எங்கே போகிறது நாம் காட்டும் கல்வி வரி ?



“உங்க செல்போன் பில் இருந்தா எடுத்துப் பாருங்க. எல்லா கட்டணமும் போட்டு, கடைசியா `எஜுகேஷனல் செஸ்’னு ஒண்ணு இருக்கும். இது கல்வி வரி. செல்போன் பில்லுல  மட்டுமில்ல... ஒவ்வொருத்தரும் செலவு பண்ற ஒவ்வொரு ரூபாய்லயும் ஒரு பங்கை கல்வி வரியா கொடுக்கறோம். இதெல்லாம் எங்க போகுது?

அரசுப் பள்ளிகளுக்காக செலவு  பண்றாங்களாம். நம்மூர் அரசுப் பள்ளிகளைப் பார்த்தா, செலவு பண்ணியிருக்கற மாதிரியா தெரியுது?’’ - காட்டமாகத் துவங்குகிறார் ‘உந்துனர்’ அறக்கட்டளையைச் சேர்ந்த  வழக்கறிஞர் மார்ட்டின். இந்த அமைப்பின் மூலம் மத்திய அரசிடம் இவர்கள் கல்வி வரிக்கு கணக்கு கேட்கப் போக, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய மனித  உரிமை ஆணையம் நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்குப் போய்விட்டது விஷயம்.

``2004 வாக்கில் திருச்சி சுற்று வட்டார மாநகராட்சி பள்ளிக்கூடங்களின் நிலைமை ரொம்ப மோசமா இருந்தது. திருச்சி நகரத்துக்குள்ள மட்டுமே 59 முனிசிபல் பள்ளிகள்  இருந்துச்சு. மாநகராட்சி வசூலிக்கிற பல வித வரிகள்லயே கல்வி வரி மறைமுகமா இருக்கு. இப்படி வசூலிச்ச கல்வி வரியை எல்லாம் மாநகராட்சி நடத்துற முனிசிபல்  பள்ளிகளின் மேம்பாட்டுக்காகத்தான் செலவு பண்ணணும்.

ஆனா, அந்தப் பள்ளிக்கூடங்கள்ல கழிப்பறை, குடிதண்ணீர் மாதிரி அடிப்படை வசதிகளேகூட இல்ல. இதனாலதான்  ‘மொத்தம் வசூலிக்கப்படும் கல்வி வரி எவ்வளவு, அதுக்கான செலவீனங்கள் என்னென்ன’னு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தோம். அவங்க தந்த  தகவலின்படி, 2004ம் ஆண்டிலிருந்து 2007 வரை வசூலிக்கப்பட்ட கல்வி வரி சுமார் 8.25 கோடி ரூபாய். ஆனா, செலவுகள் வெறும் 2.63 கோடி!

அதுக்குப் பிறகு 2009ம் வருஷமும் இது மாதிரி தகவல் கேட்டேன். அப்போ, சுமார் 19 கோடி ரூபாய் கல்வி வரி வசூலிச்சதாவும், செலவு வெறும் பத்து லட்சம்னும்  சொன்னாங்க. அதாவது, வரிகள் அதிகரிச்சாலும் செலவுகள் வருஷா வருஷம் குறைக்கப்படுது. இந்தத் தகவல்களை அடிப்படையா வச்சி, அந்த 59 பள்ளிக்கூடங்கள்லயும் சுமார்  26 கேள்விகளோடு ஒரு சர்வே எடுத்தோம்.

ஸ்கூல்ல ஒவ்வொரு அறையும் பிரிக்கப்பட்டிருக்கா, குடிநீர் வசதி, டாய்லெட் வசதி, கூரை, கட்டிடத்தின் நிலை, ஆசிரியர்களின் எண்ணிக்கைன்னு நிறைய தகவல்களை அதில்  கேட்டிருந்தோம். பல பள்ளிக்கூடங்களில் குறைகள்தான் நிரம்பி இருந்துச்சு. இதையும் வச்சிக்கிட்டு, அரசு செய்யும் வரவு - செலவினங்களை தணிக்கை செய்யற அரசு  அமைப்பான தமிழ்நாடு ஆடிட்டர் ஜெனரல் எனும் கணக்காயருக்கு அனுப்பினோம். அவங்க திருச்சி மாநகராட்சியின் வசூல் மற்றும் செலவினங்கள் பத்தி கணக்குகளைக்  கேட்டு நெருக்கடி கொடுத்தாங்க. அப்புறம்தான் திருச்சி மாநகராட்சி பள்ளிக்கூடங்களின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பிச்சு. இதனால் அந்தப் பள்ளிகளோட நிலைமையில்  மாற்றம் வந்துச்சு.

இது மாதிரியே எங்கள் அமைப்பின் அங்கத்தினர்கள் மூலமா ஒவ்வொரு மாநகராட்சியிலயும் கல்வி வரி பற்றி கேள்வி கேட்கச் சொல்லியிருக்கோம்!’’ என்கிறார் மார்ட்டின்.
இந்தக் கல்வி வரி பயன்பாடு பற்றிய உண்மைகளை மனித உரிமை ஆணையம் வரை கொண்டு சென்றிருப்பவர், சென்னையைச் சேர்ந்த
பிரியா. இவரும் உந்துனர் அமைப்பின் அங்கத்தினர்தான்.

‘‘மாநகராட்சிப் பள்ளிகள் மட்டுமில்ல... அரசு நடத்துற எல்லா பள்ளிகளின் நிலைமையும் மோசம்தான். அதிலும், பெண்களுக்கான டாய்லெட் ரொம்ப மோசமான நிலையில  இருக்கும். அல்லது இருக்கவே இருக்காது. இதனாலேயே பல பெண் குழந்தைகள் எட்டாம் வகுப்புக்கு மேல படிப்பை நிறுத்திடுறாங்க.

ஏற்கனவே இந்த விஷயத்தில் மார்ட்டின்  கையில் எடுத்த ஆர்.டி.ஐ ஆயுதம் ஜெயிச்சது எங்களுக்கெல்லாம் நம்பிக்கை தந்துச்சு. சமீபத்துல தேசிய மனித உரிமை ஆணையத்தின் அங்கத்தினர்கள்ல ஒருத்தரான நீதிபதி  முருகேசனின் கவனத்துக்கு இதையெல்லாம் கொண்டு போனோம்.

 ‘திருச்சியை மாதிரியே தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்கள்லயும் பள்ளிக்கூடங்களை சீராக்க ஆணையத்தால் முடியுமா?’னு கேட்டோம். அதுக்கு பதில் தர்ற மாதிரி ஆணையம்  தமிழக அரசைக் கேள்வி கேட்டிருக்கறது ரொம்ப சந்தோஷமான விஷயம். எதிர்கால அரசு பள்ளிகள் நிச்சயம் பளிச்னு மாறும். அந்த நம்பிக்கையை இது தந்திருக்கு!’’ என்கிறார்  அவர் உற்சாகமாக!

கோடிகளில் கல்வி வரியை வசூலித்தாலும், சில லட்சங்களை மட்டுமே பள்ளிகளுக்காகவும் கல்விக்காகவும் செலவிடுகிறது அரசு!

- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்