அழியாத கோலங்கள்



பிரபல இயக்குனர் மணிரத்னம், திரைக்கதை எழுதும்போதே வி.கே.ராமசாமிக்கு ஒரு பாத்திரத்தை வைத்துக்கொண்டுதான் கதை படைப்பார் என்று நினைக்கிறேன். நான் திரையுலகத்தில் தேவை இல்லாமல் மூக்கை நுழைத்ததாக ஒரு குற்றச்சாட்டை நானே ஒப்புக்கொண்டாலும், அதில் எனக்குக் கிடைத்த பெரிய லாபம் அமரர்... நடிகர்... வி.கே ராமசாமி. அவரின் நண்பன் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பெருமை மட்டுமே எனக்கு வெற்றியாகத் தோன்றுகிறது.

COUNTER MANI என்று பெயர் சூட்டப்பட்ட நடிகர் கவுண்டமணி திரையுலகில் நுழையும் முன்னர், பின்னவருக்காக ஒரு சீட் ரிசர்வ் செய்து வைத்து, ‘‘இதைத் தொடரப்பா!’’ என்று அய்யா வி.கே.ஆர் சொன்னதுபோல் தோன்றுகிறது. வெறும் நகைச்சுவை மட்டுமல்லாமல் ஒரு அறிவுத்திறனையும் காட்டி ஒரே நேரத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் அவர்.

இன்றைய கூகுள் வகையறா பேர்வழிகளிடம் கேட்டால் ரஜினி, கமல் படங்களுக்கு முன்கதைச் சுருக்கம் தவிர வேறு எதுவும் வெளியில் வராது. நான் பரமக்குடி பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில், பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் தலையிலும் ஒட்டு மீசையிலும் வெள்ளை அடித்துக்கொண்டு கிழட்டுத் தந்தையாக நடித்தவர் அய்யா வி.கே.ஆர்.

பரமக்குடிக்கு எந்த நாடகக் கம்பெனி வந்தாலும் எங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வருவதும் ஒரு கட்டாயமாகும். அன்று நாடகக் கலைஞர்களுக்கு என் பெற்றோர்கள் கொடுத்த அன்பும் மரியாதையும்தான் இன்று எங்கள் குடும்பத்தில் பலரை கலைத்துறை யில் வளர்த்து விட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

அப்படி எங்கள் வீட்டுக்கு வந்த அவரைப் பார்த்து, ‘அந்த நரைத்த தலையும் நரைத்த மீசையுமாக நாடக மேடையில் வந்த ஆள் இவர்தானா?’ என்று யோசித்தபோது, ‘‘என்னடா திருதிருன்னு முழிக்கிறே? இவர்தாண்டா தாத்தாவா நடிச்சவரு’’ என்றார் அப்பா.

வி.கே ராமசாமி என்ற அந்த 20 வயது இளைஞர், ‘‘வக்கீலய்யா! கேளுங்க... ஒருவேளை திருடன்னு நினைச்சு முழிக்குதோ என்னவோ தம்பி!’’ என்றார்.

அன்று ஆரம்பித்த அந்த ‘லொள்ளு’ 2002ம் வருடம் வரை நிலைத்து நின்றது. அவரிடம் எந்த நேரத்திலும் பொங்கி எழுந்து வரும் நகைச்சுவைகள் சரித்திரப் புகழ் பெற்றவை. 1946ம் வருடம் நான் திருச்சி நேஷனல் கல்லூரிக்கு பரமக்குடியிலிருந்து திருச்சிக்கு ரயிலில் போய்க்கொண்டிருந்தேன். சென்னை செல்லும் இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸ் ‘தேவகோட்டை ரோடு’ ரயில் நிலையத்தில் நின்றது. மாலை 4 மணி இருக்கும். நானும் என் வகுப்புத் தோழர்கள் இரண்டு பேரும் இறங்கி வேடிக்கை பார்த்தோம்.

ஸ்டேஷனுக்குக் கீழே கட்டப்பட்டிருந்த ஏவி.எம் ஸ்டுடியோ ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை வாயிலிலிருந்து சேர்களையும் சில மேஜைகளையும் பணியாளர்கள் கொண்டு வந்து திறந்தவெளி அரங்கில் போட்டுக்கொண்டிருந்தார்கள். நாங்கள் நான்கைந்து பேர், போனால் போகட்டும் என்று ரயிலைத் தவற விட்டு விட்டு ஷூட்டிங் பார்க்கும் ஆர்வத்தில் தேவகோட்டை ரஸ்தா இரும்பு வேலியில் பொறுமையாக உட்கார்ந்திருந்தோம்.

அன்றைய ஹீரோ டி.ஆர்.மகாலிங்கமும், பின்னால் எங்களுக்கு என்றும் ஹீரோவாகத் திகழ்ந்த வி.கே.ராமசாமியும் வெயிலில் சோபாவில் உட்கார்ந்து, தலையில் அடிக்கும் வெயில் போதாதென்று, வெள்ளித் தகடுகள் கொண்டு பல பக்கங்களிலிருந்து வெயிலடிப்பதையும் தாங்கினார்கள். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த முதல் திரைப்பட ஷூட்டிங். படத்தின் பெயர், ‘நாம் இருவர்’. அன்று மட்டுமல்ல... இன்று கூட ஏவி.எம் நிறுவனத்தாரின் வெற்றிப் படம்.

இதுவெல்லாம் அப்பப்போ வரும்... ஒரு முறை ஷூட்டிங்குக்கு கமலும் வி.கே.ஆரும் இரவு ரயிலில் சேலம் போகும்போது ஒரு ஸ்டேஷனில் இரவு வெகுநேரமாக ரயில் நின்றதாம். அரைத் தூக்கத்தில் வி.கே.ஆர், ‘‘கமல் கண்ணா... ஏம்பா ரொம்ப நேரமா நிக்குது?’’  என்று கேட்டாராம்.  ‘‘ஏதோ ரெண்டு ரயில் கிராஸிங் அண்ணே!’’‘‘அப்படியா தம்பி! நான் தூங்கறேன்... இந்தக் கிராஸிங், ஒரு குட்டி ரயில் போட்டுச்சுன்னா எடுத்து வை! வீட்டுக்குக் கொண்டு போவோம்’’ என்றாராம்.

நாங்கள் ‘ராஜபார்வை’ படம் எடுக்கும்போது நான் புரொடக்ஷன் மேனேஜர். கொஞ்சம் ஏற்பாடுகள் செய்ய வேண்டிய ஸ்டன்ட் சீன். எல்லாம் தயாரானதும் என் காரில் வந்து அழைத்துப் போவதாக வி.கே.ஆரிடம் சொல்லியிருந்தேன். இவரோ அதற்கு முன்பே தன் காரில் வந்துவிட்டார்.

“ஏன் அண்ணே அதுக்குள்ளே வந்தீங்க? நான் சொல்லிருந்தேனே!” என்றால்,‘‘நீ சொல்லுவேப்பா. உன் கணக்குப்பிள்ளை போன் பண்ணி வரச் சொல்லிட்டான். வந்துட்டேன். நாளைக்கு சம்பள செக் அவன்தானேய்யா கொடுக்கப் போறான். உன்னோட அடிச்சுக்கலாம், சேர்ந்துக்கலாம். காசு விஷயத்திலே ரிஸ்க் எடுக்க மாட்டேன்!’’ என்றார்.

அதோடு, ‘‘கணக்குப்பிள்ளை இருந்தும் கெடுத்தான்... செத்தும் கெடுத்தான்!’’ என்று ஒரு பழைய கதையே சொன்னார். ஒரு கிராமத்தில் கணக்குப் பிள்ளை பல வழிகளில் வரிக்கணக்குகளைக் குழப்படி செய்து மக்களை எல்லாம் தொல்லைப்படுத்தி வந்தானாம். மொத்த கிராமமே அவன் சாகும் தறுவாய் வரை அவனைக் கண்டு கொள்ளவில்லையாம். கடைசி நாளன்று அவன் ஊரைக் கூட்டி, தான் செய்த கொடுமைகளுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டானாம். தான் இறந்த பிறகு வைக்கோல் பிரியைக் கட்டி பாடையை யாரும் தூக்காமல் சுடுகாடு வரை இழுத்துப் போனால்தான் ஆத்மா சாந்தி அடையும் என்று கேட்டுக்கொண்டானாம். கிராமத்து மக்களும் ஒப்புக்கொண்டார்களாம்.

அப்படி போகும் வழியில் போலீஸார் வந்து, கிராமத்தார் அனைவரையும் கைது செய்து கொலை வழக்கு போட்டார்களாம். ‘ஊரார் சேர்ந்து தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக’ ஏற்கனவே மனு அனுப்பி விட்டுத்தான் உயிரை விட்டிருக்கிறான் பாவி கணக்குப்பிள்ளை. இருந்தும் கெடுத்தான்... செத்தும் கெடுத்தான்.

டி.ஆர்.மகாலிங்கமும் வி.கே.ராமசாமியும் வெயிலில் சோபாவில் உட்கார்ந்து, தலையில் அடிக்கும் வெயில் போதாதென்று, வெள்ளித் தகடுகள் கொண்டு பல பக்கங்களிலிருந்து வெயிலடிப்பதையும் தாங்கினார்கள்.

ஏப்ரீல்

நூடுல்ஸ் மரம்

ஸ்பகட்டி எனும் நூடுல்ஸ் நேரடியாக மரத்திலேயே காய்ப்பதாக உலகப் புகழ் பனோரமா நிகழ்ச்சியில் ஒரு வீடியோவை ஒளிபரப்பியது பி.பி.சி. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் நூடுல்ஸை அறுவடை செய்யும் அந்த செட்டப் காட்சியை நம்பி, ஆயிரக்கணக்கான மக்கள் நூடுல்ஸ் மரக்கன்று கேட்டு பி.பி.சிக்கு போன் போட்டார்களாம்! ஆண்டு 1957... அப்போ வெள்ளந்தியா இருந்திருக்கான் மனுஷன்!

(நீளும்...)

சாருஹாசன்

ஓவியங்கள்: மனோகர்