நகை



அந்தக் கல்யாண மண்டபத்தில் எல்லா பெண்களின் கண்களும் சகுந்தலாவின் கழுத்திலும், காதிலும், கரங்களிலும் மின்னிய நகைகளைத்தான் வெறித்துக்கொண்டிருந்தன. சமாளிப்பாக ஒவ்வொருவரையும் பார்த்துச் சிரித்த சகுந்தலா, உள்ளுக்குள் நொந்துகொண்டாள்.

போன வருடம் இதேபோன்ற ஒரு விசேஷத்தின்போது அவள் அணிந்து வந்த நாற்பது பவுனும் சொக்கத் தங்கம். அவள் கணவன் நல்ல வேலையில் இருப்பவன்தான். ஆனால் சூதாட்டம், குடியால் அத்தனையையும் விற்றுத் தீர்த்துவிட்டு, இன்று கவரிங் நகைகள் அணிந்து வந்து கௌரவத்தைக் காப்பாற்ற நடித்துக்கொண்டிருக்கிறாள். இது புரியாமல் பலரும், ‘‘எத்தனை பவுன் நெக்லஸ் இது? எந்த கடை?’’ என விசாரிக்கிறார்கள்!

அப்போது மண்டபத்திற்குள் நுழைந்த ராதாவை சம்பிரதாயமாய் நலம் விசாரித்து விட்டு நகர்ந்தார்கள் சில பெண்கள்.‘‘எல்லோரும் சிரிக்கறாங்களேன்னு பூனை போய் பொடக்காலியில் சிரிச்சுச்சாம்!’’ என்றாள் ஒருத்தி.‘‘என்னக்கா சொல்றே...’’ என்று கேட்டாள் இன்னொருத்தி.

‘‘கல்யாணம்னா எல்லோரும் நகை நட்டு போட்டு வருவாங்களேன்னு தன்னோட மெக்கானிக் புருஷனை நச்சரிச்சு ராதாவும் ஒரு கவரிங் நகையை வாங்கி மாட்டிக்கிட்டு வந்திருக்காளே... அதைச் சொல்றேன்!’’தன் ஆசை மனைவிக்காக இரண்டு வருடம் இரவும், பகலும் உழைத்து அந்த ஏழு பவுன் இரட்டைவடச் சங்கிலியைச் செய்து போட்ட ராதாவின் கணவன், இதைக் கேட்டுத் திகைத்து நின்றான்.றீ

சுபாகர்