யதார்த்தம்



அடித்துப் போட்டது போன்று உடல்வலி கனன்று கனன்று வருத்தியது, அதனால் காலை மணி பத்து அடித்த பின்பும் வர்ஷினி படுக்கையை விட்டு எழவில்லை. கான்பூர் ஐ.ஐ.டியில் பி.டெக் படித்து விளம்பரத்துறையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக மாடலிங் செய்து வருகிறாள் வர்ஷினி. அழகான முகத்தோற்றம்... வசீகர மான உடலமைப்பு... விளம்பரத்துறையில் ஏகப்பட்ட வாய்ப்புகள் அவளைத் தேடி வந்தன. இன்றைக்குக்கூட இரண்டு ஷெட்யூல் ஷூட்டிங்!

ஆனால், இருந்த கமிட்மென்ட்கள் அனைத்தையும் கேன்சல் பண்ணி விட்டாள். காரணம், பெண்களின் பிரத்யேகப் பிரச்னைதான். தாங்க முடியாத வயிற்று வலியும், உடல் சோர்வும் தந்த அசதியில் படுத்திருந்தவளை அவள் தாய் மரகதம் கூட தொந்தரவு செய்யவில்லை. ‘வேலை... வேலை...’ என்று ஓடிக்கொண்டே இருப்பவள், இப்படி சோர்ந்து கிடப்பது அவளுக்கே சங்கடமாகத்தான் இருந்தது. இருந்தாலும் இயற்கை உபாதையை என்ன செய்ய முடியும்!

வர்ஷினி கட்டிலில் படுத்தபடியே டி.வியை மேய்ந்தாள்... அப்போது ஒரு சேனலில் வர்ஷினி நடித்த பிரபல நாப்கின் விளம்பரம் வந்தது. அதில் அவள், அந்த மூன்று நாள் பிரச்னைகளைப் பொருட்படுத்தாமல் அந்த நாப்கின் துணையுடன் ஓடி ஆடி வேலை செய்துகொண்டிருப்பது போல் காட்சி ஓடியது.                                                  

ப.ம.ஜெயராமன்