ஜோதிகா ரிட்டர்ன்ஸ்



வாழக்கை...சினிமா...சூர்யா...கார்த்தி...
 
எல்லோரும் எதிர்பார்த்த திருமணம்தான்... ஆசீர்வதித்த திருமணமும் கூட! உயிர்ப்பான எட்டு வருடங்களுக்குப் பிறகு நடிக்க வருகிறார் ஜோதிகா. யாருமே எதிர்பார்க்கவில்லை.  கிட்டத்தட்ட ஒரு பரிபூர்ணமான தாயாக உருமாறிவிட்ட நேரம். அடையாறு வீட்டில் காத்திருந்து நிமிர்ந்தால், சத்தம் போடாமல் வந்து உட்கார்ந்திருக்கிறார்.

 ஒரு சிறிய கோடை  மழை பெய்து மண்வாசனையைக் கிளப்பியிருந்தது. பேச்சு கொடுப்பதற்கு ஏதாவது காரணம் அமைந்தால் நன்றாகத்தானே இருக்கும்! மென்சிரிப்பில் மிஞ்சியபடி ஜோதிகா  எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

‘‘நல்ல குடும்பம், அருமையான சூர்யா... சினிமாவில் ரீ-என்ட்ரி இருக்காதுன்னு நினைச்சோம்...’’‘‘கேரளாவுக்கு போயிட்டு வந்திருந்தார் சூர்யா. ‘அங்க நல்லா ஓடின படம்’னு ஒரு  சி.டி கொண்டு வந்து கொடுத்தார். அது நாலைந்து நாளாய் டேபிளில் கவனிக்கப்படாமலே இருந்தது. டைம் இல்லை. ஒருநாள் கொஞ்சம் ஓய்விலிருந்தபோது, ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’  பார்த்தேன். பார்த்த கணத்திலே பிடித்துப்போனது. ‘பெண்களின் கனவுகளுக்கு எக்ஸ்பயரி தேதியை நிர்ணயம் செய்வது யாரு?’ என்ற கேள்விக்கு பதில் சொல்ற படம்தான் அது.  நானும் சூர்யாவும் சேர்ந்து மறுமுறையும் பார்த்தோம். திரும்ப வருவதாக இருந்தால், இந்தப் படம்தான் சரியான படமென்று இரண்டு பேரும் தீர்மானிச்சோம். விளைவுதான் ‘36  வயதினிலே’. என் மனசுக்கு ரொம்ப அருகில் வந்திருக்கிற படம். உங்களுக்கும் அதே உணர்வைக் கொடுத்தால் சந்தோஷம்!’’

‘‘எல்லோரும் படத்தை எதிர்பார்க்கிறபோது பயம் வரும் இல்லையா?’’‘‘வாழ்க்கையில் ஒரு ஸ்டேஜில் எதையாவது செய்யணும். கணவர் பேருக்கு மரியாதை கொடுக்கணும்.  அதுவும் முக்கியம். கணவர் பெயருக்கு முன்னாடி நம்ம பெயர் இருக்குதில்லையா... அதுக்கும் ஒரு மரியாதை வேணும். அப்பா, அம்மா நம்மளை கஷ்டப்பட்டு படிக்க வச்சதும்  அதில் இருக்கு. எதுக்காகவும் பெண்கள் தங்கள் அடையாளங்களை இழந்திடக் கூடாது. அது ரொம்பவும் முக்கியம். தன் இருப்பை விட்டுத் தராத ஒரு பெண்ணோட கதை  என்பதால் இதற்கு  வேல்யூ எப்பவும் இருக்கு. இந்தப் படத்தோட உண்மைதான் என்னை இதில் சேர்த்திருக்கு!’’

‘‘ஆக... தொடர்ந்து சினிமாவில் நடிப்பீங்களா?’’‘‘இந்தப் படத்தை நான் பணத்திற்காக செய்யலை. திரும்ப வருவதற்கு இதுதான் சரின்னு செய்திருக்கேன். மத்தபடி குழந்தைகளைப்  பார்க்கணும். கிளாஸஸ் நிறைய போறாங்க. வீட்டுக்கு வந்தால் அம்மா இருந்தாகணும். ஹாலிடே டைமில் பிளான் பண்ணி வேணும்னா செய்யலாம். பட், அதையே தொடர்ந்து  செய்ய மாட்டேன். நிஜ வாழ்க்கையில் கொஞ்சம் உடற்பயிற்சி, நண்பர்களோட காபி, மதியம் திரும்பி வருகிற குழந்தைகளுக்கு பிக்கப், டிராப் நான்தான் செய்வேன்.  பிள்ளைகளுக்கு லீவ் டைமா அமைஞ்சு, இதை விடவும் நல்ல ரோல் வந்தால் ஓகே!’’

‘‘வாழ்க்கையை ரொம்பவே திட்டமிடுவீங்க போலிருக்கே?!’’‘‘இந்த வயசில் கல்யாணம் பண்ணிக்கணும், இந்தச் சமயம் குழந்தையோட இருக்கணும்னு நினைச்சிருக்கேன்.  அதிர்ஷ்டம், கரெக்ட் டைம்ல கரெக்ட் ஆளை சந்திச்சது. எல்லாமே கடவுள் கொடுத்தது. இவ்வளவு அற்புதமான ஒருத்தரை இணையாக சேர்த்ததில் இருந்தே கடவுள் என் மீது  கருணை வச்சிருக்கார்னு தெரியுதே. அடடா, நல்ல கேரியரை விட்டுட்டு வந்திட்ட மேன்னு எனக்கு எந்த வருத்தமும் கிடையாது!’’‘‘சூர்யா - ஜோதிகா ஜோடின்னு உதாரணம்  சொல்ற அளவுக்கு அப்படி என்னங்க மேஜிக்?’’

‘‘பாதுகாப்பா ஃபீல் பண்ண வைக்கிற உணர்வு எங்களுக்குள்ள எப்போதும் இருக்கும். ‘சக மனுஷி’ன்னு வருகிற அன்பினால் மட்டுமே இது கிடைக்கும். இரண்டு வருஷமாவே  ‘நடிக்கிறதா இருந்தா நடிங்க’ன்னு சொல்வார் சூர்யா. தேவ்க்கு 5 வயதுதான் ஆகிறது. முக்கால்வாசி ஆண்கள் இப்படிப்பட்ட சூழலில், பெண்கள் வீட்டிலேயே இருக்கணும்னு  நினைப்பாங்க. ஆனால், சூர்யா அப்படியில்லை.

அது பெரிய ஒட்டுதல். அவரை நான் ரெஸ்ெபக்ட் பண்ணுவேன். வீட்டுக்கு வந்தவுடனே அவர் குழந்தைகள் உலகத்தில் புகுந்து கொள்வதை கொஞ்சம் தள்ளி நின்னு பார்க்க  அழகா இருக்கும். அவங்களைத் தூங்க வச்சிட்டு, 9 மணி முதல் 12 மணி வரை சோபாவில் உட்கார்ந்து இன்னிக்கு முழுக்க என்ன நடந்ததுன்னு ஃப்ரண்ட்ஸ் மாதிரி பேசுவோம்.  முதலில் லவ்தான். பிறகு, அதுவே ஒருத்தர் மீது மற்றொருத்தர் அக்கறையா மாறிடுது. அதைத்தான் நீங்க மேஜிக்னு சொல்றீங்க!’’
‘‘நீங்களும், சூர்யா அம்மாவும் ரொம்ப க்ளோஸாமே..?’’

‘‘நான் ‘அம்மா’ன்னுதான் கூப்பிடுவேன். என்கிட்ட நல்ல விஷயம்னு ஏதாவது தெரிஞ்சா, அது அவங்ககிட்ட கத்துக்கிட்டதாகவே இருக்கும். இப்படி இரண்டு மகன்களையும்  கொண்டு வந்து சேர்த்ததுதான் அம்மாவோட அழகு. இப்பகூட அடையார்ல எங்க வீட்டுக்குப் பின்னாடிதான் ஸ்கூல் இருக்கு. அப்பா தி.நகரிலிருந்து வந்து குழந்தைகளைக்  கூட்டிப் போய் விட்டால்தான் அவங்களுக்குத் திருப்தி!’’‘‘நடிக்கலைன்னாலும் சினிமாவை கவனிச்சிருப்பீங்களே... இப்ப எப்படி இருக்கு?’’

‘‘நானே ரொம்பக் கோபத்தில்தான் இந்தப் படம் பண்றேன். நான் இருக்கும்போது வந்ததெல்லாம் கூட ஹீரோக்கள் படம்தான். ஆனால், பெண்களுக்கும் நல்ல ரோல் இருக்கும்.  இப்ப எந்த படத்தில் எந்த கேர்ள் நடிக்குது, என்ன சீன் பண்ணுதுன்னே தெரியல. சமீபத்தில் ஒரு பெரிய படம் பார்த்தேன். அதுல ஹீரோயினுக்கு டயலாக்கே இல்லை. பெரிய  ஹீரோயின் வேற. பெண்களுக்கு பெரிய ரோல் கொடுக்கிறது கம்மியாகிடுச்சு. லுக், கெட் அப், காஸ்ட்யூமுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பொம்மை மாதிரி டிரஸ்  பண்ணிட்டு வரவைக்கிறாங்க. இது எனக்குப் பிடிக்கலை! சிம்ரன் மாதிரியெல்லாம் இப்ப இல்லையே!’’‘‘கார்த்தி நடிப்பை விமர்சனம் செய்வீங்களா?’’

‘‘இப்ப ‘கொம்பன்’ பார்த்தேன். மாமனார்-மருமகன் உறவு அதில் நல்லா வந்திருக்கு. இந்த வீட்டில் நாங்க நாலு ஆர்ட்டிஸ்ட் இருக்கோம். அம்மாவுக்கு படம் பிடிக்கலைன்னா  பிடிக்கலைதான். அப்பா பாஸிட்டிவா பேசுவார். அடுத்து என்ன மாதிரி பண்ணலாம்னு யோசனை சொல்வார். மத்தபடி நாங்க படங்களைப் பத்தி ஓப்பனா பேசிடுவோம்.  அவங்க வளர்றதுக்கு அதுதானே வழி!’’‘‘பசங்க ஷூட்டிங்க்கு வருவாங்களா?’’

‘‘ம்ம்... ஷூட்டிங் பார்க்க வந்திட்டு, அவங்களுக்கு கேரவன் பிடிச்சுப் போச்சு. ஆனா, அவங்க இதுவரைக்கும் சினிமாவே பார்த்தது இல்லை. கார்ட்டூன்தான். அவங்க பார்க்கிற  மாதிரி நல்ல சினிமா வந்தால்தான் கூட்டிட்டுப் போக முடியும். இந்த வயதில் டபுள் மீனிங் டயலாக், கேர்ள்ஸ் காஸ்ட்யூம் எல்லாம் பார்த்துதான் கூட்டிட்டுப் போகணும். சின்ன  வயதில் அவங்க பொல்யூட் ஆகிடக் கூடாது!’’

‘‘அடடா, குழந்தைகளை எப்படிக் கொண்டு வரப்போறீங்க?’’‘‘நார்மலா வரட்டும். அவங்க ஸ்கூல்ல பலபேருக்கு சூர்யா, ஜோதிகாவையே தெரியாது. குழந்தைகளோட ஃப்ரண்ட்ஸ்  வீட்டுக்குப் போய் சகஜமா இருப்போம். ஒரு சிம்பிள் வாழ்க்கையைக் கொடுத்திருக்கோம். 10 வயசு வரைக்கும் இப்படியே வளர்க்கலாம். அப்புறம், அவங்களா லைஃபை  தெரிஞ்சுக்கிட்டு, புரிஞ்சிக்கிட்டு வரட்டும்!’’‘‘இந்த கேப்ல சினிமாவில் யாரைப் பிடிச்சது?’’‘‘நயன்தாரா ‘ராஜா ராணி’யில் சென்ஸிபிளா செய்திருந்தாங்க. அமலாபால், லட்சுமி  மேனனை சொல்ல முடியுது. நடிகர்கள்னா தனுஷ், கார்த்தி!’’

- நா.கதிர்வேலன்
அட்டை ஸ்பெஷல் படம்: ஜி.வெங்கட்ராம்