அப்போ படம் வரும்...பணம் வராது :இப்போ பணம் வரும்...படம் வராது!



எங்கேயோ பார்த்த முகம்

அடடா, அனுமோகன்

“ஏனுங்... பாம்ப்புப் புத்துக்குள்ளாற கைய வுட்டீங்ளே... கட்டிச்ச்சிராதுங்களா..?’’ - வார்த்தைகளை கம்ப்ரஸ் பண்ணி, கொங்குத்தமிழால் இம்ப்ரஸ் பண்ணும் காமெடியன்  அனுமோகன். ‘அட, இவர் எங்கேயோ பார்த்த முகம் இல்லையே... டி.வியில தினமும் பார்க்கிற முகமாச்சே’ என நெற்றி சுருக்க வேண்டாம். 4 படம் இயக்கிய இயக்குநர்; அந்தக்  காலத்திலேயே எஞ்சினியரிங் கிராஜுவேட் என தெரியாத முகங்கள் இவருக்கு நிறைய!

‘‘மோகன்தாங்க எம்பேரு... மனைவி அனுராதா வந்தபெறகுதான் நான் டைரக்டர் ஆனேன். அதனால அனுமோகன். பொறந்தது, படிச்சது எல்லாம் கோயமுத்தூர்  காந்திபுரம்தாங்க. ஒன்பதாவது படிக்கும்போது எங்க கணக்கு வாத்தியார் கணேசன் சாரால நிறைய நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன்.

எங்க ஏரியாதான் சினிமா  ஷூட்டிங்குக்கு பேர் போனதாச்சே. ரெண்டாங்கிளாஸ்  படிக்கறப்பவே சிவாஜி சாரோட `மரகதம்’ ஷூட்டிங் எங்க ஊர்ல நடந்துச்சு.  அதான் நான் நேர்ல பார்த்த முதல்  ஷூட்டிங். பின்னாடி, `மன்னவரு சின்னவரு’ படத்துல அதே சிவாஜி சாருக்கு நான் டயலாக் சொல்லிக் கொடுத்தது மறக்க  முடியாத அனுபவம்.

அதுக்கப்புறம் நிறைய ஷூட்டிங் பார்த்திருக்கேன். யூனிட்ல எல்லாருமே டைரக்டருக்குத்தான் ரொம்ப மரியாதை கொடுப்பாங்க. ‘அந்த சேர்ல உக்கார்ந்தாதான்  மரியாதைடா’ன்னு அப்பவே மனசுல ஆணியா பதிஞ்சிருச்சு.    நான் இருந்த காந்திபுரம் ஏரியாவுலதான் ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, கோவை சரளா, சத்யராஜ், சுந்தர்.சி,  ரகுவரன்னு எல்லாரும் இருந்தாங்க. அங்கயே அவங்களோட நட்பு ரீதியா பழக்கம். ஆனா,  ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக்காம தனித்தனியாதான் இங்க வந்தோம்.

அப்ப நான் சி.ஐ.டி காலேஜ்ல மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிச்சிட்டிருந்தேன். 4வது வருஷம் படிக்கறப்ப அம்மாகிட்ட 25 ரூபா வாங்கிட்டு சென்னை ரயிலேறிட்டேன். 17  ரூபா டிக்கெட். மீதி 8 ரூபாய்ல ஒரு மாசம் ஓட்டியிருக்கேன். வெறும் டீ, பன்தான் மூணு வேளைக்கும். தங்கினது எல்லாம் பார்க்குகள்லதான். அப்ப, சினிமாவுக்காக சென்னை  வந்தவன்னு தெரிஞ்சா, யாரா இருந்தாலும் அவனுக்கு சோறு வாங்கிக் கொடுப்பாங்க.

`மௌன கீதங்கள்’ தயாரிப்பாளர் கே.கோபிநாத்தான் என்னை பாக்யராஜ்கிட்ட அசிஸ்ட்டென்ட்டா சேர்த்துவிட்டார். நண்பர் ஆர்.சுந்தர்ராஜன் `பயணங்கள் முடிவதில்லை’  தொடங்கினப்போ, அதுல நான் இணை இயக்குநராகிட்டேன். அவரோட 27 படங்கள் வேலை பார்த்திருக்கேன். அதுக்கு இடையில `இது ஒரு தொடர்கதை’, `அண்ணன்’,  `மேட்டுப்பட்டி மிராசு’, `நினைவுச்சின்னம்’னு 4 படங்கள் இயக்கிட்டேன். இது தவிர, `தாய்மாமன்’, `பங்காளி’ படங்களுக்கு கதை, வசனம்; நிறைய படங்களுக்கு காமெடி ட்ராக்  எழுதியாச்சி.

`சிறைச்சாலை’ படத்துல சீனிவாஸ் கேரக்டருக்கு தயாரிப்பாளர் தாணு சார் என்னைக் கூப்பிட்டு டப்பிங் பேச வச்சார். அதுக்கப்புறம் சுரேஷ்கோபி சாரோட `டெல்லி டைரி’ல  ராஜன் பி.தேவ்க்கு டப்பிங் பேசினேன். `கொங்கு தமிழை பிரமாதமா பேசுவான்’னு எனக்கு நல்ல வரவேற்பு. அதே கொங்கு தமிழுக்காகத்தான் பிரபுதேவா நடிச்ச `வி.ஐ.பி’ல  என்னை டிரைவர் கேரக்டர்ல நடிக்கச் சொன்னார் தாணு சார்.

சினிமால நான் பல வருஷமா இருந்திருந்தாலும், நல்லா கவனிக்கப்பட்டது இந்தப் படத்துலதான். `வி.ஐ.பி’  ப்ரிவியூ பார்த்தப்பவே ரஜினி சாா் என்னைக் கூப்பிட்டு, `என் அடுத்த படத்துல நீங்க நடிக்கிறீங்க’ன்னு சொல்லிட்டார். அப்படித்தான் `படையப்பா’ வாய்ப்பு கிடைச்சது.  இன்னிக்கு வரை என்னை ‘பாம்புப் புத்து’ன்னுதான் கூப்பிடுறாங்க. அந்த ஒரு டயலாக், என்னை முழு நேர காமெடியனா ஆக்கிடுச்சு.

விஜய் கூட `பத்ரி’, `மின்சாரக் கண்ணா’ பண்ணினேன். அஜித்தோட `ரெட்டை சடை வயசு’, `வில்லன்’, `திருப்பதி’னு 3 படங்கள். சரத்குமாரோட `நட்புக்காக’, `பாட்டாளி’ன்னு  நிறைய படங்கள். இப்பவும் அப்பா, போலீஸ், மாமா, பெரியப்பா, டிரைவர், வேலைக்காரன்னு என்னைத் தேடி வர்ற கேரக்டர்கள் நிறைய இருக்கு. 160 படங்கள் பண்ணிட்டேன்.

கவுண்டமணி - செந்தில்னு ஒரு சகாப்தம் உருவாகவே ஆர்.சுந்தர்ராஜன் படங்கள்தான் காரணம். எனக்கோ சுந்தர்ராஜனுக்கோ நடிக்கணும்னு ஆசை இருந்திருந்தா, அவங்க  இடத்தில் நாங்க இருந்திருப்போம். அந்த மரியாதையை இப்பவும் கொடுப்பார் கவுண்டமணி. செந்திலும் நானும் ‘வாடா, போடா’ ஃப்ரெண்ட்ஸ்.

என் மனைவி அனுராதாவை பத்து வயசுல இருந்தே தெரியும். கோவையில எங்களுக்கு எதிர் வீடுதான். லவ் மேரேஜ். மகன் அருண்மோகன், டைரக்டர் ஆகிட்டார். `சரபம்’  படம் அவர் பண்ணினதுதான். நல்லா போச்சு. அடுத்த படம் பண்ணிட்டிருக்கார். மக சரண்யா, பி.இ முடிச்சாச்சு. மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கோம்.

இப்ப தியேட்டர்கள் குறைஞ்சிடுச்சு. படம் பாக்குற செலவு அதிகமாயிடுச்சு. ஒரு சாதாரண கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா சொல்றேன். அப்போ சினிமால பணம் வராது. ஆனா,  படம் வந்துரும். இப்ப சினிமாவுல பணம் வந்துருது. ஆனா, படம் வர மாட்டேங்குது.

தனி காமெடியனா வரணும்னு நான் என்னிக்கும் முயற்சி பண்ணினது இல்ல. எனக்கு என்ன வரும், வராதுனு என்னை வச்சு படம் இயக்குறவங்களுக்குத் தெரியும். நான் நடிகன்  ஆனதே ஒரு விபத்து. அப்படி ஒரு விபத்து மறுபடியும் நடந்தா, நானும் தனி காமெடியனா ஆகலாம். சினிமாவுல எல்லாத்துக்கும் நேரம்தானே  காரணம்!’’ அப்ப, சினிமாவுக்காக சென்னை வந்தவன்னு தெரிஞ்சா, யாரா இருந்தாலும் அவனுக்கு சோறு வாங்கிக் கொடுப்பாங்க.

- மை.பாரதிராஜா
படங்கள்: ஆர்.சந்திரசேகர்