பலான காத்து பார்சல்!



விநோத ரஸ மஞ்சரி

சிப்ஸ் பாக்கெட்டில் சிப்ஸை விட அதிகமாக காற்று இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘‘போற போக்கைப் பார்த்தா காத்தையும் பாக்கெட்ல அடைச்சு காசுக்கு விப்பாங்க போல!’’ என நீங்கள் புலம்பியிருக்கலாம். அதற்காக ஃபீல் பண்ணுங்கள். உங்கள் வாக்கு பலித்துவிட்டது. ரஷ்ய நிறுவனம் ஒன்று காற்றை டின்னுக்குள் அடைத்து வெற்றிகரமாக விற்கத் துவங்கிவிட்டது. ஒரு டின் விலை 180 ரூபாய்!

‘‘இதைப் போய் யாரு வாங்குவாங்க? காற்றுதான் எல்லா இடத்திலும் இருக்கே’’ என்கிறீர்களா? அங்கேதான் வைத்திருக்கிறார்கள் டிவிஸ்ட். சைபீரியாவில் உள்ள அசாஸ்கயா குகையில் இருந்து காற்றைப் பிடித்து இதில் அடைத்திருப்பதாகச் சொல்கிறது அந்த நிறுவனம். இந்தக் குறிப்பிட்ட குகையில்தான் எட்டி எனப்படும் பிரமாண்ட குரங்கு இனம் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவரை அப்படியொரு குரங்கினம் இருப்பதாக யாரும் நிரூபித்ததில்லை என்றாலும், இந்த குகைக்கு அருகே சிலர் பார்த்ததாகச் சொல்கிறார்கள்.

இதன் அருகே பெரிய பெரிய காலடித் தடங்கள் அடிக்கடி தென்பட்டு விஞ்ஞானிகளைக் குழப்புகின்றன. ஆக, இருக்குமோ இருக்காதோ எனும்படியான விலங்கு... அது வசிப்பதாகச் சொல்லப்படும் ஒரு குகை... அங்கிருந்து காற்றைப் பிடித்து வரவேண்டிய அவசியம் என்ன?இருக்கிறது. இந்தக் காற்றை நுகர்ந்தால் அந்த கிங்காங் குரங்கு போல சக்தி கிடைக்குமாம். தடகளம், விளையாட்டு மாதிரியான துறைகளில் தடாலடியாக ஜெயிக்கலாமாம். ஆனால், இதற்காகவெல்லாம் மக்கள் இந்த ‘டின் காற்றை’ முண்டியடித்து வாங்குவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? சான்ஸே இல்லை.

இதற்கெல்லாம் மேலாக, ஒருவித வயாகரா எஃபெக்ட் இந்தக் காற்றுக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தக் காற்றை முகரும் ஆண், அசுர பலத்தோடு கட்டிலில் ஒரு கொரில்லா அவதாரமே எடுப்பான்... தாம்பத்தியமே தாம்தூம் என்று களைகட்டும் எனச் சொல்கிறது இந்த ரஷ்ய நிறுவனம். ‘காத்தை விக்கிறாங்களா?’ எனக் கடுங்கோபம் கொண்ட கண்டமனூர்க்காரரு எங்கே? ஓ... இது இந்தியாவுல எங்க கிடைக்கும்னு விசாரிக்கப் போயிருக்காரா?

ரெமோ