ஜெயிச்சுக்கிட்டே இருக்க எதிரி முக்கியம்!



அஜித்தை கவர்ந்த வா டீல் டயலாக்!

‘‘ட்ரெய்லர்ல, ‘லைஃப்ல ஜெயிக்க ஃப்ரெண்ட் முக்கியம். ஆனா, ஜெயிச்சிக்கிட்டே இருக்க எதிரி முக்கியம்’னு ஒரு டயலாக் வரும். அஜித் சாருக்கு அது ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ட்ரெய்லர் கலக்கிட்டீங்கன்னு அஜித் சாரே சொன்னதும் தெம்பும், உற்சாகமுமா படத்தைக் கொண்டு வந்துட்டோம்!’’ - ஏ.சி குளிரை இன்னும் கூட்டியபடி பேசுகிறார் ‘வா டீல்’ படத்தின் அறிமுக இயக்குநர் ரத்னசிவா ஆர்.

‘‘சில விஷயங்களை ‘இன்றைக்கோட இது கடைசிடா. நாளைக்கு இதைப் பண்ணவே கூடாது’ன்னு நினைப்போம். ஆனா, அடுத்த நாளே அதைக் கட்டாயம் பண்ண வேண்டிய சூழல்ல இருப்போம். அப்படி ஒரு கான்செப்ட்தான் படம். எல்லாரும் ஷார்ட் ஃபிலிம் பண்ணிட்டு, ஹீரோவைத் தேடுவாங்க.

நான் படம் பண்றதுக்கு முன்பே ட்ரெய்லர் பண்ணிட்டு அருண் விஜய் சார்கிட்ட போய் நின்னேன். உடனே ஓகே சொன்னார். முப்பதே நாள்ல ஷூட்டிங் கிளம்பிட்டோம். ஒரு பக்கம் காதல்... மீதி மூணு பக்கம் ஆக்ஷன் சூழ்ந்த பயங்கர லவ் ஸ்டோரி இது. ஹவுசிங் போர்டு ஏரியாவில் வெட்டியா ஊரைச் சுத்துற பையனா அருண்விஜய். சேட்டுகிட்ட ஃபைனான்ஸ் வாங்கினவங்க பைக்கை எல்லாம் சீஸ் பண்ற லோக்கல் ரவுடி கேரக்டர்.

‘என்னை அறிந்தால்’ல அவரை விக்டரா, வில்லனா பார்த்தாச்சு. அது வெறும் பத்து பர்சன்ட்தான். இதுல பரபரன்னு சேஸிங், டான்ஸ், காமெடின்னு ஜாலி காக்டெய்லா நூறு பர்சன்ட் கலக்கியிருக்கார். அவர்கிட்ட ஒரு தடவை சொன்னாலே போதும்...

நினைத்ததைக் கொண்டு வந்திடுவார். ஏதாவது ஒரு ஷாட் சரியா வரலைன்னா, ‘இதை இன்னொரு டேக் எடுக்கலாம்’னு மனசுக்குள்ள நினைப்பேன். நான் ஷாட் ஓகே சொல்ற டோனை வச்சே, ‘ஒன்மோர் போயிருக்கலாமா?’னு அருண்விஜய்யே கேட்டு வாங்கி, பண்ணினது ஆச்சரியம்!’’

‘‘கார்த்திகா..?’’‘‘விஜயசாந்தி மாதிரி ஒரு போல்டான பொண்ணா கார்த்திகா கண்டிப்பா ஒரு ரவுண்ட் வருவாங்க. படத்துல கார்த்திகா வர்ற சீன்ல எல்லாம் ஃபைட்டும் சேர்ந்தே வரும். அவங்க கேரக்டர் பெயர் சிந்து.

பணக்கார ஜெயப்பிரகாஷோட பொண்ணா வர்றாங்க. அம்மா இல்லாத பொண்ணு. கிராமத்துல இருந்து சென்னைக்கு வர்றாங்க. அங்கே அவங்களுக்கு ஒரு பிரச்னை. அந்த ரிவெஞ்ச்ல ஹீரோ எப்படி ஜெயிக்கிறார்னு கதை போகும். ஷூட்டிங் ஸ்பாட்ல கார்த்திகா செம எனர்ஜி. ஒவ்வொரு ஷாட் அப்பவும்.. ‘இப்போ ஏன் அழணும்?’, ‘எதுக்கு சிரிக்கணும்?’னு கேப்பாங்க. அவங்களுக்கு அது தெளிவா புரிஞ்ச பிறகு, ஒரே டேக்ல ஓகே வாங்கிடுவாங்க!’’

‘‘படத்துல வேற என்ன ப்ளஸ்?’’‘‘டான்ஸ் மாஸ்டர் கல்யாண் இதுல வில்லனா பண்ணியிருக்கார். அருண்விஜய் நண்பரா சதீஷ்... காமெடி, சென்டிமென்ட்ல பின்னியிருக்கார். ஷூட்டிங் அப்போ அவர் சின்னதா ஒரு ஆபரேஷன் பண்ணியிருந்தார். அந்த நிலையிலும் ஃபைட், சேஸிங்ல எல்லாம் ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்கார். தமனோட மியூசிக் ரொம்பவே ஸ்பெஷல். பின்னணி இசை ‘தடையற தாக்க’வில் இருந்ததை விட, படு ஸ்பீடு. பெஸ்ட் மியூசிக் எனக்கு கொடுத்திருக்கார்னு சொல்லலாம்.

படத்துல மொத்தம் நாலு ஸாங் இருக்கு. அதுல ஒரு பாட்டை பாங்காக்ல பண்ணியிருக்கோம். ‘கும்கி’யில் ‘சொய்ங் சொய்ங்...’ பாடலை பண்ணின டான்ஸ் மாஸ்டர் நோபல், 2 பாடல்களுக்கு நடனம் அமைச்சிருக்கார்.  கோபி ஜெகதீஸ்வரன் கேமராவை கவனிக்கிறார். ‘மங்காத்தா’ எடிட்டர் பிரவீன் சார், ராஜசேகரன் மாஸ்டர் பைட். படத்தோட புரொட்யூஸர், அருண்விஜய் மச்சான் ஹேமந்த். அவர்கிட்ட நான் கதையைச் சொன்னதும் உடனே ஓகே சொன்னார். அதன்பிறகு இப்போது வரை நான் எதைக் கேட்டாலும் ஓகேதான் சொல்றார்!’’‘‘உங்க பின்னணி...’’

‘‘என் பேர் சிவஞானம். அப்பா பெயரான ரத்தினசாமியையும் சேர்த்து ரத்னசிவா ஆகிட்டேன். பிறந்து வளர்ந்தது சென்னைதான். டெல்லி ஐ.ஐ.டில டிப்ளமோ முடிச்சேன். ‘ரேணிகுண்டா’ பட இயக்குநர் பன்னீர்செல்வத்திடம் அசிஸ்டென்ட்டா இருந்தேன்.’’‘‘2013ல தொடங்கின படம். இவ்வளவு இடைவெளி ஏன்?’’‘‘நியாயமான கேள்விதான். சேஸிங், ஃபைட்னு சவாலான காட்சிகள் படத்தில் நிறைய இருக்கு. முதல் ஷெட்யூல்ல தேனி போயிட்டு வந்தோம்.

அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங் அப்போ, ஒரு ஃபைட் சீனுக்கு ஆளை மறைக்கிற அளவுக்கு கோரைப் புற்கள் இருக்குற பெரிய நிலம் தேவைப்பட்டுச்சு. தேடித் தேடிப் பார்த்தோம்... ஒண்ணும் செட் ஆகல. கடைசியில, பாண்டிச்சேரி பக்கம் கூனிமேட்டில் பக்கிங்காம் கால்வாய் கிட்டதான் நாங்க எதிர்பார்த்த மாதிரி இடம் கிடைச்சுது. இப்படி லொகேஷன் தேடவே நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது. ஷூட்டிங் முடிச்சு பேட்ச் வொர்க் இருக்கற டைம்ல கௌதம்மேனன் சார் அருண்விஜய்யை ‘என்னை அறிந்தால்’ படத்துக்குக் கூப்பிட்டார்.

‘சூப்பர் ஆஃபர்’னு நாங்களே அவரை அனுப்பினோம். ஆயிரம் அடிக்கு கட் அவுட் வச்சது மாதிரி அதனால எங்களுக்கு இப்போ பப்ளிசிட்டி கிடைச்சிருக்கு. ‘வா டீல்’க்கு அப்புறம் அருண்விஜய் இன்னும் பெரிய ரேஞ்சுக்குப் போவார்னு உறுதியா சொல்ல முடியும்!’’

- மை.பாரதிராஜா