்தவராகவும் விளங்குவார்!’உன் மனதைப் புரிந்துகொண்டு சரியான மனப்பாங்கோடு இருப்பதற்கு இந்த வாக்கியம் நிச்சயம் உதவும்!

- ஸ்ரீ அன்னை

அரவிந்தர் தம் மனைவிக்கு எழுதிய கடிதம்... அவரது மன உணர்வை, லட்சியத்தை, தேடலை நமக்கு மிக எளிதாக உணர்த்தும். இந்த நாட்டை வெறும் கல்லாக - மண்ணாகப் பார்க்காமல், தாயாகப் பார்க்கும் இந்தத் தவப்புதல்வனை பாரதம் ஈன்றெடுத்தது 1872, ஆகஸ்ட் 15ம் தேதி. இந்த ஆன்மிக அரவிந்தம் மலர்ந்தது மேற்கு வங்காளத்தில் இருக்கும் கொல்கத்தாவில்.
அரவிந்தரின் அப்பா பெயர் கிருஷ்ண தன கோஷ். தாயார் ஸ்வர்ணலதா. மிக வசதியான பெங்காலி குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாக அவதரித்தார் அரவிந்தர். அரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்பது இவரது முழுமையான பெயர்.

அரவிந்தர், 1879ம் ஆண்டு சகோதரர்களுடன் இங்கிலாந்து சென்று படிக்கத் தொடங்கினார். லண்டனிலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார். தீவிரமான படிப்பு, அவர் வாசித்த உலக இலக்கியங்கள், தேசங்களின் எழுச்சி, வீழ்ச்சி என பலவும் அவரை புரட்சிகரமான சிந்தனையாளராக மாற்றியது. கிரேக்கம், லத்தீன், ஆங்கில இலக்கியம் என அனைத்தும் அரவிந்தருக்கு அப்போதே அத்துப்படி. 21 வயது வரை இங்கிலாந்தில் படித்த அரவிந்தர், 1893ம் ஆண்டு இந்தியா வந்தார். மிருணாளினியோடு திருமணமும் முடிந்தது. 

அரவிந்தரின் தந்தை, தன் மகனை ஒரு வெள்ளைக்கார துரையைப் போலவே வளர்த்த காரணத்தினால் அரவிந்தருக்கு தாய்நாடு திரும்பியபோது அவரது தாய்மொழியான வங்காளம் கூடத் தெரிந்திருக்கவில்லை. தாய்நாட்டின் பண்பாட்டினைப் பற்றி அவர் ஏதும் அறிந்திருக்கவில்லை.

‘இந்தியா மூடப் பழக்கவழக்கங்கள் நிறைந்த நாடு, நிர்வாண சாமியார்களும் பாம்பாட்டிகளும் நிறைந்த தேசம்’ என்றே அவர் நினைத்தார். ஆனால் அவருக்கு ஒரு ஆச்சரியம். ‘இந்த மக்கள் எத்தனை ஏழையாக இருந்தபோதும் எப்படி உயர்ந்த சிந்தனையோடும் நல்ல பண்புகளோடும் இருக்கிறார்கள்’ என்று சிந்தித்தார்.

இதற்குக் காரணம் ராமாயணமும் மகாபாரதமும் என அவர் அறிந்துகொண்டார். பாரதத்தின் இரண்டு கண்களைப் போன்ற இவற்றைப் படிக்கத் தொடங்கினார். பாரதம் குறித்த அரவிந்தரின் பார்வை மெல்ல மாறத் தொடங்கியது. இந்திய மரபின் ஆணிவேரைத் தேடி தீவிர தாகத்தோடு படிக்கத் தொடங்கினார் அரவிந்தர். அப்படியே யோகா பயிற்சியிலும் ஈடுபடத் தொடங்கினார். அரசியல் நடவடிக்கைக்கு யோக மார்க்கத்திலும் செயலாற்ற முடியும் என்பதை 1904ம் ஆண்டில் உணர்ந்துகொண்டார்.

அந்தத் தருணத்தில், ‘நியூ லேம்ப்ஸ் ஃபார் ஓல்டு’ என்ற தலைப்பில் ஒரு பத்திரிகையில் 9 வாரம் தொடர் கட்டுரை வெளியாக இருந்தது. பத்திரிகை ஆசிரியர் கே.ஜி.தேஷ்பாண்டே அரவிந்தர் குறித்து எழுதி இருப்பது ஒரு சோறு பதம்.‘நமது தற்போதைய அரசியல் முன்னேற்றம் குறித்து தற்போதைய நிலைமைகளை உன்னிப்பாக கவனித்துவரும் மிகவும் திறமை வாய்ந்த ஒருவர் தொடர் கட்டுரை எழுதுவார் என்று வாசகர்களுக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்பு நாங்கள் உறுதி அளித்திருந்தோம்.

இந்தக் கட்டுரைகளின் முதல் தவணையை வாசகர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ‘நியூ லேம்ப்ஸ் ஃபார் ஓல்டு’ என்ற தலைப்பில் வெளிவரும் கட்டுரைகள் உருவக அணிகள் கொண்டதாக இருந்தாலும் சூசக கருத்துகளைத் தெரிவிப்பதாக இருக்கும். இதில், சாதாரண அரசியல்வாதிகள் கொண்டிருக்கும் கருத்துகளுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துகள் அடங்கி இருக்கும்.

இலக்கியத் திறமை, கலாசார சுதந்திரம், கணிசமான அனுபவம் உள்ள எழுத்துக் கலையில் கை தேர்ந்த தனது கருத்துகளை தனக்கே உரிய பாணியில் வன்மையாக எடுத்துரைக்கும் ஒருவர் நமக்குக் கிடைத்திருக்கிறார். இதனாலேயே இந்தக் கட்டுரையை அனைவரும் படிக்க வேண்டியது அவசியம்’ என்று பெருமை பொங்க குறிப்பிடுகிறார்.

அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. இதில் அரவிந்தர் வெளிப்படுத்திய தேசியவாத கருத்துகள் நாடு முழுவதிலும் சுதந்திரத் தீயைத் தகிக்க வைத்தது.பரோடா சமஸ்தானத்தில் அரசப் பணியில் சேர்ந்தார். ஏழு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். அப்போது காஷ்மீருக்கு வேலை நிமித்தமாகச் சென்ற போது ஆதிசங்கரரின் திருக்கோயிலுக்குச் சென்றார்.

அங்கு அவரது மனம் மிக உயர்ந்த ஆன்மிக அனுபவத்திற்கு ஆட்பட்டது. அதைத் தொடர்ந்து அத்வைதம் குறித்து தான் எழுதிய கவிதையில் அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் அரவிந்தர். பிறகு, சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளுக்காக வங்காள தேசியக் கல்லூரியில் முதல்வராகப் பணியைத் தொடர்ந்தார். அப்போதே அவருக்கு மாதச் சம்பளமாக 150 ரூபாய் வழங்கப்பட்டது.

1906ம் ஆண்டு பிபின் சந்திர பால், ‘வந்தே மாதரம்’ என்கிற பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராகச் செயல்பட்டு உதவும்படி அரவிந்தர் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதற்கு அரவிந்தர் சம்மதித்தார். பத்திரிகை உருவாக்கத்தில் தன்னைக் கரைத்துக்கொண்டார் அரவிந்தர்.

பாரதத்தில் கர்சன் பிரபுவின் சூழ்ச்சியால் ஏற்பட்ட வங்கப் பிரிவினையைக் கண்டு கொதித்துப் போனார் அரவிந்தர். கர்சனின் வங்கப் பிரிவினையைத் தீவிரமாக எதிர்த்தார். ஆங்கில அரசுக்கு எதிராக தன்னுடைய பலமான எதிர்ப்பைப் பதிவு செய்தார். பத்திரிகை மூலமும் மக்களிடையே சுதந்திர வேட்கையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதிக் குவிந்தார்.

இதனால் அரவிந்தர் ஆங்கில அரசால் 1907ல் ஒருமுறையும் 1908ல் ஒருமுறையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த நேரங்களில் சுவாமி விவேகானந்தரின் தரிசனம் கிடைத்தது. கீதை, வேதங்கள் என ஆன்மிக நூல்களைப் படித்த அவர், யோக நெறியில் அதிகம் அக்கறை கொள்ள நேர்ந்தது. 1909ல் சிறையிலிருந்து விடுதலை பெற்ற அரவிந்தர், தன்னுடைய முழு கவனத்தையும் யோக நெறியில் ஈடுபடுத்திக்கொண்டார்.

1910ம் ஆண்டு, ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அங்கிருந்து தப்பித்து சந்திர நாகூருக்குச் சென்று, பிறகு புதுச்சேரியை வந்தடைந்தார். அவரை மகாகவி பாரதியார் தலைமையிலான தமிழர்கள் வரவேற்று அரவணைத்துக்கொண்டார்கள்.

அரவிந்தர் இங்கு வருவார் என்பதை நாகை ஜபதா என்ற யோகி பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருந்தார். தான் விரைவில் சித்தியடையப் போகிறோம் என உணர்ந்திருந்த யோகி, தன்னை வந்து சந்திக்குமாறு தம் பக்தர்களை அழைத்திருந்தார். அந்த பக்தர்களில் முதன்மையானவரான ஜமீன்தார் கே.வி.ஆர்.ஐயங்கார், ‘‘எதிர்காலத்தில் யாரிடமிருந்து நாங்கள் ஆன்மிக வழிகாட்டுதலைப் பெறுவது?’’ என்று யோகியிடம் கேட்டார்.

அதற்கு ‘‘வடக்கி லிருந்து ஒரு யோகி வருவார். அவர் தெற்கில் அடைக்கலம் புகுவார். அவரே உங்களுக்கு வழிகாட்டி அருள்வார்’’ என்று சொல்லி இருந்தார். அதன்படியே நிகழ்ந்தது அரவிந்தரின் வருகை.அரவிந்தர் பாண்டிச்சேரி வந்ததில் இருந்து, 1910 அக்டோபர் வரையிலும் கோமுட்டி செட்டித் தெருவில் சங்கர் செட்டி வீட்டிலேயே தங்கி இருந்தார். சுவாமி விவேகானந்தர் பாண்டிச்சேரி வந்திருந்தபோதும் இவரது வீட்டில்தான் தங்கி இருந்தார். பின்னர் சுந்தர் செட்டியாரின் வீட்டில் தங்கினார். இங்கு அரவிந்தர் தனது அரசியல் நடவடிக்கைகளை முழுவதுமாகக் கைவிட்டு முழு ஆன்மிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

உலகத்தைத் துறந்து, இறைவனை அடைய வேண்டும். யோகத்தினால் கிடைக்கும் வலிமையைக் கொண்டு நாட்டு மக்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காக யோகம் புரிந்து கொண்டிருக்கும் மகான் அரவிந்தரைத்தான் சந்திக்கப் போகிறார், மிராவின் கணவர் பால் ரிச்சர்ட்!சந்தித்த வேளையில் நிகழ்ந்ததென்ன?

அன்னையின் அற்புதம்

சகலமும் தரும் சாவித்ரி மகா காவியம்‘‘ ‘உண்மையின் வருகைக்கு வந்தனம்’ - இதுதான் என் வாழ்க்கையை மாற்றிய மந்திரம். 1950 ஆகஸ்ட் 15 அரவிந்தரின் கடைசி தரிசனப் படத்தோடு என் சகோதரி வசந்தா எனக்கு அனுப்பிய வாழ்த்து அட்டையில் இருந்தது இந்த மந்திரம். அப்போது முதல் அன்னையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல் என்னுள் எழுந்தது.

அந்தத் தேடலில்தான் அரவிந்தர் எழுதி அருளிய ‘சாவித்ரி’ என்னும் மகா காவியம் எனக்கு அறிமுகமாகியது. ஆரம்பத்தில் அது எனக்குப் புரியவே இல்லை. முழு ஈடுபாட்டுடன் படிக்கப் படிக்க, வாழ்க்கையின் எல்லா கேள்விகளுக்கும் சாவித்ரியில் பதில் இருப்பது புரியத் தொடங்கியது. என் எல்லா கவலைகளையும் நீக்கும் அருமருந்து சாவித்ரி புத்தகம்தான்.

ஒரு முறை ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் பதிவு செய்யப் போனபோது, என் பையை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன். அதில் பணம், பாஸ்புக், செக் என முக்கியமான ஆவணங்கள் எல்லாம் இருந்தன. வீட்டிற்கு வந்து, ‘நான் கவனக்குறைவாக இருந்தது தவறுதான். என்னை மன்னித்துவிடுங்கள்.

தொலைந்த என் பொருட்கள் மீண்டும் கிடைக்க வேண்டும்’ என வேண்டிக்கொண்டு சாவித்ரி படித்தேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு தேடி வந்து என் பையை ஒரு அன்பர் ஒப்படைத்துச் சென்றார். இப்படி ஏராளமான அற்புதங்களை அன்னை என் வாழ்வில் நிகழ்த்தி இருக்கிறார்.

மயிலாப்பூரில் சாய்பாபா கோயில் அருகே இருக்கும் அரவிந்தர் அன்னை தியான மையத்தில் சாவித்ரி மகா காவியம் பற்றி தொடர்ந்து உரை நிகழ்த்தும் அளவுக்கு இன்று நான் தேர்ச்சி அடைந்துள்ளேன். அன்னையின் அருளே இதற்குக் காரணம். சாவித்ரி நூலைப் படிப்பது மாத்திரமல்ல...

அதை வீட்டில் வைத்திருந்தாலே எல்லா நலமும் சேரும். சென்னையில் அன்னை ஆசிரமம் வாயிலாக பல்லாயிரக்கணக்கான வீட்டிற்கு சாவித்ரி மகா காவியம் சென்றுள்ளது. சாவித்ரி எல்லோருடைய வீட்டிற்கும் செல்ல வேண்டும் என்பதே என் ஆசை!’’ என்று நெகிழும் சுப்ரமணியம், சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கிறார். இவரை ‘சாவித்ரி பைத்தியம் சுப்ரமணியன்’ என்றே அழைக்கிறார்கள்.

வரம் தரும் மலர்!

கொடிய நோயை குணமாக்கும் வாடாமல்லி!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆனால், நோய் வந்துவிட்டால் அதை எதிர்கொண்டுதானே ஆக வேண்டும். அன்னையின் அருளோடு நோயை வெல்ல முடியும். வாடாமல்லியையும் பூவரசம்பூவையும் அன்னைக்கு சமர்ப்பித்து மனமுருக வேண்டிக்கொண்டால் தீராத நோயும் தீரும்!

(பூ மலரும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்

ஓவியம்: மணியம் செல்வன்