மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீ அரவிந்த அன்னை

உன்னுடைய ஆன்மா உன்னுடைய உடலில் உணர்வுடனும் சுறுசுறுப்புடனும் இருக்கிறது. பிரபுவின் பலத்துடன் உன் ஆன்மா வலிமையாக  இருக்கிறது. அது மற்றவர்கள் உன் மீது
எறியும் கெட்ட எண்ணங்களிலிருந்து உன்னைப் பாதுகாக்கும்.பேருண்மை நிச்சயமாக வெல்லும் என்பதை இப்பொழுது நீ உணர்வாய்.என்னுடைய அன்பும் சக்தியும் உன்னை  முற்றிலும் சூழ்ந்திருக்கிறது.
-  அன்னை

தன்  மனதில் பூத்த தாமரையில் அரவிந்தரின் முகம் தோன்றியதில் பால் ரிச்சர்டிற்கு  ஆச்சரியம் ஏதும் இல்லை. அரவிந்தரை தரிசித்த நாளில் இருந்து சதா அவரது   நினைவாகவே இருக்கிறோம். அதனால் தம்முள் தோன்றும் அத்தனை ஞான விஷயங்களும்  அரவிந்தரின் அருளால் கிடைக்கும் பிரசாதம் என்கிற தெளிவு அவருக்கு இருந்தது. 
ஆனால், அதே தாமரை எப்படி மிராவாய் மாறியது? இது நமக்கு  உணர்த்தும் விஷயம் என்ன? தன்னுள் தோன்றிய காட்சியை கேள்விகளால்  விசாரித்தார் பால் ரிச்சர்ட்.
அரவிந்தர் தம்மோடு பேசியவைகளையும்  மிராவின் ஆன்மிகத் தேடலையும் ஒப்பிட்டுப் பார்த்தார். மிரா தன் மனதை  பிரபஞ்சத்தோடு இணைத்து வைத்திருப்பது நினைவுக்கு  வந்தது.

மிரா ஒரு வார்த்தை சொன்னால் இயற்கை  கட்டுப்பட்டது. கண்ணுக்குத்  தெரியாத மாய உலகத்துடன், மாய மனிதர்களுடன்,  அமானுஷ்ய சக்திகளுடன் மிரா தொடர்பில்  இருக்கிறாள் என்பதும் தெரிந்த விஷயம்.இந்த  உலகின் ஆன்மிகப் பேரரசியாய் மிரா விஸ்வரூபம் எடுக்கப் போகிறாள்.  அந்த மகத்தான தருணத்திற்கான முன்னோட்டமாகவே  அரவிந்தருடனான தமது சந்திப்பு  நடந்திருக்கிறது என்பதெல்லாம் மெல்லிய இழையாய் ரிச்சர்டிற்கு  உணர்த்தப்பட்டது. அவரது ஆழ்மனம் அதை மிகச் சரியாக செய்தும்  வருகிறது.

மிரா  தனது மனைவி என்பதையும் தாண்டி ஆன்மிகத் தேடலும் சுதந்திர சிந்தனையும் உள்ள  நல்ல தோழி என்கிற உணர்வும் ரிச்சர்டிற்கு எப்போதும் உண்டு. அதனாலேயே   அரவிந்தரின் யோகப் பாதையும் மிராவின் ஆன்மிகப் பாதையும் ஒன்றாக இருக்குமோ  என்பது போன்ற எண்ணங்கள் அரவிந்தரோடு பேசியபோது எழவும் செய்தது.
கிழக்கும்  மேற்கும் இணைந்து இந்த பூமியில் ஏதோ ஒரு மகத்தான அற்புதத்தை நிகழ்த்தப்  போவது நிச்சயம். இதில் தம் பங்களிப்பு எவ்வளவோ அதை நிச்சயம்  மிகச்  சரியாகச் செய்ய வேண்டும் என்றும் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.

இப்படிச்  சொன்ன நொடிக்கெல்லாம் ரிச்சர்டின் மனதில் ஏராளமான தாமரைகள் பூத்தன. அதில்  அரவிந்தரும் மிராவும் மலர்ந்து சிரித்தார்கள். தாமரை பூத்தது மனதில்தான்   என்றாலும் அந்த அரவிந்த மலரின் வாசனை அவரைச் சூழ்ந்திருந்ததையும்  உணர்ந்தார்.மனதில் பூத்த தாமரையின் மணம் வெளியில் எப்படி வீசுகிறது?ரிச்சர்ட் யோசனையை  நீட்டிக்க விரும்பவில்லை. ‘இது அரவிந்தர் நிகழ்த்தும்  அற்புதம். இது மிக உயர்ந்த மகா ரகசியம். நான் ஒரு அருள் வட்டத்தில்  நுழைந்திருக்கிறேன். இதை அப்படியே  ஏற்றுக்கொள்வதும் நிதானமாய்  அனுபவிப்பதும் மட்டுமே என் வேலை’ என முடிவு செய்தவராய் அமைதியாக கப்பலில்  தன் அறைக்கு வந்தார்.

விளக்குகளை அணைத்துவிட்டு கண்ணயர்ந்தவர், ஆழ்ந்த  தூக்கத்தில் மூழ்கினார். அவர் மனம் வேறொரு தளத்துக்கு நகர ஆரம்பித்தது.  மூளையில் எதுவும் பதிவாகாமல் உடல்  ஓய்வெடுக்கத் தொடங்கியது. ஆன்மா,  உண்மைக்கு நெருக்கமாய்... ஆனந்தமாய்... அரவிந்தர்-மிரா-ரிச்சர்ட் என்கிற  முக்கோண சக்தியாய் இணைந்திருப்பதை உணர்ந்து  வியந்தார்.

எதன் பொருட்டு  இணையப் போகிறது என்பதெல்லாம் புரிந்தது? இந்த இரு சக்திகளையும்  ஒன்றாக்கும் மிக உன்னதமான பணி தனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இது இன்று   தொடங்கிய யாகமல்ல... பல யுகமாய் திட்டமிட்டு நடக்கும் மகா யாகம். யோகத்தின்  மூலம் உலகைக் காக்கும் புனித யாகம் என்பதையெல்லாம் அந்த அறிதுயில்   உணர்த்தியது.

ஆனால் நீண்ட நித்திரைக்குப் பின்  கண் விழித்தவுடன்  அத்தனையும் தீவிர நினைவில் இல்லை. இதுதான் வாழ்க்கை.  சுவாரஸ்யத்தின்  பொருட்டு மாயை நிகழ்த்தும் நாடகம்.
ஒவ்வொரு மனிதனின்  வாழ்க்கையிலும் என்ன நடந்தது? அது ஏன் நடந்தது? என்ன நடக்கப் போகிறது? அதன்  விளைவுகள் எப்படி இருக்கும்? அதில் நம் பங்களிப்பு என்ன?  என ஒவ்வொரு  விஷயத்திலும் அதன் முடிவுகள் சம்பந்தப்பட்டவருக்கு நிச்சயம் தெரிந்தே  இருக்கும். அதை உணர்த்தும் வேலையை தயவு தாட்சண்யமில்லாமல் உள்ளுணர்வு    செய்யும்.

ஆனால், அதை கவனிப்பதும் கண்டுகொள்ளாமல் விடுவதிலும்தான்  இருக்கிறது விதியின் விசித்திர விளையாட்டு. ரிச்சர்டுக்கு நடக்கப் போகும்  லீலைகள் அத்தனையையும்  அவரது ஆழ்மனம் சொல்ல விரும்பி, சொல்லி முடித்தும்  விட்டது. ஆனால் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாக வேண்டாமா?ஆகவே காலம் உண்மையைத் திரை போட்டு  மறைத்து வைத்து கொஞ்சம் வேடிக்கை காட்ட விரும்பியது.

பொழுது  புலர்ந்தது. ரிச்சர்ட் மிக உற்சாகமாய் உணர்ந்தார். ‘நாளை தாய்நாட்டில்  இருப்போம். மிராவிடம் பேசப் போகிறோம்... அரவிந்தரின் செய்தியை மிராவுடன்  பகிர்ந்து  கொள்ளலாம்’ என்கிற மகிழ்ச்சியோடு  பொழுது கரைந்தது.மறுநாள்  அதிகாலை. கப்பல் பிரான்ஸ் துறைமுகத்தை அடைந்தது. ரிச்சர்ட் குதூகலமாக வீடு  திரும்பினார். மிராவும்  கனிவு பொங்க ரிச்சர்டை வரவேற்றார். அன்று மாலை  ரிச்சர்டும் மிராவும் வீட்டின் தோட்டத்தில் பேசியபடி நடந்தார்கள்.

``மிரா... இந்த முறை எனது இந்திய பயணம் மிக நிறைவாக இருந்தது. அரவிந்தர்  என்றொரு யோகியை தரிசித்தேன். மிக உயர்ந்த ஆன்மிக ஆராய்ச்சியில் அவர்   ஈடுபட்டிருக்கிறார். நீ கொடுத்த சாலமோன் இலச்சினையை அவரிடம் காட்டினேன்.  அது ேமல் நோக்கி மலரும் தாமரையைக் குறிப்பதாகவும் ஆன்மிக ஒளி வந்தவுடன்  மனம்  என்னும் தாமரை மொட்டு தானே விரிவடையும் என்பதைக் குறிக்கும் சின்னம் அதுவென்றும்  அவர் சொன்னார்!’’ என்றார் ரிச்சர்ட்.

மிராவுக்கு இந்த பதில்  நிறைவைத் தந்தது. அரவிந்தர் என்கிற பெயரை உச்சரிக்கும்போது ரிச்சர்டின்  கண்களில் தெரியும் பரவசமே அரவிந்தரின் ஆன்மிக உயர்வைத் தமக்கு  உணர்த்தி  விட்டதாகவும் சொன்னார் மிரா.``ரிச்சர்ட், அரவிந்தர் எது மாதிரியான யோகத்தில் இறங்கி இருக்கிறார்?’’- மிரா கேட்டார்.``மிரா,  அரவிந்தர் இந்த பூமியில்  தெய்வீகத்தை நிலை நிறுத்த விரும்புகிறார். இந்த  தெய்வீக மாற்றத்திற்கு உதவ தகுதி வாய்ந்த மனிதர்களைத் தேடிக்  கொண்டிருக்கிறார். அவரது உரையாடலில் ஏக்கத்தோடு  விடுத்த அறைகூவல் இன்னும்  என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அது...‘மிக  உன்னதமான தீரச் செயல்கள் செய்ய விரும்பும் புனிதத்தின் குழந்தைகளே!  உங்களையே நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். வாருங்கள்... உலகை  திருவுருமாற்றம்  செய்வோம்.ஆன்மிகத் துறையில் நமக்கு முன் சென்றவர்கள்  செய்ததையே செய்ய நான் விரும்பவில்லை. அவர்கள் சாதித்தவற்றிற்கு அப்பால்  தொடங்குகிறது, நாம் செய்ய  வேண்டிய தீரச் செயல். நாம் சாதிக்க விரும்புவது  ஒரு புதிய படைப்பு. முற்றிலும் புதியது.

எதிர்பாராதவை, ஆபத்துகள், இடையூறுகள் எல்லாம் நிறைந்தது இந்த வேலை.உண்மையில்  இது ஒரு சாகசம்தான். அதன் லட்சியம் வெற்றி பெறுவது சர்வ நிச்சயம். ஆனால்,   அதை அடைவதற்கான வழி இன்னும் வகுக்கப்படவில்லை. புதிய நிலத்தில் ஒவ்வொரு  அடியாக பாதை அமைக்க வேண்டும். நாம் அடைய விரும்பும் அது, இதுவரை இந்த   பிரபஞ்சத்தில் இருந்ததில்லை. இனி ஒருக்காலும் இப்போது உள்ளது போலவே  இருக்கப் போவதும் இல்லை. அப்படிப்பட்ட ஒன்றில் உங்களுக்கு ஈடுபாடு  உண்டென்றால்  நல்லது. நாம் புறப்படுவோம்.

இதுவரை முன் அறிந்தவற்றை எல்லாம், இதுவரை திட்டம் போட்டவற்றை எல்லாம், இதுவரை உருவாக்கி  வைத்திருப்பவற்றை எல்லாம் தூர வைத்துவிட்டு புதிய பாதையில்  நடப்போம்; எது  வந்தாலும் சரி என்கிற துணிவோடு! - இப்படித்தான் அன்று தனது யோகப் பாதையைப்  பற்றி அரவிந்தர் பேசினார், என்று சொன்ன ரிச்சர்டை மெய்சிலிர்க்க  தழுவிக்  கொண்டார் மிரா!

``ரிச்சர்ட்... உண்மையில் புதுமைக்கெல்லாம் புதுமையை  நீங்கள் தரிசித்துவிட்டு வந்திருக்கிறீர்கள். இது முற்றிலும் நவீனம். என்  விருப்பமும் இதுதானோ எனத் தோன்றுகிறது.  எனக்கு நிறைய சந்தேகம் இருக்கிறது.  அதை எல்லாம் தெளிவுபடுத்த அரவிந்தரால் முடியும் என்று நினைக்கிறேன். அவரை  நானும் சந்திக்க விரும்புகிறேன்!’’ என்றார் மிரா.
 ``இதில் வியப்பேதும் இல்லை மிரா. என் மனமும் அவரையே நாடுகிறது. பார்ப்போம்’’ என்றார், ரிச்சர்ட்.
சந்தித்தார்களா?

அன்னையின் அற்புதம்!

உடனிருந்து காக்கும் அன்னை

‘‘அது 1988ம் ஆண்டு. நான்  அப்போது சிவில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்  பக்கத்து வீட்டு மாமி  அன்னையின் பக்தை. அவர்தான் எனக்கு  அன்னையை அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்தில்  கல்லூரியில் கடைசி ஆண்டு ப்ராஜெக்ட் செய்யும்போது, நான் மட்டும் தனித்து விடப்பட்டேன்.  கண் கலங்கி  அன்னையிடம்  வேண்டிக் கொண்டேன். அன்று இரவு என் கனவில் அன்னை வந்து, ‘நான் இருக்கிறேன்’ என ஆசீர்வதித்தார். மறுநாள் வகுப்பில் நான் தனியே செய்வதாகச்  சொன்ன ப்ராஜெக்ட்டுக்கு அனுமதி கிடைத்தது. அதை வெற்றிகரமாக முடித்து, இன்று சிவில் இன்ஜினியராக லாபகரமாக தொழில் செய்கிறேன்.

சமீபத்தில் என் தந்தைக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. நான்கு லட்சம் பணம் கட்ட வேண்டி வந்தது.  ‘4 யூனிட் ரத்தம் உடனே தேவை’ என்றார்கள். அன்னையிடம்  வேண்டிக்  கொண்டேன். தெரிந்த நண்பர்களிடம் உதவி கேட்டேன். 20 பேர் ரத்தம் தர  முன்வந்தார்கள். தேவையான பண உதவியும் உடனே கிடைத்தது. நல்லபடியாக  ஆபரேஷன்  முடிந்தது.  என் அப்பாவுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டருக்கு நன்றி  சொல்வதற்காக  அரவிந்த அன்னையின் படத்தையும் மலர் பிரசாதத்தையும் கொடுத்து   கை கூப்பி நின்றேன். டாக்டரின் முகத்தில் அத்தனை சந்தோஷம். காரணம், அவரும்  அரவிந்த அன்னையின் பக்தர். இப்படி எல்லா சூழ்நிலையிலும்  அன்னை என்னோடு  இருந்திருக்கிறார்!’’ என்று நெகிழும் சண்முகசுந்தரம் மதுரை திருநகரில் இருக்கும் அரவிந்தர் அன்னை தியான மைய அறக்கட்டளையின் அறங்காவலர்.

வரம் தரும் மலர்

வெற்றி தரும் வெள்ளை செம்பருத்தி!

``கடுமையாக உழைக்கிறேன். ஆனாலும் கைக்கெட்டும்  தொலைவில் இருக்கும் வெற்றி கடைசி நேரத்தில் நழுவிப் போகிறது. இது என் விதி’’  எனப் பலரும் புலம்பக்  கேட்கிறோம்.இதை மாற்றி, வெற்றியைக் கொண்டு வரும் சக்தி வெள்ளை செம்பருத்திக்கு உண்டு.அரவிந்த  அன்னைக்கு வெள்ளை செம்பருத்தி மலர்கள் வைத்து வழிபட்டு எந்த  வேலையையும்  ஆரம்பியுங்கள். தடைகளைத் தகர்த்து, தோல்விகளைத் துரத்தி அன்னை வெற்றியை  அருள்வார்.

(பூ மலரும்...)

எஸ்.ஆா்.செந்தில்குமாா்
ஓவியம்: மணியம் செல்வன்