வறுமையின் நிறம் நீலம்!



இயக்குநர் ரஞ்சித் புது கான்செப்ட்

‘‘நீலம் என்பது வெறும் நிறமில்லை நண்பா... அது ஒரு உணர்வு! ஒற்றுமையையும் சமத்துவத்தையும் வலியுறுத்துகிற வண்ணம்! அதனால, அதையே எங்க டிரஸ்ட்டுக்கு பேரா வச்சிட்டோம்!’’ - மெல்லிய புன்னகையோடு ஆரம்பிக்கிறார் ‘மெட்ராஸ்’ பட இயக்குனர் பா.ரஞ்சித். ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து பெரும் திறமைகளைக் கண்டெடுக்கவும், மறக்கப்பட்ட தமிழ்க்கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கவும் களமிறங்கியிருக்கிறது இவரின் ‘நீலம்’ அமைப்பு.

‘‘ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்த விஷயம் இது. இப்பதான் நேரம் கை கூடுச்சு. அதுக்கப்புறம் யோசிக்க ஒண்ணுமில்ல. தொடங்கிட்டோம். எனக்கு சொந்த ஊர் ஆவடி பக்கம் கரலபாக்கம்னு ஒரு கிராமம். சென்னை ஓவியக் கல்லூரியிலதான் படிச்சேன். என்னை மாதிரி எங்கயோ ஒரு மூலையில இருந்து சாதிக்கணும்னு முளைச்சு வர்ற இளைஞனுக்கு ஏதாவது ஒரு வகையில ஒரு ஊக்க சக்தி தேவைப்படுது. எனக்கு எங்க மாமா நிறைய வழி காட்டினார். அவரும் ஓவியக் கல்லூரியில படிச்சவர். அவர் மூலமா நான் நிறைய கத்துக்கிட்டேன். ஆனா, என் நண்பர்கள் நிறைய பேருக்கு அப்படியொரு வாய்ப்பு அமையல. இதனால, பெருசா வர முடியாதவங்க நிறைய பேர்.

இனி அந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாதுன்னு நினைச்சேன். ‘மெட்ராஸ்’ படத்துல கூட, கடைசியா ‘சமூக விழிப்புணர்வு அவசியம்’னு ஒரு மெசேஜ் வச்சிருப்பேன். அதோட தொடர்ச்சியா ஏதாவது செய்யணும்னு நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து பேசிட்டே இருந்தோம். குறிப்பா, முத்தமிழ், கலையரசன், ஜெய், அதியன் உள்பட இன்னும் சில நண்பர்கள் இருக்காங்க. அவங்க எல்லாருமே வாழ்க்கையில நிறைய பிரச்னைகளை சந்திச்சவங்க. எல்லாம் சமூக ரீதியிலான சிக்கல்கள். முத்தமிழ் கேன்டீன்ல வேலை பார்த்துட்டே கஷ்டப்பட்டு படிச்சவங்க.

அடுத்து, என்ன செய்யப் போறோம்ங்கிற ஐடியா இல்லாம இருந்திருக்காங்க எல்லாருமே. என் படத்துல நடிச்ச கலையரசன், நடிப்புக்காக பல இடங்களுக்கும் அலைஞ்சு திரிஞ்சிருக்கான். இப்படி நிறைய முன்னுதாரணங்கள். எல்லா வாய்ப்புகளுமே கிராமங்களிலும் சேரிகளிலும் வசிக்கிற பசங்களுக்கு எட்டாக்கனியாவே இருக்கு. அந்தப் பழத்தை அவங்களை ஈஸியா பறிக்கச் செய்யத்தான் இந்த டிரஸ்ட்! வறுமையில வாடுகிற பசங்களுக்கு நீலம் ஒரு வரப்பிரசாதம்’’ என்கிறார் ரஞ்சித் உற்சாகக் குரலில்.

தொடர்ந்து டிரஸ்ட்டின் செயல்பாடுகளை அடுக்குகிறார் செயலாளர் முத்தமிழ்.‘‘ஆறு மாசத்துக்கு முன்னாடி இந்த டிரஸ்ட்டை ஆரம்பிச்சப்பவே, கள ஆய்வுகள் நிறைய பண்ணினோம். முதல் கட்டமா வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர்ல ஒரு இடத்தைத் தேர்வு செஞ்சு, அங்க இருக்கற குழந்தைகளுக்கு ஓவியம், நடனம், நாடகம், கராத்தே, குங்ஃபூ பயிற்சிகள் கொடுத்தோம். இப்போ அங்க 100 பேர் வரை படிக்கிறாங்க. ஒவ்வொரு சனிக்கிழமையும் பயிற்சி நடக்குது. அந்தந்த துறைகள்ல மாஸ்டர்ஸா இருக்கிற எங்களோட நண்பர்களே வகுப்புகளை எடுக்கறாங்க.

எங்க நோக்கமே சமூக, பொருளாதார முன்னேற்றம் இல்லாத - அதுக்கு வாய்ப்பில்லாத பகுதிகளைத் தேர்ந்தெடுத்து கல்வி, சமூகம் பத்தின விழிப்புணர்வைக் கொடுக்குறதுதான். அதாவது, அங்கு 10 முதல் 15 வயது வரை இருக்கிற ஆண், பெண் குழந்தைகளோட அறிவுத்திறனையும், உடல்திறனையும் வளர்க்குறோம். கூடவே, அவங்களோட தனித்திறமையைக் கண்டுபிடிச்சு பயிற்சி கொடுக்குறோம். இங்க வர்ற குழந்தைகள் தங்களுக்குப் பிடிச்ச பயிற்சியில் சேரலாம். எல்லா பயிற்சியும் வேணும்னு நினைச்சாலும் கத்துக்கலாம். அவங்க தேவையை வச்சுத்தான் பயிற்சியே.

இப்போ அந்தக் குழந்தைங்க ‘எங்களுக்கு இங்கிலீஷ் பெரிய பிரச்னையா இருக்கு’ன்னு சொன்னாங்க. அதனால, ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் ஆரம்பிச்சிருக்கோம். அப்புறம், கரலபாக்கம் கிராமத்துல 40 பேர் படிக்கிறாங்க. சீக்கிரமே கண்ணகி நகர்ல ஆரம்பிக்கப் போறோம். எங்களுக்கு இடங்கள்தான் பிரச்னை. ஏற்கனவே டியூஷன் சென்டர் வச்சிருந்து நடத்த முடியாம இருந்தா, அதை நாங்க எடுத்து நடத்துறோம்.

இல்லன்னா புதுசாவே சென்டர் ஆரம்பிக்கிறோம்!’’ என்கிறவர், ‘‘யாராவது, ‘எங்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கணும்; எங்க பகுதியிலயும் ஆரம்பிக்கணும்’னு நினைச்சா எங்களைத் தொடர்பு கொள்ளலாம். நாங்க செய்யத் தயாரா இருக்கோம். தமிழ்நாடு முழுக்க இதைக் கொண்டு போறது தான் எங்க ஐடியா.

சீக்கிரமே, விழுப்புரம் பக்கத்துல ஒரு கிராமத்துலயும், திருச்சியிலயும் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். எங்களைப் பொறுத்தவரை விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கணும் என்பதுதான்’’ என்கிறார் நம்பிக்கையாக.
 
‘‘இந்த டிரஸ்ட் மூலமா அழிந்து போன கலைகளை ஆவணப்படுத்தவும் போறோம். தமிழகத்துல நிறைய கலைகள் இருந்து அழிஞ்சு போயிருக்கு. அதையெல்லாம் தொகுக்க வேண்டியிருக்கு. சுருக்கமா, நாங்க கல்வி, கலை, பண்பாடு, பெண்கள் முன்னேற்றம்... இதுல தொடர்ந்து இயங்கிட்டு இருப்போம். ‘சமூக விழிப்புணர்வை எட்டாதவரை, சட்டங்கள் அளிக்கும் எந்தவொரு விடுதலையும் உனக்கு எந்தப் பயனும் தராது’ன்னு டாக்டர் அம்பேத்கர் சொன்னார். அந்த சமூக விழிப்புணர்வை எட்ட வைக்க இந்த டிரஸ்ட் தன்னோட வேலையை நிச்சயம் செய்யும்!’’ - நம்பிக்கையாக முடிக்கிறார் ரஞ்சித்.

-பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்