ரூட்டு மாறும் சாம்சங்!



‘‘இந்த ஐ போன் 6ன் கொட்டத்தை அடக்க ஒருத்தன் வர மாட்டானா?’’ என்றதும், ஹீரோவின் காலைக் காட்டுவார்களே... அப்படியொரு மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறது சாம்சங் கேலக்ஸி எஸ் 6! புக்கிங் தொடங்கிய அன்றே டி.வி விளம்பரம் வந்துவிட்டது.

ராஜ்கிரண் படம் பார்ப்பவர்களிடமும் ரீச் பண்ணுவது தான் எப்போதுமே சாம்சங் ஸ்டைல். ஆனால், அந்த தரை டிக்கெட் அக்கறையை இனியும் அது தக்க வைக்குமா? அந்த சந்தேகத்தைத்தான் கிளப்பியிருக்கிறது இந்த ரிலீஸ்!

‘சாம்சங் கேலக்ஸி எஸ்’ பரம்பரையில் முந்தைய பதிப்பான எஸ் 5 மாடலை நிஜமாகவே தூக்கி விழுங்கும்படி வந்திருக்கிறது எஸ் 6. இதில் இரண்டே வகைகள்... ஒன்று கேலக்ஸி எஸ் 6, மற்றொன்று எஸ் 6 எட்ஜ். ஏப்ரல் 10 அன்று இவை இந்தியர்கள் கையில் தவழும். மார்ச் 23 முதலே முன்பதிவு துவங்கிவிட்டது. வழக்கம் போல இது ஆப்பிள் ஐபோன் 6க்கு நேரடி போட்டி தான். ஆனால், இந்த முறை போட்டி கொஞ்சம் ராயல்!

உறுதியில் ராயல்

இதுநாள் வரை யில் சாம்சங் தனது தொழில்நுட்பத்தில் ஆப்பிளுடன் போட்டி போடுமே தவிர, உறுதியான கட்டமைப்பில் அடக்கியே வாசிக்கும். பிளாஸ்டிக் பொருட்களால் உருவாக்கப்படும் சாம்சங் போன்கள் தவறி விழுந்தால், ததிங்கினத்தோம்தான். இதனால்தான் அவர்களால் கம்மி விலையில் போன் விற்க முடிந்தது.

ஒரு கட்டத்தில் ஆப்பிளே சாம்சங் அளவுக்கு இறங்கி வந்து ஐ போன் 5சி என்ற மாடலை பிளாஸ்டிக்கில் கொண்டு வர நேர்ந்தது சோகக்கதை. ஆனால், ‘நீ இறங்கினா, நான் ஏறுவேன்’ என சபதம் பூண்டிருக்கும் சாம்சங், இம்முறை எஸ் 6 மாடலை ஐபோன் போலவே அலுமினியம் சேஸிஸ் கொண்டு இழைத்திருக்கிறது. மற்ற பிராண்டுகளை விட, தங்கள் போன் இரண்டு மடங்கு உறுதியானது என்று சவாலும் விடுகிறது.

விலையில் ராயல்

சாம்சங் போன் என்றால் அதிகபட்சம் ஐம்பதாயிரம். அவ்வளவுதான் மரியாதை! ஆனால் இந்த முறை அந்த எல்லையைத் தாண்டியிருக்கிறார்கள். கேலக்ஸி எஸ் 6 49,900 ரூபாய் முதல் 61,900 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே எஸ் 6 எட்ஜ் என்றால் அதிகபட்சம் 70,900 ரூபாய் வரை விலை.

ஆப்பிள் காப்பிகள்

இதுவரை வந்த சாம்சங் போன்கள் எல்லாமே கழற்றி எடுக்கக் கூடிய பேட்டரிகள் கொண்டவைதான். சரித்திரத்தில் முதல்முறையாக கழற்ற முடியாத இன்பில்ட் பேட்டரிக்கு மாறியிருக்கிறது சாம்சங். அதுமட்டுமல்ல...

‘போனில் கொஞ்சம் மெமரி இருக்கும்.. மேற்கொண்டு தேவைப்பட்டா நீ மெமரி கார்டு போட்டுக்கோ!’ என்பதுதான் இதுவரை சாம்சங்கின் பாணி. ஆனால், இப்போது இந்த எஸ் 6 அப்டேட்டில் மெமரி கார்டு போட முடியாது. போனிலேயே 32 ஜிபி, 64 ஜிபி, 128 ஜிபி என மூன்று வித மெமரிகள் உள்ளன. இதெல்லாம் அப்படியே ஆப்பிளைப் பின்தொடரும் முயற்சி!

என்ன புதுசு?

டெக்னாலஜி வகையில் சாம்சங் புதுமைகளைத் தராமல் இல்லை. முதல் முறையாக டிடிஆர்4 ராம் பயன்படுத்தப்பட்டிருப்பது, எக்ஸினோஸ் எனும் நிறுவனத்தின் எட்டு கோர் ப்ராசஸரை அறிமுகப்படுத்தியிருப்பது, வேண்டாத ஆப் எதுவானாலும் தூக்கிவிடலாம் எனக் கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரம்... இப்படி புதுமைகளின் லிஸ்ட் பெரிது. இந்தப் புதுமைகளால் இந்த போன் முந்தைய போன்கள் அனைத்தையும் விட 35 சதவீதம் அதிக வேகம் கொண்டது என்கிறார்கள்.

அது என்ன எட்ஜ்?

எல்லாவற்றையும் விட பெரிய புதுமை எஸ் 6 எட்ஜ் என்ற மாடலின் தொழில்நுட்பம்தான். வழக்கமான ஸ்மார்ட் போன்கள் போல் இல்லாமல், இதன் ஸ்கிரீன் பக்கவாட்டுப் பகுதிகளில் வளைந்து, ஓரங்களிலும் ஆபரேட் செய்யக் கூடியதாய் இருக்கும். இது தொல்லையா, சிறப்பம்சமா என்பது தெரியவில்லை. ஆனால், இப்போதைக்கு செல்போன் உலகில் இது புத்தம்புது முயற்சி!

எல்லாம் சரி... திடீரென்று சாம்சங் ஏன் இப்படி ராயல் முயற்சிகளில் இறங்க வேண்டும்? ஆப்பிள் போல மாறவும், ஆப்பிள் வாடிக்கையாளர்களைக் கவரவும் ஏன் முயல வேண்டும்? இதுதான் இன்று உலகம் முழுவதும் கேட்கப்படும் ஒரே கேள்வி. இதற்கு பதில் ஒன்றே ஒன்றுதான்... போட்டி தாளவில்லை!

‘நீ ஆப்பிள்னா நான் இலந்தைப் பழம்’ எனத் தனக்கென்று ஒரு தனிக் கூட்டத்தைத் தேடிக் கொண்ட பிராண்ட்தான் சாம்சங். ஆனால், இன்று இலந்தைப்பழம் விற்க வண்டி வண்டியாய் ஆட்கள் வந்துவிட்டார்கள். நேற்று முளைத்த மைக்ரோமேக்ஸ், ‘நான்தான் இந்தியாவின் மன்னன்’ என்கிறான். சீனாவின் ஜியோமி, ஆன்லைனிலேயே ஆப்பு வைக்கிறான். அவர்கள் ரேட்டுக்கு நம்மால் இறங்க முடியாது என்ற முடிவுக்கு சாம்சங் வந்துவிட்டது.

ஸோ, ‘நான் அதே இலந்தைப் பழத்தை சாலட் செய்து சிட்டி சென்டரில் வித்துக்கறேன்’ எனக் கிளம்பிவிட்டது. ‘‘இந்த எஸ் 6 வெற்றியோ தோல்வியோ... ஆனால், இனி பத்தாயிரம் ரூபாய்க்குக் கீழே உள்ள ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் சாம்சங்கின் சகாப்தம் ஓவர்!’’ என உறுதியாகவே சொல்கிறார்கள் டெக் பிரியர்கள். நாம வாங்கலன்னா என்ன? நல்லா வரட்டுமே!

- நவநீதன்