குழந்தை பெத்துக்குங்க... ப்ளீஸ்!



நம் ஊரில்தான் 120 கோடியைத் தாண்டி போய்க் கொண்டிருக்கும் மக்கள்தொகையை கட்டுக்குள் வைக்க மூச்சுத் திணறுகிறது அரசு. உலகின் பல நாடுகளில் நிலைமையே வேறு!  குறிப்பாக நிறைய ஐரோப்பிய நாடுகளில்!

‘‘குழந்தை பெத்துக்குங்க... ப்ளீஸ்!’’ என தாவாங்கட்டையைப் பிடித்து கெஞ்சாத குறையாக அரசாங்கம் சலுகைகளை அள்ளி வீசுகிறது.  இறப்பைவிட பிறப்பு குறைந்து போனதே காரணம்.

டென்மார்க்கில் ஹனிமூன் சுற்றுலா உண்டு. அந்தச் சுற்றுலாவில் கருத் தரித்து குழந்தை பிறந்தால், மூன்று ஆண்டுகளுக்கு குழந்தைக்கு இலவச டயாபர் தரப்படும். குழந்தையோடு  ஒருமுறை வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல இலவச டிக்கெட் தரப்
படும்.

பிரான்ஸில் மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தை பெற்ற தம்பதியருக்கு ரயில் டிக்கெட், சினிமா டிக்கெட் என எல்லாவற்றிலும் தள்ளுபடி உண்டு.

ஸ்வீடனில் குழந்தை பெறும் அம்மாவுக்கு ஒரு வருஷம் சம்பளத்தோடு லீவ் உண்டு.

 சிங்கப்பூரில் பிறக்கும் குழந்தைக்கு ஒரு ஆண்டுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் அரசே கொடுக்கிறது; தவிர, தாராளமான மகப்பேறு விடுப்பும் கிடைக்கும்.

தென் கொரியாவில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமை ‘குடும்ப நாள்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை எல்லோரும் சீக்கிரமே ஆபீஸிலிருந்து வீட்டுக்குக்  கிளம்பிவிடலாம். ‘அடுத்த தலைமுறை’யை உருவாக்கும் முயற்சிக்காக இந்த சலுகை.

ரஷ்யாவில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஃபிரிட்ஜ், கார் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்படுகின்றன.

பின்லாந்து நாட்டில் ஒரு குழந்தை பிறந்ததும், அதற்குத் தேவையான அத்தனை அயிட்டங்களும் ஒரு அட்டைப் பெட்டி நிறைய அரசிட
மிருந்து வந்துவிடும்.

இது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது ஜப்பான். அங்கு குழந்தை பிறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பதால், இளைய தலைமுறையை எப்படியாவது திருமண  பந்தத்தில் சிக்க வைக்க அரசு படாத பாடு படுகிறது. திருமணம் நடத்தி வைக்கும் மேட்ரிமோனி நிறுவனங்களுக்கு அதற்கான கட்டணத்தை அரசே தருகிறது. இளைஞர்கள்  ‘டேட்டிங்’ போவதற்கு ஏற்பாடு செய்யும் நிறுவனங்களையும் அரசு உருவாக்குகிறது.

பப், பார், ரெஸ்டாரன்ட் என எல்லா இடங்களிலும் ஆண்களும் பெண்களும் கலந்து பேசி ‘புரிந்துகொண்டு’, அந்தப் புரிதலின் அடிப்படையில் திருமண பந்தத்தில்  இணைவதற்கும் அரசே ஏற்பாடு செய்யுமாம்!குழந்தை பெற வைக்க அரசாங்கம் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது!

- ரெமோ