எனக்கும் நயன்தாராவுக்கும் போட்டி!



‘‘‘நண்பேன்டா’ ரெடி. டார்கெட் பக்கா. நல்லா வந்திருக்குன்னு சந்தோஷம். ட்வென்ட்டி 20 ஆட்டத்துக்கே ஹைலைட்ஸ் கட் பண்ணிப் போட்டா எப்படி இருக்குமோ... அப்படி இருக்கும் படம். காமெடி, பாட்டு, டான்ஸ்னு கலகலப்பா ஒரு பயணம் போயிருக்கோம்.

ஆர்யாவும், சந்தானமும் கலாய்ச்ச டயலாக் இந்த வார்த்தை. ‘ஓ.கே ஓ.கே’ படத்திற்கு முதலில் வச்ச தலைப்பே ‘நண்பேன்டா’தான். அந்த சமயம் விஜய் சார் நடிச்ச ‘நண்பன்’ வந்ததால எதுக்குன்னு தலைப்பை மாத்திட்டோம்.

படம் பாக்க நீங்க உட்கார்ந்திருக்கிற நேரம் அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கும். எனக்கு அதில்தான் திருப்தி!’’ - வார்ப்பாக உரையாடுகிறார் உதயநிதி. தமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நாயகனோடு கொஞ்சம் காபி, நிறைய சிரிப்போடு...

‘‘நீங்க ஆரம்பிச்சப்போ இருந்த ஆச்சரியம் இப்ப சகஜமாகிடுச்சு. இயல்பா நடிக்க ஆரம்பிச்சு ஒரு இடத்திற்கு வந்திட்ட மாதிரி இருக்கு. எப்படி இருக்கு இந்த ஃபீலிங்?’’‘‘தேங்க்ஸ். இன்னும் கூட நான் லெவலுக்கு வந்துட்டதா நினைக்கலை.

ஆனா, மூணு படத்திலும் நிறைய வித்தியாசத்தில் தேர்ச்சி ஆகியிருக்கேன். முதல் படத்தில் நான் போட்ட டான்ஸ் ஸ்டெப்பில் எனக்கே சந்தேகம் இருந்தது. நிறைய திருத்திக்கணும்னு தன்னால உணர்ந்தேன். தன் குறைகளைத் தானே உணர்ந்தால்தான் அதை மாத்திக்கிற வாய்ப்பு இருக்கு.

 இப்ப ‘நண்பேன்டா’ பாருங்க... எல்லாரும் ‘வெரிகுட்’ சொல்ற அளவுக்கு டான்ஸில் மாறியிருக்கேன். ஒவ்வொரு தடவையும் பாடல் காட்சியின்போதும் எனக்கும் நயனுக்கும்  போட்டியே நடக்கும். நான் ஆடும்போது பார்த்திட்டு இருக்கிற நயன், அவங்க ஸ்டெப் வரும்போது பின்னி எடுப்பாங்க.

‘என்னங்க இவரு இப்படி ஆடக் கத்துக்கிட்டாரு?’னு பிருந்தா மாஸ்டர்கிட்ட கேட்பாங்க. வர்றதுக்கு முன்னாடி மாஸ்டர்கிட்ட டான்ஸ் ரிகர்ஸல் செய்யிறது அவங்களுக்குத் தெரியாது. ஆக, இரண்டு பேரின் போட்டியும் நிறைய கலகலப்பான இடங்களுக்கு வழி செய்திருக்கு!’’
‘‘எப்படி இருக்கும் ‘நண்பேன்டா’?’’

‘‘சந்தோஷமா பொழுதுபோக்க சௌகரியமா ஒரு படம். கொளுத்துற கோடைக்கு ஆசுவாசமா சிரிப்பு பின்னும். போன நிமிஷமே பரவாயில்லைன்னு நினைக்கிற அளவுக்கு புதுசு புதுசா பிரச்னைகள் உருவாகிட்டு இருக்கிற இந்தக் காலத்துல, கொஞ்சம் கவலை மறந்து சிரிக்கலாம். குடும்பத்தோடு அவுட்டிங் போற மாதிரி வந்திட்டுப் போகலாம். நானும் சந்தானமும், கருணாகரனும் நண்பர்கள். அதில் கருணாகரன் கொஞ்ச நாளில் பிரிஞ்சு போயிடுவார்.

அப்படிப் போனதற்கு நாங்கதான் காரணம்னு நினைச்சிட்டு, இன்னொரு சமயத்தில் பழிவாங்க நினைப்பார். ‘டேய், காதல் சிரமம்டா, நிம்மதி போயிடும்டா’ன்னு எனக்கும் நயனுக்கும் இருக்கிற காதலை சந்தானம் கட் பண்ணப் பார்ப்பார். இதோட சந்தானத்திற்கு ஷெரின் ஜோடி. அது வேற கலாட்டா!’’‘‘மறுபடியும் நயன் ஜோடி. என்ன விசேஷம்?’’

‘‘அவங்களுக்கு டைரக்டர் ஜெகதீஷை ‘பாஸ் என்கின்ற பாஸ்கரன்’ காலத்திலிருந்தே தெரியும். கதையைக் கேட்டதுமே ஓகே சொல்லிட்டாங்க. ‘ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. நான் எப்படியோ, அதற்கு கொஞ்சம் பக்கத்தில்தான் கேரக்டரே அமைஞ்சிருக்கு’ன்னு சொன்னாங்க. படத்தில் எனக்கும் நயனுக்கும் சின்னச் சின்னதா ஈகோ மோதல் நடந்துக்கிட்டே இருக்கும். அப்படிப்பட்ட இடங்களில் இது நிஜம்தானானு நீங்க நினைக்கிற அளவுக்கு அத்தனை யதார்த்தம்.

நான் அவங்களை ‘லேடி சூப்பர் ஸ்டார்’னே சொல்லுவேன். ஏழு மணிக்கு ஷூட்டிங்னு சொல்லிட்டா, 6.50க்கு மேக்கப்போடு வந்து கேமரா முன்னாடி நின்னுட்டு, ‘ஷூட் ஆரம்பிங்க...’ன்னு சொல்வாங்க. நடிச்சோம், போனோம்னு போறவங்க இல்லை. எடிட்டிங்கில் ஏதாவது ஷாட் மாத்திப் போட்டு இருந்தா கூட அவங்களுக்குத் தெரியும்.

 ‘நாலாவது டேக் ஒண்ணு எடுத்தீங்க, மூணாவது டேக்கை போட்டு இருக்கீங்க’ன்னு கரெக்டா கண்டுபிடிச்சு சொல்லுவாங்க. டைரக்டரும் மாஸ்டரும் ஓகே சொன்னாலும் டான்ஸ்ல அவங்களுக்குத் திருப்தின்னு பட்டாதான் அடுத்த டேக் போக முடியும். இந்த அக்கறைதான் அவங்களை முதலிடத்தில் வச்சிருக்கு!’’‘‘தொடர்ந்து சந்தானமும்..?’’

‘‘நிஜமாவே நாங்க ஃப்ரண்ட்ஸ். ரெண்டு பேரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் அந்த இடமே சிரிப்பு தெறிக்கும். ஒருத்தரை ஒருத்தர் வாரிக்கிறதில் போட்டி போடுவோம். விட்டுக் கொடுப்போம். அக்கறையா இருப்போம். இப்ப கூட நாங்க இரண்டு பேரும் முடிவு பண்ணி, ‘அடுத்த ரெண்டு படமும் நாம சேர்ந்து நடிக்க வேண்டாம். அப்புறமா சேர்ந்துக்குவோம்’னு பேசி வச்சிருக்கோம். என்னோட அடுத்த ‘கெத்து’ படத்திற்கு கருணாகரன்தான் காமெடி!’’‘‘பாடல்கள் நல்லா வந்திருக்கே?’’

‘‘ஹாரிஸ் உழைப்பை மறக்க முடியாது. ஒரு பாடலை பாலித் தீவில் எடுத்தோம். அந்தப் பக்கம் எந்த ஷூட்டிங்கும் நடந்ததேயில்லை. ‘மறுபடி’ பாடலை அயர்லாந்திலும், ‘நீ சன்னோ... நியூ மூனோ’ பாடலை லண்டனிலும் எடுத்திருக்கோம். ‘ஓ.கே ஓ.கே’வில் எனக்கும் சேர்த்து சந்தானம் நடிப்பார். இதில் நான், சந்தானம், நயன்னு சரிக்கு சமமா கேரக்டர் செய்திருப்போம். எனக்கு என்னவோ ‘நண்பேன்டா’, ‘ஓ.கே ஓ.கே பார்ட்-2’ மாதிரி இருக்கும்னு தோணுது!’’

- நா.கதிர்வேலன்