அழியாத கோலங்கள்



குளிர்சாதன அறை... கழுத்துப்பட்டை... வெள்ளைச் சட்டை என்று சிந்தனையை மின் அலைகள் கொண்டு அளப்பவர்களுக்கு பிடிபடாத ஒரு திறமை ஒருவரிடம் உண்டு.  ‘உள்ளதைச் சொல்வேன்... சொன்னதைச் செய்வேன்’ என்று மட்டுமல்லாமல் ‘எல்லாமும் அறிவேன்’ என்று செய்து காட்டியவர்... எங்கோ புரியாத உயர்ந்த உலகத்துக்குச்  செல்லாமல், Grassroots எனும் தரை மட்டத்தில் செயல்பட்டு என் போன்றவர்களை வியக்க வைத்த சகலகலா வல்லவன்... திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர்.

30 ஆண்டுகள் இடதுசாரி ஏழைப் பங்காளனாக வக்கீல் தொழில் செய்து... பின்னாளில் ஒரு வயோதிக நடிகனாக பணி மட்டுமே புரிந்து... 85 வயதைக் கடந்து வாழ்வை  முடித்துக்கொள்ளப் போகும் என்னைப் பற்றி கூகுளில் தேடிப் பாருங்கள்... கிண்டலாக பல பட்டங்களையெல்லாம் தாராளமாக அள்ளி வீசியிருப்பார்கள்!

அந்த அரைகுறை கூகுள் சிந்தனையாளர்களுக்காக இயக்குநர் டி.ஆர் பற்றி நான் சொல்லவில்லை. அவர்களுக்குத் தெரியும்... டி.ராஜேந்தர் இரண்டு M.A பட்டங்களைப் பெற்ற  பின், திரைத் துறைக்கு வந்து, கல்லூரியின் நடப்புகளையும் மாணவர் சிந்தனைச் சிறகுகளையும் ‘ஒரு தலை ராகம்’ என்ற பெயரில் பறக்கவிட்டு, சென்னை நகரில் 175 நாட்கள்  ஊர்வலம் வரச் செய்தவர்.

அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர்கள் ராபர்ட் - ராஜசேகர் என் நண்பர்கள்.  அது எனக்கு வக்கீல் பிழைப்பு ஓரளவு நடந்த சமயம். அந்தப் படத்தின் ப்ரிவியூவுக்கு வேலைப்பளு  என்று சொல்லி எனக்கு பதிலாக என் மனைவியையும் பிள்ளைகளையும் அனுப்பி வைத்தேன். நான் இரவு வீடு திரும்பியதும் அவர்கள் என்னை அடிக்காத குறைதான். ஒரு  மோசமான படத்துக்கு அவர்களை அனுப்பி பழி வாங்கிவிட்டதாக திட்டித் தீர்த்தார்கள்.

படம் வெளிவரும்முன்பே 100 தனிக்காட்சிகள் நடத்தப்பட்ட படம் ‘ஒருதலை ராக’மாகத்தான் இருக்கும்.    பின்பு ஒரு நாள் தவிர்க்க முடியாமல் படம் பார்க்க தனிக்காட்சியில்  நொந்து போய் உட்கார்ந்தபோது இரண்டாவது ரீலில் வந்த காட்சிகள் என்னை நிமிர்ந்து உட்காரச் செய்தன.

படம் முடிந்து வீடு வந்து மனைவி, பிள்ளைகளிடம், ‘‘எனக்கு படம் பிடித்திருந்தது’’ என்று சொன்னதும், எனக்கு இந்த ஹாசன் குடும்பம் ஏற்கனவே கொடுத்திருந்த ‘முட்டாள்  முனைவர்’ என்ற பட்டத்தை இரட்டிப்பாக்கி ஒரு ‘டபுள் டாக்டரேட்’டை என் தலையில் கட்டினார்கள். இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை! பின்னாளில் என் முதல் படமான  ‘உதிரிப்பூக்கள்’ வெளிவரும் முன் ப்ரிவியூ பார்த்துவிட்டு வீடு வந்தபோது, ஏதோ இழவு விழுந்துவிட்டது போல் ஒருவரை ஒருவர் கட்டி அழுதார்கள். அந்த அழுகை 175 நாட்கள்  படம் ஓடிய பிறகுதான் ஓய்ந்தது.

இப்படிச் சொல்வதற்கெல்லாம் ஒரு காரணம் உண்டு. நான் 1986ல் பல தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் கிரீஷ் காசரவல்லியின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன். அந்த  வருடத்தில் நான் முக்கியமாகக் கருதி நடிக்க ஒப்புக்கொண்ட ஒரே படம், டி.ஆரின் ‘ஒரு தாயின் சபதம்’தான். ஒரு முறை நான் கிரீஷ் காசரவல்லியிடம் டி.ஆர் படம் எடுக்கும்  விதம் பற்றிக் கூறினேன். டி.ஆரின் தயாரிப்பு முறை பற்றி தான் ஒரு குறும்படம்  எடுக்க அவர் அனுமதி கேட்டார்.

அதை நான் டி.ஆரிடம் சொன்னபோது அழகாக பதில் கூறினார்... ‘‘சாரண்ணே... எல்லாரும் ஒரு வழியாகப் போய்க்கொண்டிருக்கும்போது அந்த விதிமுறைகளை மீறி வெற்றி  பெறுபவன் மீது கோபத்தை அடக்கி வைத்திருப்பார்கள். எங்கேயாவது நம்ம கால் தடுமாறும்போது  ஈஸியா காலை வாரி விடுவாங்க!  நான் இன்னும் நிறைய படம்  பண்ணணும். என்னை வச்சு படம் பண்ணா அது மிஸ் ஃபயர் ஆகிடும்!” என்றார்.

‘ஒரு தாயின் சபதம்’ முதல் நாள் ஷூட்டிங்கில் டி.ஆர். வந்ததும், ‘‘இங்கேயிருந்து ஒரு 35 அடிக்கு ட்ராக் போட்டு கேமரா மவுன்ட் பண்ணு’’ என்றார். ட்ராக் ரெடியானதும்  அவரே கேமராவில் உட்கார்ந்து ஆங்கிள் பார்த்துவிட்டு, ‘‘சாரண்ணே... வாங்க! நீங்க ஃபேமிலி டாக்டர். நான் உங்க வீட்டுக்கு வந்திருக்கேன். என் அம்மாவுக்கு இருக்கும் மூளை  நோய் பற்றி என்னிடம் பேசுகிறீர்கள்’’ என்றார்.

‘‘எனக்கு என்ன டிரஸ்..?’’    - தயாரிப்பு உதவியாளர் மூளைதான் என்னுள் வேலை செய்தது.‘‘டிரஸ் டயலாக்ல வந்திரும்... ‘சொல்லுங்க டாக்டர்’னு ஆரம்பிச்சா  போதுமே!’’‘‘எனக்கு டயலாக் பேப்பர் கொடுக்கவே இல்லையே?’’ ‘‘அதெல்லாம் நாம நடக்கும்போது தானே வரும். வாங்க...’’ என்றவர், நான் சொல்ல வேண்டிய டயலாக்கை  நடக்கும்போதே சொன்னார்...

‘‘ராஜசேகரா! உன் தாயின் ப்ராப்ளம் மூளை நரம்பில் உள்ளது.  வீணையின் நரம்பில் எங்கே தட்டினாலும் ஸ்வரம் கிடைக்கும். ஆனால், சில இடங்களில்தான் சுஸ்வரம் வரும்;  மற்ற இடங்களில் அபஸ்வரம்தான் வரும். அதைக் கண்டுபிடிக்க வேண்டியது என் வேலை....’’ என்று தொடர்ந்து 35 அடிக்கு ட்ராலி ஓடும் வரை பேசி முடித்து, ‘‘இதுதான்...  பேசுங்கள். ஒரு மானிட்டர் அண்ட் டேக்!’’ என்று முடித்தார்.

தன்னுடைய டயலாக் வரும் நான்கு ஷாட்டுகளையும் ஒரே ஓட்டத்தில் கேமரா ஓட்டும் வேலை செய்துகொண்டே பேசி முடித்து விட்டார்.கையில் ஒரு துண்டுக் காகிதம் கூட இல்லாமல், கதை, திரைக்கதை, வசனம் எல்லாவற்றையும் தலைக்குள் வைத்துக்கொண்டு வரும் இயக்குநர் இவரைத் தவிர உலக அளவில்  யாருமே இல்லை.

இது திறமை... இவருடைய கோமாளித்தனமும் ஆங்காங்கே தோன்றும். ஒருமுறை ஒரு கிரேனில் மேலே இருந்து கேமரா மூலம் பார்த்துவிட்டு, ‘‘யாருடா அவன் ஃபீல்டுல  செருப்பை வச்சவன்... கிரேனை இறக்குடா, அவனை செருப்பாலயே அடிக்கணும்’’ என்றார்.

கீழே வந்து பார்த்து அந்தச் செருப்பு தன்னுடையது என்று தெரிந்ததும், அதை  எடுத்து தன் தலையிலேயே மூன்று முறை அடித்துக் கொண்டார்.அவரிடம் எவ்வளவு திறமை இருந்திருந்தால், அவர் பத்து படங்களில் வாங்கிய சம்பளத்தை ஒரே படத்தில்  வாங்கும் திறமையுடன் தன் மகன் சிம்புவை தயார் செய்திருப்பார்! ஹாட்ஸ் ஆஃப் டு டி.ஆர்...

கையில் ஒரு துண்டுக் காகிதம் கூட இல்லாமல், கதை, திரைக்கதை, வசனம் எல்லாவற்றையும் தலைக்குள் வைத்துக்கொண்டு வரும் இயக்குநர் இவரைத் தவிர உலக
அளவில் யாருமே இல்லை.

தங்கத் துளிகள்
 
தங்க நகை எடை போடும்போது மின் விசிறி ஓடக் கூடாது. விலை எழுதப்பட்ட அட்டை நீக்கப்பட்டிருக்க வேண்டும். தங்கத்தின் தரத்தில் சந்தேகம் ஏற்பட்டால்,  வாடிக்கையாளர் கண் முன்பே இயந்திரத்தில் சோதனை செய்து அதில் கலக்கப்பட்டுள்ள உலோகங்களின் அளவைத் தெரிவிக்க வேண்டும். இவற்றைத் தாண்டியும் தங்க நகை  விற்பனை பற்றிய புகார்களை நேரடியாக வாடிக்கையாளர்கள் பி.ஐ.எஸ் அமைப்பிடமே அளிக்கலாம். தொலைபேசி: 044 22541988, 22541216. email: bnbol@bis.org.in
தொகுப்பு: ரஞ்சித்

(நீளும்...)


சாருஹாசன்

ஓவியங்கள்: மனோகர்