கால இயந்திரத்தில் ரிவர்ஸ் பயணம்!



சினிமாவில் எல்லாமே நிறைய சொல்லியாச்சு. இன்னும் சொல்லணும்னா ட்ரீட்மென்ட், கதை உத்திகள் எல்லாத்திலும் கொஞ்சம் மாத்தி யோசிக்க வேண்டிய தேவை  வந்துடுச்சு. நமக்கு இருக்கிற கஷ்டம், துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம்னு எதுவும் எனக்குப் பிடிக்கலை. அத்தனைக்கும் நடுவில் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை  இருக்கே...

அதுதான் ஆச்சரியம். அது என் படத்தில் நிறைய இருக்கும். அப்படி நம்ம துயரத்தையெல்லாம் மறந்து சிரிக்கிற படம்தான் ‘இன்று நேற்று நாளை’. ‘அப்பாடா’னு வந்து  உட்கார்ந்தா நல்ல ரிலீஃப் நிச்சயம்!’’ - அருமையாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ரவிக்குமார். ‘சூது கவ்வும்’ நலன் குமாரசாமியின் முதல்நிலை சீடர்.

‘‘தலைப்பு வித்தியாசமா இருக்கே..?’’‘‘தலைப்பு கொஞ்சம் பப்ளி சிட்டியைத் தரணும். கதை சாயலையும் சூசகமாச் சொல்லணும். இனிமேலும் சினிமாவில் மெசேஜ் சொன்னா  தாங்குமா தெரியலை. தினமும் டன் டன்னா புத்திமதிகளும், நாட்டுக்குத் தேவையான மெசேஜ்களும் செல்போனில் மொத்தமா ஃபார்வேர்டு ஆகி வந்து கொட்டுது. அதுவே நம்  முழு வாழ்க்கைக்கும் போதுமே! அதனால் கொடுத்த காசுக்கு சந்தோஷமா சிரிக்க வைப்போம்னு முடிவு பண்ணிட்டோம். நம்ம படம் ஃபேன்டஸி வகை. `டைம் ட்ராவல்’னு  சொல்வாங்க இல்லையா... அதுதான்.

உலக சினிமாவில் திகில், காதல் இப்படி எல்லா விஷயத்திலும் இதை சோதிச்சுப் பார்த்துட்டாங்க. ஆனா, தமிழில் எனக்குத் தெரிஞ்சு முழுக்க பயணிச்சு இப்படி யாரும்  செய்யலை. உதாரணத்திற்கு திடீர்னு காந்தியின் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் நாம் கலந்துக்கிட்டா எப்படியிருக்கும்? காலத்தில் சற்று பின்னோக்கிப் போனால் அங்கே  நடக்கிற சுவாரசியங்கள் என்ன?

`மகாஜனங்களுக்குப் புரியணுமே’ன்னு ஒரு விஷயம் இருக்கு... நல்லா புரியும். சொல்ற விதத்தில் எளிமையும், ரொம்பவும் நீர்த்துப்போயிடாமலும் சொன்னால் அருமையா போய்ச்  சேரும். தயாரிப்பாளர் சி.வி.குமார் கதையைக் கேட்டதுமே ‘ப்ளீஸ்... சொன்னது மாதிரியே எடுத்துக்கொடுங்க, போதும்’னு சொன்னார். வெறும் 43 நாளில் எடுத்துக் காட்டியதும்  அவர் சொன்னது ‘வெரிகுட்’. டைம் ட்ராவல் என்பது நமக்குக் கிடைக்காத ஒண்ணு. அப்படிப் பார்த்தால் நாம தவற விட்டது  அத்தனையையும் பார்க்க வாய்ப்பு. இனிமே  சினிமான்னு போனா வித்தியாசமா இருந்தால்தான் காலம்!’’‘‘விஷ்ணு விஷால் ஒரு நல்ல இடத்திற்கு வந்திட்ட மாதிரி இருக்கு...’’

‘‘விஷ்ணு இதற்கு முன்னாடி இருந்ததை விடவும் இதில் ரொம்பவும் அக்கறைப்பட்டிருக்கார். பார்க்கத்தான் சிரிப்பா இருக்கும். ஆனால், சீரியஸா பண்ண வேண்டிய கேரக்டர்  இது. நான் சொன்னதுக்கும் மேலே, அவருடைய இன்ட்ரஸ்ட் பார்த்துட்டு எனக்கு சந்தேகமே வரலை. பிரமாதமா பண்ணிட்டார். அதிக திறமை, அதிக எளிமை... இதுதான்  விஷ்ணு. சினிமாவை ரசிச்சுப் பார்க்கிற ஆத்மா. கருணாகரனுக்கு செகண்ட் ஹீரோ மாதிரி ஒரு ரோல்.  இதில் பப்ளிக் மனநிலையை ஒட்டி ஒன்றி நடிச்சிருக்கார்!’’
‘‘மியா ஜார்ஜ் திரும்ப வந்திட்டாரே...’’

‘‘தேர்ந்த நடிகை. துளி பந்தா கிடையாது. சொன்னதை மீறியும், குறையாமலும் நடிக்கிறாங்க. எல்லாமே ஒரே டேக்கில் தாண்டிப் போறது அபூர்வம். சினிமாவுக்கு உண்மையா  இருக்கிற பெண்களைப் பார்த்த உடனே தெரியும். ரொம்பவும் புதுசாக தமிழ் சினிமாவில் இடம் பெறாத டைம் மெஷினை இதில் செய்து காண்பிச்சிருக்கோம். ரொம்ப  நல்லாயிருக்கும். இந்தப் படத்தை செய்வதற்கு மனசில் சின்னதா ஒரு குதூகலம் தேவை. சந்தோஷ மூடில் இருந்து பண்ணணும்.

இதில் தமிழுக்கு வசந்த்தை ஒளிப்பதிவாளரா இறக்கியிருக்கேன். ஏற்கனவே ஹிந்தி, தெலுங்கில் அறிமுகமானவர் அவர். ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதிதான் மியூசிக். எங்க படத்தில்தான்  அவர் அறிமுகமாக இருந்தார். அதற்கு முன்னாடி ‘ஆம்பள’ படத்தில் வெளியே கொண்டு வந்துட்டாங்க. அவர் வேலையை இதில் அருமையா செய்திருக்கார். இது நிச்சயமா  ஆதியை அடுத்த இடத்திற்கு கொண்டு வர்ற படம்!’’
‘‘வாரத்துக்கு பத்து படங்கள் வருது. ஏதோ ஒண்ணுதான் கவனம் பெறுது. கவனிக்கிறீங்களா?’’

‘‘ஜெயிக்கிறது, தோக்கறது எல்லாம் விஷயமே இல்லை. அக்கறையா ஒரு சினிமா செய்து, நாம் என்ன நினைக்கிறோமோ அதை மக்களுக்கு கடத்திட்டாலே போதும்.  எழுத்துக்கும், காட்சி வடிவத்திற்கும் இடையில் ஒரு இடம் இருக்கு. அதில்தான் உழைப்பு வரணும். மக்கள் பார்த்திட்டு சொன்னால்தான் நமக்கு திருப்தி. நான் அந்த  மனநிலையில்தான் இருக்கேன்!’’

- நா.கதிர்வேலன்